மரபின்மைந்தன் முத்தையா சந்திப்பு

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி 

“அவர் பேர் சுப்பிரமணி,  திருக்கடையூர் கோயில் பரம்பரை பூசகர் குடும்பத்தில பிறந்தவர், அவரும் அதே வேலை தான் செஞ்சிட்டிருந்தார், ஆனா கொஞ்ச காலமாவே நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி, சரியா தூக்கம் இல்லை, எப்பவும் கண்ணு சிவந்திருக்கும், ஏதாவது கேட்டா  சரியா பதில் சொல்லறதில்ல, எந்த பொண்ண பாத்தாலும் அபிராமினு சொல்லி கும்பிடுறது..”

மரபின் மைந்தன் முத்தையா சொல்லச் சொல்ல அங்கே இருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

“ஏதிலயும் கவனமில்லை, ஏதோ ஸ்ரீவித்யா உபாசனை பண்றதா சொல்லிக்கிறது,  கோயில்ல இருக்கிற மத்த பூசகர்களுக்கு இவரோட நடவடிக்கை ஒண்ணும் புடிக்கல, அப்ப பாத்து சரபோஜி ராஜா அந்த கோவிலுக்கு வரார்

ராஜா கோவிலுக்கு வருகை தர்றது பெரிய விஷயமில்லையா? எல்லாரும் ரொம்ப பணிவா அவரை வரவேற்கறாங்க, எதையும் கவனிக்காம எங்கேயோ பாத்துட்டு உட்கார்ந்திருந்திட்டிருந்த இவரை காமிச்சு ‘ஆளு சரியில்ல மகாராஜா,  நாங்கெல்லாம் சொல்லிப் பாத்துட்டோம், ஒண்ணும் சரிவரலை, நீங்கதான் கேக்கணும்’ னு சொல்றாங்க.

ராஜா விசாரிக்கணும்ல,  கூப்பிட்டு கேக்கறார் ‘இன்னைக்கு என்ன திதி?, சொல்லு பாக்கலாம்’

‘இன்னிக்கு பௌர்ணமி’ னு சொல்லறார் இவரு , அன்னிக்கு அமாவாசை நாள்.

‘அப்படியா? அப்ப இன்னிக்கு நிலவு வரும், இல்லையா?’ன்னு கேட்கிறார் ராஜா

‘ஆமாம் நிலவு வரும்’ன்னு சொல்றார் இவரு

இன்னைக்கு நிலவு வரலைனா உனக்கு மரண தண்டனைனு சொல்லிட்டு போயிடறார் ராஜா

அவரைப்பதி புகார் சொன்னவங்களுக்கே ஆய்யோடான்னு  ஆயிடுச்சு, ராஜா ஏதோ நாலுநாள் சஸ்பெண்ட் பண்ணுவாருன்னு நினைச்சிட்டிருந்தாங்க.

ஆனா இவர் எந்த கவலையும் இல்லாம இருக்கார், இப்படி சொல்லிட்டேயேன்னு கேட்டா ‘சொன்னது நானில்லை, அவள்’ங்கறார்”

“ராஜாகிட்ட தண்டனை வாங்கி சாவறதுக்கு பதிலா, இங்கேயே உயிரை விட்டுடலாம்னு முடிவு பண்ணிடறார்.

கோயிலுக்குள்ளேயே  விறகெல்லாம் கொண்டுவந்து ஒரு சிதை தயார் பண்ணி அது மேல நூறு கயிறு கட்டி பரண் மாதிரி ஒண்ணை தொங்க விடறாங்க, அது மேல உக்காந்து பாட ஆரம்பிக்கிறார் சுப்பிரமணி, ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் ஒரு கயிறு அறுக்கணும்னு ஏற்ப்பாடு”

என்னால் அதற்குமேல் திரு.முத்தையா சொன்னவைகளை தொடர முடியவில்லை, மனம் அந்தத் தீவிரத்  தருணத்தில் சிக்கிக்கொண்டது,  கீழே தனக்கான சிதைத்தீ எரிய, விழாமல்  தாங்கும் கயிறுகள் ஒவ்வொன்றாக அறுபட, இலக்கண சுத்தமாக, சந்தம் திகழ அபிராமி அந்தாதி படைப்பு சுப்பிரமணி என்கிற உபாசகன் வழியே நிகழ்ந்த தருணம்.

நிலவு வந்தாலென்ன வராவிட்டால் தான் என்ன, அன்று வரவில்லை என்றால் வர வேண்டிய நாளில் வந்து விட்டுப் போகிறது, அனால் இந்த அற்புதம் எல்லா பவுர்ணமிக்கும் நிகழுமா? ஆன்மீகத்தை விட்டுவிடுவோம், வாழ்வில் கடைசி தருணத்தில் செயல்பட்ட அதி தீவிர தற்கொலை படைப்பு மனநிலை எத்தனை கோடி உயிர்களில் ஒன்றுக்கு நிகழும், அப்படிப்பட்ட படைப்பு மனநிலைக்காக தவமிருக்கும் கலைஞர்கள் தான் எத்தனை பேர்.

