தமிழ் விக்கி, தேவையும் இடமும்

தமிழ் விக்கி இணையம்

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கியின் தொடக்க விழா நிறைவாக நடந்து முடிந்ததை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

மே முதல் வாரம் முழுவதும் மொழியாக்கங்களை சீரமைக்கும் பணியில் இருந்தேன். வேறு செய்திகள் அதிகம் பார்க்கவில்லை. ஆகவே விழாவுக்கு வருவதாக சொல்லியிருந்த பிரமுகர்கள் அனைவரும் இறுதிக்கணத்தில் பின்வாங்கிய செய்தியை மே 6-ஆம் தேதி தான் அறிந்தேன். திகைப்பாக, சற்று ஏமாற்றமாக இருந்தது. பிறகு இன்றைய கல்வித்துறையினர் பலரை ‘இண்டல்லெக்சுவல்’ என்ற அந்த பழம்பெரும் வார்த்தையால் அழைக்க முடியாதோ என்று தோன்றியது. அரசியல் சரிகள் பார்த்து, அநேக ஜாக்கிரதைகள் பார்த்து, அலுங்காமல் நலுங்காமல் பதவிசாக இயங்கினால் தான் அவர்களுக்கு பதவிகளை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. பொதுகருத்திலிருந்து கொஞ்சம் விலகினாலும் டென்யூர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். அந்த பாடு அவர்களுக்கு. சரி, போகட்டும்.

விழாவுக்கு புதிதாக அழைக்கப்பட்ட விருந்தாளிகள் பட்டியலை கண்டபோது மிகுந்த உற்சாகமடைந்தேன். குறிப்பாக தாமஸ் புரூய்க்ஸ்மாவின் பெயரை கண்டபோது. அவருடைய குறள் மொழியாக்கத்தை சமீபத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாசிக்க வாசிக்க நம் தலைமுறையின் தலைச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. அத்தனை படைப்பூக்கம் கொண்ட மொழியாக்கம்.

பழந்தமிழை மொழியாக்கம் செய்கையில் பல சமயம் மொழியாக்கம் அந்த பழந்தமிழ்க் கவிதையின் மாற்று மொழி ஆவணமாக மட்டுமே நின்றுவிடுகிறது. தன்னளவில் கவிதையென்று நிகழ்வதில்லை. ஆனால் தாமஸ் புரூய்க்ஸ்மா கவிஞரின் சொல்வீச்சுடன் மொழியாக்கம் செய்கிறார். ஆங்கிலத்தில் வாசிக்கையிலேயே இன்று பூத்த மலர் போல் உள்ளது ஒவ்வொரு கவிதையும். அந்த மலர்ச்சியிலிருந்து பின்சென்று அந்தக்குறளை தமிழில் வாசிக்கையில் குறள் மேலும் புத்தொளி கொள்கிறது.

அவர் நூலிலிருந்து சில குறள் மொழியாக்கங்கள் –

The wicked are like gods – they

too

Do as they please

~

Like sun on a body writhing without bones

Virtue scorches the loveless

~

The fire of rage that kills all it touches

burns

the raft of one’s teachers

~

You tell your pain to him who won’t

hear –

Dear heart – close up the sea

குறள்களை நவீனக்கவிதைகள் போல மொழிபெயர்த்திருக்கிறார். நிகழ்காலத்தன்மையும் நித்தியத்தன்மையும் ஒன்று சேர அவர் வரிகளில் காணக்கிடைக்கிறது. A classic is always contemporary என்று ஒரு வார்த்தை உண்டு, அந்த உணர்வை கொண்டுவருகிறார். நவீன வாசகரிடம் வேற்று மொழி செவ்வியல் படைப்பை எளிதில் கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி என்று தோன்றுகிறது. தாமஸ் புரூய்க்ஸ்மாவின் படைப்பூக்கத்தை காண்கையில் தமிழ் விக்கியின் அடிப்படையான உந்துசக்திக்கு மிக நெருக்கமான ஆளுமை என்று தோன்றியது. அந்த வகையில் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்றதில் மிகுந்த நிறைவு, மகிழ்ச்சி.

*

தமிழ் விக்கியை பற்றிய சர்ச்சைகளை கொஞ்சம் வாசித்தேன். இந்த சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் யாரும் உரையாடும் மனநிலையில் இருக்கிரார்களா, தெரியவில்லை. இந்தப்பணியில் சற்றேனும் பங்கெடுப்பவள் என்ற முறையில் ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இது மிகவும் இன்பமான பணி. ஐந்தாம் வகுப்பில் என் பள்ளி நூலகத்தில் கண்ணாடிக்கூடுக்குள் வைக்கப்பட்டிருந்த என்சைக்ளொபீடியா பிரிட்டானிக்கா தான் என் உலகம். அந்த கெட்டி அட்டை புத்தகங்களை ஒவ்வொரு முறை வெளியே எடுக்கையிலும் உண்டாகும் பரபரப்பை இப்போது நினைவு கூறுகிறேன். அதே இன்பம். தமிழ்நாட்டில் இயங்கிய பேராளுமைகளின் வாழ்க்கை மொத்தமும் ஒவ்வொன்றும் ஒரு துளியென சுருக்கிக் கிடைக்கிறது. இயக்கங்கள், லட்சியங்கள், வரலாறுகளின் பின்னல்கள்… இன்று தமிழ்க் கலாச்சாரம் என்று சொல்கிறோமே, அதன் ஊற்றுகளை நோக்கி பயணிக்கும் ஒரு யாத்திரை இது.

