அமெரிக்காவில்

இந்த முறை அமெரிக்கா வரும்போது ஒரு சிறு பதற்றம் இருந்தது. அமெரிக்காவுக்கு வெறும் பயணியாகவே எல்லா முறையும் வந்திருக்கிறேன். முதன்முறை வரும்போது விசா வாங்கும்பொருட்டு அமெரிக்காவின் ஏதாவது ஒரு தமிழ்ச் சங்கம் எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்குள்ள அமைப்புகள் அதற்கு முற்றாக மறுத்துவிட்டன. நல்லவேளையாக இந்திய அமெரிக்க கான்சுலேட்டில் நண்பர் அன்புவின் அண்ணா தீனதயாளன், அவர்களின் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜெயகாந்தனின் நண்பர், என்னுடைய சிறந்த வாசகர். அவர் எனக்கு அமெரிக்க துணைத்தூதரை அறிமுகம் செய்து வைத்தார். இருபது நிமிடத்தில் பத்தாண்டு விசா எனக்கு கிடைத்தது.

இங்கு வந்த பிறகு பாஸ்டனில் சிறில் அலெக்ஸ் வீட்டில் தங்கியிருந்தபோது நான் தங்கியிருக்கும் தகவலை என் தளத்தில் அறிவித்தேன். அங்கிருந்த ஒரு நண்பரின் இல்லத்தில் நண்பர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். நாற்பது நண்பர்கள் பார்க்க வந்தார்கள். அது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைய செல்லுமிடத்தில் எல்லாம் என் இணையதளத்தை நம்பியே வாசகர்களை வரவழைத்தேன். முழுமையாகவே ஒரு இலக்கிய சுற்றுப்பயணமாக அதை மாற்றிக்கொண்டேன்.

இரண்டாம் முறை வந்தபோது பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறைவாகவே கூட்டங்களை ஒத்துக்கொண்டேன். மூன்றாம் முறை 2019-ல் வந்தபோது கூட்டங்கள் எதையுமே ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று முன்னாலேயே சொல்லியிருந்தேன். செப்டம்பரில் இங்கே இலையுதிர்காலத்தில் மரங்களும் வண்ணம் கொள்வதைப் பார்ப்பதற்காகவே வந்தேன். வைட் மௌண்டன்ஸ் வழியாக நிகழ்த்திய அந்தப்பயணம் ஒரு மாபெரும் வண்ணஓவியத்தினூடாக ஊர்ந்து செல்லும் கனவு அனுபவமாக இருந்தது.

அரிய அனுபவங்களின்போது அருண்மொழி கூட நிற்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆகவே மறுமுறை அருண்மொழியுடன்தான் வருவேன் என்று அப்போது சொன்னேன். இம்முறை அருண்மொழி ஒரு எழுத்தாளருக்குரிய அடையாளத்துடன் வருகிறாள். எல்லா ஊரிலும் அவளுக்கான வாசகர்கள் இங்கு உருவாகியிருக்கின்றனர்.

இம்முறை தமிழ் விக்கி வெளியீட்டு விழா நிகழ்ச்சி வாஷிங்டனில் பிராம்டனில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. முதன்முறையாக அத்தனை பெரிய ஒரு விழாவை இங்கே ஒருங்கிணைக்கிறோம். அத்துடன் ஓர் உணர்ச்சிகர உளநிலை என்னில் இருந்தது. மைய அதிகாரத்தால் கல்வி அமைப்புகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் என் முன்னோடிகளை இங்கே முன்னிறுத்தப் போகிறேன் என்று எனக்குத் தெரிந்திருந்ததன் விளைவு அது.

இங்கு வந்த இரண்டாம் நாள் விழாவில் பங்கேற்கவிருந்த அத்தனை விருந்தினரும் ஒரே நாளில் விழாவுக்கு வரவில்லை என்று சொன்னார்கள் என்று தகவல் தெரிந்தது. அதை ஒரு கும்பல் இணையத்தில் தங்கள் வெற்றியாக கொண்டாடிக்கொண்டிருந்த செய்திகளும் வந்துகொண்டிருந்தன. ஆனால் ஒருமணிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். அதன்பின் பொறுமையாக காத்திருந்தோம். எதிர்ப்பாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