ஏதோ ஒரு உரையாடலின் நடுவே படைப்பு மனநிலை என்பதே தீவிரம் தானே என்றார் திரு.முத்தையா, அது உண்மை தான் என்று சொல்லிக்கொண்டேன், அவர் பெரும்பாலும்  ஒரு கவிதை படைக்கும் மனநிலையிலேயே இருக்கிறார், உள்ளம் மரபுக்கவிதை வரிகளை தருணங்களுக்கற்றபடி  எடுத்து சுற்றி இருப்பவர்களுக்காக அளித்துக் கொண்டே இருக்கிறது, எனக்கு கிடைத்த வரிகள் அனைத்துமே நான் முதல் முதலாக கேட்பவை அனால் ஏதோ ஒரு பிறவியில் கேட்டது போன்ற பரிச்சய உணர்வை உண்டாக்குபவை.

மரபின் மைந்தன் முத்தையா அவர்களிடம் விடைபெற்று வீடுதிரும்பும் போதுஇந்தத்தளம்(www.jeyamohan.in)  “உலகெங்கும் உள்ள தமிழ் மனங்களை இணைக்கிறது” என்று நினைத்துக்கொண்டேன். அப்படி சொல்வது ஒரு சோர்வூட்டும் தேய்வழக்கு தான, அனால் தேய்வழக்குகள் மறையாமலிருப்பதற்கு காரணம் அவற்றால் சுட்டப்படும் விஷயம் நேரடியாக  நிகழும்போது அவை தானாகவே மேலெழுந்து வருவது.

அவருடய பயண விவரங்கள் தளத்தில் வந்தவுடனே உள்ளம் ஒருகணம் மகிழ்ந்தது.  அவரை ஒரு நவீன இலக்கிய ஆளுமையாக, வெண்முரசு பற்றி மரபிலக்கிய பார்வையிலிருந்து முக்கியமான கட்டுரைகள் எழுதியவராக தெரியும், அவர் மொழியில் ஈஷா பதிப்பக புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.  அங்கே ஆங்கிலத்தில் நிகழும் உரைகளை அவர் ஒரு மாற்று குறையாமல் நேரலையில் மொழிபெயர்க்கும் அற்புதத்தை கண்டிருக்கிறேன். மயக்கும் மொழியாளுமை கொண்டவர் என்பது என் மனப்பதிவு.

சென்ற டிசம்பரில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழா தான் நான் முதல்முதலாக கலந்துகொண்ட இலக்கிய விழா, அங்கே நான் கண்டுகொண்ட உண்மை ஒன்றுண்டு, ஒரு படைப்பாளியின் ஆளுமையின் சிறு பகுதி மட்டுமே அச்சேறுகிறது, எழுதாத போதும் அவர்களின் படைப்பு மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, ஆகவே அவர்களின் அருகாமை ஒரு களியாட்ட மனநிலையை உருவாக்குகிறது.

திரு முத்தையா வழியாக அந்த களிப்பின் ஒரு துளி இங்கே சியாட்டல் நகரிலும் நிகழ வேண்டும் என நினைத்துக் கொண்டேன், பெரும்பாலான வாசகர்களை போலவே நானும் ஒரு தனிமை விரும்பி, இதுவரை எந்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்ததில்லை, ஆனால் என் நகருக்கு வரும் ஒரு இலக்கிய ஆளுமையை அந்த நகரின் வாசகர்கள் சந்திக்க முடியாமல் போவது ஒரு பெரும் வீணடிப்பு என்று ஏனோ தோன்றியது,  ஆகவே முத்தையா அவர்களிடம் அனுமதி கேட்டு அதற்கான வேலைகளை துவங்கினேன்.

சியாட்டல் நகரில் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அனால் வாசகர் குழுமமோ சந்திப்புகளோ நடைபெறுகின்றனவா என உறுதியாக தெரியாது,  அனால் கலந்துரையாடல் நிகழ்வை அறிவித்தவுடனேயே இங்கே வாசகர் வட்டத்தை ஒருங்கிணைக்கும் குருபிரசாத் என்ற நண்பர் தொடர்புகொண்டு பங்குகொள்ளும் ஆவலை பதிவுசெய்தார்,  மேலும் பலரும்  விருப்பத்தை பதிவு செய்து கொண்டனர்.

