பெரும்பணியில் இருத்தல்

ரம்யா

அன்பு ஆசிரியருக்கு,

தமிழ் விக்கி தொடக்க விழாவிற்குப் பிறகு இப்பொழுது தான் ஒரு சம நிலையை வந்தடைந்திருக்கிறேன். விழா அன்று காலையிலிருந்தே சிறு பதட்டமிருந்தது. அன்று முழுவதும் பெரியசாமித்தூரனையும், எஸ் வையாபுரிப்பிள்ளையும், இன்னுமின்னும் பல தமிழறிஞர்களையும் நினைத்துக் கொண்டிருந்தேன். தூரன் அந்த நாளையே என்னில் ஆக்கிரமித்திருந்தார்.  தான் வாழ்ந்த காலத்தில் எந்தவித பாராட்டையும் மரியாதையும் பெறாதவர். நாற்பத்தியைந்து வயதிற்குப் பிறகு  தொடர் வாத நோயால், பிற தமிழறிஞர்களின் கண்டனங்களால் மனம் சோர்ந்து உடல் தளர்ந்து ஓரிரு வருடங்களிலேயே இறந்து போன அரசன் சண்முகனார் நினைவிற்கு வந்தார். மனோன்மணீயம் பெ. சுந்தம்பிள்ளை திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் காங்கிரசில் இருந்த காரணத்திற்காகவே அவரின் புத்தகங்கள், விவேகானந்தர், உ.வே.சா எழுதிய கடிதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போனதாக அ.கா. பெருமாள் ஐயா எழுதியிருந்தும், நினைவை முட்டியது. தான் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாத எல். சாமிக்கண்ணுப்பிள்ளை நினைவிற்கு வந்தார்.

A theatre of Encyclopedia எனும் தலைப்பில் ஆண்டி சுப்ரமணியம் சேகரித்த 60000 உட்தலைப்புகள் கொண்ட நூல் கையெழுத்துப் பிரதி என்று வாசித்த போது மீண்டும் சென்று ஆறுக்கு பக்கத்திலுள்ள சுழியன்களை எண்ணிப்பார்த்தேன். ஆம்! அறுபதாயிரம் உட்தலைப்புகள் தான். அதுவும் கைப்பிரதி. ஆனால் அந்த கையெழுத்துப் பிரதியை சென்னைப் பல்கலைக்கழகம் தவறவிட்டது என்ற வரிகள் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால் அதை ஆண்டி சுப்ரமணியத்திடம் சொன்னபோது ”இன்னும் இருபதாண்டு முயற்சி செய்தால் மீண்டும் தொகுத்து விடலாம் என்றார்” என்ற வார்த்தைகளில் ஊக்கம் நிரம்பி அடுத்த வரிக்குச் சென்ற போது கண்ணீர் துளிர்த்து நின்றது. “அப்படிச் சொன்னபோது அவருக்கு வயது 80”.

அதற்கு மேல் என்னால் அன்று பதிவுகள் ஏதும் போட முடியவில்லை. வீட்டில் யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று தோன்றியது. ஏற்கனவே இலக்கியம் சார்ந்த எதுவுமே உதவாச்செயல் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இதைச் சொல்லி கண்ணீர் மல்கினால் மேலும் பைத்தியம் என்று சொல்லி தலையில் அடித்துக் கொள்ள வாய்ப்புண்டு. இரவின் அந்த நிசப்தத்தில் மொட்டை மாடிக்குச் சென்று வேகமாக நடந்து கொண்டிருந்தேன். தளர்ந்து போய் அமர்ந்து அப்படியே சரிந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டே ஆண்டியின் அந்த சொற்களை ஓட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் கண்ணீர் பெருகியது. அப்படியான வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் முகத்தில் தெரிந்த ஊக்கம், முகபாவனைகள், தொலைத்துவிட்டதைச் சொன்னபோது கண நேரமாவது அவர் அடைந்திருக்கக்கூடிய திடுக்கிடல் என கற்பனைக்குள் சென்றேன். ஆம்! ஜெ.. நீங்கள் சொல்வது போல “நான்” என்பது ஒரு பொருட்டே இல்லை. ”சின்னதும் பெரியதுமான குமிழி! எறும்பு” என பிதற்றிக் கொண்டிருந்தேன்.

ஒரு கணக்கில் யாவரும் எஞ்சப்போது ஒரு விக்கி பக்கமாகத்தான். சிறியதும் பெரியதுமான பக்கங்கள். ஆனால் யாரைப் போன்ற பக்கங்கள்? தூரனைப் போலவா? எஸ். வையாபுரிப்பிள்ளையைப் போலவா? ஆண்டி சுப்ரமணியைப் போலவா? ஓரிரு புத்தகங்கள் எழுதிய ஏதோ ஒருவரைப் போலவா? ஒரு தீர்க்கமான புறநானூற்றுச் செய்யுளை மட்டும் எழுதிச் சென்ற புலவனைப் போலவா? இல்லை பக்கங்களே அல்லாத பிறந்திறந்து செல்லும் எளிய மானுட வாழ்க்கையா? என நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். விருதுகளோ, பேரோ, புகழோ, கவனிப்போ கூட இன்றி மொழிக்காகவும், இலக்கியத்துக்காகவும் பணி செய்து மாண்ட அறிஞர்கள். நல்ல தனிவாழ்க்கை அமைந்த தமிழறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள் தான். அப்படியல்லாது சரிவர இல்லாத குடும்பச் சூழல், குடும்ப வாழ்க்கை, உறவுச்சிக்கல் கொண்டவர்கள், நெருங்கிய உறவுகளை இழந்தவர்கள், வாரிசுகள் இல்லாதவர்கள் என பல தரப்பட்ட அறிஞர்கள். ஆனால் எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை ”செயல்” என்ற ஒன்று மட்டுமே.

இணைய வசதி, எளிதாக தொடர்பு கொள்ளும் வசதி ஏதுமில்லாத காலகட்டத்தில் இவர்கள் செய்த பணி அளப்பரியது என்று கண்டேன். நான் செய்வதெல்லாம் அதில்  துளி கூட இல்லை. இன்னுமின்னும் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று அன்று தோன்றியது ஜெ. சோர்வுறும்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஆண்டியின் இந்த வார்த்தைகளையும், தூரனின் முகத்தையும் தான்.

