பூன் சந்திப்பு

விஷ்ணுபுரம் அமைப்பு ஊட்டியில் தொடர்ந்து நடத்தி வரும் குரு நித்யா நினைவு சந்திப்பு இப்போது பதினாறு ஆண்டுகளாக தொடர்கிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு முன்னால் நிகழ்ந்த ஊட்டி சந்திப்புகளையும் சேர்த்தால் முப்பது அரங்குகளுக்கு மேல் நடந்திருக்கும். தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு இலக்கிய கூடுகை பிறிதில்லை. அதற்கு காரணமாக அமைவது இச்சந்திப்பு கற்றலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் களமாக அமைகிறது என்பதுதான். உவகையும் கொண்டாட்டமும் இன்றி ஒரு சந்திப்பையும் நிகழ்த்தக்கூடாது என்பது என்னுடைய நெறிகளில் ஒன்று.

எவரும் பொழுது வீணாகிறது என்று நினைக்கக்கூடாது என்பதனாலும், எவரும் தனிப்பட்ட முறையில் உளம் புண்பட்டுவிடக்கூடாது என்பதனாலும் நெறிகளும் முறைமைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆகவே பயனுள்ளதாகவும் மகிழ்வூட்டுவதாகவும் இந்த சந்திப்புகள் இதுவரை அமைந்துள்ளன. இதிலிருந்து இன்று ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து உருவாகி வந்திருக்கிறார்கள். அதைவிட கூர்மையான வாசகர்களின் ஒரு பெரிய நிரை உருவாகியிருக்கிறது. தமிழில் கலைத்தன்மையுடன் எழுதும் எவருக்கும் இன்று இந்த பெருநிரையே மெய்யான வாசகர்கள். இவ்வரங்குகளின் வழியாக தமிழில் நித்யாவின் பெயர் இன்று நிலைகொள்கிறது.

உலகம் முழுக்க இருந்து விஷ்ணுபுரம் குருநித்யா சந்திப்புக்கு வாசகர்கள் வருவதுண்டு. அவர்களில் பலருக்கு தங்கள் ஊரிலும் அவற்றை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆகவே 2016-ல் சிங்கப்பூரில் குருநித்யா சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினோம். அன்று நான் சிங்கப்பூரில் நான்யாங் பல்கலையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இவ்வருடம் அமெரிக்காவில் ஒரு சந்திப்பை நிகழ்த்தவேண்டும் என்று ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி, விஜய் சத்யா ஆகியோர் முயன்றனர். நானும் அமெரிக்கா வருவதை ஒட்டி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

மே 13,14 இரு நாள் சந்திப்பு. அமெரிக்காவில் பூன் என்னும் இடத்தில் இருந்த ஒரு பெரிய மாளிகை அதன் பொருட்டு அமர்த்தப்பட்டது. அங்கு ஐம்பது பேருக்கு மேல் தங்குவதற்கு அமெரிக்க தீயணைப்புச் சட்டம் அனுமதிப்பதில்லை. ஆகவே பங்கேற்பாளர் எண்ணிக்கை ஐம்பதுடன் நிறுத்தப்பட்டது. மேலும் பலர் வருவதற்கு ஆர்வம் கொண்டிருந்தாலும் கூட முன்னரே பதிவுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இலக்கிய வாசகர்கள் விஷ்ணுபுரம் செயல்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமே இந்த சந்திப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அமெரிக்காவின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கூடிய நண்பர்கள் பூன் மலை உச்சியிலிருந்த மாளிகைக்கு முந்தின நாள் மாலையே சென்று சேர்ந்தோம். மிக அழகிய மாளிகை. நான்குபக்கமும் துணைக்கட்டிடங்களுடன் அனைவருக்குமே தனி படுக்கையறை வசதியுடன், குளியலறைகளுடன் இருந்தது. மாடியில் கூடாரங்கள் போல உள்ளேயே கட்டியிருந்தனர். அங்கே ஒரு பத்துபேர் தங்க முடியும். விரிந்த புல்வெளி சூழ்ந்த சிறு குன்று அது. அதைச்சுற்றி மலையடுக்குகள். மலைச்சரிவின் விளிம்பில் இருந்து அலையலையாக எழுந்து வந்த புல்வெளி. மலையின் அடிவாரங்களில் செறிந்த பைன் மரக்காடுகள். ஊடுகலந்த மேப்பிள் மரக்காடுகள். கழுத்து மணிகள் மெல்லிய ஒலி எழுப்பியபடி இருக்க கரிய மாடுகள் குனிந்த தலை நிமிராது மேய்ந்துகொண்டிருக்கும் வெளி ஒரு மாபெரும் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம் போலிருந்தது.

