கலைக்களஞ்சியம் ஒன்றை முறையான இணைப்புகளுடன் அமைக்கையில் சில செய்திகள் வந்து மூளையைச் சொடுக்குகின்றன. பின்னாளில் தமிழின் பொதுவாசிப்புக் களத்தில் புகழ்பெற்றிருந்த பல படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளில் அவர்கள் ஆனந்தபோதினியில்தான் எழுதி தெளிந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் ஆனந்தபோதினி தமிழ் வாசிப்பை உருவாக்கிய பொதுஇதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்திருக்கிறது. ஆனால் இலக்கிய இதழ்கள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட நிலையில் ஆனந்தபோதினி போன்ற பேரிதழ்கள் பதிவாகாமலேயே மறைந்துவிட்டன.