கடந்து வந்த மூன்றரை மாதங்களை இன்று ஓட்டிப் பார்க்கிறேன் ஜெ. முதலில் இந்த செயலை ஆரம்பிக்கும் போது உந்து சக்தியாக இருந்தது உங்களின் வார்த்தைகள் தான். விஷ்ணுபுர விழா முடிந்த பின்னான உரையாடலில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் பணியைப் பற்றி முன் வைத்தீர்கள். இதைப் பற்றி பதினைந்து வருடங்களுக்கு மேலாக சிந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். மதுசூதன் உங்களிடம் அது சாத்தியமாகுவதிலுள்ள சிக்கலாக உங்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். முதலில் இதற்கான செலவுத்தொகை பற்றி கேட்டபோது மிக இலகுவாக எப்படி குறைந்த செலவில் செய்யலாம் என்பதைச் சொன்னீர்கள். அதன் பின் கடல் போன்ற கலைக் களஞ்சியப்பணியை எப்படி முடிக்க முடியும்னு நினைக்கிறீங்க என்று கேட்ட போது, “முடிச்சிடலாம். பதிவுகளுக்காக நண்பர்களின் உதவி இருந்தால் மூன்று வருடங்களில் முடித்துவிடலாம். இல்லைனாலும் தனி ஒருவனாக பத்து வருடத்தில் முடித்து விடுவேன்” என்றீர்கள். அறை முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்தச் சொல்லின் இறுதியில் என் கைகளில் மயிற் கூச்செறிந்திருந்தது. நண்பர்களிடம் பின்னர் பேசிய போது தங்களுக்கும் அவ்வாறு இருந்ததாகச் சொன்னார்கள்.

அந்த வார்த்தைகளுக்குப் பிறகு ”திரும்புதலில்லை” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆரம்பம் சிரமமாகத்தானிருந்தது. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போட்டு விட வேண்டுமென்று முதலில் தோன்றியது. ஒரு வேலைக்குள்ளேயே கூட மிகவும் கூர்ந்து பதிவுகளைப் போடுவது மட்டுமே செய்தால் மேலும் திறனை அதிகரிக்கலாம் என்பதை நீங்கள் நண்பர்களிடம் விவாதித்தது வைத்து புரிந்து கொண்டேன். மற்ற பொறுப்புகளிலிருந்து விடுவித்து பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதன் பின்னும் ஒவ்வொரு அடியும் உங்களைப் பார்த்துப் பார்த்து அந்த முறையை நகல் செய்தேன். சிறுகுழந்தைகள் அப்படித்தான் தாய் தந்தையரைப் பார்த்து நகல் செய்து கற்றுக் கொள்கின்றன. அதே சமயம் என் பதிவில் நீங்கள் செய்யும் திருத்தங்கள் வழி கற்றுக் கொண்டே இருந்தேன்.

பெரியசாமித்தூரன், எஸ். வையாபுரிப்பிள்ளை, ஆண்டி சுப்ரமணியம் என நான் உருவாக்கியவை யாவும் மிகவும் அடிப்படையான பக்கங்கள். அவை எவ்வாறு இன்றைக்கு இருக்கும் செறிவான பக்கங்களாக மாற்றமடைந்தது என்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் இணைய, புத்தகத் தேடல்கள், ஆளுமைகளின் வாரிசுகளைத் தொடர்பு கொண்டு சேகரித்தல், மேலும் உசாத்துணைகள், இணைப்புகள், புகைப்படங்களுக்கான மெனக்கெடல் என மிக நீண்ட பக்கமாக வந்தபோதும், வேறேதோ ஒருவருடைய பதிவில் இங்குள்ளவர்களுக்கான தகவல் இருக்கும் போது அதை உடனடியாக நீங்கள் சேர்ப்பதும் என யாவும் ஏதோ பின்னல் விளையாட்டு போல இருந்தது. நீங்கள் மிகப்பெரிய வலை ஒன்றை பின்னிக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். இது தவிர இந்த முப்பதாண்டு காலமாக நீங்கள் சேகரித்த, கேட்ட, கற்றுக் கொண்ட, வாசித்த, விவாதித்த அனைத்தையும் இங்கே நீங்கள் தொகுத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

நான் அந்த வலையின் அருகில் நின்று பின்னும் லாகவத்தை கற்றுக் கொண்டிருந்தேன். சி. வை. தாமோதரம்பிள்ளை பதிவு போடும்போது, அவரின் பத்து குழந்தைகளில் இரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும். அதில் ஒருவரான அழகுசுந்தரத்தை மதம் மாறியதற்காக வெளியே துரத்திவிட்டார் என்ற தகவலும் வாசித்தேன். அப்போதே அந்த இன்னொரு மகன் யாரென்று தேடினேன். கண்டடைய முடியவில்லை. பின்னர் நீண்ட நாட்கள் கழித்து ஈழத்துப் புலவர் வரிசையில் அமிர்தலிங்கம்பிள்ளை பதிவுக்காக அவரைப் பற்றி துழாவிக் கொண்டிருந்தபோது அவர் தான் சி. வை. தாமோதரம்பிள்ளையின் இரண்டாவது மகன் என்று தெரிந்த போது மகிழ்ச்சியடைந்தேன். உடனே போய் சி.வை.தா -வின் பதிவில் அமிர்தலிங்கம்பிள்ளையை இணைத்துக் கொண்டேன். அன்றைய நாள் அப்பா பிள்ளையை சேர்த்து வைத்தோமே என்று நிம்மதியாகத் தூங்கினேன். ஆம் வலைப்பின்னல் தான்.

கூழங்கைத் தம்பிரான் பற்றிய பதிவிற்காக தேடிக் கொண்டிருந்த போது அவருக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்ற செய்தி சுவாரசியமாக இருந்தது. உடனே அவருக்கு மீம் போட்டு, புனைவுக்கதை திரித்து நண்பர்களிடம் காட்டிக் கொண்டிருந்தேன். சைவப் புலவர்களுக்கு, அவர்கள் செய்த அதிசயங்கள் என்ற பெயரில் உள்ள தொன்மங்கள் புனைவை மிஞ்சுபவை. கிட்டத்தட்ட ரோமன் கத்தோலிக்கச் சபையில் “புனிதர்” என்ற பட்டம் கொடுக்க காட்டப்படும் ஒரு குருவின் அதிசயத்திற்கு இணை என்று நினைத்தேன். ஒரு புலவனாவதற்குத் தகுதியாக அவன் அதிசயங்கள் செய்தலும், தெய்வமாதலும், சிலையாதலுமென நிகழ்ந்திருக்கும் ஒரு காலகட்டமிருந்திருக்கிறது. அன்று நான் எங்கள் ஊரின் ஆண்டாளையும், பெரியாழ்வாரையும் கூட நினைத்தேன். நீங்கள் மதாரின் கவிதை வெளியீட்டுவிழாவின் போது சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. உண்மையில் மக்கள் கவிஞனை தெய்வத்தன்மையுடையவனாகவும் அவனிலிருந்து எழும் கவிதையை தெய்வச் சொல்லாகவுமே கருதியிருக்கிறார்கள்.