போர்த்திக்கொள்ளும் அளவுக்கு குளிர். ஆனால் நடுக்கும் அளவுக்கு இல்லை. கணப்பும் தேவைப்படவில்லை. ஆனால் வெளியே சற்று உடல் உலுக்கும் அளவுக்கு காற்று வீசியது. அருகிலிருந்த குஜராத்தி உணவகத்திலிருந்து உணவு கொண்டுவர சொல்லியிருந்தோம். அவர்கள் மிக சுவையான இந்திய உணவுகளையும் அமெரிக்க உணவுகளையும் கொண்டு வந்தார்கள். பொதுவாகவே ஊட்டி விழாவுக்கும் இதற்குமான வேறுபாடாக நான் பார்த்தது மிதமிஞ்சிய உணவுதான். அது ஒரு அமெரிக்க பண்பாடு. கோக், பலவிதமான பழச்சாறுகள், கேக்குகள், அப்பங்கள் என்று கொண்டுவந்து குவித்துவிட்டார்கள். நிறைய உணவை பார்க்கும்போது ஒரே சமயம் மகிழ்ச்சியும் குற்ற உணர்வும் உருவாகிறது. இதுவரைக்கும் குருநித்யா ஆய்வரங்கு நடத்திய எந்த நிகழ்வுமே இத்தனை அழகிய மாளிகையில் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு உற்சாகமான ஒரு சூழலும் அமைந்ததில்லை.

ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தார்கள். இரவு எட்டு மணிக்குள் ஏறத்தாழ அனைவருமே வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்போதே சந்திப்பு தொடங்கிவிட்டது என்று சொல்லவேண்டும். சிரிப்புகளும் கேலிகளுமாக ஒரு மாபெரும் குடும்பக் கூடுகை போல் நிகழ்ந்தது. எங்களுடைய எல்லா சந்திப்புகளையும் போல ஒவ்வொரு அமர்வுக்கும் இசை. தொழில் முறைப் பாடகர்கள் அளவுக்குப்பாடக்கூடிய பாடகர்களாக பழனி ஜோதி, சங்கர் கோவிந்தராஜன் ஆகியோர் பாடினார்கள். ஸ்ரீகாந்த் புல்லாங்குழல் இசைத்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைப்பாளரும் கூட. அதன்பின் வெவ்வேறு அரங்குகள் அவற்றின் மீதான விவாதங்கள்.

நான் சிறுகதை, தத்துவம் பற்றி இரண்டு அறிமுக உரைகள் ஆற்றினேன். அருண்மொழி டால்ஸ்டாயின் போரும் அமைதியும் பற்றி பேசினாள்.  ஜெகதீஷ், விஜய்சத்யா ஆகியோர் சிறுகதைகளைப் பற்றி பேசினர். விசு, விவேக் ஆகியோர் அறிவியல்புனைவு பற்றி பேசினர். விசு, செந்தில்வேல் ஆகியோர் கம்பராமாயண அரங்கு ஒன்றை நடத்தினர். ரமிதா கீட்ஸ் பற்றி ஓர் அரங்கை நடத்தினார். தமிழ்க்கவிதை அரங்கை பாலாஜி ராஜு நடத்தினார். ராஜன் சோமசுந்தரம் அமெரிக்க பண்பாட்டின் அடிப்படைகள் பற்றி ஓர் அரங்கை நடத்தினர். அருண்மொழியின் பனி உருகுவதில்லை பற்றி ஓர் அரங்கை சௌந்தர்ராஜன் ஒருங்கிணைத்தார்.