நிகழ்வுக்கான அழைப்பில் அவரை அறிமுகப்படுத்துவதற்கான சரியான வரிகளை தளத்திலிருந்தே எடுத்துக்கொண்டேன்

“மரபிலக்கியங்களை வாசிப்பதில் நமக்கு இருக்கும் தடை இலக்கணம் அல்ல  நல்ல ஆசிரியர்கள் இல்லாதது தான். பேரிலக்கியங்கள் நின்றிருக்கும் உணர்வு வெளிக்கு நாமறிந்த இன்றைய அனுபவங்கள் வழியாக நம்மை அழைத்துச் செல்லும் ஆசிரியராக திரு முத்தையா அவர்கள் டி.கெ.சி செய்துவந்த பணியை செய்கிறார் என எழுத்தாளர் ஜெயமோகன் சொல்கிறார்..”

நாள் குறித்து இங்கே சமுதாயக்கூடத்தில் ஒரு பகுதியை முன்பதிவு செய்துகொண்டேன்,கணேஷ் என்கிற நண்பர் இல்லத்தில் அவர் தங்குவதாக திட்டம், அவரும் அவர் மனைவியும் ஈஷா அமைப்பில் பல வருடங்களாக செயலாற்றி வருபவர்கள், கணேஷ்  சிலம்ப வகுப்புகள் நடத்துகிறார், திரு முத்தையா ஒரு கட்டத்தில்  “நீங்களும் இவர் வகுப்புல சேந்து கம்பு சுத்த கத்துக்கோங்க” என்றார், நான் கேள்வியுடன் அவரை பார்த்தேன்  “ஜெயமோகன் நண்பர்னு சொல்லறீங்க, கண்டிப்பா  தேவைப்படும்” என்றார், நான் அந்த கூற்றில் இருந்த நியாத்தை ஒப்புக்கொண்டேன்,

பங்கேற்ப்பாளர்கள் மெல்ல மெல்ல பதிவு செய்துகொள்ளத் துவங்கினார்கள்,  அந்த நாளும் வந்தது. அவரை சந்தித்தவுடன் இயல்பாகவே இலக்கியம் பற்றிய உரையாடல் துவங்கியது, நான் நீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன், அதன் மொழியழகில் திளைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை, அனால்  மரபுக்கவிதைகளில் உளம் தோய்ந்த, அதற்க்கு நிகரான மொழியழகு கொண்ட கவிதைகளை எழுதும் அவர் நீலத்தை எப்படி அணுகுவார் என்று கேட்டேன், அவருக்கு அதன் மொழியழகல்ல அதன் சாரமான ராதாபாவம், பக்தி யோகம் அந்த நூலில் நிகழ்ந்ததே அவருக்கு முக்கியம் என்றார், அது அப்படித்தான் இருக்க முடியும் என்று தோன்றியது, என்னை போன்ற சாதாரண வாசகர்களுக்கு சிலசமயம் அதன் மொழியழகே கூட படைப்பின் பக்தி பாவத்தை உள்வாங்க தடையாக கூட இருக்கலாம். அவரால் அதை எளிதில் கடக்க முடிகிறது. மரபின் கொடை.

ஆனால் இலக்கியத்தில் மட்டுமல்ல சில உலகியல் விஷயங்களிலும் பிடிவாதமாக மரபானவற்றை விடாமல் இருக்கிறார், சியாட்டல் நகர தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது  “இங்கே பழைய மாதிரி ஷேவிங்  பிளேடு எங்கே கிடைக்கும்” என்றார், எனக்கு புரியவில்லை பழைய 7’o clock வகை பிளேடுகளை கண்ணால் பார்த்தே பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும், அதை மறந்து விடுங்கள் எங்கேயாவது இருந்தால் வாங்கி கொண்டுவருகிறேன் என்றேன், நாங்கள் நகரிலிருந்து அருகே உள்ள தீவுக்கு வாகனங்களையும் ஆட்களையும் ஏற்றிச்செல்லும் படகு நிறுத்தத்துக்கு நடையை தொடர்ந்தோம்.

மரபில் வேரூன்றி  இருந்தாலும் மற்ற மரபு வாதிகள் போல் அல்லாமல் அனைத்து தரப்புகளையும் பொருட்படுத்தி கேட்டுக்கொள்கிறார், கருநீலப் பாளம் போலிருந்த  நீரப்பரப்பை நுரையலை எழ கிழித்தபடி போய்க்கொண்டிருந்தது படகு, மேலே தாய்ப்பசுவின் நிறைந்த மடி போல மேகங்கள் நிலை கொண்டிருந்தன,  தீவின் அழகான கடற்கரை தென்பட துவங்கியது.