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் வரிசை மற்றும் ஈழ எழுத்தாளர்கள் பற்றிய பதிவுக்காக தேடும் போது ஒன்று கண்டேன் ஜெ. அருமையான ஆவணப்படுத்தல்கள் செய்திருக்கிறார்கள். நம்மை விடவும் சிரத்தையாக. புத்தகங்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் இணையத்திலேயே தரவிரக்கம் செய்து கொள்ளும் வசதியை அளித்திருக்கிறார்கள்.  நல்ல தளங்களில் முடிந்தவரையில் எழுத்தாளர்களைத் தொகுத்திருக்கிறார்கள். ஒருவரைப்பற்றிய செய்தியையே பல புத்தகங்களில், தளங்களில் துணுக்குகளாக இருந்தது. யாவற்றையும் கோர்க்கும்போது முழுமையாக இருந்தது. புலம் பெயர்ந்த மற்றும்  ஈழத்து இலக்கியவாதிகளும், வாசகர்களும் இதில் மேலும் பங்களிப்பு செய்யலாம் எனுமளவுக்கும் அடிப்படைப் பக்கங்களை தமிழ் விக்கியில் உருவாக்கியிருக்கிறோம் ஜெ. மலேய தமிழர்கள் பற்றி ம. நவீனின் பதிவுகள் முக்கியமானவை. தமிழ் விக்கி பதிவுக்காக மேலும் ஐம்பது பேர் கொண்ட குழுவோடு வீரியமாக மலேசியாவில் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் என்ற செய்தி மகிழ்வாக இருந்தது. லண்டனிலும் கூட குழுவாக செயல்படலாமென்று முடிவெடுத்திருப்பதாக மது சொன்னார். புலம்பெயர்ந்த தமிழறிஞர்கள் பதிவுகள் இதன் மூலம் தமிழ் விக்கியில் மேலும் செறிவாக தொகுக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஈழத்து அறிஞர்களும், தமிழ் நாட்டு அறிஞர்களும் எவ்வளவு இயைந்து இலக்கியப் பணிகளைச் செய்திருக்கிறார்கள் என்று தகவல்களுக்காக தேடும் பணியில் கண்டடைந்தபோது வியப்பாயிருந்தது. சி.வை.தா சென்னையில் வந்து ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. கலைக்களஞ்சியம், அகராதிகள் என பல வேலைகள் இணைந்து செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் “யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு” சம்பவம் அவ்வபோது மனதில் வந்து போகும். பல ஈழத்து அறிஞர்களும் மனம் வெதும்பும் சம்பவமது. தொகுக்கப்பட்டதே இவ்வளவு எனில் அந்த நூலகத்தில் மறைந்து போனவை இன்னும் எவ்வளவு செல்வங்களோ என்று ஈழ அறிஞர்களை எழுதும் போதெல்லாம் நினைவிற்கு வரும்.

தமிழகத்தில் “தமிழ் இணையக் கழகம்” மிகச் சிறப்பான வேலைகளைச் செய்திருக்கிறது. தகவலாற்றுப்படை, புராஜெக்ட் மதுரை, tamil.vu போன்றவை முக்கியமான முன்னெடுப்புகள். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பொறுப்பிலிருந்த்போது பல நல்ல முன்னெடுப்புகளைச் செய்தார். கல்வித்துறை சார்ந்த இந்த தொகுத்தல் பணி முக்கியமானது. ஆனால் அவையெல்லாம் செறிவான தகவலாக மாற தமிழ்விக்கி பயன்படும்.

சமண, பெளத்த தளங்களைப் பற்றிய பதிவு போடும்போது அதற்காகவே பெரும்பயணம் செய்து படங்களை சேகரித்த ”பத்மாராஜ்” (http://www.ahimsaiyatrai.com/p/about-me.html) என்ற பெண்மணியைக் கண்டேன். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள சமணத்தலங்களிலெல்லாம் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த பதிவின் போது தான் கழுகுமலை, வெட்டுவான் கோவில், வீரிருப்பு புத்த ஆலயமென எங்கள் ஊருக்கு அருகிலுள்ள சமண பெளத்த ஆலயங்களுக்கு ஸ்ரீநி மாமா, சுதா மாமியுடன் பயணம் சென்றேன். பதிவுகள் உயிர் பெற்று துலங்கி வந்தது போல இருந்தது. நான் சென்ற இடங்களில் நாங்கள் எடுத்த புகைப்படமும், நான் பார்த்த மனப்பதிவையுமே பதிவு செய்தேன். இலக்கிய நண்பர்கள் யாவரும் கட்டிடக்கலை சார்ந்து கோயில், சமண, பெளத்த தலங்கள் செல்கிறார்கள். அவர்களெல்லாம் புகைப்படமும், கோவில்/இடங்கள் சார்ந்த தகவலும் சேகரித்து எழுதலாம் அல்லது இங்கு எழுதுபவர்களுக்குப் பகிரலாம். குறைந்தபட்சம் தங்களுக்கு அருகிலுள்ள தலங்களைப் பார்வையிட்டு தகவல் சேகரிக்கலாம்.

அப்படியாக தான் சென்ற நாஞ்சில் நாட்டுக் கோவில்களைப் பற்றி நண்பர் அருள் அவர்கள் எழுதிய பதிவு முக்கியமானது. நான் மிகவும் விரும்பிப் படித்த பதிவுகள் அவை. அந்தத் தகவல்களோ அவதானிப்போ வேறு எங்கும் இல்லாதது. அதைத் தொகுத்தால் அருள் ஒரு அருமையான புத்தகத்தைப் போட்டு விடலாம்.