அமர்வுகள் எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்தன. அனைவருமே படித்துவிட்டு வந்து முழுமையாக தயாரித்துவிட்டு வந்து பேசினார்கள். எவருமே வகுக்கப்பட்ட நேரத்தை கடந்து செல்லவில்லை. எவருமே விவாதத்தை திசை திருப்பிக்கொண்டு செல்லவும் இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் பயிற்சி வழியாக நாங்கள் விஷ்ணுபுரம் குருநித்யா ஆய்வரங்கில் கடைபிடித்து வரும் எல்லா நெறிகளையுமே தன்னியல்பாகவே அமெரிக்க நண்பர்கள் கடைபிடித்தது வியப்பூட்டுவதாக இருந்தது. அமெரிக்க வாழ்முறையும் அமெரிக்க கல்விமுறையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இயல்பாகவே ஒரு அடிப்படைப் பயிற்சியை இங்குள்ள அறிவுச்சூழல் அளித்துவிடுகிறது. இன்னொருவரின் பொழுதை திருடிவிடக்கூடாது என்று ஒரு தெளிவு அனைவருக்குமே இருக்கிறது.

(அனைவருக்கும் என்று சொல்லமுடியாது. அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் நிகழும் உரைகளை இந்தியாவில் நடக்கும் வன்கொடுமைகளைவிட ஒருபடி மேலான துயரநிகழ்வுகள் என்றே சொல்வேன். கேள்வி கேட்பவர் எழுந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசித்தள்ளுவதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் அவர்கள் தமிழை வளர்க்க எமி ஜாக்ஸனை அழைக்கும் கூர்மை கொண்டவர்கள் என்பதனால் பொதுவாக தீங்கு மிகக்குறைவு. அவற்றில் ஒவ்வாமை கொண்டு அந்தச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கி நிற்கும் நண்பர்களாலானது இந்த அரங்கு என்பதனால் இந்த ஒழுங்கு இயல்பாகவே நிகழ்ந்தது என்று தோன்றுகிறது).

இத்தகைய விவாதங்களில் என்ன நிகழ்ந்தது என்ன பேசப்பட்டது என்பதை பதிவு செய்வதோ அவற்றை பகிர்வதோ எளிதல்ல. ஏனெனில் ஏறத்தாழ மூன்று நாட்கள் நிகழ்ந்த மொத்த விவாதத்தையும் எழுத வேண்டுமென்றால் சில ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும். அந்த கற்றல் அனுபவம் இணையற்றது. அதற்கு நூல் வாசிப்பு நிகர் சொல்லக்கூடியதல்ல கற்றலில் கேட்டல் நன்று என்று வள்ளுவர் சொல்வது அதைத்தான் .பலர் இதை பதிவு செய்து அனுப்ப முடியுமா என்று கேட்டார்கள். பதிவு செய்து அனுப்புவதை கேட்பது என்பது ஒருவரை நேரில் பார்ப்பதற்கும் புகைப்படத்தில் பார்ப்பதற்குமான வேறுபாடு கொண்டது. என்ன நிகழ்ந்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள சில குறிப்புகளை எழுதிக்கொள்ளலாமே ஒழிய அக்குறிப்புகள் வழியாக எவரும் சந்திப்பில் நடந்த அனுபவத்தையோ பேசப்பட்ட உணர்வுகளையோ அடைய முடியாது. பத்து நூல்கள் படிப்பதற்கு சமம் ஒரு நல்ல சந்திப்பு .அதற்கு நேரில் சென்று தான் ஆகவேண்டும். ஆகவே தான் ஊட்டி நிகழ்வுகளை முழுமையாக ஆவணப்படுத்துவதில்லை. அவை முழுமையாகவே நினைவில் வளரட்டும் என்று விட்டுவிடுவோம். என்ன நிகழ்ந்தது என்பது மட்டுமே குறிப்பாக உணர்த்தப்படும்.