ஆங்கில எழுத்துலகில், மற்ற மொழிச்சூழல்களில், தமிழில் ஓர் அறிவியக்கம் உள்ளது என்று சொன்னாலே நிஜமாவா என்று சந்தேகத்துடன் பார்க்கப்படுவது நான் சொல்லி தெரியவேண்டிய சங்கதி இல்லை. இன்று சற்று பரவாயில்லை. தமிழில் உருவான முற்போக்கு அரசியல் கொள்கைகள் சிலவற்றை பற்றிய பேச்சுகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் முழுமையான ஆவணமாக்கல் என்று ஒன்று இல்லை. ஓர் உதாரணம் சொல்கிறேன். கடந்த இரண்டு நாளில் சும்மா தேடி பார்த்தது. தமிழ் விக்கிபீடியாவில் ‘ஸ்டாலின் ராஜாங்கம்’ என்று அடித்துப் பாருங்கள். இன்று தமிழ் அறிவுப்புலத்தில் உள்ள மிக முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். அவரைப்பற்றி தமிழ் விக்கிபீடியாவில் இருப்பதோ மிக சொற்பமான செய்தி. மேலே கேள்வியாக ஒரு குறிப்பு. இந்த கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா’ 

இதை வாசிக்கும் நண்பர்களுடம் சொல்லிக்கொள்வது இதுதான் – அன்பு நண்பர்களே, இதனால் தான் தமிழ் விக்கி போன்ற ஒன்று தேவையாகிறது. ஒரு முக்கியமான சிந்தனையாளர் பெயரில் உள்ள கட்டுரைக்கு மேல் ‘இந்த கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா’ என்று இடம்பெருவது ஓர் அவலம் அல்லவா? ஆம், இதற்கு தனிப்பட்ட மனிதர் ஒருவர் பொறுப்பல்ல. ஆனால் பாடம் அங்கு தான். ‘விஷன்’ இல்லாத கூட்டுச்செயல்பாடு என்பது பல சமயங்களில் குருட்டுச்செயல்பாடாகவே முடிகிறது. ஒட்டுமொத்தப் பார்வை அவசியம்.

இன்னொன்று – ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு ஆங்கில விக்கி பக்கம் கிடையாது. Banglapedia, Sahapedia போன்ற களஞ்சியங்கள் இன்று இங்கே ஆங்கிலத்தில் வெவ்வேறு அறிவுப்புலங்களை ஆவணப்படுத்த உருவாகியிருக்கிறது. அவை ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதுபோலவே தமிழ் அறிவுப்புலம் மொத்தமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது மொத்தமும் ஆங்கிலத்திலும் வாசிக்கக் கிடைக்க வேண்டும். இதுதான் தமிழ் விக்கியின் குறிக்கொள்கள்.

நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் விக்கியின் தொடக்க விழாவில் தாமஸ் புரூய்க்ஸ்மாவின் வருகையை ஒரு நன்நிமித்தமாகவே பார்க்கிறேன். தரமான இலக்கிய மொழியாக்கங்கள் ஒரு புறம் ஒரு மொழியை அதன் கலாசாரத்தை தொடர்ந்து பொது உரையாடலில் நிலைநிறுத்தும், ஐயமில்லை. அதற்கு இணையாகவே அந்த அறிவுப்புலத்தை பற்றி பேச்சு ஆங்கிலத்தில் எழுவதும் அவசியம். தமிழின் முக்கிய ஆளுமைகள், நூல்கள், கருத்துகள் அனைத்துமே ஆங்கிலத்திலும் கிடைக்க வழி செய்ய வேண்டும். தமிழ் விக்கி முன்னெடுப்பின் முக்கிய பங்காக இது அமையும்.

இன்று நம்மிடையே அறிவுச்செயல்பாடுகளில் நாட்டம் கொண்டவர்களில் நல்ல ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்களும் தமிழிலும் அதே ஆழத்துக்கு வாசிப்பு கொண்டவர்களும் மிகச்சிலரே. தமிழுக்காக அவர்கள் கண்டிப்பாக இந்தப்பணியில் பங்கெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கட்டுரைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும். மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளை சரி பார்த்து உள்ளடக்கத்தையும் மொழியையும் சீரமைக்க வேண்டும். இரண்டாம் பணிக்கு குறிப்பாக தற்கால ஆங்கில மொழியில் சரளமாக எழுதக்கூடியவர்கள் தேவை. அதற்கு நண்பர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழில் இயங்குபவர்கள் நல்ல ஆங்கிலம் எழுதக்கூடிய நண்பர்களுடன் (அவர் தமிழ் தெரியாதவராகக்கூட இருக்கலாம்) இணைந்து ஓர் இனையாகவோ குழுவாகவோ கூட மொழிபெயர்க்கலாம். தமிழை ஒருவர் விளக்க மற்றவர் அதை ஆங்கிலத்தில் எழுதினாலும் நல்ல மொழியாக்கங்கள் சாத்தியம் ஆகிறது.

தமிழ் விக்கிக்கு அழகியல் நோக்கு உண்டு. அரசியல் நோக்கங்கள் கிடையாது. பொது சூழலில் உள்ள கருத்துகளை தொகுத்து ஆவணப்படுத்துவதே இதன் நோக்கம். தமிழ் பண்பாடு மற்றும் அறிவுப்புலம் பற்றிய முழுமையான வரைபடத்தை உலகு முன் வைக்க வேண்டும். இதுவரை நடக்கவில்லை, போகட்டும். இனியும் தாமதிக்க வேண்டாம்.

தாமஸ் புருய்க்ஸ்மாவின் ஒரு குறள் மொழியாக்கத்தோடு எங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

When possible it is good to act

when not

Seek possibility and act

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

அன்புடன்,

சுசித்ரா

முந்தைய கட்டுரைஉரைத்தல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறியப்படாத ஆழம்