அதே போல நண்பரும் கலைஞருமான ஜெயராமின் கலைஞர்களைப் பற்றிய பதிவும் முக்கியமானது. அவர் இதற்காக தன் வார இறுதி நாட்களை பல கலைஞர்களை தமிழ்விக்கி பதிவுகளுக்காக திட்டமிட்டு சந்திக்கிறார். இதற்காக புத்தகச் சேகரிப்பு, புகைப்படச் சேகரிப்பு, வாசிப்பு என முழுமையான பதிவுகள் போடுகிறார். இதுவரை அப்படியான பத்து பொக்கிஷமான பதிவுகள் போட்டுள்ளார். எப்போதாவது எண்ணிக்கையைப் பற்றி அவர் கவலைப்படும்போது “இன்னும் இரண்டு வருடங்கள் கூட ஆகட்டும். உங்களால் அனைத்து ஓவியம்  சார்ந்த முக்கியமானவர்களை பதிவிட முடிந்தாலே போதும்” என்று சொன்னேன். ஜெயராமிற்கு இந்த தகவல் சேகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகச் சொன்னார். அவரின் ”கலைஞர் ஆனந்தகுமாரசுவாமி” பற்றிய பதிவு வந்தபோது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். அந்தப் பதிவை நிறைவு செய்த அன்று “இந்த ஆனந்த்குமாரசுவாமிக்கு தனிவாழ்க்கை இன்னும் நிலையா அமைந்திருந்தா இன்னும் நிறைய செய்திருக்கலாம்” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இலக்கிய வாசகனும் தானே அதனாலேயே இவர்கள் பதிவுகளை உயிரோட்டமுள்ள வாழ்க்கையாகவும் பார்க்கிறார்கள். அவர்களுக்காக மகிழ்கிறார்கள், வருத்தப்படுகிறார்கள், பெருமையடைகிறார்கள்.

சுபா அக்கா இசையில் ஆர்வம் உடையவர்கள். இசைக் கலைஞர்கள், வாத்திய இசைக்கலைஞர்கள் பற்றிய அவரின் பதிவுகள் முக்கியமானவை. மேலும் ஜி.எஸ்.எஸ்.வி நவீனின் பதிவுகள் யாவும் நாட்டுப்புறக்கலைகள், நாட்டுப்புறவியல் சார்ந்தவை. தன்னுடைய ஆக்கங்களில் பெரும்பாலும் நாட்டுப் புறக்கலைகளை, கடவுளர்களை முன் வைப்பவரான நவீனுக்கு இந்த தமிழ் விக்கியில் அது சார்ந்த பதிவுகள் போடுவது மேலும் உதவியாக இருந்தது என்றார். இதற்காக என்றில்லாமல் அ.கா. பெருமாள் ஐயாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருப்பதும் விக்கி வேலைகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. தென்மண்டலம் சார்ந்த கூத்துக் கலைஞர்களை நாம் நேரில் சந்தித்து பதிவுகள் போட வேண்டுமெனவும், அழிந்து வரும் கலைகள், கலைஞர்களைப் பற்றி நாம் நேரில் சென்று தகவல் திரட்ட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் மணல்வீடு அமைப்பு சார்ந்த கலைஞர்களில் ஆரம்பித்து அப்படியே தென்பக்கமுள்ள அனைத்து கலைஞர்கள், கலைகள் பற்றிய பதிவு போட்டு அங்கிருந்து தொட்டு தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களையும் தொகுக்கலாம் என்றார். நேரில் செல்லலாம் என்றார். இல்லையானாலும் இணையம், செல்பேசி, வாட்ஸாப், இமெயில் வாயிலாகவே ஒரு பதிவுக்கான அனைத்தையும் வாங்கிவிட முடிகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி சார்ந்த கலை ஆர்வலர்கள் ஜி.எஸ்.எஸ்.வி நவீனைத் தொடர்பு கொல்ளலாம்.

சமீபத்தில் குக்கூ சென்ற போது இதே வேலையை இந்தியா முழுவதும் சென்று தகவலாக சேகரித்துக் கொண்டிருந்த ராகுலைச் சந்தித்தேன். உடனே நவீனிடம் அவரை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிக்காக அவரையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தேன்.

குக்கூ -ல் தென் மண்டல் தாவரங்களைப் பற்றிய தகவல் சேகரிக்கும் அன்பு -வைப் பார்த்த போதும், பின்னாளில் நாங்கள் இதையும் பதிவேற்றுவோம். நீங்களும் தமிழ் விக்கில பதிவு போடுங்க என்று சொன்னேன்.

உண்மையில் விரிவான பணி ஜெ. என் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்கப்போகும் பணி ஒன்றை எனக்கு காணித்திருக்கிறீர்கள். தகவல் திரட்டு என்பது முடிவிலியின் பாதை. நிறைவடையாத பாதை. செயலற்ற நாட்களிலும், தேங்கிக் கிடக்கும் நாட்களிலும், சோர்ந்து போகும் நாட்களிலும் கூட ஆக்கத்தின் ஒரு கூராய் எப்போதும் என் கண் முன் நிற்கப்போகும் ஒன்று. தமிழ்விக்கி புனைவுத்தன்மையைக் குறைக்கும், பிற இலக்கிய ஆக்கங்களுக்கான நேரத்தை குறைக்கும் என அக்கறையுள்ள நண்பர்கள் சொன்னார்கள். மிகச் சிலரே இது முக்கியமானது என ஊக்குவித்தார்கள். என் வரையில் இவை தகவல் தளம் மட்டுமல்ல. ஒரு உயிரோட்டமுள்ள வாழ்வு இதில் உள்ளது. அதன் உசாத்துணை கொண்டு மேலும் மேலும் சென்று சென்று தேடி அடைவது புனைவின் பாதை தான். புனைவுக்கான அத்தனை கருக்களும், களங்களும் இங்கு உள்ளன. வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கலாமென தோன்றுமளவு புனைவின் பாதை உள்ளது. இந்த நான்கு மாதங்களில் தான் என் மூன்று கதைகளும், கட்டுரைகளும் வெளிவந்தன. வாசிப்பின் வேகம் கூடியிருக்கிறது. தமிழ் விக்கி செயலூக்கம் தான் அளித்திருக்கிறது ஜெ.

