பூன் முகாம், கடிதம்

வணக்கம் ஜெ,

மே 13 மற்றும் 14  எனக்கு மறக்க முடியாத நாட்கள். நோர்த் கரோலினா, Boone என்ற அழகான மலை பிரதேசத்தில் நடந்த இரண்டு நாள் இலக்கிய சந்திப்பில் நான் கற்றவற்றை எல்லாம் எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. சில விஷயங்களை உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் புரிந்து கொள்ள இயலாது கவிதையை போல. Boone  அனுபவமும்  அப்படிதான்.

முதல் நாள் சிறுகதை பரிணாமம் பற்றி உங்கள் உரையுடன் தொடங்கினோம். சிறுகதையையும்  ஜோக்கையும் இணைத்து நீங்கள் சிறுகதை உருவான விதம் சில குட்டி கதைகளை எடுத்துக்காட்டாக நீங்கள் கூறியது எல்லாம் மறக்க முடியாது. ஜே.கே அவர்கள் எழுதிய சுயதரிசனம் பற்றி திரு.விஜய் சத்யா அவர்களும், எழுத்தாளர் அசோகாமித்ரன் அவர்களின் பிரயாணம் என்ற சிறுகதை பற்றிய கருத்துக்களை திரு.ஜெகதீஷ் அவர்களும்  பகிர்ந்தனர். நீங்கள் நான் முற்றிலும் அறியாத பல தகவல்களை அந்த சிறுகதை பற்றிய உரையாடல்களின் போது  பகிர்ந்தீர்கள். நான்  திரு.திருச்செந்தாழை அவர்கள் எழுதிய ஆபரணம் என்ற கதையின் வாசிப்பு அனுபவத்தை உங்கள் முன் பகிர்ந்த தருணத்தை மறக்க இயலாது. அது ஒரு பொக்கிஷ தருணமாக வைத்துக்கொள்வேன்.

அடுத்து அறிவியல் கதைகள்  பற்றிய நிகழ்வில் திரு.விசு அவர்கள் Issac  Asimov எழுதிய Nightfall என்ற சிறுகதை பற்றி பகிர்ந்தார். அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்வது பற்றி சொன்னீர்கள். ஐந்தாவது மருந்து என்ற தங்களின் சிறுகதையை பற்றி பேசியபோது சித்தர்களின் ethics, தாங்கள் செய்யும்  செயலின் பின் விளைவுகளுக்கு தாங்கள் பொறுப்பு எடுத்து கொள்வது பற்றியும் விரிவாக பேசினீர்கள்.

கவிதை session எனக்கு மிகவும் பிடித்த செஷன். திரு.பாலாஜி ராஜு, அபி அவர்களின் கவிதையை வாசித்தார்.கவிதைகளை புரிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை பற்றி கேட்ட போது நீங்கள் கவிதையில் உள்ள எல்லா வார்த்தைகளும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய கூடாது. சில முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அதாவது அழுத்தம் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும். நிறைய கவிதைகளை வாசிக்க வாசிக்க அந்த கவிதையின் பொருளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும் என்று நீங்கள் கூறியதோடு அபி அவர்களின் கவிதைக்கும் நீங்கள் அழகான காட்சியை எங்களுக்கு காட்டினீர்கள். உங்கள் கண்கள் வழியே நாங்களும் கண்டோம்.

இசை பற்றிய திரு.ராஜன் சோமசுந்தரம் அவர்கள் பல கருத்துக்களை பகிர்ந்தார். எனக்கு அது புது அனுபவமாக இருந்தது. அதை தொடர்ந்து வெண்முரசு ஆவணப்படம் நான் முதல் முறையாக பார்த்தேன். கண்ணானாய், காண்பதுமானாய்! என்ற பாடல் வரிகள் எப்பொழுது கேட்டாலும் கண்கள் பனிக்கிறது.

இரண்டாம் நாள் தங்களின் தத்துவ உரையோடு தொடங்கியது. நான் இதுவரை தத்துவ நூல்கள் வாசித்ததில்லை. நீங்கள் பரிந்துரை செய்த The Pleasure of Philosophy  by Bertrand Russell  படிக்க முடிவு செய்துள்ளேன். வாழ்க்கையில் நாம் பிரச்னையாக பார்ப்பது எல்லாம் பஞ்சு மிட்டாய் போல அந்த கணத்தில் பெரிதாக தெரியும் சில வருடங்களுக்கு பின் அது உருட்டிய பஞ்சு மிட்டாயைப்  போல சிறிதாக தெரியும் என்று  நீங்கள் தத்துவத்தின் தேவை, western  philosophy மற்றும் eastern philosophy  பற்றிய  தகவல்கள், eastern philosophy is  about liberation and ethics என்று தத்துவத்தை பற்றி ஒரு எளிய புரிதல் ஏற்பட ஒரு சின்ன உரை நிகழ்த்தி நான் தத்துவத்தை படிக்க தொடங்க ஒரு விதை விதைத்தீர்கள்.

திருமணத்திற்கு பிறகு  தங்கள் வாழ்க்கையை தங்களுக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவும் பெற்றோருக்காகவும் வாழ்கிறேன் என்று வாழ்ந்துவிட்டு  பின், நான் எனக்காக வாழவில்லை என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு உங்களுக்குகாக வாழுங்கள், provide   their needs and inspire your kids, அது செய்தாலே அவர்கள் அவர்களின் வாழ்க்கையை நன்றாக வாழ்வார்கள் என்று நீங்கள் சொன்னது ஒரு eye opener for young parents. கம்பராமாயண பாடல்கள் சிலவற்றை திரு.விசு அவர்களும் திரு.செந்தில் அவர்களும் வாசித்து அதன் பொருளையும் பகிர்ந்தார்கள். கம்பராமாயண பாடல்களை உணர்வோடு (with  expression) வாசிப்பதில்தான் அதன் அழகு வெளிப்படும் என்று வாசித்தும் காட்டினீர்கள்.

அருண்மொழி mam, டால்ஸ்டாய் எழுதிய  போரும் அமைதியும் புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தை அழகாக மடை திறந்த வெள்ளம் போல இன்றும் அந்த நூலை பற்றி பேசும் போது excited ஆக பேசுவது அந்த நூலை இதுவரை படிக்காதவர்களை கண்டிப்பாக படிக்க தூண்டும். பனி உருகுவதில்லை புத்தகத்தை பற்றி பேசிய நிகழ்வும் சுவையாக இருந்தது. வீட்டிற்கு திரும்பும் போது தங்களின் பல கற்பித்தலுடன்  உங்களுடைய கையெழுத்து மற்றும் நான் உங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பொக்கிஷமாக எடுத்து வந்தேன். எதிர்காலத்தில் இன்னும் பல இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும் முதல் சந்திப்பு என்பது எப்போதுமே மறக்க முடியாதுதான். இந்த நிகழ்வு  சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். ஆஸ்டின் சௌந்தர் அண்ணாவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி!

மதுநிகா

முந்தைய கட்டுரைகிறிஸ்தவம்,சூஃபி- கடிதம்
அடுத்த கட்டுரைசெய்யிது ஆசியா உம்மா- இணைப்பாதை