விஷ்ணுபுரம் வாங்க
அன்புள்ள ஜெ
வெண்முரசிற்கு பின் அடுத்த செவ்வியல் ஆக்கமாக விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கியுள்ளேன். நேற்று கௌஸ்துபம் சென்று சேர்ந்தேன். ஞான அவை கூடுதல் தொடங்கியுள்ளது. விஷ்ணுபுரம் ஒருவகையில் உள்ளத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. திருவடி, பிங்கலன், சங்கர்ஷணன், அனிருத்தன், ஸ்வேத தத்தன் என நீளும் நிரையில் ஒவ்வொருவரும் என்னில் ஒன்றை கொண்டுள்ளார்கள் என்பதால். அவர்கள் அனைவரிலும் வாழ்பவன் என்பதால். இன்னொரு பக்கம் விஷ்ணுபுரம் வாசிப்பிற்கு பெருந்தடையை அளிக்கிறது. வெளிவந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எழுதியும் பேசியும் மிக இயல்பாக அதை சென்றடைவதற்கான களத்தை உருவாக்கியுள்ளீர்கள்.
இன்றைக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகளின் விதையை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். உதாரணமாக சிற்பி காசியபரிடம் தான் ஏன் சிற்ப கலையை புறக்கணித்தேன் என்று கூறுமிடம். சிற்பவியல் முழுமையுறுவது ஆலயத்தில். ஆனால் அந்த ஆலயம் சிற்பியின் கனவல்ல. ஒரு தத்துவ தரிசனத்தின் வெளிப்பாடு. சிற்பி தரிசனத்தை கல்லில் வடிக்கும் கருவி என்று பிரசேனர் கூறுமிடம். இந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி சென்ற ஆண்டு மிக விரிவாக ஆலயங்களை மாற்றி அமைத்தல் குறித்த விவாதத்தில் விளக்கம் கொடுத்தீர்கள். விஷ்ணுபுரம் என்பது ஒரு நோக்கில் நீங்களே தான். இருபத்தைந்தாண்டுகளில் அது ஆலமரமாக வளர்ந்துள்ளது. இன்று சில வருடங்கள் உங்களை வாசித்த பின் விஷ்ணுபுரத்திற்குள் நுழைவதன் சிரமம் குறைவாக உள்ளது.
எனினும் விஷ்ணுபுரத்தின் செறிவும் உணர்வு தீவிரமும் இப்போதும் வாசிப்பிற்கு பெருந்தடையை அளிக்கிறது. இந்த தடை உணர்ச்சி வெண்முரசின் கிராதத்தை நினைவுப்படுத்துகிறது. கிராதம் கொடுக்கும் ஈர்ப்பும் தடையுமான உணர்வு அதன் சைவம் சார்ந்த பின்புலத்தாலும் கனவுகளுக்குள் ஊடுருவி செல்லும் யோக முறையும் சேர்ந்ததன் விளைவு. மாற்றில்லாது விஷ்ணுபுரத்திலும் அதுவே நிகழ்கிறது. வித்தியாசம் என்னவெனில் அர்ஜுனன் வழி சென்றடைகையில் முதல் தளத்தில் பண்பாட்டின் ஆழத்தை வருடுகிறோம். பின்னர் அங்கே இருந்து நம்மில் நாம் சுமப்பவற்றை அறிந்து செல்கிறோம். அது ஓட்டுமொத்தத்தில் இந்திய பண்பாட்டின் வேரை அடி நிலமாக கொண்டுள்ளது. விஷ்ணுபுரம் நேரடியாக நமது கனவாழத்துடன் உரையாடுகிறது. இதன் வேர் நிலம் என்னுடைய கனவு தான். அங்கே பண்பாட்டு கூறுகள் சொந்த ஆணவத்துடன் இணைந்துள்ள விதம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே பறவையை நிலத்திலும் விமானத்திலும் பார்ப்பதற்கு நிகர்.
முன்னுரையில் சொல்லும் கனவுகளில் இனிமையானவை எவையுமில்லை என்ற வரி நினைவுக்கு வருகிறது. உண்மையில் கனவுகள் நமக்கு ஈர்ப்பை மட்டுமே அளிக்கின்றன. பொதுவில் கனவுகளுக்கு பயப்படுவதே நம் இயல்பாக உள்ளது. அவை எப்போதுமே நாம் முடிக்க மறைக்க விரும்பும் எதையோ ஏந்தி வருபவை. விஷ்ணுபுரத்தின் செல்வது ஒருவகையில் சொந்தமான ரண சிகிச்சை செய்து கொள்வதற்கு ஒப்பானது.
