முதலில் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. துறவுக்கான எந்த அறிகுறியையும் அவன் முன்பு காட்டியிருக்கவில்லை. அவன் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி. நகரத்தின் மையமான பகுதியில் தலைமுறைகளாக நடத்திவரும் ஒரு கடையின் மூன்றாம் தலை வாரிசு. வாரிசுகளுக்கே உரிய இன்ப வேட்கையும் புதுப்பிக்கும் துடிப்பும் கொண்டவன். வார இறுதிகளில் நானும் அவனும் சேர்ந்த பணம் வாங்கக்கூடிய எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறோம். பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நம்பியிருக்கிறோம். எங்கள் அனுபவங்கள் அப்படித்தான் அமைந்தன.
நான் முதலில் அவனுக்கு வேறு ஏதோ இக்கட்டு என்று நினைத்தேன். வியாபாரிகளுக்கே வரக்கூடிய இக்கட்டுகள். கொடுக்கல் வாங்கல் அல்லது பெண் விவகாரம். அவற்றிலிருந்து தற்காலிமாக தப்பிக்கவே இந்த வேஷத்தை அவன் எடுத்திருக்கிறான். வார இறுதிகளில் நாங்கள் கோவாவுக்குச் சென்றது போல இப்போது அவன் இமாலயத்துக்குச் சென்றிருக்கிறான். அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் நிஜமாகவே அவன் சன்னியாசி ஆகிவிட்டான் என்று சொன்னார்கள்.
நான் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை. இமாலயத்துக்கே போய் அவனைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன். சந்தித்து எங்கள் பழைய களியாட்டாங்கள் பற்றிப் பேசலாம். எங்கள் பயணங்கள், மலை ஏற்றங்கள், கூட்டாக அனுபவித்த பெண்கள். அவன் திடீரென்று இந்த சாகசத்தில் என்னை மட்டும் கழற்றிவிட்டுப் போனது சினம் அளித்தது. நான் அதை அப்படித்தான் பார்த்தேன். இன்னொரு சாகசம்
எனது பணி நெருக்கடியில் உடனடியாக அது முடியவில்லை. எனது ‘உடனடி’என்ற வார்த்தைக்கு இரண்டு வருடங்களாகிவிட்டன. ஒரு நாள் அவன் சில சட்ட ஆவணங்களில் கையொப்பமிட்டு ஒப்படைப்பதற்காக ஊருக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டுப் போனேன்.
அவன் எதிர்பார்த்தது போலவே காவியில் இருந்தான். மற்றபடி எந்த மாற்றமும் தெரியவில்லை. இல்லை கண்களில் அவற்றை அவன் நகர்த்தும் விதத்தில் ஏதோ மாற்றம் வந்திருந்தது.
அவன் என்னைக்கண்டதும் புன்னகைத்து “வா” என்றான். அவன் வீடு பரபரப்பாய் இருந்தது. நான் அது அடங்கக் காத்திருந்தேன். அவன் அன்று முழுவதும் பத்திரங்களில் கையொப்பமிட்டுக்கொண்டே இருந்தான்.
மாலையில் ஒரு இடைவெளியில் அவன் சட்டென்று பேச ஆரம்பித்தான். “நான் ஒரு விளக்கம் தரவேண்டும் என நீ நினைக்கிறாய் இல்லையா?” என்று தொடங்கினான்.
‘சொன்னால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். எல்லாம் ஒரு நாள் காலைக்குள் மாறியது. நான் வழக்கம்போல் காலையிலேயே கடைக்கு வந்து கல்லாவில் உட்கார்ந்திருந்தேன். அன்றைய நாளுக்குரிய சில பிரச்சினைகள், அவற்றைச் சரி பண்ணவேண்டிய வழிகள் பற்றி யோசித்துக்கொண்டு. சாலையில் ஜனங்கள் நிறைவதைப் பார்த்துக்கொண்டு. அந்த சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் வியப்பாக இருக்கும். எட்டு மணி வரைக்கும் ஹோவென்று இருக்கும். பத்து நிமிஷத்தில் ஆபீஸ் போகிறவர்கள், பள்ளி போகிறவர்கள் என்று நிரம்பிவிடும்.முக்கால் மணி நேரத்தில் வடிந்துவிடும். அதன் பிறகு மாலை ஒரு முறை எதிர்த் திசையில் நடக்கும்.இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது.தெரியும். ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன். நான் அன்றைய காலை செய்தித் தாள்களைப் பார்த்தேன்.எல்லா செய்திகளும் புதியவையாகவும் பரிச்சயமாகவும் ஒரே நேரத்தில் தோன்றின. கடை மேலாளர் வந்து உடனே வாங்க வேண்டிய பொருட்களின் ஜாபிதாவைக் கொடுத்தார். கல்யாண சீசன் வருது சார் என்றார். கடைக்குள் அன்றைய முதல் வாடிக்கையாளர் வந்தார். வீட்டிலிருந்து இவள் போனடித்துக்கொண்டே இருந்தாள். ஏதோ சண்டை.அது அவள் மாதாந்திர சமயம்.அடுத்த வாடிக்கையாளர் வந்தார். இதன்பிறகு ஒரு இரண்டு மணி நேரம் வந்துகொண்டே இருப்பார்கள். பிறகொரு ஓய்வு. மறுபடியும் மாலையில் வரத் துவங்குவார்கள்.
எனக்கு மெல்ல எல்லாம் விளங்கத் துவங்கியது. இது ஒரு அலை.எல்லா வியாபாரிகளுக்கும் இந்த அலைகளின் போக்கும் நீங்கலும் தெரியும். இதே போல்தான் எல்லாம். எல்லாவற்றிலும் கடையில், வீட்டில், உலகில். என் உடலில், என் மனைவியின் உடலில் எல்லாம்… என் வெற்றி, தோல்வி, காமம், வெறுப்பு எல்லாமே இந்த அலைகளின் போக்குவரத்துதான்.
முன்பே சொன்னது போல் இது என் கண் முன்னால் நடந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. தெரியும். ஆனால் அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன்.
எனக்கு வியர்க்கத் தொடங்கியது. நான் ஒரு போஞ்ச் வாங்கச் சொல்லிக் குடித்தேன். வெளியே போய்ட்டு வரேன். கடையைப் பார்த்துக்கோங்க. அப்பா தாத்தா படத்தில எல்லாம் சரம் மாத்துங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்போது கூட நினைக்கவில்லை. ஒரு சிகரெட்டுக்காக வெளியே வந்திருக்கிறேன் என்றே நினைத்தேன். பஸ் ஸ்டாண்டில் உறுமிக்கொண்டிருந்த ஒரு பஸ்சில் பையன் ‘சாமிமலை! வாங்க வாங்க! சீக்கிரம்! சாமிமலை!’ என்று கத்திக்கொண்டிருந்தான். என்னை ஏதோ ஒன்று வந்து மூடியது போல் இருந்தது ஏறிவிட்டேன்.”
நான் மவுனமாக அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“எது வந்து மூடியது உன்னை?” என்றேன் பலவீனமாக. கேட்கும்போதே எனக்குப் பதில் தெரிந்தே தான் இருந்தது. அவன் சொல்லிக் கேட்கநினைத்தேன் போல.
அவன் சொன்னான்.
அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். ”ஒரு அலை” என்றான். “ஆனால் இம்முறை ஒரு பேரலை.”