பூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு

அன்புள்ள ஆசிரியருக்கு,

நீண்ட கடிதம் இது, மன்னிக்கவும்.

பிப்ரவரி 25ம் தேதி உங்கள் அமெரிக்க வருகைக்கான செய்தி விஷ்ணுபுரம் குழுவில் பகிரப்பட்டது, மே மாதம் 12 – 15 இலக்கிய முகாமுக்கான தேதிகளையொட்டி அலுவலக விடுப்புகளைத் திட்டமிட்டுக்கொண்டேன். டிசம்பர் மாதம் விஷ்ணுபுரம் விழாவில் நண்பர் சி.ஜோ. இந்த வருகைக்கான சாத்தியங்களைக் குறிப்புணர்த்தியிருந்தார்.

‘முகாமில் கவிதை விவாதத்தையொட்டி ஒரு உரையாற்ற உங்களுக்கு விருப்பமா’ என்று ஆஸ்டின் சௌந்தர் அண்ணனிடமிருந்து மார்ச் 9, இரவு 10.15க்கு செய்தி வந்தது. சற்று தயங்கி, கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று பதில் சொல்லிவிட்டு உறங்கச் சென்றேன், எனக்கான இலக்கிய முகாம் அன்றிரவே தொடங்கிவிட்டது. மார்ச் 12 காலை 9 மணிக்கு உரையாற்ற விருப்பம் என்று செய்தி அனுப்பிவிட்டு, என்ன பேசலாம் என்ற சிந்தனைகளில் மூழ்கத்தொடங்கினேன்.

மே 12, காலை 9.30 மணிக்கு Boone, North Carolina நோக்கி என் பயணம் தொடங்கியது, முகாமுக்கான விலாசத்தை விழுங்கிக்கொண்ட காரின் வழிகாட்டி 388 மைல்கள், 7 மணிநேரம் என்று அறிவித்தது. ஒரு மணிநேரம் கடந்ததும் பச்சை உடை தரித்த மலைகள், வெண்மேகங்களின் நிழல் கருமையை ஆங்காங்கே பூசிக்கொண்டு என்னைச் சூழ்ந்தன. இளவேனில் காலம், காணும் திசைகளெங்கும் மலைகள், பச்சைச் செழிப்பு, வெண்முகில்கள், நீண்ட சாலைகள், நெடும் பயணம், சிறு மழைத் தூறல், தனிமை இவையெல்லாம் கலந்து என்னில் ஒரு ஆழ்ந்த வெறுமையையும், அர்த்தமற்ற இனிமையையும் ஒருங்கே கிளர்த்தியது. மனிதப் பிறப்பெடுப்பதே சொற்களால் விளக்க இயலாத இந்த உணர்வை அடையத்தான், கடவுளே!!

மாலை 4.30 மணிக்கு வளைந்து மேலேறிய தார்ச் சாலையின் முடிவில் வீற்றிருந்த பங்களாவை அடைந்தேன், சுற்றிலும் பச்சைப் புல்வெளிச் சரிவு, எதிரில் புல்வெளிகளில் மேயும் கரு நிறப் பசுக்கள் புள்ளிகளாய்த் தெரிந்தன, அழகிய சூழல். எப்போதும் கேள்விக் கண்களுடன் அலையும் நண்பர் விவேக்கும், மேல் தளத்தில் சிறு துணிக் குடிலை என்னுடன் பகிர்ந்துகொண்ட அமைதியே உருவான நண்பர் முத்து காளிமுத்துவும் அறிமுகமானார்கள் (“முத்து, நான் குறட்டை விடுவேனே பரவால்லையா?” “நானுந்தான்”).  இசைக் கலைஞர் ராஜனையும், சௌந்தர் அண்ணனையும் நேரில் அப்போதுதான் சந்திக்கிறேன். சௌந்தர் அண்ணன் திருமண மண்டபத்துக்குள் முதலில் நுழைந்து ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தந்தையைப்போல ஒரு முக பாவனையைக் கொண்டிருந்தார், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

