படைப்பாளியின் தவமும் படைப்பின் உணர்வுத்தீவிரமும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்

அனுபவங்களை விலக்கும் கலை -பி. கே. பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் பிறிதொன்றில்லாத சிறப்பம்சம் என்ன? இரக்கமற்ற சுயஎள்ளல் நிறைந்த ஜேன் ஆஸ்டன் வாசகர்களாகிய நம் சிந்தனையை, நம் உணர்வுநிலையை  கைப்பற்றும் திறன் கொண்டவர். இந்த திறனை அவர் எப்படி அடைந்தார்? இந்த கேள்வி ஜேன் ஆஸ்டனின் நாவல்களை வாசித்து அந்த வாசிப்பனுபவத்தின் இனிமையில் திளைக்கும் சிந்திக்கும் பழக்கம் உள்ள இலக்கிய வாசகனை வியப்பில் ஆழ்த்தும் கேள்வி. ஜேன் ஆஸ்டனின் நாவல் ஒன்றை வாசிக்கும்போது அந்த நாவலின் தனித்தன்மையான அம்சங்கள் ஒவ்வொன்றும் நம் பிரக்ஞையில் துளித்துளியாக திரண்டுவரும் அனுபவத்தை நாம் அடைவதில்லை. ஜேன் ஆஸ்டனின் நாவல்கள் வாசகனில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதை தெளிவாக விளக்க நாம் இலக்கியம் தவிர்த்த வேறு விஷயங்களைத்தான் உதாரணமாக தேட வேண்டும். பொதுவாக, ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் இருப்பது போன்ற உணர்வுத்தீவிரத்தை பொதுவாக நாவல்களில் அவ்வளவு எளிதாக காணமுடியாது. நம் தர்க்கத்தை, நம் சிந்திக்கும் ஆற்றலை ஸ்தம்பித்து நிற்கவைத்து சங்கீதம்போல நேரடியாக நெஞ்சில் பதியும் உணர்வுத்தீவிரம் அது. (ஜேன் ஆஸ்டனின் ’ pride and prejudice’  நாவலை சிந்திக்கும் பழக்கம் உள்ள யாராலும் மொழிபெயர்க்கவே முடியாது என்பதையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும்.) இயல்பாகவே, ஜேன் ஆஸ்டனின் இந்த தனித்தன்மையை ஆராய்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. நாவல்களின் உலகில் மிக விசித்திரமான இலக்கியமேதை ஒருவரின் முழுமுற்றான ஆன்மவெளிப்பாடுதான் இந்த படைப்புகள்; அதற்கு அப்பால் என்றோ, அதைவிட கொஞ்சம் தாழ்ந்தது என்றோ சொல்லமுடியாது. இந்த முழுமையான ஆன்மவெளிப்பாட்டிற்கு பின்னணியாக உள்ள ஒரு அம்சத்தைப்பற்றி இலக்கிய வாசகன் அறிந்திருக்க வேண்டும்.

ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் மிக முக்கியமான சிறப்பம்சம் அவருக்கே உரிய நாசுக்கு என்று தான் சொல்லவேண்டும். இலக்கியமேதைகளைப் பற்றி பொதுவாக சொல்லத்தக்க உண்மை ஒன்றுண்டு. நல்ல நாவலாசிரியனின் மேதைமை என்பது அவன் பிரக்ஞைக்கு வெளியே செயல்படக்கூடிய வியப்பளிக்கும் செயல்முறை. அவன் தன் மேதைமையின் இயங்குமுறையை ஓரளவு உணரமுடியும். ஆனால், அது என்ன என்று நுட்பமாக அலசி ஆராய்ந்து பார்ப்பதும், தனக்கே உரிய கடிவாளங்களால் அதை முழுமையாக கட்டுப்படுத்தவும் அவனால் முடியாது. உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். போகங்களில் திளைப்பவனும், எதிர்மறையான வழிகளில் சாகசவுணர்வை அடைபவனுமான ‘வோட்ரின்’(Vautrin) என்ற கதாப்பாத்திரத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறார் பால்சாக்(Balzac). அதன்பிறகு, அந்த சாகசவுணர்வு கொண்ட கதாப்பாத்திரத்திற்கு பால்சாக்(Balzac) அடிமைதான். தனக்கு தோன்றிய விஷயங்களை மட்டும்செய்து, தனக்கு விருப்பமான களங்களில் எல்லாம் ‘வோட்ரின்’ நுழைகிறான்………. பாவம், பால்சாக்(Balzac) அந்த கதாப்பாத்திரத்தின் பின்னால் நடந்து அவன் செய்வது அத்தனையும் பதிவுசெய்யும் குமாஸ்தா மட்டும்தான். மகரந்தம் நிறைந்த மலர் போல மேதைமை நிறைந்த எந்த இலக்கியவாதியை எடுத்துக்கொண்டாலும் ஏறக்குறைய பால்சாக்கிற்கு நிகழ்ந்ததுபோலத்தான் நடக்கும். ஆனால், ஜேன் ஆஸ்டனின் மேதைமை இந்த பொதுவான வழிமுறையிலிருந்து வேறுபட்ட ஒன்று. ஜேன் ஆஸ்டனின் கலைமனதின் முக்கியமான அம்சம் அவரது அபாரமான தன்னுணர்வுதான். தான் யார், தன்னால் என்ன முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த அறிதலால், அவரது கலைமனம் ஆன்மவெளிப்பாட்டிற்கான விதிகளை இயல்பாகவே அறிந்திருந்தது. அவரது படைப்புகள் அளவில் சிறியவைதான். ஆனால், ஜேன் ஆஸ்டன் படைப்பாக்கம் சார்ந்த விதிகளை ஒன்றுவிடாமல் கடைபிடித்து, தன் ஒவ்வொரு படைப்பையும் தவம் போல, நீண்ட காலம் எடுத்துக்கொண்டு மெறுகேற்றி உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் அவரது  நாவல்கள் குன்றாத உணர்வுத்தீவிரத்தையும், கச்சிதமான வடிவத்தையும் அடைந்திருக்கின்றன.

பி.கெ பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டன் தன் சுருங்கிய அனுபவப்பரப்பிலிருந்து புனைவில் எவற்றையெல்லாம் விலக்கினார், அதன் வழியாக அவரது படைப்பாக்கத்தில் சாராம்சமாக என்ன நிகழ்ந்தது என்பதை நாம் முந்தைய கட்டுரைகளில் விவாதித்துவிட்டோம். ஜேன் ஆஸ்டன் அனுபவங்களை தேர்ந்தெடுப்பது, விலக்குவது என்ற இந்த ஒழுங்கை பார்த்து ஒவ்வொருமுறையும் நாம் வியப்படைவோம். அப்படி வியப்படையாமல் அவரது புனைவுலகை நம்மால் ஆராய முடியாது. ஜேன் ஆஸ்டன் வாழ்ந்த காலம் உலக வரலாற்றின் வண்ணமயமான, நாடகீயமான காலகட்டம். பிரஞ்சு புரட்சி, நெப்போலியன், அமெரிக்க சுதந்திரப்போராட்டம், இங்கிலாந்து அரசு கிழக்கத்திய நாடுகளை ஆட்சிசெய்தல்…. இப்படி உலக வரலாற்றின் செறிவான சம்பவங்களுக்கெல்லாம் மையமான இங்கிலாந்தில் தான் ஜேன் ஆஸ்டன் வாழ்ந்தார். இந்த சம்பவங்களை அவர் அறியவேயில்லை என்று எண்ணுவது பிழையானது. ஜேன் ஆஸ்டனின் இரண்டு சகோதரர்களும் இங்கிலாந்து கடற்படையில் பணியாற்றியவர்கள். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய சமயத்திலும், டிராஃபெல்கர் போரிலும் (Battle of Trafalgar) அவர்கள் கலந்துகொண்டிருந்திருக்கிறர்கள். மேலும், இந்தியாவில் செய்த மோசடிகளுக்காக இங்கிலாந்து பாராளுமற்றத்தால் impeachment செய்யப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) ஜேன் ஆஸ்டனின் உறவினர்தான். ஜேன் ஆஸ்டனின் தூரத்து உறவினரின் கணவர் பிரஞ்சுபுரட்சிக்கும் பின் உள்ள கொந்தளிப்பான காலகட்டத்தில் கில்லட்டினில் கழுத்தறுத்து கொல்லப்பட்டவர். ஜேன் ஆஸ்டனின் தனிவாழ்க்கையுடன் இம்மாதிரியான பெரிய சம்பவங்கள் சங்கிலித்தொடர் என நெருக்கமாக பிணைந்திருந்திருக்கிறது. ஆனால், உலகில் இம்மாதிரியான பெரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன  என்பதற்கான சின்ன தடயம்கூட ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் இல்லை. இதை ஜேன் ஆஸ்டனின் அபாரமான தேர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேர்ச்சியை சாதாரணமான நாசுக்கால் மட்டும் அடையமுடியாது. ஜேன் ஆஸ்டனின் சில நாவல்களிலாவது (குறிப்பாக ‘persuations’ நாவலில்) கடற்படையை சேர்ந்தவர்கள் கதாப்பாத்திரங்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த கதாப்பாத்திரங்கள் ராணுவ வாழ்க்கை முடிந்து கரையிறங்கி ஊருக்கு வருகிறார்கள். அந்த கதாப்பாத்திரங்கள் வாசகமனதில் நம்பகத்தன்மையை ஏற்படுவதற்காக போர், ராணுவம் சார்ந்த விஷயங்களை நாவலில் பேசியிருக்கலாம். இந்த விஷயங்களை பேசுவது நாவலின் நம்பகத்தன்மைக்கு எதிரானதும் அல்ல. ஆனால், அவ்வாறு பேசுவதற்கு அந்த கதாப்பாத்திரங்களுக்கு அனுமதி இல்லை. அந்த அளவுக்கு ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் வடிவம் தன்னிலேயே நிறைந்துவிடக்கூடிய உணர்வுத்தீவிரம் கொண்டது. நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக, அந்த கதாப்பாத்திரங்கள் பேச சாத்தியமான விஷயங்களைக்கூட பேசுவதில்லை. இந்த அம்சத்தை ஜேன் ஆஸ்டனின் படைப்புகளின் விசித்திரத்தன்மைக்கான உதாரணமாக சொல்லலாம்.

ஒரு நாவல் அதன் ஒவ்வொரு அணுவிலும் இயல்புத்தன்மையை வாசகனுக்கு உணர்த்த வேண்டும். இது அனைவரும் அறிந்த நாவல்களின் அடிப்படை விதிகளில் ஒன்று. கதாப்பாத்திரங்கள் உயிர்த்துடிப்பையும், நம்பகத்தன்மையையும் அடைய வேண்டுமென்றால் தன்னிச்சையாக செயல்படக்கூடிய, பேசக்கூடிய முழுமையான ஆளுமைகளாக அவர்கள் இருக்க வேண்டும். புகழ்பெற்ற கதாப்பாத்திரங்கள் அனைவரும் அம்மாதிரியானவர்கள்தான். நல்ல கதாப்பாத்திரங்கள் அதை உருவாக்கிய நாவலாசிரியரின் கற்பனைக்கு அப்பால் உண்மையாகவே வாழக்கூடிய அசலான மனிதர்கள் என்ற உணர்வை வாசகனில் ஏற்படுத்துகிறார்கள். கதைக்கட்டுமானத்திலும் இது ஒன்றுதான் விதி. ஒவ்வொரு சம்பவமும் பின்னால் வரக்கூடிய சம்பவத்தை தீர்மானிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி தனக்கேயான சலனத்தன்மையுடன் கதை இயல்பாக முடிவுநோக்கி நகரவேண்டும். அப்படி அல்லாமலானால் நாவல் தோல்வியடையும். கதாப்பாத்திரங்களுக்கான விதிகளும், கதைக்கட்டுமானத்திற்கான விதிகளும்  ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். ஒரு நாவலின் வடிவ முழுமைக்கு இந்த விதிகள் கண்டிப்பாக தேவை.  