பற்றுக பற்று விடற்கு- கடிதம்

அஜிதன்

அன்புள்ள ஜெ,

அஜிதன் எழுதிய பற்றுக பற்று விடற்கு என்னும் கட்டுரையை வாசித்தேன். தமிழில் உங்களைப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. மட்டுமல்ல தமிழில் தத்துவம் சார்ந்து அழகியல் சார்ந்து எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றும்கூட. நான் அறிந்தவரை அஜிதனின் முதல் கட்டுரை இது.

இப்படி முதல் கட்டுரை அமைவதென்பது சாதாரண விஷயம் அல்ல.  அந்த மொழி அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது என்பது என்னைப்போல பல ஆண்டுகளாக எழுதுவதற்காக முட்டிமோதிக்கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். ஒன்று அன்றாட அரட்டை மொழி இருக்கும். இல்லாவிட்டால் சராசரி மொழி வந்துவிடும். அது பாடமொழியோ பத்திரிக்கை மொழியோ ஆக இருக்கும். சுயமான சிந்தனையை, அதுவும் சிக்கலான தத்துவசிந்தனையை துல்லியமான சொற்றொடர்களில் மிகுந்த ஓட்டத்துடன் எழுதுவதற்கு வாசித்து வாசித்து அகம் தெளிந்திருக்கவேண்டும். எழுதி எழுதி பழகியிருக்கவேண்டும். மனசுக்குள்ளாவது ஏராளமாக எழுதியிருக்கவேண்டும்.

ஒரு கட்டுரைக்குள் எவ்வளவு அடுக்குகள், நுட்பங்கள் என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. செய்நேர்த்தியை கடந்து கலை எப்படி உருவாகிறது என்று சொல்லும் பிள்ளையார் செய்த கதைப்பகுதி ஒரு அற்புதமான சிறுகதை. கிளாஸிக்குகளின் மூன்று வகை துயரங்கள் பற்றிய பகுதியும் சரி, வாழ்க்கையில் அறியுந்தோறும் வரும் பற்றின்மையை பற்றிய பகுதியும் சரி மிக அசலான சிந்தனைகள்.

உலக தத்துவஞானிகள் மேற்கோள்களாக இல்லாமல் இயல்பான தரப்புகளாக உள்ளே வந்துசெல்கிறார்கள். அற்புதமான குறள்வரியுடன் அவற்றை தொகுத்திருப்பதும் ஆச்சரியம். மேலைத் தத்துவம், இந்திய தத்துவம், நவீன இலக்கியம், பழந்தமிழிலக்கியம் எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக தொட்டு பறக்கிறது கட்டுரை. அஜிதனுக்கு என் ஆசிகள்

ஆர்.பி.என்

பற்றுக பற்று விடற்கு

முந்தைய கட்டுரைஅமெரிக்கா- கடிதம்
அடுத்த கட்டுரைமுத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்