சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம்

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப் பற்றி வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் தமிழ்ச்சூழல் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதன் உண்மைப்பக்கத்தைக் காட்டுகின்றன. முகநூலில் ஊறிக்கிடப்பவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்பையே மொத்த தமிழகமும் கொண்டிருக்கிறது என நினைப்பார்கள். அவர்கள் சொல்வதே அவர்களுக்குத் திரும்ப வரும் அமைப்பு அது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இசை எழுதியதுதான். ஜெயமோகனைப் பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் “எனக்கு உங்களை அறவே பிடிக்காது. ஆனால் ரொம்பப் பிடிக்கும்” என்று தனிமடல் வரைவதாக அறிய நேர்கையில் பிடிக்காத  ஒன்று பிடிக்காமலேயே  போய்விடுவது ஒரு வரம் என்பது நமக்கு விளங்கிவிடுகிறது மிகச்சரியான விளக்கம்.

***

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப்பற்றி ஆய்வு நோக்கிலும் உணர்ச்சிகரமாகவும் ஏராளமான பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உயர்வானவை. இத்தனை அணுகுமுறைகளில் உங்களை தமிழ்ச்சமூகம் ஆராய்கிறது, இவ்வளவு நேசிக்கிறது என்பதே ஆச்சரியமானதுதான்

இரண்டு கட்டுரைகள் என் கண்களை கலங்கச் செய்தன. ஒன்று யுவன் சந்திரசேகர் எழுதியது. இன்னொன்று சாம்ராஜ் எழுதியது. யுவன் சந்திரசேகர் உங்கள் நீண்டநாள் நண்பர். அவர் என் வாழ்க்கையின் ஒவ்வொரு துக்கத்திலும் உடனிருந்திருக்கிறான் என்று உங்களைப் பற்றிச் சொல்வது ஒரு பக்கம். ஆனால் மிக இளையவரான சாம்ராஜ் அவருடன் நீங்கள் அன்பு ஒன்றால் உடனிருந்த தருணத்தை எழுதியதை வாசித்தபோது விம்மிவிட்டேன்.

உடனிருப்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னொருவருடன் உடனிருக்க மனம் விரிந்திருக்கவேண்டும். அவ்வளவு அன்பு வேண்டும். கறாரான விமர்சகனும் கட்டற்ற எழுத்தாளனுமான உங்களுக்குள் இருக்கும் அந்த கனிந்த மனிதன் என் பிரியத்துக்குரியவன்.

பாஸ்கர்

***

முந்தைய கட்டுரைக.நா.சு- ஆலமரத்து வேர்
அடுத்த கட்டுரைPrrasantu