புதுமைப் பெண்ணொளி- கடலூர் சீனு.

இனிய ஜெயம்

அன்றொருநாள் அஜிதனுடன் சாரநாத் அருங்காட்சியகத்தில் நின்றிருந்தேன். அதுவரை பாடத்திட்டம் வழியாகவும், இந்திய அரசின் சின்னம் என்ற வகையிலும் புகைப்படங்களிலும்  பின்னர் விஷ்ணுபுரம் நாவல் போல பல கலாச்சார பின்புலங்கள் வழியே அறிந்திருந்த சிற்பத்தை முதன் முறையாக நேரில் கண்டேன். என் வாழ்நாளின் மகத்தான தருணங்களில் அதுவும் ஒன்று.

நாற்றிசையும் தம்மத்தின் மேன்மை உரைக்க, அறவாழித் தேரேறி புறப்பட்டுவிட்ட சிம்மங்கள். சிம்மங்கள் உடலின் ஒவ்வொரு தசைத் திணிவிலும் தெறிக்கும் வலிமை. இச்சகத்தில் எதன்மீதும் அச்சமற்ற விழிகள், திசைகள் அதிரும் கர்ஜனையை சிலைக்கச் செய்தமை போன்ற சிற்பம். 2000 வருடம் கடந்து வந்து உலகோர் கேட்க ஒலிக்கும் கர்ஜனை. சுதந்திர இந்தியா தமக்கென தேர்ந்து கொண்ட, உலக முழுமைக்குமான பதாகைச் சின்னம். உலகின் தலைசிறந்த அரசு சின்னம் நமதே என்று நெடுநாள் இறுமாந்திருந்தேன், பிற தேசங்களின் சின்னங்களை அதன் சமூக பரிமாண பின்புலத்துடன் அறிந்து கொள்ளும் வரை. குறிப்பாக அமெரிக்க சுதந்திர தேவி சிலையை.

என் சிறு வயதில் சுதந்திர தேவி சிலை (அதன் உயரம்) குறித்து அறிந்து கொண்டது என் தந்தை வழியேதான். அன்று (ம்) உலகை ஆட்டிவைத்த ஹாலிவூட் திரைப்பட நாயகர்களில் ஒருவர் சூப்பர் மேன். ஏதோ ஒரு பாகத்தில் சூப்பர் மேனும் வில்லனும் கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசி சண்டை போடுவார்கள். அந்த வரிசையில் வில்லன் சுதந்திர தேவி சிலையை பிடுங்கி சூப்பர் மேன் மேல் வீசுவர். சூப்பர் மேன் அதை பத்திரமாக கேட்ச் பிடித்து மீண்டும் பீடத்தில் நிறுவி விட்டு சண்டையை தொடர்வார். அந்த படத்தின் அக்காட்சிக்கு பிறகே அப்பா அந்த சிலையின் உயரம் குறித்து சொன்னார்.

அங்கே துவங்கி நூறாண்டு ஹாலிவூட் வரலாற்றில் ஒரு 100 திரைப்படத்திலேனும் சுதந்திர தேவி சிக்கி சீரழித்திருக்கிறாள். ஒரே ஒரு படம் மட்டுமே விதி விலக்கு. டைட்டானிக். இங்கிலாந்தில் இருந்து சீமாட்டியாக கிளம்பி, ஒரு வாழ்நாள் அனுபவம் அனைத்தையும் கண்டு, மழை பெய்யும் இரவில் அனாதை அகதியாக தீவுக்கு வந்து நின்று,  சுதந்திர தேவி சிலையை ரோஸ் அண்ணாந்து பார்க்கும் காட்சி.