ஶ்ரீபாதம் வெவ்வேறு வாழ்க்கை களங்கள் சுழித்து மோதி செல்லும் களமாக உள்ளது. அங்கே நான் சென்றாக வேண்டிய பாதைகள் நிறைய உள்ளன. கௌஸ்துபம் ஞான விவாதம். மணிமுடி பிரளயம். எதுவுமின்மை, வெறுமை. இதுவே ஓர் தரிசனம். அவன் பாதங்களில் வாழ்க்கை சுழித்து ஓடுகிறது. உந்தியில் அதையாளும் ஞானம் திரண்டெழுகிறது. சிரசில் இவையனைத்தும் முடிவிலா வெறுமையில் கரைந்து மறைகிறது. ஆம் இப்படி சொல்லும் போதே உள்ளம் கூவுகிறது. அவ்வளவுதானா அவ்வளவுதானா என்று. பெரும்பாலானோர் இதனால் தான் ஞானத்தின் பக்கம் வராமல் போகிறார்கள் போலும். ஞானம் வெறுமையை நோக்கி இட்டு செல்கிறது. அதுகண்டு அஞ்சுபவன் மருந்தே நஞ்சாவது போல் ஞானத்தை ஆகங்காரமாக்கி கொள்கிறான்.
காசியபனிடம் பேசும் விஸ்வகரில் காண்பது அதை தானே. இந்த மனமயக்கத்திற்கான காரணமென்ன ? ஞானம் உலகியலை வெல்ல செய்யும் என நினைக்கிறோம். ஆனால் அது இயல்பில் எதிர்வினையாற்றுவது அல்ல. விடுவிப்பது மட்டுமே. எவற்றிலிருந்து என்றால் எல்லாவற்றிலிருந்தும். தன்னிலிருந்தும் கூட. அதை காண மறுப்பதே வித்யா கர்விகளின் இருள். சித்தன் அதை கண்டவன், கடந்து சென்றவன். அவன் எல்லாவற்றையும் தகர்ப்பவன். ஞானம் வெறும் கருவி மட்டுந்தான் என்கிறான். இதுவரை ஞானத்தை அடைவதே உன்னதம் என நினைத்து கொண்டிருந்த என் தலையில் இடி விழுந்தது. பலமுறை கேட்டது தான் எனினும் ஒவ்வொரு முறை மீள கேட்கையிலும் அந்த உண்மை அச்சுறுத்தச் செய்கிறது. ஆனால் இயற்கையின் கொடும் விதிகளில் ஒன்று, எதுவும் திரும்பி செல்ல இயலாது. ஞானத்தின் மேல் ஆர்வம் வந்த பின் மீண்டு வரவே இயலாமல் ஆகிறது. பிங்கலனை போல். ஞானத்தை நாடி வந்தவர்களில் எங்கோ ஒருகணம் பிங்கலனாக மாறதவர் இல்லை போலும். எங்கேனும் வாழ்க்கையின் கற்பாறைகளில் மோதி ஆணவமழியாத வரை திரும்பி வருதலோ முன்னகர்தலோ இல்லை என்றே நினைக்கிறேன்.
சித்தன் காசியபனை தேர்ந்தெடுக்கும் கணத்தை உள்ளத்தில் ஓட்டி கொண்டிருந்தேன். காசியபனில் இருந்த எது சித்தனை வரவழைத்தது ? விஸ்வகரின் ஆகங்காரத்திற்கு எதிர்வினையாற்றாது வாய் பிளந்து நிற்கும் ஆணவமின்மையே, கள்ளமின்மையே காரணம் என்று தோன்றுகிறது. இவனுக்கு அடுத்து இவன் சொன்னவற்றிலிருந்து மேல் சென்று சொல்லும் வித்யாபேக்ஷியை விஸ்வகர் ஏற்று கொள்வதை இனம் இனத்தோடு சேர்ந்ததது என்று பார்க்கிறேன்.
உடனடியாக இதை எண்ணுகையில் சிற்பியை ஆவேசம் கொண்டு அழைக்கும் முதிர்ந்த காசியபனில் காணும் விழைவு நெருடுகிறது. சித்தனின் முழு விடுதலை ஏன் காசியபனில் நிகழவில்லை ? அந்த முதல் சந்திப்பிலேயே அதற்கும் விடை இருக்கிறது. சித்தனின் தாடி உரசி குறுகுறுவென்று உணரும் சிறுவன் ஞானத்தை அல்ல, தந்தையை காண்கிறான். இப்போதைக்கு இப்படியொரு காரணம் தோன்றுகிறது. இந்நாவல் விரிந்து மடிந்து பரவ போகிறது என்னுள்.
அன்புடன்
சக்திவேல்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307