எதிர்கொண்ட அருண்மொழி நங்கை பெயரை விசாரித்துவிட்டு, “எங்கிருந்து வறீங்க” என்றதும், சற்று திகைத்து, “இங்க கொலம்பஸ், ஊர்ல கரூர்” என்றேன். அறையிலிருந்து சிவப்பு டீ ஷர்டில் உற்சாகமாய் வெளிவந்த உங்களை வணங்கினேன். மேடைப்பேச்சுப் பகடிகள், கிண்டல் கலந்த உரையாடல்கள் என இரண்டு மணிநேரங்கள் கண்களில் நீர் வரச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தீர்கள், மூன்று நாட்களும் அது தொடர்ந்தது. அடுத்தடுத்து நண்பர்கள் வரத் தொடங்கினார்கள், முதலில் ஜெகதீஷ், மனைவி அனுஷாவுடன் வந்தார், அவருடன் நண்பர் விசு மற்றும் அவரது மனைவியும். இரவு உணவு முடிந்ததும், அடுத்த இரண்டு நாட்களுக்கான அமர்வுகளின் அட்டவணையை மீண்டும் கேட்டுவிட்டு அனைவரும் உறங்கச் சென்றோம்.

மே 12, காலை ஒன்பது மணிக்கு ‘சிறுகதைகளின் பரிணாமம்’ என்ற தலைப்பில் பேசி அமர்வுகளைத் தொடக்கிவைத்தீர்கள். சிறுகதை விவாதத்துக்குள் நுழையும் முன் எந்தச் செயலையும் தீவிரமான மனநிலையிலேயே அணுக வேண்டும் என்றும், தீவிரமற்ற ஒரு செயலின் பயனின்மை, அது எப்படி நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நுழைந்து நம்மைச் சாதாரணர்களாக மாற்றும் என்பதையும் உணர்த்தினீர்கள். ஒரு உரையைக் கேட்கும் முன் நம் மனம் எப்படி மூன்று ‘Fallacy’ களால் நிறைந்திருக்கும் என்பதையும் விவரித்தீர்கள் (Peripheral Association Fallacy, Distraction & Counter Fallacy).

‘ஜோக்’ என்ற வடிவம், பின்நாளில் சிறுகதையாக உருமாற்றம் அடைந்து, எட்கார் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்களால் பரவலாக கேளிக்கை உள்ளடக்கம் பெற்று, ஆன்டென் செகாவ், மாப்பசான் போன்றவர்களால் இலக்கிய ஆக்கமாக நகர்ந்ததை உணர்த்தியது உங்கள் உரை.  சிறுகதை அதன் முடிவில் வாசகனின் மனதில் மீண்டும் துவங்கவேண்டும் என்று சொல்லி, செகாவின் ‘The Bet’ கதையின் உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டாக முன்வைத்தீர்கள்.

அடுத்த அமர்வில் மூன்று சிறுகதைகள் விவாதிக்கப்பட்டன, பிரயாணம் – அசோகமித்திரன், சுயதரிசனம் – ஜெயகாந்தன், ஆபரணம் – திருச்செந்தாழை. நண்பர்கள் ஜெகதீஷ்குமார், விஜய் சத்யா மற்றும் மதுநிகா தங்கள் பார்வையை விரிவாக முன்வைத்தார்கள். மதிய உணவுக்குப் பிறகு, அறிவியல் சிறுகதைகள் – Nightfall, Isaac Asimov, ஐந்தாவது மருந்து – ஜெயமோகன். நண்பர்கள் விசுவும், விவேக்கும் பேசினார்கள். இந்தச் சிறுகதைகள் குறித்த உங்கள் பார்வையைப் பகிர்ந்துகொண்டிருந்தீர்கள், Isaac Asimov வின் கதை ஏன் முழுமைபெறவில்லை என்பதையும், அதற்கான காரணங்களையும் விளக்கினீர்கள். Ursula K. Le Guin போன்றவர்கள் எழுதுவது ஒரு வகை ஃபான்டசி மட்டுமே என்றும் சொன்னீர்கள். ஐந்தாவது மருந்து குறித்து எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகள் உங்களைச் சற்று சீற்றம்கொள்ள வைத்தன, கண்களில் தெரிந்தது. நான் இந்தச் சிறுகதைகளை வாசித்து எழுதி வைத்துக்கொண்டிருந்த சிறு குறிப்புகளை, விவாதப் புள்ளிகளோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

