அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாங்கள் தளத்தில் அமெரிக்கா வருவதைப் பற்றி அறிவித்ததும், எட்டுத்திசைகளி லிருந்தும், உங்களை சந்திப்பதற்கு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கான மின்னஞ்சலுக்கு மேலும் விபரங்கள் கேட்டு கடிதங்கள் வந்தவண்ணமிருந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில் ஆரம்பித்து அதிகாரப்பூர்வமாக மூன்று வருடங்கள் ஆகியிருந்தாலும், நாளொன்றுக்கு இருபது புது வாசகர்களின் மின்னஞ்சல்கள் வருவது வியப்பளித்தது. மறைந்திருக்கும் வாசகர்கள் எழுந்துவர அவர்களை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி. டாலஸில் இருந்து வந்த கடிதங்களின் அளவை பார்த்துவிட்டு, ஆனந்த் முத்தையாவின் உதவியுடன், காப்பெல் நூலகத்தில், தங்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம்.
இரண்டு மணி நேரத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலுக்கு நாற்பது வாசகர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் zoom நிகழ்வில் பாடும் விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார் டாலஸில் வசிக்கிறார் என்பதால் இந்த நிகழ்விலும் அவரைப் பாடவைக்க வசதியாக அமைந்துவிட்டது. உங்கள் நீள் பயணத்தில் உடன் இருக்கும் எழுத்தாளர் அருண்மொழி நங்கை, ராஜன் சோமசுந்தரம், ஸ்ரீராம் காமேஸ்வரன், விஷ்வநாதன் மகாலிங்கம், ப்ரமோதினியும் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்கள். மிசௌரியிலிருந்து பயணம் செய்து வாசக நண்பர் வெங்கடேஷன் வந்திருந்தார். வெண்முரசு ஆவணப்படம், சிகாகோவில் வெளியிட்டபொழுதும் இப்படி நீண்ட பயணம் செய்தவர், வெங்கடேஷன்.
ராஜன் சோமசுந்தரத்தின் முன்னுரையுடன் நிகழ்வு ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் Tamilosaionair எனும் யூட்யூப் சேனல் நடத்தும் சிவா துரை அவர்கள் சுருக்கமாக தொகுத்து, படங்களை இணைத்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தங்களின் பார்வைக்கும், நண்பர்களின் பார்வைக்கும் அதை அனுப்புகிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்