உண்மையிலேயே ப்ரண்டா பெக், தாமஸ் புருக்ஸ்ய்மா இருவரும் கலந்து கொண்டது நினைக்க நினைக்க நினைவூட்டுகிறது. ஒருவர் தமிழ் பண்பாட்டை நாட்டாரியலை வெளிக்கொண்டுவந்தவர். இன்னொருவர் செவ்வியலை வெளிக்கொண்டுவந்தவர். எங்கள் நோக்கமே அதுதான். கல்வியாளர்களையோ பேராசிரியர்களையோ அழைத்து வருவதல்ல. உண்மையில் கல்வியாளர்களுக்கு ஒருவாய்ப்பு கொடுத்தோம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

பலர் எண்ணுவதுபோல எனக்கு எந்த அமைப்பு வல்லமையும் இல்லை. அமைப்புகள் எனக்கு ஒத்துவருவதில்லை என்பது ஒரு பக்கம். தமிழில் கல்வித்துறை மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சரி, தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சரி, படைப்பிலக்கியம் மீது எந்த மதிப்பும் இல்லாதவர்கள். படைப்பிலக்கிய வாசிப்பு மிகமிகக் குறைவாக உள்ளவர்கள். அவர்களுக்கு அதிகாரமும் ஊடகப்புகழும் மட்டுமே கண்களுக்கு தெரியும். அவர்களுக்கு முன் நான் ஒரு தருணத்திலும் சென்று நிற்கப்போவதில்லை.

என் அமைப்பு என்பது என் வாசகர்களின் வட்டம்தான். என் எழுத்துக்கள் வழியாக அறிமுகமாகி, என் மேல் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் இதுநாளைய வரலாற்றில் எவருக்கும் இப்படி ஒரு வாசகர்ச் சூழல் அமைந்ததில்லை. அந்த வாசகர்ச்சூழலைக்கொண்டு இலக்கியத்திற்கு பணியாற்றுவதையே நான் செய்துவருகிறேன்.

நியூயார்க்கில் நண்பர் பழனி ஜோதி-மகேஸ்வரி இல்லத்தில் தங்கினேன். அங்கிருந்து நியூயார்க் நகர டைம் ஸ்கொயருக்குச் சென்றேன். ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்போதும் டைம் ஸ்கொயருக்குச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடத்தின் (One World Trade Center) மேலிருந்து நியூயார்க் குடாக் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு தலைமுறையிலும் அங்கு வாழ்வு நோக்கி வந்த மக்களை எண்ணிக்கொண்டேன்.

எனக்கு மிகப்பிடித்தமான படம் 1900. அதில் அமெரிக்காவுக்குள் நுழையும் கப்பலில் பெரும்பதற்றத்துடன் நின்றிருக்கும் குடியேறிகளின் ஒவ்வொரு கண்ணிலும் சுதந்திரதேவியின் சிலை நுண்மையாக பிரதிபலித்து செல்வதைக் காட்டியிருப்பார்கள். அது நம்பிக்கையின் அடையாளம். உலகிற்கு அது ஒரு வாக்குறுதி. அமெரிக்காவின் அத்தனை பொருளியல் மீறல்களையும் பிழைகளையும் பொறுத்து அதை ஒரு கனவு தேசமென நிறுத்துவது அந்த மகத்தான லட்சியவாதம். இம்முறையும் சுதந்திர தேவியின் சிலையை கனவிலென பார்த்து நின்றிருந்தேன். சுற்றிலும் நியூயார்க் நகரம் ஒளிகொண்டு நின்றிருந்தது.

வசந்தத்தின் தொடக்கம். அத்தனை இலையுதிர்ந்த மரக்கிளைகளிலும் பச்சைத்தளிர்கள் கிளம்பியிருந்தன. எண்ணைத்திரியில் சுடர் மிக மெல்ல பற்றி எழத்தொடங்குவது போல. டைம் ஸ்கொயரில் முகங்களின் கொப்பளிப்பு. உலகில் எங்கேனும் ஒருபுள்ளியில் அமர்ந்திருக்கையில் மானுடம் மானுடம் என்று உள்ளம் கொந்தளிக்குமென்றால் இங்குதான். எத்தனை தாடைகள், எத்தனை வகையான மூக்குகள், எத்தனை வகையான கண்கள், எத்தனை எத்தனை வண்ணங்கள்! உடல்மொழிகளே வெவ்வேறானவை

மானுடத்தின் அனைத்து சரடுகளையும் இணைத்து ஒரு முடிச்சு போட்ட மையம். மானுடம் வென்று செல்லும் என்ற நம்பிக்கையை உருவாக்குவது அதுதான். என்றுமே புதுமையை நோக்கி வாழ்வை நோக்கி மானுடருக்குள் ஒரு நாட்டம் உள்ளது. எந்த தத்துவத்தையும் விட எந்த அவ்வுலக வாக்குறுதியையும் விட அவனை முன்கொண்டு செல்வது அதுதான். அந்த விழைவின் கண்கூடான காட்சி வடிவம்.

நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் சாலைகளில் இலக்கில்லாமல் இங்கே சுற்றி அலைவதைப்போல் கேளிக்கை ஒன்றில்லை. பார்ப்பதற்கு தனியாக ஒன்றிருக்கக் கூடாது. முதன்முறை வந்தபோது நியூயார்க்கின் ஏராளமான தெருச்சிடுக்குகளில் சுற்றிவந்தோம். நியூயார்க்கின் மகத்தான அருங்காட்சியகங்களை மும்முறை பார்த்திருக்கிறேன். இம்முறை வெறும் நியூயார்க்கே போதுமென்றிருந்தது.

இடிக்கப்பட்ட இரட்டைக்கோபுரங்களின் இடத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் பிரம்மாண்டமான பறவை ஒன்றின் உள்ளே சென்று மீள்வது போல. இறகுவிரித்த நாரை போல வெண்பறவை. அதன் சிறகடுக்கின் நேர்த்தி வெண்சிறகைப் பார்க்கையில் மகத்தான் சிற்பி ஒருவரின் கையைப்பார்க்க முடியும்.

நான் அமெரிக்காவை விரிவாக பார்த்திருக்கிறேன். நாள் எண்ணிக்கையில் மிக அதிகமாக பயணம்செய்த நாடு அமெரிக்காவே. நினைவுகளாக சேர்த்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக எழுதியதே இல்லை. ஏனெனில் அமெரிக்கா இந்தியர்களுக்கு புதிய நிலம் அல்ல. கிட்டத்தட்ட தமிழர்களின் இரண்டாவது நிலம் என்கிற அளவுக்கு இங்கே வந்து நிறைந்துவிட்டிருக்கிறோம். ஆகவே பயணக்கட்டுரை தேவையில்லை என ஒரு நினைப்பு.

பிலடெல்பியாவில் இருக்கும் சுதந்திர மணியை (The Liberty Bell) பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.பென்சில்வேனியா அரசு கட்டிடத்தின் மணிக்கூண்டில் இருந்த மணி. அந்த கட்டிடம் இன்று  Independence Hall  என அழைக்கப்படுகிறது. 8 ஜூலை 1776ல் அமெரிக்கச் சுதந்திரப்பிரகடனம் வாசிக்கப்பட்டதை அறிவிக்க முழக்கப்பட்ட மணி இது. ஒரு கீறல் விழுந்திருக்கும் அந்த மணியை காட்சிப்பொருளாக வைத்திருக்கிறார்கள். உலகமெங்கும் ஜனநாயக உருவாக்கத்துக்கு அமெரிக்காவின் சுதந்திரப்பிரகடனம் அளித்த பங்களிப்பு என்ன என உணர்ந்தவர்களுக்கு அந்த மணி ஒரு மாபெரும் குறியீடு.

நியூயார்க்கில் ஒவ்வொரு முறையும் ஓர் இசைநாடகத்தை பார்க்கவேண்டும் என்பது என் விருப்பம். எல்லா முறையும் அது நடந்துள்ளது. இம்முறை The Phantom of the Opera என்னும் இசைநாடகத்தைப் பார்த்தேன். பிரெஞ்சு ஆசிரியர் கஸ்டன் லீரோ (Gaston Leroux) எழுதிய இந்நாவல் தமிழில் முகமூடியின் காதல் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. நியூயார்க் பிராட்வே நாடகங்கள் ஒரு கணமும் சலிக்காத கலையனுபவத்தை அளிப்பவை.

நியூஜெர்சி எனக்கு மிக அண்மையானது பழகிய நெருங்கிய நண்பர்கள் வாழும் நிலம் நண்பர் அரவிந்தன் கண்ணையன் உட்பட நண்பர்கள் ஒருநாளிரவு சந்தித்தோம் பன்னிரண்டு மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தபிறகு விடைபெற்றோம்.

