தமிழ் விக்கியில் வண்ணதாசன்- கடிதம்

தமிழ் விக்கி இணையம்

மாலைப்பொழுது வணக்கம்…

தமிழ்.விக்கி.துவக்க கனவு ஈடேறியது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியும் மனம் நிறைந்த, மணம் நிறைந்த வாழ்த்துக்களும் தொடர்ந்து சிறப்பாக வலம் வர பிரார்த்தனைகளும்…

நிறைய ஆளுமைகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதே.. தொடர்ந்து ஏற்றம் செய்யப்படுகிறதா சார். குறிப்பாக வண்ணதாசன் அவர்களைப்பற்றிய பதிவு இல்லாதது வருத்தமளிக்கிறது.

அன்புடன்

பார்த்திபன்.ம.

அன்புள்ள பார்த்திபன்

தமிழ் விக்கி பற்றிய உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

இக்கட்டுரைகள் கூடுமானவரை விரிவாக எழுதப்படுகின்றன என்பதை கண்டிருப்பீர்கள். பல கட்டுரைகள் அச்சில் பத்து பக்கம் வரை வருபவை. அவ்வாறு எழுதப்படும் வரை கட்டுரைகள் உடனே பொதுவாசிப்புக்கு வருவதில்லை. மூன்றுகட்ட பரிசீலனைக்கு பின்னர் தான் கட்டுரைகள் வாசிப்புக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த வெளியீட்டுவிழா இவ்வாண்டு இறுதியில்தான் உத்தேசிக்கப்பட்டது. என் அமெரிக்க பயணத்தை ஒட்டி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் ஏறத்தாழ ஆயிரம் பதிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவை விரைவில் வெளிவரும்.

வண்ணதாசனை பொறுத்தவரை அவரை நேரில் சென்று சந்தித்து தகவல்களை முழுமை செய்யாமல் பதிவு முழுமையடைந்து எங்கள் ஆசிரியர் குழுவின் ஏற்பை பெறாது என்பதே இப்போதுள்ள நிலைமை. ஜூனில் அவரைச் சந்திக்கவேண்டும்.தி.க.சிவசங்கரன் வாழ்க்கை வரலாற்றை எழுதியதைப்போல நெல்லையில் எவரேனும் வண்ணதாசன் வாழ்க்கையை எழுதலாம்.

இந்த கலைக்களஞ்சியத்தில் ஒன்றைக் கண்டிருப்பீர்கள். இலக்கியக் கூட்டியக்கங்கள், அமைப்புகள் தனிக் கவனம் பெற்று பதிவுசெய்யப்பட்டுள்ளன. எஸ்.வையாபுரிப் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் ‘குழு’ மிக முக்கியமானது. வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்யன், கலாப்ரியா ஆகியோர் அடங்கிய குழு ஒரு இயக்கமாக செயல்பட்டு அழுத்தமான சாதனையை உருவாக்கியது. அவர்களை தனித்தனியாக பதிவுசெய்தபின் அக்குழுவின் பங்களிப்பு பற்றியும் ஒரு பதிவு தேவை

ஜெ

முந்தைய கட்டுரைகலைக்களஞ்சியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாண்டில்யன் -கனவுப்பட்டின் தறி