வாஷிங்டனில் இன்று திட்டமிட்டதைவிடவும் சிறப்பாக தமிழ் விக்கி வெளியீட்டு விழா நிறைவுற்றது. உண்மையில் உருவான சிறுசிக்கல்கள் நன்மைக்கே. தமிழ் விக்கியின் மீது பல்லாயிரம் புதிய வாசகர்களின் கவனத்தைக் கொண்டுவர அது உதவியது. ஊடகங்களும் தவிர்க்க முடியாதபடி அதை நோக்கித் திரும்ப வழி வகுத்தது.
தமிழ் விக்கிக்கு ஒரு வெளியீட்டு விழாவை இங்கே ஏற்பாடு செய்வதென்பது விஷ்ணுபுரம் வாஷிங்டன், விஷ்ணுபுரம் ஆஸ்டின், விஷ்ணுபுரம் நியூயார்க் கிளைகளினுடைய திட்டம். அவர்கள் அதை ஒருவகையில் தாங்களாகவே முடிவெடுத்து எனக்குத் தெரிவித்தார்கள். ஆகவே விக்கி வேலை மும்மடங்கு விரைவுபடுத்தப்பட்டது. ஆகஸ்டில் திட்டமிடப்பட்டிருந்த தொடக்க விழா அவ்வாறாக மே மாதத்திற்கு மாறியது. அழைப்பாளர்களும் இங்குள்ள நண்பர்களால் முடிவு செய்யப்பட்டார்கள்.
எங்களுடைய கொள்கையின்படி இது அனைவருக்குமான ஒரு பொதுத்தளம். மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் மறுப்பவர்களுக்கும் இதற்குள் இடம் உண்டு. இதை மறுப்பவர்கள் பற்றியும் விரிவான ஆவணப்பதிவுகள் இதில் இடம்பெறும். அந்நிலையிலேயே அமெரிக்கக் கல்வியாளர்கள் அழைக்கப்பட்டார்கள். தமிழ் சிற்றிதழ் இயக்கத்தின் தொடர்ச்சி இந்த இணையக் கலைக்களஞ்சியம். நெடுங்காலமாகச் சிற்றிதழ் மரபுக்கும் கல்வித்துறைக்கும் இருந்த முரண்பாடுகள் சீரடையும் என்றால் நன்று என்னும் எண்ணம் எனக்கு இருந்தது.
ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அ.முத்துலிங்கம் அவர்கள் நிதி திரட்டும் அறைகூவலை விடுத்தபோது அதை பெருமளவுக்கு பரிந்துரை செய்து பரப்பியவர்களில் நானும் ஒருவன். எனக்கு பல்கலைக்கழக செயல்பாடுகளில் நம்பிக்கை மிகக்குறைவு என்றாலும் அ.முத்துலிங்கத்திற்காக அதைச் செய்தேன். என்பொருட்டு நிதியளித்தோர் பலர் உண்டு, அவர்கள் அதை எனக்கு எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தனர்
இந்த தமிழ் இருக்கைகள் அனைவருக்கும் பொதுவானவை என்ற அளவிலேயே இவர்கள் விக்கி விழாவுக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களோ இங்கிருப்பவர்கள் மிகச்சிலருடைய மிரட்டலுக்கு ஆட்பட்டு ஒரே நாளில் அனைவருமே வரமுடியாது என்று முடிவெடுத்தனர். அதற்குரிய காரணங்களும் சொல்லப்படவில்லை. அது ஒரு வெற்றி என்று சிலரால் கொண்டாடப்பட்டது.
உண்மையில் இச்செய்தி வந்த அன்று நண்பர்கள் மிகவும் சோர்ந்திருந்தார்கள். அதை என்னிடம் சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்தார்கள். நான் நியூயார்க்கில் ஓர் உற்சாகமான கார்ப் பயணத்தில் இருக்கும்போது மிகத் தயங்கி நண்பர் இதை சொன்னார். ஆனால் ஒரு கணம் கூட எனக்கு அது சோர்வை உருவாக்கவில்லை. ஏனெனில் இவை அனைத்தையும் எப்போதுமே எதிர்பார்த்து இருக்கக்கூடியவன் நான். செயலில் சோர்வு, தளர்வு என்பது அறுபதாண்டுகால வாழ்க்கையில் இதுவரை ஒருகணம் கூட நான் உணராதது. எக்கணமும் உச்சகட்ட செயல்வேகத்தில் மட்டுமே இருப்பது என் யோகம்.