அடுத்த அமர்வு தமிழ்க் கவிதைகள், உலா – கவிஞர் அபி, தலையில்லாத – தேவதச்சன், மதாருடைய ஒரு கவிதை இவற்றை வாசித்து நான் அடைந்தவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கச் சொன்னீர்கள், நண்பர் சங்கர் பிரதாப் தேவதச்சனின் சிலை கவிதை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, கவிதைகளில் மையம் என்ற ஒன்றைக் கண்டடைந்து அதில் மட்டுமே வாசிப்பைக் குவிக்கவேண்டும் என்றும் விளக்கினீர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளிளேயே கவிதைகள் 400 பதிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன என்றும், கவிதைகள் எனும் வடிவம் இயல்பிலேயே ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்கு மட்டுமேயானது என்றும் விளக்கினீர்கள்.

மதாருடைய கவிதைகள் ஏன் பின்நவீனத்துவ காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதை தேவதச்சனின் ‘கடைசி டினோசர்’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து விளக்கவும் செய்தீர்கள். கவிஞர் இசையின் சில கவிதைகளையும் எடுத்துக்காட்டாகச் சொன்னீர்கள், இயல்பாகவே முகுந்த் நாகராஜனின் பெயர் இந்த உரையடலுக்குள் வந்தது. நான் உரையை சற்று தயக்கத்துடன் தொடங்கி, சில நிமிடங்களில் இயல்பானேன், நண்பர்கள் பலருக்கும் இந்த அமர்வு மிகவும் பிடித்திருந்தது.

மாலை 4.45 மணிக்கு ராஜன் ‘இசை ரசனை/விமர்சனம்’ குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்தார். நம்முடைய இசை ரசனைக்கான புள்ளிகள் சூழலையும், வளர்ப்பையும் சார்ந்த ஒன்று என்றும், குறிப்பிட்ட இசையைத் தொடர்ந்து கேட்பது மட்டுமே அதில் பரிச்சயம் அடைய வழி என்றும் சொல்லிச் சென்றார். கர்நாடக இசை ஏன் பரவலாக மக்களை அடையவில்லை என்பதை விளக்கினார். மேலை நாட்டு இசை எப்படி கட்டுக்கோப்பான ஒரு கட்டமைப்புக்குட்பட்டு உருவாகிறது என்று விளக்கினார். நீங்கள் உங்கள் பார்வையை முன் வைத்துவிட்டு, நிகழ்வை இலகுவாக்க இசைக்கச்சேரிகளில் பார்வையாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் பாவனைகளை சற்று பகடியாக்கி நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தீர்கள்.

இரவு உணவுக்குப் பிறகு ‘வெண்முரசு’ ஆவணப்படம் திரையிடப்பட்டது, ராஜனின் கம்பீரமான இசையுடன் தொடங்கப்பட்ட படம் எல்லோரையும் கவர்ந்தது. நான் உங்கள் முக பாவனைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன், பெரும்பாலும் சலனமற்றிருந்தீர்கள். எழுத்திலும், நேரிலும் பரிச்சயமான முகங்களைப் பெரிய திரையில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. ஒன்றே கால் மணிநேரப் படத்துக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் தன்னுடைய உரையை அனுப்பி, எதையும் வெட்டாமல் சேர்க்கும்படி ஈரோடைச் சார்ந்த ‘legend’ ஒருவர் ‘வாதிட்டதாக’ அறிந்தேன்.