அதனால், நாவலில் உள்ள விவரணைகள், உரையாடல் போன்ற மற்ற எல்லா அம்சங்களும் வடிவ முழுமைக்காக இந்த விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் இயங்கமுடியும். இயல்புத்தன்மைக்கான விதிகளை சார்ந்து இயங்குவதால் நாவலின் வடிவத்திற்கு என்று சில எல்லைகளும் இருக்கிறது. இந்த பொதுவான இலக்கியவிதிகளுக்கு முற்றிலும் நேர்மாறானதுதான் ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் இயங்குமுறை. ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் சில கதாப்பாத்திரங்களை தவிர பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் நாவலாசிரியரான அவரிடம் முன்பே அனுமதி வாங்காமல் ஒரு சொல்கூட சொல்ல உரிமை அற்றவர்கள். ‘pride and prejudice’   ஜேன் ஆஸ்டனின் புகழ்பெற்ற நாவல் இல்லையா? ஆனால், அந்த நாவலின் துணைகதாநாயகனான பிங்க்லியையும் (bingley), துணைக்கதாநாயகியான ஜேன் பென்னட்டையும் (jane bennet) ஆராய்ந்தால் அந்த கதாப்பாத்திரங்களுக்கு அசல்தன்மையே இல்லை என்பதை உணரமுடியும். அவர்களின் ஆளுமை சார்ந்த எந்த ஒரு அம்சமும் நாவலில் வெளிப்படுத்தப்படவில்லை. கதாப்பாத்திரங்களுக்கான பொது விதிகளின் அடிப்படையில் பார்த்தால் ‘pride and prejudice’   நாவலின் கதாநாயகி டார்ஸி(Darcy) கூட நாவலாசிரியர் அளித்த சான்றிதழ் என்பதற்கப்பால் ஆளுமையாக ஆகாத கதாப்பாத்திரம். கதாநாயகி டார்ஸி(Darcy)  கதையின் போக்கிற்கு ஏற்ப தன் குணாதிசயத்தையே பலமுறை மீற வேண்டிய கட்டாயம் கொண்ட கதாப்பாத்திரம்.

ஜேன் ஆஸ்டனின் கதைக்கட்டுமானம் பல சிறப்பம்சங்கள் கொண்டது. ஆனால், pride and prejudice நாவலின் கதையை மட்டும் எடுத்து ஆராய்ந்தால் அதன் கதைப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாவலாசிரியர் ஊடுருவுவதைக் காணலாம். அதேபோல, அவரது கதைசொல்லும்முறை, புகழ்பெற்ற அவரது உரையாடல்கள் என ஒவ்வொரு கூறாக நுட்பமாக ஆராய்ந்தால் ஆசிரியர் உள்நுழைவது என்ற பிழையை உணரமுடியும். நான் இங்கு குறிப்பிடுவது அவரின் நாவல்களை வாசிக்கும்போது நாம் அடையும் ஒட்டுமொத்தமான உணர்வுபூர்வமான அனுபவத்திலிருந்து விலகி, இழை இழையாக பிரித்து ஆராயும்போது உணர்ந்த விஷயங்களைத்தான். நாவலாசிரியர் நேரடியாகவே கதைசொல்லும் நாவல்களில் கதைசொல்லிக்கு என உறுதியான நிலைப்பாடும், உணர்வுநிலையும் இருப்பதைக் காணலாம், அவ்வாறு இருக்கவும் வேண்டும். ஆனால், ஜேன் ஆஸ்டன் கதைசொல்லும்முறையில் ஒவ்வொரு பகுதியிலும் என்றில்லை, ஒவ்வொரு வரியிலும் அவரின் உணர்வுநிலையும், நிலைப்பாடும் மாறுவதை காண முடியும். மிகமிக கௌரவமான செயலை செய்வதுபோல நாவலுக்குள் சென்று கதாப்பாத்திரங்களை வசைபாடுவார். சிலசமயம் நேரடியாகவே நகைச்சுவைகளை சொல்வார். சிலசமயம் ஏதாவது கதாப்பாத்திரத்தின் மன ஓட்டத்தில் தவறிவிழுந்து சில விஷயங்களை சொல்ல