அரசியலும் இலக்கியமும்- கடலூர் சீனு

கடலூர் சீனு

இனிய ஜெயம்

நேற்று இரவு உங்கள் நூல்கள் தேடி புதிய வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். நான் கடலூர் சீனு என்று தெரிந்ததும் மிகுந்த உற்சாகம் கொண்டு இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசத்துவங்கினார். கேள்விகளும் பதில்களுமாக தொடர்ந்த உரையாடல் தமிழ் இலக்கிய வாசகனின் அரசியல் ஈடுபாடு எனும் தலைப்பை நோக்கி நகர்ந்தது.

உரையாடலில் எனது தரப்பை நான் இவ்வாறு முன்வைத்தேன். தமிழ் இலக்கிய வாசகனை, தமிழலக்கிய அரசியலின் வரலாற்றின் பின்புலத்தில் பொருத்திப் பார்த்தால் அதன் முதல் காலம் தாகூர் பாரதியின் காலம். கோரா வழியாக தாகூர் எதை பேசினாரோ, பாஞ்சாலி சபதம் வழியே பாரதி எதைப் பேசினாரோ அதற்கான அன்றைய சமூக அரசியல் சூழல் பின்புலம் அல்ல, ஸ்ரீலால் சுக்லா தர்பாரி ராகம் எழுதிய, தமிழில் நவீனத்துவம் வீச்சுடன் எழுந்த சூழல், பின்னர் 90 களுக்கு பின்னர் எழுந்த பின்நவீனம் பெண்ணியம் தலித்திய இலக்கிய எழுச்சி நிகழ்ந்த அடுத்த அலை. அதன் பிறகு அறம் சிறுகதை தொகுதி எழுந்து வந்த ‘இன்றைய’ காலம்.

இந்த வரிசையில் அது பேசிய நேர்நிலை அம்சங்கள் அனைத்தையும் இழந்து எதிர்நிலை பண்புகள் மட்டுமே கோலோச்சிய காலம் என்று இந்த 90 களுக்கு பிறகான காலத்தை சொல்லலாம். வெகுஜன  ஜனநாயக களத்தில் சாதி வெறி, மத வெறி, அரசியல் வெறி, அதிகார வெறி இந்த நான்கையும் ஒன்றாக பிணைத்து வைத்த காரியத்தை இந்த அலை நிகழ்த்தியது.

இன்றைய ‘அறத்தின்’ காலம் என்பது உலகம் முழுமையும் ஒரே ஒரு பொருளாதார கொள்கை அது தேர்வு செய்யும் அதன் படியிலான அரசுகள் ஆளும் காலம். தேர்தல் உட்பட அனைத்தும் முதலீட்டியத்தால் காசு கொடுத்து வாங்கப்படும் காலம்.

இன்று சாதி மத அரசியல் அதிகார வெறியை சமூக அரசியல் உரையாடல் எனும் முகமூடிக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களில் இலக்கிய வாசகர்களும் உண்டு. பெரு முதலீட்டில் விலைக்கு வாங்கப்படும் தேர்தல் எனும் இன்றைய வணிக விளையாட்டில் இவர்களின் கருத்து மோதல்களுக்கு எந்த ஒரு பயன் மதிப்பும் கிடையாது. உபரியாக தான் கொண்ட இலக்கிய ரசனை நுண்ணுணர்வை அதற்கு களப் பலி கொடுப்பது மட்டுமே மிச்சம்.

இன்றைய காலத்தில் கூறுணர்வு கொண்ட இலக்கிய வாசகன் அரசியல் களத்தில் ஒன்றை காணலாம். காரணம் எது எனினும் அன்று வெள்ளையர் காலத்தில் செத்த அதே விவசாயிகள், பசுமைப் புரட்சிக்கு பின்னும் செத்தார்கள், 90 களுக்கு பிறகும் செத்தார்கள், இன்றும் சாகிறார்கள். அவர்கள் தலைக்கு மேலே வித விதமான அரசியல் மாற்றம்.

