அன்புள்ள ஜெ,
முன்பு ஒரு முறை நான் உங்களிடம் “முத்துலிங்கம் ஏன் இலங்கை போர் குறித்து எழுதவில்லை?” எனக் கேட்டதற்கு “ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகள் பற்றியும் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை, எது அவனை பாதிக்கிறதோ அதை மட்டுமே எழுதுவான். சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தன் சுதந்திர போர் பற்றி எழுதவில்லை” என்றீர்கள். கீழ்வெண்மணி சம்பவத்தை மையமாக கொண்டு பாட்டாளியின் “கீளைத் தீ”, சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “செந்நெல்” என முன்பே வந்திருந்தாலும் இ. பா வின் குருதிப்புனல் ஒரு முக்கிய படைப்பு. பல பத்திரிகைகள் இந்தக் கதையை பிரசுரிக்க மறுத்து பின் கணையாழியில் தொடராக வெளிவந்தது. 1968 டிசம்பர் 25 அன்று கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது தாக்குதல் நடந்து பின் 44 பேர் குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டனர், சொல்லப்போனால் இன்னொரு சிலுவையேற்றம். இந்த சம்பவத்தை கொஞ்சம் புனைவு கலந்து கொடுத்துள்ளார். இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட ராமையா என்பவரையும், அதற்கு போராடிய கம்யூனிஸ்ட் போராளி பி.சீனிவாசராவ் என்ற பிராமணர் கதாபாத்திரத்தில் சிவா என்று மாற்றி படைத்துள்ளார். மற்றபடி சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. சம்பவத்தில் தொடர்புடைய கோபாலகிருஷ்ண நாயுடுவை கண்ணையா நாயுடு என மாற்றியுள்ளார்.
டெல்லியில் வசிக்கும் சிவா என்ற பிராமண இளைஞன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்ற தன் நண்பன் கோபாலைத் தேடி திருவாரூர் வருகிறான். வந்த உடன் திருவாரூரில் வந்து தங்கும் போது லாட்ஜில் ‘உங்களுக்கு மலையாள பெண் வேண்டுமா? பிராமணப் பெண் வேண்டுமா?’ என அங்கு உள்ளவன் கேட்கிறான். தி.ஜானகிராமன் சிறுகதைகளில் தஞ்சை பகுதியில் காட்டும் தேவதாசிகள் போலவே இங்கும் காட்டுகிறார். கோபாலை கிராமத்தில் சந்திக்கிறான். கோபால் கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் போராளி ராமையாவின் வீட்டில் தங்கி அவருடன் இணைந்து அந்த கிராமத்து மக்களுக்காக போராடுகிறான். அங்குள்ள தலித் மக்கள் மீது கண்ணையா நாயுடு நிகழ்த்தும் கொடுமைகள் பற்றி அறிந்து கொள்கிறான் சிவா. தன நண்பன் கோபாலுடன் இணைந்து போராட முடிவெடுக்கிறான். தன்னைக் காண வந்த அமைதியின் வடிவான சிவா தங்களுடன் இணைந்து போராடுவது கோபாலுக்கு ஆச்சர்யம்.
நாயுடு வெளியூரிலிருந்து ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினரை மிரட்டுகிறார் மேலும் தன் சங்கத்தில் அவர்கள் சேர்ந்தால் மட்டுமே வேலை என்றும் கூறுகிறார். நாயுடுவை எதிர்த்து ராமையா மற்றும் கோபால் எடுக்கும் முடிவுகளை நாயுடு முறியடிக்கிறார். ஊரில் வசிக்கும் பாப்பாத்தி மற்றும் வடிவேலு இருவரையும் பிடித்து தனி அறையில் வைத்து அவர்கள் காணாமல் போனதற்கு கரணம் கோபாலும் ராமையவுமே என கதை கட்டி விடுகிறார் நாயுடு. இதை கண்டறிய நாயுடுவின் வைப்பாட்டி பங்கஜத்தை பார்க்க செல்லும் கோபால் அங்கே வடிவேலுவும் பாப்பாத்தியும் இருப்பதை கண்டறிகிறான். இருவரையும் மீட்டுவிடுகிறான். ஆனால் இரண்டு நாட்களில் பாப்பாத்தியை நாயுடுவின் ஆட்கள் கொலை செய்கிறார்கள். பழியை கோபால் மீது போட கோபாலை போலீஸ் தேடுகிறது. ராமையா மற்றும் அவரது தோழர்கள் பலரையும் நாயுடு போலீசில் மாட்டிவிட இறுதியில் கோபால் நாயுடுவை தேடி ஊருக்குள் போக அங்கே குடிசையில் வைத்து பெண்களை, குழந்தைகளை அடைத்து வைத்து நெருப்பிட்டு கொளுத்துகிறார்கள். தூரத்தில் நெருப்பு எரிவதையும் மக்களின் மரண ஓலத்தையும் கேட்கிறான் கோபால். அவன் நிற்கும் ஓடையில் தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து குருதி புனலாக வருவதுடன் கதை முடிகிறது.
உண்மை சம்பவத்தில் கோபால கிருஷ்ண நாயுடு திருமணமாகாதவர் அதனால் கதையில் கன்னையா நாயுடு ஆண்மை அற்றவராக காட்டியதாக இ. பா. கூறுகிறார். அதனால் தான் பல பெண்கள் உடன் தொடர்புள்ளதாக தன்னைக் காட்டுகிறார். அந்த இயலாமையின் காரணமாகவே பாபாத்தி, பங்கஜம், என பெண்களை கொடுமை செய்வதாக காட்டுகிறார். பாலியல் பிறழ்வுகள் நாவல் முழுதும் விரவி வருகிறது. பிராய்டிய வழியில் பாலின பிரச்சனையை கொண்டுவந்து பொருளாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி விட்டதாக மார்க்சியர்கள் இந்த நாவலை எதிர்த்தனர். பின்னால் அதற்காக வருத்தப்பட்டதும் நடந்தேறியது. கீழவெண்மணி சம்வம் குறித்து எழுதப்பட்ட “குருதிப்புனல்” தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய நாவல்.
மாறா அன்புடன்
செல்வா
பட்டுக்கோட்டை.
***