அவள் அகதிகளின் அன்னை என்றே கொல்யா சொல்கிறார்.கொல்யா. ருமேனியா காரர். கொடுங்கோல்  அரசில் இருந்து மனைவியுடன் தப்பி வருகிறார். கனவு முழுக்க சுதந்திர தேவியின் நிலத்துக்கு வந்துவிடவேண்டும் என்பது மட்டுமே. முயற்சியில் தனது அரசின் எல்லையில் சிக்கிக் கொள்கிறார். விடுமுறை இன்றி நாளொன்றுக்கு 12 மணிநேர உழைப்பை அளிக்கிறார். அரசியல் மாற, ஆறாண்டு சிறை வாசம் முடிந்து வெளியே வந்து, விட்ட இடத்திலிருந்து கனவை துரத்துகிறார். சுதந்திர தேவியின் காலடிக்கு வந்து சேர்கிறார். சுதந்திரம். சுதந்திரம். இனி இங்கே எதையும் செய்யலாம். என்ன செய்வது? கொல்யாவுக்கு பொம்மைகள் செய்யத் தெரியும். சுதந்திர தேவியை பொம்மையாக செய்து விற்கும் கடையை துவங்குகிறார். வணிகம் பெருக, நிறுவனத்தை பெரிதாக மாற்றுகிறார். லாபத்தில் பாதியை சுதந்திர தேவி பராமரிப்பு நல்கைக்கு வழங்குகிறார். அன்னையின் காலடியில் நிறைவாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இவரில் துவங்கி, தீவில் வித விதமான முறைகளில் சுதந்திர தேவியை வரைந்து விற்று வாழும் தெரு ஓவிய கலைஞன், அங்கே அகதியாக வந்தவர்களுக்கு பிறந்து லிபர்டி எனும் பெயர் சுமந்த குழந்தைகள், தலைமுறை தலைமுறையாக அங்கே வரும் பயணிகளுக்கு தெய்வ காரியம் போல வழிகாட்டும் கப்பல் ஊழியர் குடும்பம் என  இப்படி தேவி குறித்த பல பத்து உளம் பொங்க வைக்கும் கட்டுரைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

அன்னையின் காலடியில் கடல் போல் அலையடிக்கும் வரலாற்றில் ஐந்து தருணங்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. முதலாவது சிலை நிறுவப்பட்ட  (1886) சில ஆண்டுகளில் அமெரிக்க பெண்கள் பெரும் திரளாக அன்னையின் காலடியில் கூடி தங்களுக்கு ஓட்டு உரிமை கேட்டு நிகழ்த்திய போராட்டம்.

இரண்டாவது எல்லா காவலையும் மீறி அகதி ஒருவர் அன்னை நிற்கும் பீடத்தில் ஏற்றிய எல்லா அகதிக்கும் நல்வரவு எனும் சேதி தாங்கிய பிரம்மாண்ட பதாகை.

மூன்றாவது டேவிட் காப்பர் ஃபீல்ட் எனும் மாயக் கலைஞன் மொத்த தேவி சிலையையும் சில நிமிடங்கள் மறையச் செய்தமை. அது வெறும் சிலை மறையும் மாயக் காட்சி நிகழ்வு மட்டுமே அல்ல. ஒரு விழுமியம் ஒன்று கண் முன்னால் மறைந்து போனது என்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

நான்காவது. ஒரு கருப்பினப் பெண் அமெரிக்காவின் நிற வெறியை எதிர்த்து சட்டத்துக்கு புறம்பாக  அன்னையின் பீடம் மீதேறி கால் விலங்கு துணித்த அன்னையின் காலடியில் அமர்ந்து போராடியது.

ஐந்தாவது, இரட்டை கோபுரம் தகர்க்க பட்ட நாள். தீவில் சுதந்திர தேவி காலடியில் உள்ள அமெரிக்க கொடியை தாழ்த்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு வருகிறது. அதிகாரி கெட்ட வர்த்தையுடன் பதில் சொல்கிறார். வேண்டுமானால் இக்கணம் நான் ராஜினாமா செய்கிறேன். கீழ்படியாமைக்கு என்ன தண்டனையோ அதையும் ஏற்கிறேன். ஆனால் அன்னையின் காலடியில் நிற்கும் கொடியை தாழ்த்தும் பணியை மட்டும் நான் செய்ய மாட்டேன். அன்னை அமெரிக்க அரசியலுடன் சுருங்கியவள் அல்ல. அதிகாரி செய்தது சரியே என்று பல பத்திரிக்கைகள் எழுதின.