நேற்று தம்பி வீரா இதை அனுப்பியிருந்தான். “Which is more important?” Asked Big panda, “The journey or destination?”…  “The company” said tiny dragon என்ற வரிகள். இந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு நாளுமென அப்படியான நல்ல பயணிகளுடன் தான் பயணித்திருக்கிறேன். முதன்மையாக நீங்கள். சொல்லாக, குரலாக, திருத்தங்களாக, பதிவுகளாக, அறிவுறுத்தலாக, கண்டிப்புகளாக, தகவல்களாக, அறிதலாக, மகிழ்வாக என விர்ச்சுவலாக உடனிருந்திருக்கிறீர்கள். இந்த உடனிருப்பை நான் பெரும் பேராகக் கருதுகிறேன் ஜெ. தகவல்கள் கோர்த்துக் கோர்த்து இன்று பின்னப்பட்ட பிரம்மாண்டமான வலையின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை. நித்தமும் பதிவுகள் போடுவதைத் தாண்டி நீங்கள் போடும் பதிவுகளை உடனேயே வாசிப்பது கற்றலாக இருந்தது எனக்கு.

தமிழ் விக்கி திறப்பு விழா நெருங்க நெருங்க அலைக்கழிதல் அதிகமானது. மே 3, அன்று தெற்கு நோக்கி அலுவலகம் சென்று கொண்டிருந்தபோதெ இறங்கி வடப்பக்கமாக பேருந்து ஏறினேன். எங்காவது செல்ல வேண்டுமெனத் தோன்றியது. மதுரையில் உட்கார்ந்து கொண்டு யோசித்துப் பின் நீண்ட நாட்களாகவே செல்ல வேண்டுமென நினைத்த குக்கூ காட்டுப் பள்ளி சென்றேன். இரவு பத்து மணிக்கு ஸ்டாலின் அண்ணாவும் கெளதமி அக்காவும் என்னை அழைக்க பேருந்து நிலையம் வந்தனர். காட்டுப்பள்ளிக்கு உள் நுழையும் போதே அது என்னை அணைத்து யாவும் சரியாகிவிடும் என்று சொன்னது போல இருந்தது. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். சிவராஜ் அண்ணா அங்கில்லை. ஆனால் எல்லோரிலும் அவர் இருந்தார். பூவன்னா, கெளதமி அண்ணி, ஸ்டாலின் அண்ணா என எல்லோரிலும் அவரையே பார்த்தேன். எல்லோரும் உறங்கிய பிறகும் கூட ஸ்டாலின் அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். உங்களை, உங்கள் வரிகளை, செயல்களை, அது அவர்களில் செலுத்தும் ஆக்கத்தை, சிவராஜ் அண்ணாவின் செயல் தீவிரத்தை, அவரின் பயணத்தை, சிக்கல்களை, அதைக் கடந்து வந்த விதத்தையெல்லாம் கூறி ”எல்லாம் சரியாகிவிடும்” என்றார். ”உண்மையில் குக்கூ காட்டுப்பள்ளிக்கு வர ஒரு அழைப்பு தேவைப்படுகிறது. இங்கு நிறைந்திருங்கள். உங்களுக்கான விடைகள் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு யாமத்தின் முடிவில் உறங்கச் சென்றார்.

அங்கு என் அருகே கறுகறுப்பான குழந்தை போன்ற முகப்பாவனை கொண்ட தன் கப்பலுக்குப் போன எஜமானருக்காக காத்திருக்கும் பெரிய ஜோர்டன் எனும் நாய் படுத்தவாறு என்னை நோக்கிக் கொண்டிருந்தான். அவனை தடவிக் கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அவன் நெகிழ்ந்திருந்தான். மஞ்சரியின் துணிகளை அணிந்திருந்தேன். அவள் என் அருகில் இருப்பது போல இருந்தது. எத்தனை ஊக்கமாக செயல் செயல் என திகழ்ந்து கொண்டிருப்பவள் அவள். காலையில் அருகிலுள்ள புளியனூர் சென்று அவள் புனரமைத்துக் கொண்டிருக்கும் கிணறைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பின்னும் இந்த ஐந்தாறு மாதங்களில் என் முன் நின்ற சலனங்கள், அலைக்கழிதல்கள், தடைகள், தவறுகள் என யாவற்றையும் அசைபோட்டிருந்தேன்.

சீனு சொன்னது நினைவிற்கு வந்தது. “துன்பம்லாம் ஒன்னா கடந்து போனத நினைச்சு வரும். இல்ல வரப்போற காலத்த நினைச்சு பயந்து வரும். கடந்தது எல்லாமே நல்லதுனு நம்பனும். அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும். எதிர்காலம் பத்தி யோசிக்க நாம யாரு? நம்ம கைல இருக்கது இந்த நிகழ் மட்டும் தான்” என்ற வரிகள். பின்னும் ஆனந்த் எப்போதும் சொல்லும் ”மொமண்ட்ல வாழு.. அந்த நொடியை, கடந்ததையோ வரப்போறதையோ நினைச்சு மிஸ் பண்ணிடாத” என்ற வரிகள். அப்படியே உறங்கிப்போனேன்.

அதிகாலை உறங்கி எழுந்து அருகிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துமாவுக் கஞ்சி கொடுக்கப் போனோம். சிறுவர்களின் குதூகலம் மனதை நிறைத்தது. திரும்பி வந்து ஜவ்வாது மலையைப் பார்த்தவாறு தனியாக இருந்த பம்பு செட்டில் கொட்டிக் கொண்டே இருந்த நீரில் தலையைக் கொடுத்தவாறு பல மணி நேரமாக வெறுமே உட்கார்ந்திருந்தேன். பின் முத்து அண்ணன் என்னை அழைத்து கால்களுக்கு ரிஃப்லெக்ஸாலஜி மசாஜ் செய்தார். கால்களின் ஒவ்வொரு அழுத்தப் புள்ளிகளையும் அழுத்திக் கொண்டே அதோடு தொடர்புடைய ஒவ்வொரு உடலுறுப்பும் எப்படியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனத்தின் ஆழத்திலுள்ள கவலைகளை சொல்லச் சொன்னார். சொல்லக் கூடியவைகளையெல்லாம் அவரிடம் சொல்லி முடித்த பின் ”உடல் மிகவும் ஆரோக்கியமா இருக்கு. ஒவ்வொரு உறுப்பும் சரியா இருக்கு. மனம் சரியாகிடும். உடலும் மனமும் தொடர்புடையது. அதையும் பாத்துக்கங்க” என்று சொன்னார். ”இந்த ’டோம்’ அமைந்த கட்டிடம் பல இடங்களிலிருந்தும், பலரும் தங்களுக்கு விருப்பமான இடங்களிலுள்ள மண், பிடித்த மனிதர், நாய்க்குட்டியின் அஸ்தி என பலவற்றையும் குழைத்துக் கட்டப்பட்டது. அங்கு அமர்ந்து உங்கள் வேண்டுதலை விட்டுச் செல்லுங்கள்” என்றார். பின் அண்ணன் ஓயாமல் பலருக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டோமில் உட்கார்ந்திருந்தேன். வேண்டுதல்கள் என்றில்லை எப்போதும் எனக்கு. ஆனால் இம்முறை தமிழ் விக்கி சரியாக எத்தடையுமின்றி வெளிவர வேண்டுமென்று அங்கு சொல்லிக் கொண்டேன். அங்கு அமர்ந்து அந்த இடத்தை உணர்ந்து கொண்டிருந்தேன். முத்து அண்ணனிடம் பேசிய போதே அந்த இடத்தின் நிறைவை அடைந்துவிட்டேன். கிளம்பலாம் என்று மனம் சொல்லியது.

