பிராம்பிள்டன் நிகழ்வு- கடிதம்

வணக்கம்.

வாஷிங்டன் டி.சி யில் tamil.wiki விழாவில் உங்களையும் அருண்மொழி அவர்களையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. It was definitely a fanboy moment for me. நீங்களே கூறியது போல் இந்த விக்கி தொகுப்பு வேலை உங்கள் சிருஷ்டிகர்த்த ஆக்கங்களைக் குறைத்து விடுமோ என்ற, சுயநலம் மிகுந்த, பயம் எனக்கும் உள்ளது. இது உங்கள் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் நுழைந்தபோது இருந்த/ இருக்கும் அதே பயம். இது (தமிழ் விக்கி முயற்சி) ஒரு நவீன வியாசம் என்றாலும், உங்கள் படைப்பாக்க நேரத்தைக் குறைக்கிறதே எனும் ஏக்கம் எனக்கு இருக்கிறது, உங்கள் அறிஞர் குழுவினர், உங்கள் ஊக்கத்தையும் அடையாளத்தையும் அதிகமாகவும், நேரத்தைக் குறைவாகவும் பெற்று, இத்தளத்தை முன்னடத்திச் செல்வார்கள் என விழைகிறேன்.

On a lighter note, நான் ப்ராம்பிள்டன் பள்ளி உணவகத்தில் உங்களிடம் கூறியது போல், அருண்மொழி உரையாடுவதற்கு மிக அணுக்கமானவராக இருக்கிறார் :). அன்று நீங்கள் pre-occupied ஆக இருந்ததாகத் தோன்றியது (விழா விருந்தினர் பிரச்சனை பற்றி அன்று மாலை தான் அறிந்தேன்; அது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என் பின்னர் நினைத்தேன்). அருண்மொழியின் கண்களும் (எப்பொழுதுமே ஒரு சிறு வியப்பு ஒட்டியிருக்கும் விழிகள்), உங்கள் நடையும் (side profile-ல் பார்க்கும்போது பக்கா தென் கேரள நாயர் நடை :) நேர்ச்சந்திப்பில் மட்டுமே கிடைக்கும் பரிசுகள்.

என் ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி. மீண்டும் சந்திக்கும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். அருண்மொழி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

நன்றி!

வினோத் ஜெகன்னாதன்

அன்புள்ள வினோத்

அன்று கவலையுடன் இல்லை. ஆனால் ஓர் உணர்ச்சிகர மனநிலையில் இருந்தேன்.

தமிழின் பெரும்பேராசிரியர்கள் பலர் அமெரிக்கப் பல்கலைகளில் பணியாற்றியதுண்டு. ஆய்வுகள் செய்ததுண்டு. அவ்வப்போது எழுத்தாளர்களும் இங்கே பல்கலைகளுக்கு வருவதுண்டு.

எவரும் புதுமைப்பித்தன் பெயரை, க.நா.சு பெயரை, சி.சு.செல்லப்பா பெயரைச் சொல்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்களை ‘கலாச்சாரச் செயல்பாடே இல்லாத ஓர் இருண்ட சூழலில் இருந்து தன் தனித்திறனால் எழுந்துவந்த ஒளிவிளக்கு’ என்ற அளவிலேயே முன்வைப்பார்கள்.

இந்த வாஷிங்டன் மேடையில் தூரனை, வையாபுரிப்பிள்ளையை, க.நா.சுவை என் இலக்கிய முன்னோடிகளை பற்றிச் சொல்லவேண்டும் என்றே வந்தேன். அதை சொன்னது என் வாழ்வின் தருணம். இனி அத்தனை இலக்கிய உரையாடல்களிலும் அவர்கள் பேசப்படச்செய்ய தமிழ் விக்கியால் முடியும்.

அன்று மேடையில், என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக, சொற்பொழிவின்போது உணர்ச்சிவசப்பட்டேன். பேச்சை முழுமையாக நிகழ்த்தவில்லை. எனக்கு விருதுகள், பாராட்டுக்கள் வரும் மேடைகளில் எல்லாம் எந்த நெகிழ்வையும் நான் அடைந்ததில்லை. பிராம்பிள்டன் மேடையில் அந்த நிலையழிவு என் வாழ்வின் உச்சங்களில் ஒன்று

ஜெ

***

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -பங்கேற்பு
அடுத்த கட்டுரைதமிழ்வாணன்