மே 14, காலை ‘தத்துவம்’ குறித்த உங்கள் உரையுடன் தொடங்கியது. தத்துவத்தின் அடிப்படைகளையும், மேலை கீழைத் தத்துவங்களுகிடையிலான அடிப்படை வேறுபாடுகளையும், தத்துவங்களை முறையாக ஒரு குருவின் வழிநடத்தலுடன் கற்க வேண்டிய தேவையையும் விளக்கினீர்கள். தத்துவங்களை மேலும் விரிவாக அறிய புத்தகப் பெயர்களைப் பகிர்ந்துகொண்டு, கேள்விகளைத் தவிர்த்துவிட்டீர்கள். மூன்று நிமிடங்கள் பேசிவற்றை எங்களுக்குள் தொகுத்துக்கொள்ளச் சொன்னீர்கள். உங்கள் உரைகளைத் துல்லியமாகக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

அடுத்த அமர்வு ‘Understanding American Culture’, ராஜனின் உரை. புள்ளிவிவரங்களை முன்வைத்து எப்படி தவறான ஒரு பொதுக் கண்ணோட்டம் மக்களின் எண்ணங்களில் விதைக்கப்படுகிறது என்பதை விளக்கினார். அடுத்து ‘English Poetry’ அமர்வில் ரெமிதா John Keats சின் ‘Ode to a Nightingale’ நீள் கவிதையின் சில பகுதிகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக வாசித்தார், Keats குறித்த சில தகவல்களையும் பகிர்ந்தார். நீங்கள் ‘William Wordsworth’ ‘Byron Long’ ஆகியவர்களுடன் ஒப்பிட்டு உங்கள் தரப்பை விளக்கினீர்கள். அருண்மொழி நங்கை மிகவும் ஆர்வமாக Wordsworth தின் ‘Composed Upon Westminster Bridge’  கவிதையை வாசித்துக் காட்டினார், இரண்டு அழகான கவிதைகள். நண்பர்கள் கீட்ஸின் கவிதை அபியின் ‘உலா’ கவிதையை ஒட்டியிருந்ததாகச் சொன்னார்கள். Keats குறித்து சுந்தர ராமசாமி ‘He is just an excited young man’ என்று சொன்னதையும் நீனைவுகூர்ந்தீர்கள்.

கம்பராமாயண அமர்வு சற்று தாமதமாகத் தொடங்கியது, நண்பர்கள் விசுவும், செந்தில்வேலுவும் சில பகுதிகளை வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்தார்கள். இரண்டாவது நாள் மதிய நேரத்துக்குப் பிறகு நண்பர்களிடம் சிறிது சோர்வு காணப்பட்டது. மாலை நேரம் நாவல்களுக்கானது, ‘போரும் அமைதியும்’ – அருண்மொழி நங்கை, ‘கானல் நதி’ – பழனி ஜோதி. அருண்மொழி நங்கை போரும் அமைதியும் நாவலை நினைவுகூர்ந்து உரையாடினார், இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாவலை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துக்கொண்டதை வியந்தேன். நண்பர் பழனி ஜோதி ‘கானல் நதி’ நாவல் குறித்து தன் எண்ணங்களை மிகச் சரளமாக முன் வைத்தார். அருண்மொழி நங்கை எங்கள் அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விட்டார், அவருக்குள் எப்போதும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுமி அற்புதமானவள்.

5.30 மணிக்கு ‘பனி உருகுவதில்லை’ கலந்துரையாடல். ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் தனக்கே உரிய பாணியில் சொந்த அனுபவங்களை முன் வைத்து பேசினார், அருண்மொழி நங்கை என்றொரு தோழியை அடைந்ததாகச் சொன்னார். பலரும் மிக ஆர்வமாக நூலின் பகுதிகளை முன்வைத்து எண்ணங்களைப் பகிர்ந்தார்கள். இந்த நூல் வாசகர்களைப் பரவலாக அடைந்திருப்பது ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது. அமர்வுகள் நிறைவுக்கு வந்தன, இரண்டு நாட்களும் அவசரமாகக் கடந்திருந்தது.

இரவு உணவுக்குப் பிறகு நண்பர்கள் மதன், சங்கர் பிரதாப்புடன் மாலை நடை சென்று வந்தேன், மெல்ல இரவு கூடிக்கொண்டிருந்தது, வானில் வட்ட நிலவு பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது, நிகழ்வுகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். புல்வெளி வேலிகளை ஒட்டி மேய்ந்துகொண்டிருந்த பசுமாடுகள் துணுக்குற்று எங்களை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.

நீங்கள் நண்பர்களுடனான உரையாடலைத் தொடங்கியிருந்தீர்கள், பலவகையான கேள்விகளுக்கும் பதிலளித்துக்கொண்டிருந்தீர்கள். பின்னர் உங்களை பேய்க் கதைகள் சொல்ல வைத்தோம், மலைகள் சூழ்ந்த பங்களா, இரவு, மங்கிய லைட் வெளிச்சம், ஐந்து மறக்கவே முடியாத பேய்க் கதைகள், ஒரு கதையில் எங்கள் அனைவரையும் அலற வைத்தீர்கள். சொந்த அனுபவத்தில் நீங்கள் எதிர்கொண்ட சில அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்தும் அறிந்துகொண்டோம். உலகின் மகத்தான கதை சொல்லி ஒருவரிடம் நேரடியாகக் கதை கேட்கும் அனுபவம் வாய்த்தது எங்கள் நல்லூழ்.

அமர்வுகளுக்கு வெளியில் எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம், பல வகையான கேள்விகள். ‘Psycadelics’ மனித மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள், ‘Near death experience’ என்பது என்ன, ஆன்மிக வாழ்வுக்கு குருவை எப்படி சரியாகக் கண்டடைவது போன்ற சுவாரசியமான கேள்விகள், உங்கள் வார்த்தைகளில் குரு நித்யா வந்துகொண்டே இருந்தார், பெரும்பாலும் வெடிச் சிரிப்புகள், மேலும் பல அறிதல்கள். சில சராசரியான கேள்விகளும் உங்களைத் தொடர்ந்துகொண்டிருந்தன, அவற்றுக்கும் இயல்பாக பதிலளித்துக்கொண்டிருந்தீர்கள், ‘Party talk’ என்று அவற்றை வகைப்படுத்தினீர்கள். ஒரு ஆசிரியரிடம், அறிவுஜூவியிடம், உலகின் தலை சிறந்த கலைஞனிடம் சராசரியான கேள்விகளை முன்வைப்பது ஒரு ‘வன்முறை’ என்பது என் எண்ணம். அடுத்த நிகழ்வுகளில் இவற்றைக் ‘குறைத்துக்கொள்வோம்’ என்றே எண்ணுகிறேன். சிலர் உங்களை ஒரு மனோதத்துவ நிபுணர் என்றெண்ணிவிட்டார்களோ என்றும் சந்தேகப்பட்டேன்.

இதுபோன்ற நிகழ்வுகளில் இடத்தைப் பகிர்ந்துகொள்தல் என்பது அழகான ஒரு அனுபவம், நான் மீண்டும் என்னுடைய கல்லூரி விடுதி நாட்களை நினைத்துக்கொண்டேன். ஐம்பது பேர் கொண்ட முகாமில் அனைவரையும் பரிச்சயப்படுத்திக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது, சிலர் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக, தனிமை விரும்பிகளாக இருந்தார்கள். சிலரிடம் பார்த்தவுடன் மனம் கொண்டுவிடும் தடைகள் மூலம் நெருங்காமல் இருந்தேன் (என்னுடைய தவறுதான்). சிலரிடம் தலையசைப்புகள் மற்றும் புன்னகைப் பரிமாற்றம், பல நண்பர்களிடம் விரிவாக உரையாடினேன், வரும் அமர்வுகளில் இன்னும் பல நண்பர்களைக் கண்டடைவேன்.

