தமிழ் விக்கி- தேவைகள்

தமிழ் விக்கி இணையம்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி என்னும் பெருமுயற்சியை முன்னெடுத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இக்கடிதம் கிடைக்கும்போது வாஷிங்டனில் விழா நடந்துகொண்டிருக்கும் என நம்புகிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆனால் நீங்கள் தொடங்கியிருக்கும் இந்த பணியின் விரிவு உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இதை நிறைவேற்றி முடிப்பது உங்கள் எஞ்சிய வாழ்நாளின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும். உங்கள் நேரம் முழுக்கவே செலவாகும்.

தமிழ் விக்கிப்பீடியா முயற்சியே ஒரு மாபெரும் தோல்வி என்பது கொஞ்சம் வாசிப்பவர்களுக்குத் தெரியும். அதில் எதைப்பற்றியும் மேலோட்டமான சிறு குறிப்பே இருக்கும். பெரும்பாலான குறிப்புகள் அரைகுறையானவையாகவும் பயிற்சி இல்லாத மொழியிலும் அமைந்திருக்கும். அதை எதற்கும் நம்பமுடியாது. ஆனால் எந்த வகையிலும் அந்த உள்ளடக்கத்துக்குப் பங்களிப்பாற்றாத ஒரு சிறுகுழு அதன் மொழியை இஷ்டம்போல மாற்றி அதை மேலும் பயனற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. அத்தகைய ஓர் கலைக்களஞ்சியம் நடத்துமளவுக்கு இங்கே அறிவுப்பின்புலம் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் தொடங்கியிருப்பது தனிநபர் செய்யும் முயற்சி அல்ல. எண்ணாமல் துணிந்துவிட்டீர்களோ என்று சந்தேகம் உள்ளது. இப்போது உருவாகும் இந்த பொருமல்களும் கூச்சல்களும் ஒருவாரம் நீடிக்கும். அதன்பிறகு உள்ளடக்கம்தான் நிலைகொள்ளும். இம்முயற்சிக்கு எத்தகைய ஆதரவு தேவை என நினைக்கிறீர்கள்?

ஆனந்த்ராஜ்

***

அன்புள்ள ஆனந்த் ராஜ்,

வாஷிங்டன் நிகழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிறப்பாக நடைபெறும், வாழ்த்துகளுக்கு நன்றி.

இந்த முயற்சி எதற்கும் எவருக்கும் எதிரானது அல்ல. விக்கிப்பீடியாவில் ஆக்ரமித்திருப்பவர்கள் ஒரு குழு. அவர்களின் பழமையான மொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களுடன் போராட முடியாது என இதை தொடங்குகிறோம். வாசகர்களுக்கு எது உகந்ததோ அதை தெரிவு செய்யலாமென எண்ணினோம். ஆகவேதான் அவர்களையும் விழாவுக்கு அழைத்தோம். நாங்கள் எந்த பொதுவெளியையும் ஆக்ரமிக்கவில்லை. இது எங்களை நம்புகிறவர்களுக்கான தளம். ஆர்வமுள்ளவர்கள் இதை வாசிக்கலாம். எதிர்மறைச்செயல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நான் நெடுநேரம் எதையும் எண்ணுவதில்லை என்பது உண்மை, பெரும்பாலும் உள்ளுணர்வு சார்ந்தே முடிவெடுக்கிறேன். ஆழ்ந்து எண்ணியிருந்தால் வெண்முரசு தொடங்கியிருக்க மாட்டேன். வெண்முரசு தொடங்கும்போது என் நண்பர் ஞாநி இதேபோன்று கவலையுடன் எழுதினார். அவருக்கு நான் சொன்ன பதில் இதுவே, எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியராகப் பெறின்.

நான் இதை தொடங்கும்போது என் நண்பர்களிடம் சொன்னேன். எவர் இல்லை என்றாலும் தனியொருவராக இதை செய்துவிடுவேன் என்னும் நம்பிக்கை எனக்கிருப்பதனால்தான் தொடங்குகிறேன். ஆகவே பிறர் ஆதரவில்லை, ஆகவே கைவிடுகிறேன் என்று சொல்லவே மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்துகொண்டே இருப்பேன்.

சென்ற பிப்ரவரியில் சராசரியாக ஒருநாளில் பத்து பதிவு போட்டிருக்கிறேன். அதிகபட்சமாக இருபத்திரண்டு பதிவுகள். ஒரு நாளில் பதினைந்து மணிநேரம் வரை வேலை செய்திருக்கிறேன். நான் எளியவன், ஆனால் என்னை இயக்கும் விசைகள் மிகப்பெரியவை.

ஒரு பெரும்பணியில் ஈடுபடுவதென்பது நம்மை நாமே செயலூக்கம் கொண்டவர்களாக ஆக்கிக் கொள்வது. நாம் கற்றுக்கொண்டே இருக்கிறோம், வளர்கிறோம், நமக்கு மகத்தான தருணங்கள் அமைகின்றன, மாபெரும் நினைவுகள் சேர்கின்றன. ஆகவே இளைஞர்களை இதில் பங்களிப்பாற்ற அழைக்கிறேன்.

இதிலுள்ள பதிவுகளைப்போல இதே அமைப்பில், இத்தனை தரவுகளுடன், பதிவுகளை எழுதி அனுப்பவேண்டுமென இளம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். இப்பதிவுகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவும் நண்பர்கள் பலர் தேவை. அவர்கள் தொடர்பு கொள்ளவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைரப்பர் -கடிதம்
அடுத்த கட்டுரைஹிட்லரும் வாக்னரும்- கடிதம்