வாஷிங்டனில் ஒருநாள் தங்கினோம். அமெரிக்காவின் லட்சியவாதமையங்கள் அனைத்திற்கும் செல்லவேண்டும் என்பது என் கனவு. அனேகமாக எல்லா இடத்திற்கும் சென்று விட்டிருக்கிறேன். முதல்முறை வந்தபோதே பாஸ்டனில் எமர்சனின் இல்லத்தை, வால்டன் குளத்தை, தோரொவின் குடிசையை பார்த்தேன். மார்டின் லூதர் கிங் பிறந்த இல்லம். மனித உரிமைக்கான அருங்காட்சியகம். தாமஸ் ஜெஃபர்சனின் இல்லம். ஒவ்வொரு இடத்திலும் ஒரு நம்பிக்கையை பெற்றுக்கொள்கிறேன்.

இம்முறை மௌண்ட் வெர்னான் குன்றின்மேலுள்ள ஜார்ஜ் வாஷிங்டனின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வாஷிங்டனில் பலமுறை வந்தும் கூட அங்கு சென்றதில்லை. பலமுறை விரிவாக்கப்பட்ட அரண்மனை. அவருடைய படுக்கையறை, அவரது துணைவியின் படுக்கையறை, மாடியில் குழந்தைகளின் அறைகள். அவர் வாசித்த நூலகம், அங்கே அவர் விண்மீன்களைப் பார்த்த தொலைநோக்கிகள். தொன்மையான வீட்டுக்கு நேர் எதிரே ஓடும் போடொமொக்  ஆறு அதைப்பார்த்தபடி ஜெனரல் வாஷிங்டன் அமர்ந்திருக்கும் காட்சியை என்னால் உணர முடிந்தது. உலகத்தலைவர்களில் வென்ற  அதிகாரத்தை விட்டு திரும்பிய தலைவர்களில் ஒருவர் அவர். காந்திக்கு முன்னரே.

அங்கிருந்து நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்திற்கு ராலே நகரத்திற்கு வந்தோம். இரண்டு நாள் பயணம் அருகிருக்கும் ஏரிக்கரையில் ஒருநாள். கடற்கரையில் இன்னொருநாள். ராலேக்கு நான் வருவது இது இரண்டாவது முறை முதல் முறையே மிக விரிவாகச் சுற்றியிருந்ததனால் அணுக்கமான ஒரு நகரத்திற்கு மீண்டும் வருவது போல் தோன்றியது மீண்டும் மீண்டும் இங்கு வந்துகொண்டு தான் இருக்கப்போகிறேன் என்று எண்ணிக்கொண்டேன்.

ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்திலும் இங்கிருக்கும் நண்பர்கள் வந்து சந்திப்பதற்கு ஓரிரவு ஒதுக்கப்பட்டிருந்தது அதுவும் ஒரு நல்ல இலக்கிய சந்திப்பாக அமைந்தது. மிக சம்பிரதாயமற்ற முறையில் நிகழ்ந்த சந்திப்புகளில் நடக்கும் உரையாடல்கள் உற்சாகமானவை. வேடிக்கையும் விளையாட்டும் தீவிரமும் கலந்தவை. அவற்றை இணையதளத்தில் அறிவித்து தெரியாதவர்களை வரவழைக்கவேண்டுமா என்பது ஒரு சின்ன சிக்கல் ஏற்கனவே இங்கு ராஜனுடனோ விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துடன் தொடர்புடையவர்களை மட்டுமே இந்த சந்திப்பிற்கு வரவேற்றோம். நிகழ்ச்சி மிக நிறைவூட்டும் படியாக இருந்தது.

ராலேயில் பார்த்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது வின்செண்ட் வான்காவின் ஓவியங்களுக்குள் புகுந்து செல்வதுபோன்ற காணொளி நிகழ்வு. Van Gogh: The Immersive Experience. கிளர்ச்சியூட்டும் அனுபவம் அது. ஓவியத்தையே சிற்பமாக்கியிருந்தனர். மாபெரும் கூடத்தில் நம்மை வான்கா ஓவியத்தை காணொளியாக ஆக்கி சூழ வைத்தனர். வான்காவின் ஓவியத்துக்குள் புகுந்து வாழ்ந்து மீண்டது போலிருந்தது.

ராலேயில் இருந்து பூன் எனும் இடத்தில் நிகழும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் காவிய முகாமுக்குச் சென்றேன். தமிழகத்திற்கு வெளியே நிகழும் இரண்டாவது காவிய முகாம். ஏற்கனவே சிங்கப்பூரில் ஒன்றை நிகழ்த்தியிருந்தோம்.

முந்தைய கட்டுரைரா.கி.ரங்கராஜன் -நன்கறிந்த முகம்
அடுத்த கட்டுரைஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது