சிற்றெறும்பு- கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.

நலம்தானே? அமெரிக்கப்பயணம் இனிதே நடந்துகொண்டிருக்கும் என்று எண்ணுகிறென்.

அண்மையில் மீண்டும் சிற்றெறும்பு சிறுகதை படித்தேன். அற்புதமான கதை. சிறுகதை என்னும் சட்டகத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. முக்கியமான பாத்திரங்கள் நான்கே பேர்தான். துரை, அவரின் அடியாள் [இவனுக்குப் பெயர் இல்லை] துரையின் மனைவியான தெரேஸா, செவத்தான் ஆகியோர். ஆனால் கதையின் நம்பகத்தன்மைக்காக சிலுவைநாதன், ரியாஸ் அகமது, திம்மையா, மரியா, கொம்பன் போன்றோரும் தேவையாயிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் கதாசிரியர் வழியாக வரும் கதை பின்னால் முழுமையாய் துரையின் அடியாள் வழியாகவே சொல்லப்படுகிறது. துரையைக் காண அவரின் அடியாள் வரும்போது காட்டப்படும் அந்த இல்லத்தின் உள்பக்கம் கதைக்கு வலுவூட்டி நம்மை அங்கே அழைத்துச்செல்கிறது. அடியாள் அப்பொழுது அவனை அறியாமல் அவன் உள்ளத்தையும் வெளிப்படுத்துகிறான்.

”பீங்கான் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களில் நாம் உண்ணக்கூடாது. நம்மீது எஜமானர்களுக்கு எப்பொழுதும் அச்சமும் ஐயமும் இருக்கும், நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.” இது அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த அவமானமும் சகிப்புத்தன்மையும்தான். அவனை கதையின் இறுதியில் செவத்தானை மன்னித்துப் போகச்சொல்லும்போது, “நாமளும் பதிலுக்கு என்னமாம் செய்யணும்லடே” என்று கூறவைக்கிறது.

அடியாள் துரைக்காக எல்லா அடிமட்ட வேலைகளையும் செய்பவன். செவத்தானைக் கொல்லவேண்டும் என்னும்போது அவன், “கட்டைவிரலுக்கும் போதாத சிற்றெறும்பு” என்கிறான். ஆனால் சிறுவயதில் கதை படித்திருப்போம். எறும்பு யானையைப் பழிவாங்க வேண்டுமானால் காது அல்லது துதிக்கை வழியாக அதன் உடலில் புகுந்து விடுமாம்.  யானை எறும்பை ஒன்றும் செய்ய முடியாமல் துடித்துக் கொண்டே இருக்கும். இறுதியில் உயிரை விட்டுவிடும்.

அப்படித்தான் செவத்தானாகிய சிற்றெறும்பு துரையாகிய யானையின் மனத்தில் புகுந்து தொல்லைப்படுத்துகிறது. எறும்பை நசுக்க வந்த அடியாள் அந்த எறும்பை அப்படியே இருக்கட்டும் என்று செவத்தானைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டுத் துரையைப் பழிவாங்குகிறான். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

புதிதாகப் படிக்கும் வாசகருக்குக் கதை பல ஊகங்களையும் வினாக்களயும் எழுப்புகிறது. துரைசானி செவத்தானை ஏன் அப்படித் திட்டினாள்? செவத்தான் எந்த நோக்கத்தோடு அடித்துணியை எடுத்தான்? துரை செவத்தானைப் பற்றி என்ன நினைக்கிறான்? அடியாள் ஏன் அவனை விட்டுவிட்டான்?

சிலவற்றிற்கு கதையிலேயே விடை மறைமுகமாகக் காண்பிக்கப்படுகிறது. சிறுகதையின் இறுதி வரிகள்  முக்கியமானவை. செவத்தான் சென்ற பிறகு அந்த அடியாள்நெடுநேரம் நின்றுகொண்டிருக்கிறான். அப்பொழுதுதான் இத்தனை ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அடிமைத்தனம் அவமானம் பாராமுகம் எல்லாவற்றுக்கும் சேர்த்து நாமும் ஒன்றைச் செய்து விட்டோம் என்னும் எண்னம் வந்திருக்க வேண்டும்.  அதைச்செய்ததால் மகிழ்ந்தான். அதனால் புன்னகை பூக்கிறான். ஆனால் உடனே அதை மறைத்து விடுகிறான். அவன் முகத்தில் அது வெளிப்படவில்லை. அவன் சொல்கிறான். “நான் மிக நன்றாகப் பழக்கியிருப்பது என் முகத்தைத்தான்.

உள்ளே நினைப்பது முகத்தில் தெரிந்தால் வேலைக்கு மட்டுமன்று. உயிருக்கும் ஆபத்து. எனவே முகத்தைப் பழக்கியிருக்கிறான். ஆனால் மனம் எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. சமயத்தில் கட்டைவிரலுக்கும் போதாத செவத்தானாகிய சிற்றெறும்பைக் கூட விட்டுவிட்டு மகிழ்கிறது.

வளவ துரையன்.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைஇன்று சென்னையில் காலை….குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரைகடுத்தா சாமியின் வருகை- கடிதங்கள்