யார் இந்த அன்னை? எவர் கனவில் எழுந்த தெய்வம் இவள்? இத்தெய்வத்தின் விதையும், உயிரும், உடலும் என்று அமைத்தவர் மூவர். முதலாமவர்  எட்டவர்ட் ஜெனே டி லாபுலே எனும் பிரெஞ்ச் சட்ட வல்லுநர். அடிமை எனும் நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடியவர். அமெரிக்க அரசியலில் நிகழ்ந்து வரும் குடியரசு எனும் நிலை நோக்கிய மாற்றத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க லட்சியவத சமூக அரசியல் கண்ணோட்டத்தை பிரஞ்சில் விதைப்பதை தனது வாழ்நாள் பணியாக கொண்டவர். அதன் பொருட்டு பிரஞ்சின் ஆளும் வர்க்கத்துக்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனவர். இவரே பிரான்ஸ்கும் அமெரிக்காவுக்கும் இடையே இப்படி ஒரு பரிவர்த்தனை நிகழ வேண்டும் என்னும் கனவை விதைத்தவர்.

இரண்டாமவர். பிரெஞ்சு நிலத்தின் புகழ் வாய்ந்த சிற்பி ஃபிரெட்ரிக் ஆகஸ்டே பார்தோல்டி. இவரே மேற்கண்ட கனவுக்கு உயிர் தந்தவர்.

மூன்றாமவர் ஐஃபில் டவர் கட்டிய ஐஃபில். இவரே இந்த பிரம்மாண்ட உயிர் கொண்டு எழுந்த கனவுக்கு உடல் தந்தவர்.

1857 இந்தியாவுக்கு முக்கியமான ஆண்டு. உலகின் சரிபாதியை சுரண்டி வாழ்ந்த பிரிட்டன் அரசின் மாட்சிமை தாங்கிய மகாராணி இந்திய அரசாட்சியை ‘எடுத்துக்கொண்ட’ ஆண்டு. இதன் பிறகான கால் நூற்றாண்டு அமெரிக்க பிரெஞ்சு சமூக அரசியலில் எழுந்த ‘குடியரசு’ சார்ந்த லட்சியவாத கனவே சுதந்திர தேவி எனும் படிமை. இந்த கால் நூற்றாண்டு காலம் என்பது அமெரிக்க பிரெஞ்சு நிலம் இரண்டிலுமே கொந்தளிப்பான காலம், அங்கே நிறவெறி, அடிமை ஒடுக்குமுறை, நீண்டுகொண்டே போகும் உள்நாட்டு கலவரங்கள், இங்கே முடியாட்சியை எதிர்த்து அடிமை வாழ்வை எதிர்த்து தொடர்ந்து கொண்டே இருக்கும் நெடிய போராட்டம். இரண்டு தேசமுமே அரசியல் ரீதியாக இதுவரை மானுடம் காணாத புத்தம் புதிய வாழ்வை நோக்கி புரண்டு திரும்ப கடும் ப்ரயத்தனத்தில் இருந்த காலம். இந்த கொந்தளிப்பான சூழலில்தான் பிரான்சில் எட்வர்ட்ன் கனவுக்கு உயிர் கொடுக்க களம் இறங்குகிறார். ஃபிரெட்ரிக்.

பிரான்சில் தயாராகி அமெரிக்காவில் நிறுவப்படப்போகும் சிலை எனும் செய்தியே தன்னளவில் இரண்டு நிலத்தின் ஆளும் அரசுக்கு உகக்காத ஒன்றே. ஆகவே இப்பணி மக்கள் பங்கேற்பின் மூலம் மட்டுமே நிகழ முடியும் எனும் நிலை. ஃபிரெட்ரிக் கின் சாதனை என்பது அவர் அன்னை சிலையை உருவாக்கியவர் என்பதைக் காட்டிலும், அதற்கான பணியில் மக்கள் பங்கேற்பை முதலீட்டை வெற்றிகரமாக உள்ளே கொண்டு வந்தவர் என்பதே முதன்மையானது என்று எண்ணம் எழச் செய்யும் வகையில் இருக்கிறது ஃபிரெட்ரிக்கின் பணிகள்.

