திசைகாட்டிய வழிப்போக்கன் – நிர்மால்யா
அன்புள்ள ஜெ,
நிர்மால்யா எழுதியிருந்த சியமந்தகம் கட்டுரை பெரியதொரு மன எழுச்சியை அளித்தது. நித்ய சைதன்ய யதி தமிழகத்தின் அறிவியக்கத்தில் ஒரு ஊடுருவலை உருவாக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார். அதற்காக பல இலக்கியவாதிகளை அழைத்து வந்து சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். அவற்றில் எல்லாம் நிர்மால்யா உடனிருந்திருக்கிறார். அம்முயற்சிகள் மேலே செல்லவில்லை.
அந்நிலையில் நிர்மால்யா தற்செயலாக உங்களை நித்யசைதன்ய யதியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்த கணமே ஆசிரியராக ஏற்றுக்கொண்டதாக எழுதியிருக்கிறீர்கள். அவரும் அக்கணமே உங்களை மாணவராக ஏற்றுக்கொண்டார். அவர் எண்ணியவற்றை நீங்கள் தமிழில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
நித்ய சைதன்ய யதியின் பங்களிப்பு மலையாளத்தை விட தமிழில் சற்று மிகுதி என நிர்மால்யா எழுதியிருந்தார். மலையாளத்தில் அவருக்கு பல மாணவர்கள். தமிழில் நீங்கள் ஒருவரே. ஆனால் இன்று வெவ்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் நித்ய சைதன்ய யதியை தங்கள் மேல் செல்வாக்கு செலுத்தியவராகச் சொல்கிறார்கள்.
உங்கள் சிந்தனைகளும் நித்ய சைதன்ய யதியின் சிந்தனைகளின் தொடர்ச்சி. அது உருவாக்கியிருக்கும் ஆழ்ந்த செல்வாக்கு என்ன என்பது தெரியாதவர்கள் இல்லை. ஒரு ஸ்கூல் ஆஃப் தாட் அது. இதை யோசிக்கையில் ஒரு ஃபெயரி டேல் போல உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் -விவேகானந்தர் கதையை வாசிப்பதுபோல உள்ளது. அவர் எண்ணியதை ஈடேற்றிவிட்டீர்கள். நீங்கள் நிறைவு என உத்தேசிப்பது அதைத்தான் என நினைக்கிறேன்.
அவர் உங்களையும் நீங்கள் அவரையும் கண்டுகொண்ட மேஜிக் மொமென்ட் என்பது புனிதமான ஒன்று என்று தோன்றுகிறது.
ஜே.ஆர்.லதா
அன்புள்ள லதா,
எனக்கு அவர் பெருஞ்செயலுக்கு வழிகாட்டினார், செயல்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை வழங்கினார். அவர் எண்ணியதை நிறைவேற்றினேனா என தெரியவில்லை. ஆனால் இக்கணம் வரை அணுவிடை தளரா ஊக்கமும் செயல்வேகமும் கொண்டிருக்கிறேன். அவருக்கு நான் செய்யக்கூடுவது அதுவே.
ஜெ