மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு,
நீங்கள் எப்பொழுதோ சொன்ன வாசகம் ஒன்று நினைவிற்கு வந்தது – உங்கள் குடும்பம், நட்பு வட்டாரத்தில் நீங்கள்தான் பள்ளி கல்வி அளவில் அதிக பட்டங்களை பெறாதவர் என்று, அதை நீங்கள் ஒரு வேடிக்கையாக சொன்னாலும், உங்களின் எழுத்துக்களை வாசிக்காதவர் கேட்டால் உடனே அதை ஒரு அடிப்படையாக கொண்டு சந்தோஷப்பட்டு, நல்ல வேலையாக அவர்கள் எல்லாம் நிறைய பட்டங்கள் பெற்றதால்தான் இன்று ‘உருப்பட்டு’, உத்தியோகம், சம்பளம் என்று “செட்டில்” ஆகி இருப்பதாக நினைப்பார்கள்.
இயற்கையை அறிதல் வாசித்துக்கொண்டிருக்கிறேன், இப்பொழுது தோன்றுகிறது அதிக நேரம் நீங்கள் கல்விக்கூடங்களில் கழிக்காதனால்தான் மகத்தான படைப்புக்களை தமிழுக்கு கொடுக்க முடிகிறதோ என்னவோ என்று!
ஆங்கிலம் வழி கல்வி பயின்ற என்னைப்போன்றோர் நிச்சயம் தமிழில் வாசிக்கவேண்டிய ஒரு நூல் “இயற்கையை அறிதல்”. அதுவும் எமர்சனின் ஆங்கில கட்டுரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். இவ்வாண்டு புத்தக திருவிழாவில் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்த உடனேயே இது வேறு வகையான புத்தகம் வேறு வகையான எழுத்து என்று புரிந்துகொண்டேன், எனவே எமர்சன் பற்றிய தளம் ஒன்றில் https://emersoncentral.com/texts/nature-addresses-lectures/nature2/ அவரது கட்டுரைகளை தரவிறக்கம் செய்து, ஆங்கில கட்டுரைகளையும் தமிழையும் ஒருசேர வாசித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் – ஆங்கிலத்தில் எமர்சன் அவர்களின் சொற்றொடரை புரிந்துகொள்ளவே மிக சிரமமாக இருந்தது (அவரின் சிந்தனையின் ஆழத்தாலும் , என் போதாமையாலும்) ஓர் அளவுக்கு அவர் சொல்லியிருந்த வார்த்தை புலப்பட்டாலும் அர்த்தம் விளங்கவே இல்லை. உங்களின் மொழிபெயர்ப்பை படித்தவுடன் மீண்டும் ஆங்கில கட்டுரையை வாசித்தேன், அப்படித்தான் இந்த நூலையே அணுகி தொடர்ந்து வாசிக்க முடிந்தது, ஒரு முறை வாசிப்பு முடிந்தும் இப்புத்தகத்தின் மூல கருத்தையும், சாரத்தையும் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. மறுவாசிப்பில் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
இன்றுள்ள வாழ்க்கை சூழலில் (comtemprary life) நாம் அனைவரும் இயற்கையை பௌதிகமாகவும் (physical), சூழியலாகவும் (environment), சக்தி/ஆற்றல் /வளம் (resource) ஆகவும் அணுகி நம்முடைய இருப்பு, தேவை, பயன்பாடு சார்ந்து மட்டும் நோக்கி, காற்று மாசு, glacier depletion, பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றால் இயற்கை அழிந்து கொண்டிருக்கிறது என சுய-நல, சுய-லாப நோக்கத்துடன் அக்கறை கொண்டுள்ள வேளையில் – இயற்கையை ஒரு ஆன்மாவாக அணுகும் எமர்சன் அவர்களின் சிந்தனை முற்றிலும் வேறானது! “ஆத்மா” வை நான் “soul” என தெரிந்து வைத்திருந்தேன், ஆனால் உங்களின் எழுத்து வழியாக “spirit” என அணுகினால் வேறு பொருள் தருகிறது. இந்த 8 கட்டுரைகளின் ஒருமை புரிந்தால்தான் இப்புத்தகத்தை வாசிக்கவே இயலும் எனும்போது, மொழிபெயர்ப்பு எவ்வளவு சிரத்தையான செயல் என்பதை உங்களின் உழைப்பை பார்த்து தான் உணர்ந்துகொண்டேன். அற்புதமான கட்டுரைகள், அதுவும் கட்டுரைகளின் சாரம் மாறாமல் அப்படியே, ஆனால் புரிந்து கொள்ளும் நடையில்.
- ஒரு மனிதன் சமூகத்தால் உணவூட்டப்படுவது உணவு இருப்பதனால்அல்ல, அவனால்உழைக்க முடியும் என்பதனாலேயே.
- அழகின் பொதுவான அம்சம் இயற்கையின் வடிவங்களின்ஒட்டுமொத்தத்தில்தான்உள்ளது. அதுவே இயற்கையின் முழுமை என்பது. தனியாக இருக்கும்போது மட்டும் அழகாக இருக்ககூடிய எதுவும் இல்லை. மொத்தமாக இருக்கும்போது மட்டும் அழகாக இருக்கும் ஒன்றும் எங்கும் இல்லை. ஒரு தனித்த பொருள் பிரம்மாண்டத்தின் எழிலைக் குறிப்புணர்த்தும்போது மட்டும்தான் அழகாக இருக்கிறது.
- கலை என்பது என்ன? மனிதன் எனும் வடிகட்டியின் வழியாக இயற்கை ஊடுருவிச்செல்வதுதான்அது. கலை என்பது உண்மையில் இயற்கையின் முதல் சிருஷ்டிகளின்அழகால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனின் மனம் வழியாக இயற்கை மீண்டும் செயல்படும் விதம்தான்.
நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது தான் தமிழ் விக்கி அறிவிப்பு, தேவைகள், மற்ற கடிதங்களையும் தளத்தில் வாசித்தேன். இந்நூலின் ‘கட்டுப்பாடு’ கட்டுரையில் ஒரு வரி – ஞானி ஒரு விஷயத்தை செய்யும்போது அனைத்தையும் செய்து விடுகிறான். அல்லது சரியாகச் செய்யும் ஒரு செயலில் சரியாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் காட்டிவிகிறான். என்னை பொறுத்தவரை தமிழ் விக்கி அத்தகைய ஒரு முன்னெடுப்பு. தமிழில் எழுதப்படும் நிகழ் வரலாறு. நன்றி கலந்த மகிழ்ச்சி ஜெ!
பின்குறிப்பு: ஒரு அன்புகலந்த வேண்டுகோள், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ஜெ சார், தயவுசெய்து, வேகமான வாசிப்பு –கடிதம் (https://www.jeyamohan.in/164998/) கூறியிருந்தது போல் கூடியசீக்கிரம் இவ்வாண்டிருதிக்குள் ஒரு வாசிப்பு பயிற்சி முகாம் நடத்த முயற்சி செய்யுங்கள். உங்களின் எழுத்து மற்றும் செயல் வேகத்திற்கு வர முடியாவிட்டாலும், உங்களை பின்தொடர வாவது எதையாவது வாசிக்க வேண்டும், அதற்கு எங்களுக்கு வாசிப்பு கருவிகள் அவசியம். Please consider my plea sir.
அன்புடன்,
விவேக்