நண்பர் பழனி ஜோதி, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார், எப்போதும் ஒரு சிரிப்பு, கலகலப்பான பேச்சு, கிண்டல் என்று நேர்மறைத்தன்மையின் மொத்த உருவமாக ஒரு அற்புத மனிதர். அவர் ‘ஊரை விட்டுப் பிரியும்போது கண்கலங்குவோர் சங்கத்தில்’ நெடுநாள் உறுப்பினர் என்பதை அறிந்தேன், ‘எங்கள்’ சங்கம் என்றும் வாழும்.

ரம்மியமான ஒரு இடத்தைத் தேர்வு செய்து இந்த விழா நேர்த்தியாக நடந்தேறியதன் பின்புலத்தில் இருந்த ஆஸ்டின் சௌந்தர் அண்ணன், ராஜன், பழனி ஜோதி, சி.ஜோ., உணவுத் தேவைகளை கவனித்துக்கொண்ட அன்பு நண்பர்கள் விவேக், முத்து காளிமுத்து, அர்ப்பணிப்புணர்வோடு கிச்சனில் சுழன்றுகொண்டிருந்த என் அருமைச் சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகைப்பட வேலைகளைப் பகிர்ந்துகொண்ட சகோதரி அனுஷா, மற்றும் நண்பர் கோபிக்கு என் நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் ஃப்ளூட் வாசித்து மயக்கினார், சங்கர், பழனி ஜோதி மற்றும் ராஜன் பாடல்களால் மகிழ்வித்தார்கள், நண்பர் ஸ்கந்த நாராயணன் அழகாகத் தாளமிட்டார். பலருடைய பெயர்களையும் மெனக்கெடல்களையும் நான் அறியாமல் இருக்கலாம், அவர்களுக்கு என் வணக்கங்களும், பெயர் சொல்ல இயலாமையின் மன்னிப்புகளும்.

மே 15, ஊருக்குத் திரும்பும் நாள். உங்களிடம் விடைபெறும் முன் வெளியில் சென்று தொலைவில் தெரியும் மலைகளையும், புல்வெளிகளையும் பார்த்தவண்ணம் காலைச் சூரியனின் கதகதப்பில் திளைத்துக்கொண்டிருந்தேன், பிரிவாற்றாமையை சூழல் கூட்டிக்கொண்டிருந்தது. அறையின் முகப்பில் வைத்து என்னிடம் ‘உங்கள் கட்டுரையை வாசித்தேன்’ என்று சொன்னீர்கள், ‘சீக்கிரம் கவிதை எழுதுங்கள்’ என்றும் ஊக்கப்படுத்தினீர்கள், திகைப்பிலிருந்து வெளிவரும் முன், வணங்கிவிட்டு விடைபெற்றேன்.

மீண்டும் மலைகள் சூழ வடக்கு நோக்கிய பயணம், நான்கு நாட்களின் நினைவுகளும் கொப்பளித்துக்கொண்டிருந்தன, வெளிச் சூழலை மனதின் வார்த்தைகளால் கரைத்துக்கொண்டே ஒரு சமநிலையை எட்டினேன். மாலை 5.30 மணிக்கு வீட்டை அடைந்து உள்நுழைந்ததும், “எறும மாடே, சீப்ப மறந்துட்டு போய்ட்டியா” என்று அன்றாடம் என்னை அன்புடன் வரவேற்றது. நண்பர் முத்து காளிமுத்துவின் சீப்பை மூன்று நாட்களும் அவருக்குத் தெரியாமல் பயன்படுத்திய ரகசியத்தை அவரிடம் சொல்லிவிடாதீர்கள்.

உங்களுடைய சொற்களும், எங்களுடைய வெடிச் சிரிப்புகளும் அந்த மலைச் சரிவுகளில் என்றும் எதிரொலித்துக்கொண்டிருக்கும்!!

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

முந்தைய கட்டுரைலாபம், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசென்னை,ஸ்ரீராம்- கடிதம்