தனது சொத்தில் கணிசமான அளவை செப்புத்தகடுகள் பெற விற்கிறார். அன்னையின் வலது கை ஜோதி. அதுவே சிலையில் முதலில் உருவானது. அதையே காட்சிக்கு வைக்கிறார் ஃபிரெட்ரிக். அடுத்த வந்த வருடங்கள் முழுக்க ஒவ்வொருநாளும் இச்சிலை உருப்பெறும் வகைமையை காண தனது பட்டரையை உலகோர் முன் திறந்து வைக்கிறார். குறிப்பிட்ட கட்டணம் கட்டி மக்கள் தேவி சிலை உருவாவதை பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 4 லட்சம் பேர் வரை வந்து காசு கட்டி தேவி உருவம் கொள்வதை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

கிரேக்க தெய்வம் லிபெர்டா துவங்கி, எகிப்தின் சிலை வரை சுதந்திர தேவி சிலை வடிவமைப்புக்கு முன்மாதிரியாக குறைந்தது 5 சிலைகள் இருந்திருக்கின்றன. தேவி சிரம் சூடிய கிரீடம் முதல், வலக்கையில் ஏந்திய ஒளிப்பந்தம் துவங்கி, இடக்கையின் சாசனம் தொட்டு, உடை, உடைந்த கால் விலங்கு வரை பல்வேறு அலகுகள் கூடி தேவி உருவான விதம் குறித்து பல்வேறு ஆவணங்கள் கிடைக்கின்றன.

இந்த ஆவணங்கள் அனைத்திலும் உள்ள ஒரு சுவாரஸ்யமான பொது அம்சம் இந்த அன்னயின் சிலைக்கு ஃபிரெட்ரிக் யாரை ‘மாடலாக’ பயன்படுத்தினார் என்பதில் உள்ள முரண். ஒரு கட்டுரை இந்த சிலைக்கு மாடல் செலினா எனும் பெயர் கொண்ட அன்றைய பிரான்சின் பிரபலமான விபச்சாரி என்கிறது. மற்றொரு கட்டுரை சிங்கர் மெரிட் எனும் தையல் இயந்திர தொழில் அதிபரின் மனைவி இசபெல் தான் மாடல் என்கிறது. அன்றைய பிரஞ்சின் கத்துக்குட்டி எழுத்தாளர் எவரோ ஃ பிரெட்ரிக் வசம் ஒருமுறை தனது மனைவியை ஓவியமாக வரைந்து தர சொல்லி கேட்டதாகவும், அப்போது ஃபிரெட்ரிக் வரைந்த தனது மனைவி ஓவியங்களில் ஒன்றே இந்த சிலையின் மாடல் என்று நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஃபிரெட்ரிக் இன் அம்மா மற்றும் சகோதரர் இருவர் முகத்தின் கலவையே சுதந்திர தேவியின் முகம் என்று வாதிடுகிறது ஒரு கட்டுரை. ஃபிரெட்ரிக் மட்டும் இறுதி வரை இது குறித்து எதையும் தெரிவிக்க வில்லை.

பிரஞ்சின் செப்பு வணிக முதலாளி ஒருவர் கிட்டத்தட்ட தனது சொத்து முழுமையும் இந்த சிலை செய்யும் பணிக்கு அர்ப்பணிக்கும் சூழலில் சிலை செய்யும் பணி வேகம் கொள்கிறது. 3000 செப்பு தகடுகள். ஒவ்வொன்றும் 20 பவுண்டுகள் எடை. 2 அரை மி மீ தடிமன். என பகுதி பகுதியாக ஒட்டுமொத்த சிலையும் தயாராகி, பிரெஞ்சு துறைமுகம் விட்டு நீங்குகிறது. என் மகள் போகிறாள். இனி அவள் என் மகள் அல்ல. இந்த மானுடத்துக்கு சொந்தம் அவள் என்று சொல்லி ஃ பிரெட்ரிக் விடை கொடுத்ததாக இணையம் சொல்கிறது.