காரிலேயே, பத்து நிமிடத்தில் மாற்றுத்திட்டங்களை போட்டோம். மூன்று மணி நேரத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று கல்வியாளர்களைவிட ஒருபடி மேலான பண்பாட்டு செயல்பாட்டாளர்களைக்கொண்டு இந்த விழா நடைபெற்றது. எவர் இந்த விழாவைத் தொடங்கிவைக்கவேண்டுமோ அவர்களால் இது தொடங்கப்பட்டது. தமிழக நாட்டுப்புறவியலின் அன்னை என்றே சொல்லத்தக்க பிரெண்டா பெக் திருக்குறளை மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டொஷி புரூக்ஸ்மா தமிழ் அறிவியல் எழுத்தை நவீனத்தமிழுக்குக் கொண்டு வந்தவர்களில் முன்னோடியாகிய பேரா வெங்கட்ரமணன் மற்றும் அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள்.
விழாவில் அ.முத்துலிங்கம், தமிழாய்வாளர் டேவிட் ஷூல்மான், ஹார்வார்ட் தென்கிழக்காசிய ஆய்வுமைய தலைவி மார்த்தா ஆன் செல்பி, கமல்ஹாசன் ஆகியோரின் வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன.
எந்த வகையிலும் இச்செயல்பாடு எதிர்ப்புத்தன்மை கொண்டதல்ல. எனக்கு எதிர்மறைச் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இது அதிகாரம், அரசியலை சார்ந்தே இயங்கும் வெகுஜனப் பெரும்போக்குக்கு மாற்றுத்தரப்பென்று சொல்லலாம். இதுதான் உண்மையில் அறிவியக்கத்தின் மையத்தரப்பு. எப்படி மணிக்கொடியிலிருந்து இன்று வரையிலான சிற்றிதழ் மரபை நாம் அடையாளப்படுத்துகிறோமோ அப்படி இந்தக் கலைக்களஞ்சியத்தையும் அடையாளப்படுத்த விரும்புகிறேன். இது முன்வைக்கும் ஆளுமைகள், மதிப்பீடுகள், மனநிலைகள் ஆகியவையும் நூறாண்டுகால சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியம் உருவாக்கியவையே.
இதை முன்னெடுப்பதில் பிறரது சிந்தனையைத் தூண்டுவது என்ற அளவில் மட்டுமே என்னுடைய பங்களிப்பு இருக்கிறது. ஒருங்கிணைப்பு கூட பிறராலேயே செய்யப்படுகிறது. இவர்கள் அனைவரிலும் இத்தருணம் ஒரு நல்லெண்ணத்தை என்னால் உருவாக்க முடிந்தது என்பது மட்டுமே எனது பங்களிப்பு, அது எனது ஆசிரியர்கள் எனக்களித்த கொடை எனக்கருதுகிறேன். இந்த நிகழ்வு இவ்வண்ணம் சிறப்புற முடிந்ததற்கு எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஏறத்தாழ மூவாயிரம் பதிவுகளில் இறுதிநிலை சோதனை முடிந்தவற்றை மட்டுமே வாசகர்களால் இப்போது பார்க்கமுடியும். நாங்களே உருவாக்கிய தடுப்புமுறைகளை நாங்களே தாண்டுவது கடினமாகவே உள்ளது. பல எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் இறுதிக்கு முந்தைய நிலையில் தகவல் சரிபார்ப்புக்காக நின்றிருக்கின்றன. அறிஞர்களை ஆசிரியர்களாக வைத்துக்கொண்டு அவர்களிடம் அவசரப்படுத்த முடியாது. நாளும் இது விரிவடையும்.
இந்த விழா நின்றுவிட்டதென்றும் பங்களிப்பாளர்கள் அனைவரும் தவிர்த்துவிட்டார்கள் என்றும் செய்திகள் பரப்பப்பட்டபோது ஒன்று நான் கவனித்தேன். உலகம் முழுக்க உள்ள எனது வாசகர்களில் ஒருவர் கூட இந்த விழா நின்றுவிடும் என்றோ, இந்த முயற்சியில் தடை ஏற்படும் என்றோ துளிகூட நம்பவில்லை. மிகப்பெரும்பாலானவர்கள் ‘முன்னிலும் பெரிய ஒன்றை செய்யப்போகிறீர்கள்’ என்று தான் எனக்கு எழுதினார்கள். அந்த நம்பிக்கை தான் இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குகிறது. என் செயல்பாடுகளில் கூட அதை நான் மீண்டும் உறுதி செய்கிறேன்.
இத்தருணத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் ஒன்றை நான் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாழ்வில் என் இலக்குகளில் தோல்வி என்பது எனக்கில்லை. எத்தருணத்திலும் எதன் முன்னும் தளர்வதில்லை. ஏனெனில் என் பொருட்டு நான் எதையும் செய்துகொள்வதில்லை. அளிப்பதன்றி பெறுவது எதுவுமே கூடாதென்று இத்துறைக்கு வந்தவன் நான். என் ஆசிரியர்கள் அனைவரையும் வணங்கும் தருணமாகவே இதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.