எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அறுபது வயதை நிறைவுசெய்யும் பொருட்டு, அவருடைய வாழ்வுக்கு நாங்கள் அளிக்கும் சிறுமரியாதையாக, அவருடைய ‘எழுதுக’ எனும் நூலை 500 இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தை அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில் இதுவரையில் எழுநூறுக்கும் அதிகமான முகவரிகள் பதிவாகியுள்ளன. ஆகவே, கடந்த ஒருவார காலமாக ‘எழுதுக’ புத்தகத்தை முகவரி பதிந்த இளையவர்களுக்கு அனுப்பி வருகிறோம். சில ஆண்டுகள் முன்பு, இதேபோலொரு முன்னெடுப்பின் வழியாக தன்மீட்சி நூலும் விலையில்லா பிரதிகளாக அனுப்பப்பட்டதும் இக்கணம் நினைவெழுகிறது.
‘எழுதுக’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட இளையவர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியாகவும் கடிதங்கள் வழியாகவும் அனுப்பிவருகிறார்கள். எழுதத் துவங்கும் இளையோர்களுக்கு இயல்பாக அகத்திலெழும் பல்வேறு முதற்கட்ட தயக்கங்களை வென்றுகடப்பதற்கான கட்டுரைகளை இந்நூல் கொண்டிருக்கிறது. சமகால வாசிப்புமனங்களில் நிச்சயம் இந்நூல் உரிய தாக்கத்தை உண்டாக்கும். கூடிய விரைவில் முன்பதிந்த முதல் ஐநூறு நண்பர்களுக்கும் புத்தகப்பிரதிகளை அனுப்பிவிடுவோம். இந்த நல்முயற்சியானது தன்னறம் வழியாக நிகழ்ந்ததில் மகிழ்வும் நிறைவும் அடைகிறோம்.
தன்னறம்
www.thannaram.in / 9843870059