ஆரம்பிப்பார். ஜேன் ஆஸ்டனின் படைப்பாக்கத்தில் மனிதசாத்தியமல்லாத அளவுக்கு அவ்வளவு கறாரான முறைமையை கடைபிடித்தவர். ஆனால், அவரின் கதைசொல்லும்முறை தனக்கேயான விதிகளை தவிர்த்த மற்ற எந்த முறைமைக்கும் பொருந்துவது அல்ல. உலக இலக்கியத்தில் யதார்த்தவாதத்தின் (realism) சிறந்த உதாரணம் என்று சொல்லக்கூடிய ஜேன் ஆஸ்டனின் உரையாடல்பகுதிகளை ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த உரையாடல்களை ’யதார்த்தமானது’ என்பதைத்தவிர வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஜேன் ஆஸ்டனின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பெரிய பெரிய பத்திகளாக, நீளமான சொற்றொடர்களில் வளைந்துநெளிந்து முழுமையான சொற்றொடர்களாக பேசுகின்றன. இடையிடையே முறிந்த சொற்றொடர், ஒற்றை சொற்கள்…… இதற்கெல்லாம் நடுவே நாவலாசிரியரையும் காணமுடியும். பெரிய பெரிய பத்திகளாக, நீண்ட சொற்றொடர்களில் உள்ள ஜேன் ஆஸ்டனின் புனைவுகளில் உள்ள உரையாடலை யதார்த்தமான உரையாடல் என்று சொல்ல யாராலும் முடிவதில்லை.

நாம் இதுவரை ஆராய்ந்த விஷயங்கள்- எந்த நாவலாசிரியராக இருந்தாலும் நமது அவதானிப்புகளும், நாம் சுட்டிக்காட்டிய பிழைகளும் பொருந்தும். ஆனால் ஜேன் ஆஸ்டனை பொறுத்தவரை………….

இந்த ’ஆனால்’ தான் ஜேன் ஆஸ்டன். அவரது நாவலின் ஒவ்வொரு சொல்லும் முரண்நகை நிறைந்த, நுண்ணுணர்வுள்ள கலைமனதின் மிளிர்வு கொண்டது. அவரின் புனைவுலகிலுள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் சேர்ந்து ஒரே ஒரு கலைமனதை, எளிமையான ஒரே ஒரு ஆன்மாவைத்தான் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆன்மவெளிப்பாட்டின் முழுமையிலிருந்து  திரண்டுவரும் பரிபூர்ணமான உணர்வுத்தீவிரம்தான் ஜேன் ஆஸ்டனின் கலை. அவரது புனைவின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக ஆராய்ந்தால் அந்த ஒவ்வொரு பகுதியின் போதாமைகளும் வெளிப்படையாகவே தெரியும். இவ்வாறான போதாமைகள் இருந்தும்கூட அவர் எழுதிய நாவல்கள் வடிவமுழுமை கொண்டதுதான். இப்படி கச்சிதமான வடிவத்தில் எழுத முடிந்தது அவரது இயல்பான மேதைமையால் மட்டும்தான் என்று யாரும் பிழையாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ஜேன் ஆஸ்டனின் ஒவ்வொரு நாவலும் தனக்கேயான வரலாறு கொண்டது. 1773-ல் பிறந்த ஜேன் ஆஸ்டன் (பிரசுரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றாலும்) தன் 14வது வயதில் நாவல் எழுதத்தொடங்குகினார். அவர் ஆரம்பத்தில் எழுதிய குட்டிக்கதைகளை ஆராய்ந்தால் அதன் சித்தரிப்பு, கதைசொல்லும்முறை, உணர்வுநிலை இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய முரண்நகைதான் பிரதானமாக இருக்கிறது. 