சென்னை,ஸ்ரீராம்- கடிதம்

அன்பு ஜெயன்

தங்களை ஆஸ்டினில் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் இங்குள்ள சில இடங்களுக்கு சென்று பார்த்திருக்கலாம். நேற்றொருநாள் போதுமா?

நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சென்னை வரலாறு, பாரம்பரிய கட்டடங்கள், தெருப்பெயர்கள் குறித்துப் பேசினோம். நாம் வரலாற்றின் நீட்சிகளைத் தொலைப்பது பற்றிய உங்கள் கவலைகளைப் பகிர்ந்தீர்கள்.

அச்சமயம் திரு. முத்தைய்யா அவர்களை நினைவுகூர்ந்தீர்கள். அச்சமயம், நான் திரு. ஶ்ரீராம் பற்றிச் சொன்னேன். அவர் முன்னெடுக்கும் முயற்சிகளை பற்றி எனக்குத் தெரிந்த அறிமுகமும் தந்தேன்.

ஶ்ரீராமின் வலைத்தளம் – https://sriramv.wordpress.com. இங்கு அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அன்புடன்

ராஜேஷ்

ஆசானோடு ஓர் அருமையான மாலை!

அன்புள்ள ராஜேஷ்

சந்திப்பு நிறைவாக இருந்தது. ஆனால் நடுவே பத்தாண்டு ஓடிவிட பல நண்பர்கள் சட்டென்று வயதானவர்கள் போல தோன்றுகிறார்களோ என ஒரு சிறு சங்கடம். நான் என்னை விட இளைமையானவர்கள் இளமையுடன் இருப்பதை விரும்புபவன். கொரோனா காலத்தில் விஷ்ணுபுரம் நண்பர்கள் எவரும் தாடி வைக்க அனுமதித்ததில்லை.ஒன்றுக்கு நூறு ஃபோன் போட்டு சவரம் செய்ய வைத்துவிட்டேன்.

ஸ்ரீராமின் தளம் பார்த்தேன். மிக முக்கியமான பணி. அவர் தொடர்ச்சியாக அதைச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். வரலாற்றுத் தடையங்கள் அரசாலேயே அழிக்கப்படும் நாட்டில் வாழ்கிறோம். இத்தகைய பணிகள் மிகப்பெரியவை.

இப்போது கொலராடோவில் பாலையில் பயணம். ஸ்ரீராமுக்கு எழுதுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு
அடுத்த கட்டுரைபொ.திரிகூடசுந்தரம், கலைக்களஞ்சியம்