ராக்கெட் தளம் அமைக்க தங்கள் நிலங்களை அரசு கையப்படுத்துவதை எதிர்த்து போராடியவர்களுக்கு தலைமை தாங்கிய சந்திரசேகர் பின்னர் பிரதமர் ஆனதும் செய்த முதல் வேலை அந்த நிலங்களை பறித்து ராக்கெட் தளம் அமைக்க கையகப் படுத்தியதே. வித்யாரண்யர் மடத்தில் இருந்து முளைத்த விதையே ஹரிஹர் புக்கர். அவர்கள் பெயரை சொல்லி பண்பாட்டு காவலர்கள் என பிரகடனம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த மத்திய அரசின் காலத்தில்தான் பூரி கோயிலை சுற்றி உள்ள கோயில் பண்பாட்டுடனும் வரலாற்றுடனும் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலும் தொடர்பு உள்ள அத்தனை மடங்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆட்சிகள் மாறும். காட்சிகள் மாறாது.

இத்தகு சூழலில் இன்று ஒரு இலக்கிய வாசகன் அரசியல் நிலைப்பாடு ஒன்றை கைகொள்ளுவான் எனில் அவன் இரண்டு இடங்களில் சென்று விழுவான். ஒன்று அவன் இலக்கியத்தை இழப்பான். இலக்கியம் அரசியல் இரண்டின் செயற்களமும் இரண்டு துருவங்கள். இலக்கியம் முற்றிலும் அகம் சார்ந்தது. அரசியல் முற்றிலும் புறம் சார்ந்தது. இலக்கியம் ஒவ்வொரு முறையும் அகத்தை கலைத்து அடுக்குவது. அரசியல் வெறி நம்பிக்கை இவற்றில் மட்டுமே ஒருமை கொண்டு இயங்குவது. இலக்கியம் நாம் என்பதில் திகழ்வது. அரசியல் நாமும் அவர்களும் என்ற இருமையில் மட்டுமே உயிர் வாழ்வது. இந்த சமன்பாட்டில் இலக்கிய வாசகன் அகத்தால் தனது தனித்தன்மை இலக்கியத்தை இழந்து புறத்தால் பொதுத்தன்மை கொண்ட அரசியல் நிலைப்பாட்டாளன் ஆக மட்டுமே எஞ்சுவான். இரண்டாவதாக கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் அவன் நிற்கும் கட்சி செய்த நேர்நிலை அம்சங்கள் அளவுக்கே, அவனது கட்சி செய்த எதிர்நிலை அம்சங்களுக்கும் அவன் பொறுப்பாளி ஆகிறான்.  பூரி மடங்கள் அழிவில் அந்த பாவத்தில் அக் கட்சி  ஆதரவாளர் அனைவருக்கும் சம பங்கு உண்டு.

ஆக ‘இன்றைய இலக்கிய வாசகனின்’ சமூக அரசியல் கண்ணோட்டம் என்பது என்னவாக இருக்க வேண்டும் எனில், இனி வரும் காலத்திலேனும் லட்சியவாத கனவை கொண்ட சமூகம் ஒன்று உருவாக எவை எவை எல்லாம் ‘இன்று’ பணி செய்து கொண்டு இருக்கிறதோ ( தன்னறம் இயக்கம் போல) அவற்றைக் கண்டு, அவற்றுடன் நின்று, அவற்றை குறித்து பொது வெளியில் பேசி, அவற்றின் அராஜக இருப்பை இன்றய பொது மனதில் துலங்க வைப்பதாக இருக்க வேண்டும்.

அரசியல் பேச இங்கே பிரதமர் முதல் தெருக்கோடி பெட்டிக்கடை நாராயணன் வரை 100 கோடி பேர் உண்டு. அதேயே இன்றைய இலக்கிய வாசகனும் செய்ய தேவை இல்லை. இன்று இலக்கிய வாசகனாக இருப்பது என்பது ஒரு ‘சமூகப் பொறுப்பு’ அந்தப் பொறுப்பை இன்றைய அரசியல் மாயையில் தொலைக்காமல் என்றும் உள்ள கலை இலக்கியப் பண்பாட்டுக் களத்தை வளமாக்க பணி புரிவோம்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைசியமந்தகம்- கடிதம்