மாலை அனைவரிடமும் விடைபெற்று ஸ்டாலின் அண்ணா மற்றும் கெளதமி அண்ணியுடன் கிளம்பி திருவண்ணாமலை கோவில் சென்றேன். அண்ணாமலையானும் உண்ணாமுலையம்மாளும் அருள் பாலிக்க சித்திரை வசந்தோத்ஸவம் விழா நடந்து கொண்டிருந்தது. பொம்மலாட்ட பாணியில் சப்பரத் தேரிலுள்ள அவர்களுக்கு அழகான பெண் பொம்மையை பூப்போட செய்து கொண்டிருந்தார்கள். கண்குளிர தரிசித்துவிட்டு மூலவரான அண்ணாமலையை மனம் பொங்க கண்டு வெளிவந்தோம். உள் நுழையும்போது கோபுரத்தின் வலப்பக்கமிருந்த ”பிறையன்”  பொன்னிறமாக வானில் ஜொலித்துக் கொண்டிருந்தான். ஸ்டாலின் அண்ணாவிடம் பிறையனைக் காட்டியபோதே பிரமிப்பாய் நின்று பார்க்க ஆரம்பித்துவிட்டார். எப்போதும் குழந்தை போல துள்ளிக் கொண்டிருக்கும் கெளதமி அண்ணி மேலும் குழந்தையாகிப் போனார்கள். அண்ணாவிடம் ”கன்னியாகுமரி பகவதிய தரிசிச்சதிலயிருந்து இருந்து இது மாதிரி பிறை நிலாக்கள் பகவதியோட மூக்குத்தி மாதிரி கற்பனை செஞ்சிக்க ஆரம்பிச்சேன்ண்ணா.. பின்ன அந்த பிறையிலிருந்து அந்த கருமேகத்துல சிவனின் தலைல அது இருக்கா மாதிரி கற்பனை செஞ்சு மனசால வரைஞ்சு பாப்பேன்” என்றேன். அவர் “இனிமே இந்த மாதிரி பிறையப் பாக்கும் போதெல்லாம் இந்த தரிசனம் எனக்கும் கிடைக்கும் ரம்யா” என்றார்.

கோவிலிலிருந்து இரவு உணவுக்காக குக்கூவின் ஆரம்ப நாட்களிலிருந்தே உடனிருந்த சங்கர் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். குக்கூ நண்பர்கள் எப்போது இந்தப்பக்கம் வந்தாலும் இங்கு உணவருந்தாமல் செல்வதில்லை என்றார் அண்ணா. சிவராஜ் அண்ணா என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருப்பதாகவும் சொன்னார். சங்கர் அண்ணா உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெ. முப்பது வருடங்களுக்கு முன் நீங்கள் திருமணமான புதிதில் திருப்பூருக்கு உங்களைச் சந்திக்க வந்ததாகவும், அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்ததால் மாலை வந்து சந்திப்பதாக வீட்டில் தங்கச் சொல்லி விட்டுச் சென்றீர்கள் எனவும் சொன்னார். தங்களை நம்பி தங்கச் சொல்லி உணவளித்த அருணாம்மா பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். ”அடுத்தமுறை வரும்போது சமணத்தலங்களுக்கு போலாம் தங்கறாப்ல வாங்க” என்றார். தமிழ் விக்கியில் தொண்டை மண்டல சமணத்தலங்கள் பற்றி போட்ட பதிவுகள் ஞாபகம் வந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”இங்க இருக்கவங்களுக்கே தெரியாது. பரவால்ல அதெல்லாம் தொகுத்து போடறீங்களா” என ஆச்சரியப்பட்டார். அவரின் மனைவி அன்னபூரணி(சோறு போடுபவர்கள் யாருக்கும் இந்தப்பேர் தான்) கைகளில் உணவருந்திவிட்டு கிளம்பும்போது தலை நிறைய எனக்கு பூ வைத்துவிட்டு, குங்குமம் அளித்து, ஒரு பச்சைப்பட்டும் அளித்தார்கள். பச்சைப்பட்டு என கைகளில் கிடைத்தது என்னைவிட கெளதமி அக்காவிற்கு ஆனந்தத்தை அளித்திருந்தது.

வரும் வழியில் ஆட்டோக்காரர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தி திக்கு முக்காடச் செய்தார். ஸ்டாலின் அண்ணா அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே கீழிறங்கிச் சென்று நடு ரோட்டில் சட்னியாகிவிடும் பயமேயில்லாமல் ஆயாசமாக நடந்து கொண்டிருந்த ஆமையை மடைமாற்றி ஓடைப்பக்கம் போய் விட்டு வந்தார். ஒரு நாளை நிறைச்சா நீ ஒட்டுமொத்தமா நிறைச்சு திக்கு முக்காட வைச்சிடற என்று நான் யாரிடமோ அந்த இரவில் சொல்லிக் கொண்டேன். பேருந்து வரும் வரை காத்திருந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள். அனேகமாக நடுஇரவுக்கு மேல் தான் அவர்கள் காட்டுப்பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டும்.