இனி இந்த சிலையை நிறுத்தும் பீடத்தை அமெரிக்க மக்கள் நிதி திரட்டி உருவாக்க வேண்டும். பணியில் முதன்மை கொள்கிறார் ஜோசப் புலிட்ஷர் எனும் பத்திரிக்கை அதிபர். ஒரே ஒரு டாலர் எனினும் இயன்ற எல்லா தொகையையும் ஜோசப் திரட்டுகிறார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இச் சிலையின் கனவை சொல்லி நிதி திரட்டுகிறார். அதன் பொருட்டு எழுந்த விமர்சனங்களுக்கு ‘ இந்த அன்னையின் பீடத்துக்கு என் தாத்தா பள்ளி செல்லும் சிறுவனாக இருக்கும்போது ஒரு டாலர் அளித்திருக்கிறார் என்று பெருமிதம் பொங்க சொல்லப்போமும் வரும் தலைமுறைதான் என் இலக்கே அன்றி இந்த விமர்சனங்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லி கடந்து விடுகிறார். இவ்வாறான நெடிய ஓட்டத்தில் சுதந்திர தேவி சிலை நிற்பதற்கான தலைவாயில் தீவும், பீடத்துக்கான காசும் திரள 1886 இல் சுதந்திர தேவி எனும் கனவு, கன்னியா குமரி அன்னைக்கு இணையானதொரு நவீன கனவு மண்ணில் நிலை கொண்டது.

உலகமே அன்னையின் நிலையை அறிய ஆவலுடன் காத்திருந்த 9 நாட்கள் இந்த தேவியின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட தருணம். நியூயார்க் இதுவரை காணாத பெரும்புயல் ஒன்று தீவை தாக்கியது. 9 நாட்கள் அலைகள் பேருரு கொண்டு அறைந்து கொந்தளிக்த கடலில் அன்னை நிலை என்ன என்று எவருக்கும் தெரிய வில்லை. 9 ஆம் நாள் அமைதி திரும்ப, ஒரு குழு லிபர்டி தீவுக்குள் நுழைந்தது. மொத்த தீவும் சிதைந்து கிடந்தது. அன்னை மட்டும் துளி கீறல் இன்றி அவ்விதமே நின்றிருந்தாள். உலகே ஆர்ப்பரித்தது. அன்னையை உள்ளே சட்டகம் அமைத்து பீடத்தில் பதிட்டை செய்த ஜஃபில் அவர்களின் மேதமை, மீண்டும் உலகின் உரையாடலுக்குள் வந்தது.

ஐஃபில் அவர்கள் தனது வாழ்நாள் சாதனை அனைத்திலிருந்தும் தனது பெயரை விலக்கிக் கொள்வதாக அறிக்கை அளித்திருந்தார். ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கி அதன் தார்மீக பொறுப்பை தான் ஏற்று அவ்வாறு செய்திருந்தார். அதன் பின்னர் தனது பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஏரோடைனமிக்ஸ் இல் சில ஆய்வுகள் செய்ய திரும்பினார். காற்றின் ரகசியங்கள் குறித்த முக்கியமான பல கட்டுரைகளை எழுதினார். அதன் வழியேதான் ரைட் சகோதரர்கள் விமானம் கண்டடைந்தனர். தனது அத்தனை சாதனைகளில் இருந்தும் தனது பெயரை ஐஃபில் விலக்கிக் கொண்டிருந்தாலும், அவரது சாதனைச் செயல் அவரை விட்டுவிட வில்லை. இம்மூவரின் கரங்களை எடுத்துக்கொண்டு தன்னைத் திரட்டி உருக்கொண்ட மானுடக் கனவு என்றே சுதந்திர தேவி சிலையை சொல்லவேண்டும். ஆம் அவள் அமெரிக்காவில் இருக்கலாம். ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தமானவள் இல்லை. என்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை இறுதி சொல்லாக விட்டுவிட்டு அதிகாரத்தின் காலடியில் கழுத்து முறிந்து இறந்து போனார் ஒரு ஒடுக்கப்பட்டவர். லிட்டில்பாய் முதல் வியட்நாம் அழிவுகள் முதல் என்னென்னவோ கீழ்மைகளை நிகழ்த்திய அமெரிக்க நிலம் தான் அவள் நிற்கவேண்டிய நிலம். அவள் பணி அங்குதான். ஆனால் அங்கு மட்டுமே அல்ல அவள் கொண்ட பணி. அவளது சேதி மானுடப் பொதுவானது.

மானுடத்தின் என்றும் அழியாத  பெருங்கனவொன்றின் கலைச் சாட்சியம் நமது சுதந்திர தேவி சிலை. அவளை மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறீர்கள். Dear je அக்கணம் மானசீகமாக உங்கள் தோளருக்கே நானும் நின்றிருப்பேன் :).

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநண்பர்கள் நடுவே பூசல்கள்