1796ல்தான் புகழ்பெற்ற மாஸ்டர்பீஸான pride and prejudice நாவலை first impresssions என்ற பெயரில் அவர் எழுதினார். அதிகம்போனால் 300 பக்கம் வரும் அந்த நாவலை இரண்டு வருடங்களில் எழுதி 1798-ல் ஒரு பதிப்பாளருக்கு அனுப்புகிறார். அந்த நாவலை பதிப்பிக்காமல் திருப்பி அனுப்புகிறார்கள். அதனால் அவருடைய தன்னம்பிக்கை குறையவில்லை, அகங்காரம் திரிபடையவில்லை. Pride and prejudice என்ற இன்றைய பெயரில் அது பதிப்பிக்கப்பட்டது 15 ஆண்டுகளுக்கு பிறகு 1813ல். தன் படைப்பை பிரசுரிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் மேஜையிலிருந்து எடுத்து தூசிதட்டி பெயரை மாற்றி அப்படியே பிரசுரிக்க கொடுத்த படைப்பு அல்ல 1813ல் வெளிவந்த ‘pride and prejudice’. பிரசுரிப்பதற்கான இந்த நீண்ட காலத்தில் இடையிடையே பலமுறை அந்த படைப்பை திருத்தி எழுதியிருக்கிறார். 300 பக்கம் கொண்ட படைப்பை 15 வருடம் நிரந்தரமாக உழைத்து  திருத்தங்கள் செய்திருக்கிறார்.  இந்த அளவுக்கு மெனக்கெடலுடன் உருவாக்கப்பட்ட படைப்புகள் இலக்கிய வரலாற்றில் அவ்வளவாக இல்லை. தன் கைத்திறன் வழியாக, நீண்ட மெனக்கெடலுடன், நாவலின் ஒவ்வொரு இழையையும் தன் கலைமனதின் பூம்பொடிகளால் அலங்கரித்தவர் ஜேன் ஆஸ்டன். அவரின் மேதைமை என்பது எழுதியதை திருத்தி, மாற்றியெழுதி, ஒழுங்குபடுத்தி மெறுகேற்றும் கலைநேர்த்தியும்(craftsmanship), அசாதாரணமான பொறுமையும் மட்டும்தான் என்று சில விமர்சகர்கள் பகடியுடன் குறிப்பிடுகிறார்கள். ஒருவிதத்தில் விமர்சகர்களின் பரிகாசம் சரியானதுதான். எல்லையில்லாத பொறுமை, தன் கலைப்படைப்புகளுக்கு தேவையான கதைத்தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிதலும் அவரது மேதைமையின் ஒரு பகுதிதான். ஜேன் ஆஸ்டனின் கைத்திறனும், அவரது இயல்பான மேதைமையும்  இணைந்துதான் செயல்படுகிறது.

தன் இயல்பான உணர்வுநிலையிலிருந்து, தன்னால் இயல்பாக கையாளமுடிந்த மொழிநடையில், தன் அன்றாட வாழ்க்கைப்பரப்பில் உள்ள விஷயங்களைப்பற்றிதான் ஜேன் ஆஸ்டன் எழுதியிருக்கிறார். அந்த நாவல்களின் சித்தரிப்பு, கதாப்பாத்திரங்கள் எதிலும் வகைபேதங்களே இல்லை. இதை நாம் முந்தைய கட்டுரைகளில் விவாதித்துவிட்டோம். மூன்று, நான்கு குடும்பங்கள்;  பத்து, பன்னிரண்டு கதாப்பாத்திரங்கள்; ஒரு சில வாழ்க்கை சந்தர்ப்பங்கள். மனிதமனதின் உட்சிக்கல்கள் எதையும் அவர் கையாளவில்லை. ஜேன் ஆஸ்டனின் இந்த சுருங்கிய படைப்புலகின் பக்க அளவும் ஒப்புநோக்க சிறியதுதான். சிரமத்திற்குரிய எந்த ஒன்றும் இல்லாத இந்த சின்ன படைப்புகளின் உருவாக்கத்திற்காக இரண்டு, மூன்று வருடங்கள் சிலசமயம் அதற்கும் மேலான வருடங்களை அவர் செலவழித்திருக்கிறார். ஒவ்வொரு நாவலையும் கறாராக திருத்தி மீண்டும் எழுதி, நீண்ட காலம் மெறுகேற்றியிருக்கிறார். இந்த நீண்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் ஒரு படைப்பைக்கூட அவர் வெளியிடவில்லை (அவர் அற்ப ஆயுளில் இறந்ததால் persuations என்ற அவரது கடைசி நாவல் மட்டும் விதிவிலக்கு). 1797-ல் pride and prejudice நாவலின் முதல் வடிவத்தை எழுதியது முதல் 1818ல் இறக்கும் காலம்வரைக்குமான 21 வருடங்களில் ஆறு நாவல்கள், இரண்டு முழுமைபெறாத படைப்புகளை மட்டும்தான், வேறு எந்த அல்லலும் இல்லாத திருமணமாகாத ஜேன் ஆஸ்டன்  எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்தால் அவர்து படைப்புகள் கிட்டத்தட்ட 2000 பக்கம்தான் வரும்! உலகில் வேறு யாராலும் பின்பற்றப்பட முடியாதபடியான ஆளுமைகொண்ட நாவலாசிரியர்தான் ஜேன் ஆஸ்டன்.