ஆறாம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். விட்டுச் சென்ற அனைத்துப் பிரச்சனைகளும் அப்படியே இருந்தது. இலக்கியமும், அது சார்ந்த பணிகளுமெனக்கு எத்தனை முக்கியம் என்று சொல்லி புரிய வைக்க முடியும் என்று தோன்றியது. பிற பிரச்சனைகள் யாவும் பிரச்சனையே அல்ல என்று தோன்றியது. மனதை வாட்டிக் கொண்டு, உணர்வு ரீதியாக தொந்தரவு செய்து கொண்டிருந்த நிகழ்வுகள் யாவும் ஆவியாகிவிட்டது. என்னை நிறைவடையச் செய்வது எது, எந்த மனிதர்கள் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர்களால் மட்டுமே சூழ்ந்திருக்க விரும்புகிறேன்.

விக்கி தொடக்க விழாவிற்கு ஏற்பட்ட சிக்கல் நல்லது என்று நினைத்தேன். இப்போதெல்லாம் நீங்கள் அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதைக் கூட நான் அறிந்திருந்தால் பெரும்பாலும் கவலை இல்லை எனக்கு. விழா முடிந்த அன்று நீங்கள் அனைவரும் சீக்கிரம் கலைந்து சென்றால் போய் விக்கிப்பதிவு  போடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்த்து சிரித்திருந்தேன்.

விழா நிறைவுற்றபின் நித்தமும் உடன் ஒவ்வொரு நாளும் பதிவுகள் போடும் சுபா அக்கா, நவீன், மலேசியா நவீன் ஆகியோருடன் பேசி ஊக்கப்படுத்தி, ஒருவருக்கொருவர் தட்டிக் கொண்டோம். இந்தப்பயணம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பரீதியாக உடனிருந்த மதுசூதன், சந்தோஷ், திருமலை, மகேந்திர ராஜன், அருள் ராஜ், விஜய பாரதி ஆகியோரின் பணி அளப்பறியது. ரிவ்யூ டீமில் தீ போல செயல்பட்டுக் கொண்டிருந்த ஜாஜா, மனோ, ஜெயஸ்ரீ, லோகமாதேவி டீச்சர், தாமரைக்கண்ணன் ஆகியோரிடமும் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டோம்.

ஆங்கில மொழிபெயர்ப்பை ஆளேயில்லாத போது கூட மனம் தளராமல் நகர்த்திச் சென்ற சைதன்யா மிகவும் குறிப்பிட வேண்டியவர். இருநூறு ஆங்கிலப்பதிவில் ஏறக்குறைய அறுபது சைதன்யா செய்திருப்பார். மொழிபெயர்ப்பில் சிக்கல் வரும்போது அவரிடமும் சுசித்ராவிடமும் பேசியிருக்கிறேன். பலதரப்பட்ட இடங்கள், புத்தகங்களிலிருந்து தகவல் திரட்டுவதால் மொழி நடையில் ஒரு டைனமிக் தன்மை அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் அது சரிசெய்யப்பட்டாலும் மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லும் போது தான் அதன் முக்கியத்துவம் புரிகிறது. ஓரிரு முறைக்குப் பின் மிகவும் அத்தியாவசியமல்லாத வரிகளைப் போடுவதை நிறுத்தியே விட்டேன். சிடுக்கில்லாத மொழிப் பிரயோகம், தெளிவான வரிகள் மட்டுமே மொழிபெயர்க்க இவர்களுக்கு ஏதுவாகிறது. இப்போதெல்லாம் யாருடைய பதிவைப்பார்த்தாலும் அப்படியான வரிகளை பிழைதிருத்தம் செய்து விடுவதுண்டு. தமிழ்ப்பதிவு போடுபவர்கள் ஒரு ஓரமாக மொழிபெயர்ப்பாளர்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சுசித்ரா, ப்ரியம்வதா, ஜகதீஷ் ஆகியோரின் பதிவுகளைத் தாண்டியும் ரிவ்யூவிற்காக அவர்கள் அதிக மெனக்கெடல்களும் நேரத்தையும் செலவளித்து முறையான பதிவுகளாக ஆக்கினார்கள். ஆங்கிலப்பதிவுகளில் நிதி அதியமான், திருப்பூர் ஆனந்த், வென்னிமலை, பாலாஜி ராஜீ, ஜெயஸ்ரீ, முத்து காளிமுத்து ஆகியோரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

துவளும்போது தேற்றும் தோளாக மீனா அக்கா எனக்கு அமைந்திருந்தார்கள். புத்தகங்கள் தேடுதல், சேகரிப்பிலும் உதவியாக இருந்தார்கள். சந்தோஷ், மதுசூதன், அரங்கா அண்ணன் ஆகியோர் எல்லா நிலைகளையும் ஒருங்கிணைத்தது ஊக்கப்படுத்தியது உண்மையில் மிகப்பெரிய பணி தான் ஜெ.

மிக்க நன்றி ஜெ. உங்களால் தான் நான் இத்தகைய நல்ல மனிதர்களை என் வாழ்வில் கண்டடைந்திருக்கிறேன். இவர்களுடனெல்லாம் பயணிப்பதே வாழ்வை மேலும் இனிதாக்குகிறது. ”Yes. It’s not a Journey or a Destination. It’s THE Company”

தமிழ் விக்கி தொடக்க விழாவிற்குப் பிறகு நிறைய நபர்கள் பங்களிக்க முன் வருகிறார்கள். தொடர்ந்து அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். தமிழ் இலக்கியப்பணி, கலைப்பணியில் ஆர்வமுள்ளவர்களுக்கு தங்கள் துறை சார்ந்து மேலும் திறனாகச் செயல்பட இந்தப்பணி உதவும். இரண்டு மூன்று முறைகளுக்குப் பின்னான தோல்வியோடு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போட்டித்தேர்வு மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவர்கள், தமிழை விருப்பப்பாடமாக எடுத்திருக்கும் குடிமைப்பணி மாணவர்களுக்கு இந்தப்பணியும் தளமும் மிக முக்கியமானது. தங்கள் நாளின் ஒரு பகுதியாக இதில் பங்களிப்பதும், இந்த தளத்தை சிரத்தையாக பயன்படுத்திக் கொள்வதும் அவர்களுக்கு மிக முக்கியம் எனக் கருதுகிறேன். குடிமைப்பணித்தேர்வுக்கான தமிழ் விருப்பப்பாடத்திற்கான பாடத்திட்டத்தைச் சார்ந்த அனைத்து தலைப்புகளுக்கும் ”இப்படி தகவல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நான் நினைத்த யாவையும் விக்கியில் செய்து விட வேண்டுமென்பது நீண்ட காலத்திட்டம். சங்க காலம் முதல் நவீன இலக்கியம் வரையுள்ள யாவையும் செறிவான தகவலாக இங்கு வைத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது ஜெ.

