தமிழ் நவீன இலக்கியவாதிகளில் உறுதியான தனித்தமிழ் ஆதரவாளன் என தொடக்கம் முதலே நிலைகொண்டவன் தான். நவீன எழுத்தாளர்களில் தனித்தமிழில் புனைவுகளை எழுதியவன் நான் மட்டுமே. சொல்லப்போனால் சென்ற அரைநூற்றாண்டில் மிக அதிகமாக தனித்தமிழில் எழுதப்பட்ட பக்கங்கள் நான் எழுதியவை. கொற்றவை மற்றும் வெண்முரசு. என் கட்டுரைகளிலும் தனித்தமிழியக்கத்தின் செல்வாக்கு உண்டு
அவ்வகையில் நான் தேவநேயப் பாவாணர் மேல் பெருமதிப்பு கொண்டவன். அவரை எப்போதும் மேடைகளில் முன்வைப்பவன் – முப்பதாண்டுகளாக. 1992ல் சுந்தர ராமசாமி பேசிய மேடையில் ஒருவர் தனித்தமிழ் பற்றி சற்று கேலியாகப் பேசியபின் நான் பாவாணர் பற்றி பேசியதை நினைவுகூர்கிறேன்.
தனித்தமிழில் எழுதிய, பாவாணரின் தீவிர ஆதரவாளரான, குமரிமைந்தன் என் நண்பர். அவருடைய எழுத்துக்களை வெளிக்கொண்டுவர பெரிதும் உழைத்தேன். சொல்புதிதில் தனித்தமிழில் எழுதப்பட்ட அவருடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. ஒரு மொழியின் உள்ளுறை உண்மை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் வழியாகவே வெளிவர இயலும் என்பது என் எண்ணம்.
பாவாணரியர் எனத்தக்கவர்களின் தமிழ்த்தேசிய பிரிவினை நோக்கு, மொழிசார் அடிப்படை வாதம் ஆகியவற்றில் உடன்பாடில்லாதவன். ஆனால் அவற்றை எழுதிய குமரிமைந்தனின் கட்டுரைகளை பிரசுரித்தேன். ஏனென்றால் அவை பண்பாட்டின் உள்ளூறி எழுபவை. தனித்தமிழில் நான் கொற்றவை எழுதுவேன், ஆனால் செய்திகளும் அன்றாடமொழியும் கொற்றவையின் கொடுந்தமிழில் அமையவேண்டும் என்று சொல்ல மாட்டேன். இதுதான் என் நிலைபாடு.
பாவாணர் ஆய்வாளருக்குரிய நிலைபேறு, தன்னடக்கம், முறைமையை மட்டுமே சார்ந்து காய்தல் உவத்தல் இன்றிச் செயல்படும் தன்மை ஆகியவை கொண்டவர் அல்ல. அவருடையது பெரும் பக்தர்களின் வெறி. தமிழ் அவருடைய தெய்வம். அது ஆய்வாளாரின் உளநிலையே அல்ல. ஆனால் அத்தகைய பெரும் பற்றில் இருந்தே மாபெரும் அடித்தளங்கள் அமைகின்றன.
புனித பீட்டரை கத்தோலிக்கத் திருச்சபையின் அடித்தளம் அமைந்திருக்கும் பாறை என்பார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பாவாணர் நம் மொழி ஊன்றி அமைந்திருக்கும் பாறை என திகழ்வார்.
பாவாணர் பற்றிய இந்த பதிவு இப்போதுகூட நிறைவுறவில்லை. இது இருமடங்கு பெருகியாகவேண்டும்.