இசையில் வெளிப்படுவது போல உணர்வுநிலை ஒருமுகப்படுத்தப்பட்ட தீவிரத்துடன் ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் மட்டும்தான் வெளிப்பட்டிருக்கிறது. நாவல் என்ற இலக்கிய வகைமையைப் பொறுத்தவரை இம்மாதிரியான வெளிப்பாடு கொண்ட வேறு நாவல்கள் இல்லை. அவரது படைப்புகளில் உணர்வுநிலையின் தீவிரம், ஒருமுகப்படுத்தல் இரண்டுமே நிகழ்ந்திருப்பது அசாதாரணமானது, பொறாமைப்பட வைப்பது. நாவல்களின் உலகில் ஒருபக்கம் முடிவிலிக்கு(infinity) உதாரணமானவை தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள். மறுபக்கம் அதே உலகில் ’finite’ என்பதற்கு உதாரணமானவை ஜேன் ஆஸ்டனின் படைப்புகள். உலகில் உள்ள கலைப்படைப்புகள் அனைத்தையும் ஒரு ஆலயம் என கற்பனை செய்யுங்கள். அந்த ஆலயத்தை சூழ்ந்த கடும்வனத்தில் பாறைகளுக்கு நடுவே குகையில் தவம்செய்து வாழும் பிரம்மராட்சசன் தான் தஸ்தாயெவ்ஸ்கி, அதே ஆலயத்தின் உருவாக்கப்பட்ட சின்ன மணல்முற்றத்தில் பிஞ்சுக்கால்களால் துள்ளியபடி, திக்கித்திக்கிப் பேசித் திரியும் செல்லக்குழந்தையைப் போன்றவை ஜேன் ஆஸ்டனின் படைப்புகள். ஜடாமுடியால் மூடப்பட்ட பிரம்மராட்சஸனின் சுருங்கிய முகத்தின் நீண்ட நெற்றிக்கு கீழே ஆழத்தில் கனலும் சிவந்த கண்களில் படைப்பிறைவனின்  கம்பீரமான சான்னித்யம்/இருப்பு இருக்கிறது. அதேபோல, மணல்முற்றத்தில் விளையாடும் குழந்தையின் அர்த்தமில்லாத சிரிப்பும் அதே படைப்பிறைவனின் மங்கலமான இருப்புதான். அதனால்தான், இரு யுகங்களின் சுவை மாற்றங்களை, ரசனையின் வளர்ச்சியை கடந்து என்றென்றைக்குமாக ஜேன் ஆஸ்டனின் படைப்புகள் இன்றும் நிலைகொண்டிருக்கின்றன. அதனால்தான் அவரின் சாரமற்ற கதைகள் வேறு யாராலும் பின்பற்றமுடியாதவையாக எஞ்சுகின்றன.

தமிழாக்கம் அழகிய மணவாளன்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி விழா- கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்குவனார்