தமிழ்விக்கி- கடிதங்கள்

தமிழ் விக்கி -சில கேள்விகள்

தமிழ் விக்கி -அறிவிப்பு

தமிழ் விக்கி இணையம்

அன்புள்ள ஜெ.

வணக்கத்துடன் கௌதம்

விக்கிப்பீடியாவை (தமிழ் சார்ந்த) அணுகும் ஒவ்வொரு கணமும் எனக்குள் பெரும் கோபம் ஆவேசம் கொள்ளும். மிகப் பழமையான மொழிப் புலமை கொண்ட நபர்கள் ஆக்கிரமித்திருக்கும் அதன் செயல்பாடுகளின் மீதும்,  தன்னைச் சுற்றிலும் இரும்புத்திரை போட்டுக் கொண்டிருக்கும் அதன் இறுகிய வலைப்பின்னல்களின் மீதும். பிறகு கலைஞனுக்கே உரித்தான ஒரு கையறு நிலையில் விலகி வந்து விடுவேன்.

இப்பொழுது, நீங்கள் “தமிழ் விக்கி” ஆரம்பிக்கிறீர்கள் என்ற செய்தியைக் கேட்டவுடன், மனம் பெரும் கொண்டாட்டமாய் குதூகலிக்க ஆரம்பித்தது. வெறுமனே, தொழில்நுட்ப வாதிகளோ, ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ ஆரம்பிக்கும் தளம் போலில்லாமல், இந்த தமிழ் விக்கி கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற தமிழின் செழுமையான விஷயங்களை முன்னிறுத்தும் ஒரு வரலாற்றுக் காட்சியை, இந்த நூற்றாண்டின் மகத்தான தமிழ் கலைஞன் ஒருவன்தான்  நிகழ்த்த முடியும்..

வெறுமனே, வெட்டி அரட்டைகளில் வீண் விவாதங்களில் காலத்தை தின்று கொண்டிருக்கும் பொழுதுகளிலிருந்து, உங்கள் பொழுது வேறுபட்டது. வரலாற்றுத்தன்மை மிக்கது.

2000 ஆண்டு தமிழ் மொழி மரபின் நீட்சியில் மாபெரும் மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறீர்கள். அரசு, பெரும் நிறுவனங்கள், தமிழைச் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் அமைப்புகள், என எவரொருவரும் செய்யாத பிரம்மாண்டமான செயல்பாட்டை நீங்கள் செய்திருக்கிறீர்கள். தமிழ் மொழியின் மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல்லை சூட்டியிருக்கிறீர்கள். நவீன டிஜிட்டல் உலகின் அடுத்த பரிமாணம் இணையம் சார்ந்த செயல்பாடுகள்தான் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு, எல்லையற்ற கலை உணர்வுகள் கொண்ட  நவீன கலைஞனாக உணர்த்தியிருக்கிறீர்கள். தமிழ் மொழி உள்ள வரைக்கும் இந்த “தமிழ் விக்கி” யும் உங்கள் பெயரும் அழியாது. அழிக்க முடியாது.

கொந்தளித்தெழும் என் தீவிர மனவெழுச்சி சார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கும், உங்கள் எழுத்தியக்கம் சார்ந்த நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்

கௌதம சித்தார்த்தன் 

தமிழ்விக்கி அறிவிப்பைப் பார்த்தேன். மெய்யாகவே பிரமிப்பாக இருக்கிறது. செயற்கரிய செய்வர் பெரியர்! மனமார்ந்த வாழ்த்துக்கள்

பா.வெங்கடேசன்

முந்தைய கட்டுரைபோளச்சனும் ஔசேப்பச்சனும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதுமைப் பெண்ணொளி- கடலூர் சீனு.