இந்நிகழ்வின் கொண்டாட்டம், நெகிழ்ச்சி ஆகியவற்றை கண்டபோது நான் உணர்ந்த ஒன்றுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோடு பல்கலையில் தாமஸ் ஐசக் இதைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஒரு சமூகம் தன்னுடைய மிகச்சிறந்த உள்ளங்களை முழுக்க கணிப்பொறித்துறை ஊழியர்களாக, பொறியாளர்களாக அனுப்பிக்கொண்டே இருந்தால் அது நாளடைவில் பிற துறைகள் அனைத்திலும் பெரும் சோர்வை உருவாக்குகிறது. இப்போதே தமிழகத்தில் தமிழாய்வு, வரலாற்றாய்வு போன்ற பல தளங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி உள்ளது. ஆங்கிலக்கல்வியில்கூட நம்பமுடியாத அளவுக்குச் சரிவு உள்ளது. நல்ல ஆங்கிலத்தில் எழுதவோ மொழியாக்கம் செய்யவோ தமிழகத்தில் ஆளில்லை என்பதே இன்றைய நிலை. எந்தக் கல்லூரியிலும் இன்று தங்கள் அறிவுத்திறனால் வாசகர்களிடமும் மாணவர்களிடமும் பெருமதிப்பை ஈட்டக்கூடிய தகைமை கொண்ட பேராசிரியர்கள் இல்லை.

மறுபக்கம், வெவ்வேறு நுண்ணுணர்வுகளும் அறிவுத்திறன்களும் கொண்ட அனைவருமே பொறியியல், கணிப்பொறியியல் என்று சென்று சிக்கிக்கொள்வதும் நிகழ்கிறது. உலகியல் வெற்றியை அவர்கள் அடைந்திருக்கலாம். ஆனால் செயலாற்றுவதனூடாக, தனிப்பட்ட சாதனைகள் வழியாக, அடையும் நிறைவு கிடைப்பதில்லை. அது நாற்பதை ஒட்டிய அகவையில் பெரிய சோர்வாக எஞ்சிவிடுகிறது. கேரளக் கல்விமுறை ‘அனைவரும் பொறியாளர்’ என்னும் நிலைநோக்கிச் செல்லக்கூடாது என்று தாமஸ் ஐசக் அன்று சொன்னார். மற்ற துறைகளில் திறனாளர்களுக்கு உயர்ஊதியம் அளிக்கப்படவேண்டும். அங்கே திறமை மட்டுமே செல்லுபடியாகும் சூழலும் அமையவேண்டும்.

நிகழ்ச்சியின் முடிவில் ராஜன் சோமசுந்தரம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, பங்களிப்பாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கூறினார். அமெரிக்க மரபு, நல்லது. ஆனால் விஷ்ணுபுரம் விருது விழாவில் பல ஆண்டுகளாக மொத்த சாப்பாட்டு ஒருங்கிணைப்பையும், விழாமேடை ஒருங்கிணைப்பையும் செய்து வரும் விஜய்சூரியனுக்கு ஒரு நன்றியை இதுவரை நான் சொன்னதில்லை. அவர் வேலைசெய்து களைத்து பைத்தியக்காரக் களையுடன் வரும்போது நண்பர்கள் கூடி கேலிதான் செய்திருக்கிறோம்.

அமெரிக்காவில் இந்த சந்திப்பு நிகழ்வு ஓர் தொடர்நிகழ்வாக சில ஆண்டுகள் நடந்தால் அனைவருக்கும் உரிய ஒரு செயற்களம் அமையும் என்று நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைகோ.சாரங்கபாணி
அடுத்த கட்டுரைஅஞ்சலி: தெணியான்