அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி பற்றிய கேள்விகளை முடித்துவிட்டீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் ஒரு கேள்வி. ஏனென்றால் இப்போது இந்தக்கேள்விதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுதான். நீங்கள் கோவயையும் ஈரோட்டையும் மையமாக்கி இந்த விழாக்களை நடத்துவதும் விருதுகள் வழங்குவதும் கவுண்டர்களை வளைத்துப்போடுவதற்காகத்தான் என்கிறார்கள். பெரியசாமித் தூரன் பெயரில் விருது வழங்குவதே கவுண்டர்களை தாஜா செய்வதற்காகத்தான் என்று சொல்கிறார்கள். உங்களிடமே கேட்டுவிடலாம் என இதை எழுதுகிறேன்.
செந்தில்ராஜ்
அன்புள்ள செந்தில்,
விஷ்ணுபுரம் அமைப்புக்கு அப்படி எந்தச் சாதிப்புலமும் இல்லை. எல்லா சாதியினரும் எல்லா மதத்தினரும் உள்ள அமைப்பு இது. இது ஒரு பெரிய நண்பர் கூட்டமைப்பு மட்டுமே. கோவையில் நிகழ்த்துவது ஒரே காரணத்தால்தான். இதன் நிறுவனரான கே.வி.அரங்கசாமி கோவையைச்ச் சேர்ந்தவர். இப்போது இதன் மைய ஒருங்கிணைப்பாளரான செந்தில்குமார் கோவைக்காரர் (இருவருமே கவுண்டர்கள் அல்ல) .எங்கே நண்பர்கள் இருக்கிறார்களோ அங்குதான் விழா நடைபெற முடியும். நான் எதையும் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவன் அல்ல. விஷ்ணுபுரம் விழாவன்று காலையில் சென்று இறங்கி திருதிருவென விழிப்பவன் நான்.
நாங்கள் இதுவரை எந்த நிறுவன நிதியும் பெற்றுக்கொண்டதில்லை. விஷ்ணுபுர நண்பர்களின் கொடையால்தான் இந்த அமைப்பு நிகழ்கிறது. நிரந்தர வைப்பு நிதி இன்றுவரை இல்லை. அவ்வப்போது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே நிதி பெற்று வருகிறோம்.தூரன் விருது ஒரு தனிப்பட்ட நண்பரின் நிதிக்கொடை. அவர் கவுண்டர் அல்ல. வெவ்வேறு கவுண்டர் அமைப்புகளிடம் தூரன் எவ்வளவு முக்கியமானவர், அவர் நினைவாக கோவையில் ஏதேனும் அவர்கள் செய்யவேண்டும் என சொல்லியிருக்கிறேன். எதுவும் நிகழ்ந்ததில்லை.
நான் சொல்லிவருவது ஒன்றுண்டு. நம்மவர்களின் உள்ளம் பெரிய அளவில் ஊழல்மயம் ஆகிவிட்டது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏதாவது லாபம் பார்க்கவே முயல்கிறார்கள். ஒரு செயலை எண்ணிக்கொண்டாலே லாபக் கற்பனைக்குச் செல்கிறார்கள். ஆகவே வேறொருவர் எதையாவது செய்தாலும் அதில் அவருக்கு லாபம் உண்டு என கற்பனை செய்கிறார்கள். இன்னொரு கோணத்தில் யோசிக்க மூளை ஓடுவதே இல்லை. இது ஒரு கூட்டு உளநோய்.
நிற்க, இப்போது என் எண்ணங்களில் ஒன்று எஸ்.வையாபுரிப்பிள்ளை நினைவாக ஒரு விருது. மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படுவது. ரூ ஐந்து லட்சம். இன்னொரு மூன்று லட்சம் விழாவுக்கு. திருவனந்தபுரத்தில் அல்லது நெல்லையில் நடைபெறவேண்டும் என்பது விழைவு. நண்பர்கள்மேல் சுமையை ஏற்றுகிறேனோ என்றும் தயக்கம் உள்ளது.
ஜெ