அவருடன் வந்திருந்த தொழில் நண்பர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள், அவர் “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு” என்ற வரியை உவகையுடன் பகிர்ந்துகொண்டார், நாம் ஒன்றும் செய்யத் தேவையற்ற, ஒன்றும் செய்ய முடியாத கவின் பெரு வனப்பு, இங்கே இந்த வனப்பில் களிப்பதை தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. அங்கிருந்து தொழில் மனநிலை அதனுடன் முரண்பட்டபடி உலகியலில் இருந்து விலகி நிற்கும் ஆன்மிக மனநிலை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார், நான் எதிர் தரப்பில் நின்று ரட்யார்ட் கிப்ளிங் எழுதிய Sons Of Martha என்ற கவிதையின் சாரத்தை சொன்னேன், அந்தக் கவிதை கனடாவில் ஒரு பல்கலை கழகத்தில் பொறியாளர் பட்டமளிக்கும் விழாவில் வாசிப்பதற்காக எழுதப்பட்டது, உலகை தன் கைகளால் உருவாக்க முனையும் செயல் மனநிலையை முன்வைக்கிறது. கவிதையை சொல்லி முடிக்கும் முன்னே அதை முழுக்க ஊகித்துக்கொண்டார், கருத்து சமநிலை நீடிக்க மறு தரப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் எடுத்து சொல்லிய வரி திருமுருகாற்றுப்படையில் வருகிறது, அதற்கும் பைன் மரங்கள் சூழ நிற்கும் இந்த அமெரிக்க நிலத்திற்கும் வெகுதொலைவு உண்டு,  அனால் மரபில் தோய்ந்த அவர் உள்ளம் அது போன்ற தொடர்பற்றவரிகளை தனிக்குறுங் கவிதைகளாக நேரடி வாழ்க்கை தருணங்களில்  நாள் முழுக்க வெளிப்படுத்திய படியே இருந்தது. இடைவெளி விட்டு  பெய்யும் சாரல் மழை போல என்று நினைத்துக்கொண்டேன். அருகே நிற்பவர் செய்ய வேண்டியதெல்லாம் குடையை மடக்கி வைத்துக்கொண்டு நனைய வேண்டியது தான்.

அனால் அன்று மாலை கலந்துரையாடல் நிகழ்வில் அவர் பேசத்துவங்கியதும் பெருமழை அடித்துப் பெய்தது, மரபிலக்கியத்துக்கான ரசனை இல்லாதவர்கள் என யாரும் இல்லை என்று முழங்கியபடி தன் பேச்சை துவங்கினார், நூல்களிலோ, உரையாடலிலோ அல்ல, சொற்பொழிவுகளில் தான் அவர் முழுமையாக நிகழ்கிறார், “சொற்பொழிவு” என்கிற தேய்வழக்கின் உண்மையான சுட்டுப்பொருளை அன்று மாலை கண்டுகொண்டேன்,

அங்கிருந்தவர்களில் பலரும் வாசிப்பின் பல நிலைகளில் இருப்பவர்கள், அனைவருக்கும் அந்த உரை பல திறப்புகளை அளித்ததை அறிய முடிந்தது. செறிவான கருத்துக்கள் வந்து விழுந்தபடியே இருந்தன. கருத்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும், எவ்வளவு தான் மறைத்தாலும் அயல் நிலத்தில் வாழும் தமிழ் மனங்களின் ஓரங்களில் நீருக்காக வான் நோக்கி நிற்கும் ஒரு  பாலைப் பகுதி உண்டு,  அன்று மாலை மரபின் பெருநதி முகிலாக வானேறி பெருமழையாய் பெய்து அந்த பாலைகளை நனைத்தது.

அவர் எழுதிய புத்தகங்கள் வெறும் நான்கே பிரதிகள் தான் கையிலிருந்தன, உரை  முடிந்ததும்  நண்பர்கள் விரைவாக புத்தகங்களை நோக்கி வந்தது மகிழ்ச்சி அளித்தது, விலை வைக்காவிட்டாலும் வற்புறுத்தி புத்தகத்தில் அச்சிடப்பட்ட விலையை அளித்தார்கள். அவரை தங்குமிடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, பழைய ரேசர் பிளேடுகள் வாங்க கிளம்பினேன், நான் முயன்ற முதல் அங்காடியிலேயே கிடைத்தது, புத்தகங்கள் விற்ற பணம் பிளேடுகள் வாங்க சரியாக இருந்தது. அந்த தற்செயலுக்கு பொருளேற்றம் எதுவும் செய்ய முயலாமல், பிளேடுகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றேன்.

ங்கர் பிரதாப்

தொடர்புடைய கட்டுரைகள் :

https://www.jeyamohan.in/110990/ – பெருநதியில் எஞ்சியது

https://www.jeyamohan.in/54448/ – அன்னை சூடிய மாலை

முந்தைய கட்டுரைஎழுதுக, இலவசப் பிரதிகள்.
அடுத்த கட்டுரைஹார்வார்ட் பல்கலையில் இருந்து