முன்தினம் தமிழ் விக்கி பதிவுக்காக சக்ரவர்த்தினி என்ற இதழைப் பற்றிய பதிவைப் போட்டேன். 1905-ல் பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட இதழ் அது. பாரதி ஒரு வருடம் ஆசிரியராக இருந்திருக்கிறார். ”விடுதலைக்கு முந்திய தமிழ்ச்சிறுகதைகள்-பெண்ணெழுத்து” என அரவிந்த் சுவாமி நாதன் அவர்கள் தொகுத்த புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் முக்கியமான படைப்புகளை இந்த இதழில் படைத்திருக்கிறார்கள். அதை யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நவீன காலத்திற்கு முற்றிலும் இலக்கியம் சார்ந்த பெண்களுக்கான இதழ் கொண்டு வர வேண்டும் என்று தோன்றியது ஜெ. ஆனால் ஆரம்பிக்க வேண்டும் எனும்போதே நோக்கத்தில் ஒரு தெளிவு இருந்தது. க.நா.சு சொல்வது போல எந்த அமைப்பானாலும், தொடர் செயல்பாடானாலும் ஒரு ஐந்து வருடங்கள் நீடித்திருக்கலாம் அதன்பிறகு அதுவே நீர்க்கும் அல்லது நிறுத்திக் கொள்ளலாம் என்று.

“நீலி” என்ற பெண்களுக்கான இதழ் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதன் நோக்கத்தை வகுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு நூறு வருடங்கள் கழித்து அ.கா.பெருமாள் ஐயா போல, அரவிந்த சுவாமிநாதன், புலவர் கா. கோவிந்தன் போல, மு. அருணாசலம்‌, அ. ராமசாமிப்புலவர் போல தொகுத்தல் பணியைச் செய்பவர்கள் வந்தால், நவீன கால கட்டத்தில் எழுதிய அத்தனை பெண் எழுத்தாளர்கள் பற்றிய தகவலும், அவர்களின் ஆக்கங்களைப் பற்றிய ரசனைக் கட்டுரைகளும் இருக்கும் ஒரு தொகுப்பாக இருக்க வேண்டுமென முடிவு செய்தேன். குறைந்தது மூன்று வருடமாவது மும்மாத இதழாகக் கொண்டு வர வேண்டும். சங்க காலம் முதல் தற்போது வரை எழுதப்பட்ட அனைத்து பெண்ணெழுத்தையும் தொகுக்க வேண்டும் என்ற அவா உள்ளது. தகவலாக விக்கி அமையுமென்றாலும், ரசனைக்கட்டுரைகளாக, பேட்டிகளாக, ஆக்கங்கள் வெளிவர, ஊக்குவிக்க இன்னொன்றும் தேவை உள்ளது என்று தோன்றியது. எப்போது என்று தெரியவில்லை ஆனால் கொண்டு வர வேண்டும்.

பெண் எழுத்து எனத்தேடி நம் தளத்திலுள்ள கடிதங்கள், கட்டுரைகளை, உங்கள் வரிகளை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். எத்துணை வீச்சாக பல பெண்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அலைக்கழிப்பினாலோ, பாதைகள் மாற்றத்தாலோ, தவறான முடிவுகளாலோ, உணர்வுச் சிக்கல், உறவுச்சிக்கல்களாலோ, சொல்லவியலா காரணங்களாலோ இல்லை காரணமேயில்லாமலோ என பலரும் காணாமல் போயிருக்கிறார்கள். இருப்பவர்களும் கூட இன்னும் வீச்சாக எழுதவில்லை. மனத்தடைகள், குடும்பம், வேலை, உறவுகள் என இன்றும் கூட சிக்கல்கள் பெண்களுக்கு உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

சுசித்ராவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “இன்னமும் கூட நல்ல படித்த பெண்களும், பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட பெண்களாலும் தான் ஓரளவு எழுதுவதைப் பற்றியே யோசிக்கவே முடியுது ரம்யா. பிரமிள் மாதிரி, ஜெ மாதிரி, அலைக்கழிதலோடு வாழ்க்கைய அணுகற எந்தப் பெண்கள் இன்னைக்கு எழுத முடியுது?” என்று வருத்தப்பட்டார். விடுதலைக்கு முந்தைய எழுத்துக்களை எழுதியவர்கள் கூட பெரும்பாலும் உயர் குடி, செல்வ செழிப்புடனிருந்த படித்த பெண்கள் தான். இன்று காலமாற்றமுள்ளது. இணையம் உள்ளது. எழுத வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் வழிகள் எப்படி வேண்டுமானாலும் திறக்கும். எந்த சலனங்களுக்கும் உட்படாமல் செயலை முதன்மையாகக் கோண்டு அவற்றையெல்லாம் தகர்க்கும் பொறுப்பு தற்போது எழுதும் பெண் எழுத்தாளர்களிடமும், எழுதப்போகிறவர்களிடமும் உள்ளது.

ஒரு செயல் மேலும் செயலையே ஊக்குவிக்கிறது. இந்த மூன்று மாதங்களும் செயலின் உச்சியில் தான் இருந்தேன் ஜெ. வாசிப்பு, எழுத்து, வேலை, குடும்பம் என யாவும் செயலூக்கத்துடன் திகழ்ந்த நாட்கள். சோர்வுகளும், மனக்கவலைகளும், சிக்கல்களுமென எழுந்த யாவற்றையும் தமிழ் விக்கி எனும் பணியில் கரைத்துவிட்டேன்.

இத்தகைய நல்ல முன்னெடுப்புக்காக நன்றி ஜெ. தமிழ் விக்கி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஊக்கமாக இருந்த அந்த வரியை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன்.

“நண்பர்கள் சேர்ந்து பணி செய்தால் மூன்று வருடங்களில் முடித்து விடலாம். இல்லைனாலும் நானே ஒரு பத்து வருடத்தில் முடித்துவிடுவேன்”

பிரேமையுடன்

ரம்யா.

முந்தைய கட்டுரைவை.மு.கோதைநாயகி அம்மாள்- எஞ்சும் பெயர்
அடுத்த கட்டுரை“அகத்திறப்பின் வாசல்” – துரை. அறிவழகன்