ரப்பர் – வாழ்வும் மரணமும்

அன்புநிறை ஜெ,

கிறிஸ்துவின் வரிகளில் தோய்ந்து கிடக்கும் இந்நாட்களில் ’ரப்பர்’ வாசிக்க நேர்ந்ததும் ஒரு ஆசியென அமைந்தது. இது மனித உருவில் வந்த தேவகுமாரனின் வார்த்தைகளை தரிசனமாகக் கண்டடையும் படைப்பு.

“எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மனந்திரும்பி குழந்தைகளைப்போல ஆகாவிடில் பரலோக ராஜ்ஜியத்திற்குத் தூரமாக இருக்கிறீர்கள்.”  என முதல் வரியில் சாரத்தைச் சொல்லிவிட்டே நாவல் துவங்குகிறது. ஒரு பெரும் எழுத்தாளன் தன் முதல் நாவலிலேயே தனை வாழ்நாளுக்கும் வழிநடத்திச் செல்லப் போகும் முக்கியமான ஆன்மீகமான கேள்விகளை எழுப்பிக் கொள்வதை இந்நாவலில் காண முடிகிறது.

“வாழ்க்கையும் ஒட்டுமொத்த வரலாறும் ஒருபார்வையில் நிலத்தின் ஒரு சிறு சலனம் மட்டுமே.” என்று ஒரு பதிவில் தாங்கள் எழுதியிருப்பது போல மனித வாழ்வின் போராட்டங்களும் சலனங்களும் கண்ணீரும் வெற்றிக் களிப்பும், அவன் வழி நிகழ்ந்து கொண்டே இருக்கும் சமூக வரலாற்று மாற்றங்களும், இயற்கையின் மாபெரும் மடியில் புரண்டு படுக்கும் குழந்தையின் சிறு சிணுங்கலென அடங்கி விடுமளவு சிறியதெனத் தெரிகிறது.

சமூக வரலாற்றுப் பிண்ணனியில் அடிமை நிலையில் இருந்த ஒரு சமூகம் மேலெழுந்து வருவதும், வரலாறு அத்தகைய நகர்வுக்காகத் தேர்வு செய்யும் தனிமனிதர்கள் தாங்கள் மேலெழும் வழியில் எதையும் பொருட்படுத்தாது கொன்றும் சதித்தும் வென்று மேலெழுவதும், அதன் உச்சத்தில் அடையப்படும் வெறுமையும், குற்றவுணர்வும், மீட்புக்கான தேடலுடன் ஆன்மா தவிப்பதும், இவை அனைத்துக்கும் அப்பால் கனிவான மௌன சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும் இயற்கையும் இந்நாவலின் மைய இழைகள்.

தனியொருவராக குருதியும் மலமும் சூழ்ந்த ஆழத்தில் இருந்து எழுந்து தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்ட பொன்னு பெருவட்டரின் இறுதிப் படுக்கையில் கதை துவங்குகிறது. ஒருவரது மரணப் படுக்கையில் இறுதி தருணங்களில் மொத்த வாழ்வும் ஒரு திரைப்படம் போல சித்தத்தில் ஓடி மறையும் எனப்படுகிறது. அதுவே கதையோட்டமாகிறது.

ஐயமற மரணம் வந்து கால்மாட்டில் காத்து நிற்கும் போது வென்றதென அதுவரை மாயம் காட்டிய இழப்புகள், பழிகள் அணைத்தும் பேருருக் கொள்கின்றன. அவ்வாறு அவரை உலுக்கி எடுக்கும் பழைய நினைவுகளின் வழியாக அந்தக் கடந்தகாலத்தை அறிகிறோம். பொன்னு பெருவட்டர் ஒரு ரப்பர் மரம் போல வேற்று மண்ணில் இருந்து இங்கு வந்து பூமியை உறிஞ்சி உறிஞ்சி சாரம் உண்டு அசுர வளர்ச்சி கண்டவர். உடலெங்கும் காயத்துடனும் தனைச் சூழ்ந்த சருகுகளுடனும் தன்னாலேயே ஈரமற்றுப் போன மண்ணில் தன் இறுதி மூச்சை விடும் விதி கொண்டவர்.

இதில் வரும் வாழை மற்றும் ரப்பர் மரங்களின் பேதங்களே இக்கதையின் இரு தரப்பின் இழைகளாக அமைகின்றன. இயற்கை வளர்த்திருந்த வாழைக்காட்டைத் திருத்தி வாழைத்தோட்டம் அமைக்கிறார்கள் முந்தைய தலைமுறையினர். வாழையையே வெட்டிச் சாய்த்து பணம் காய்க்கும் ரப்பர் மரம் வைக்கிறார்கள் பின்வருபவர்கள். ஆனால் இயற்கை தன்னை சீர்கேடுகளில் இருந்து சமன்படுத்திக் கொள்வதற்கான விதைகளையும் தன்னுள்ளுயே கொண்டது. காட்டின் எஞ்சிய கடைசிப் பிரதிநிதியாக வரும் கண்டன்காணியின் பேரன் லாரன்ஸ் அத்தகைய ஒரு விதை. மீட்சிக்கான தவிப்புடன் அலைக்கழியும் பெருவட்டரின் பேரன் பிரான்சிஸுடன் தக்க நேரத்தில் பேசுகிறான்.

டாக்டர் ராம் முதல் முறையாக பெருவட்டரின் மாளிகைக்குள் நுழைந்து தயக்கத்துடன் அமரும் போதே, இருட்குகையின் மறுமுனையில் ஒளி தெரிவதுபோல், தொலைவில் புறக்கடை வாசலில் அசையும் வாழையின் இலை, மீட்புக்கான தொலைதூர நம்பிக்கையாக கதையின் தொடக்கத்திலேயே இடம்பெறுகிறது.

பெருவட்டர் அந்த காட்டு நிலத்தை அப்புக்குட்டன் நாயரிடமிருந்து பெற்று காடு திருத்துவதற்காக சென்று நிற்கும் காட்சியில் ஏதுமற்ற பொன்னுமணியை பெருவட்டர் என்னும் வெற்றிவீரன் ஆக்கும் அந்த வல்லமை ஏதென்று தெளிவாக சித்தரிக்கப்படுகிறது.  மார்புக்கூட்டை உள்ளிருந்து முட்டி விம்மும் தினவும் கால்களிலும் தோள்களிலும் வலிமை தெறிப்பதுபோல உணரும் அக்காட்சி. அவனே அந்த நிலமாகி விஸ்வ ரூபம் பெற்ற பேருருவனாய்த் தன்னை உணரும் கணம். இந்நிலத்தில் ஊசி முனை நிலம் கூடத் தரமுடியாது என்று சொன்ன துரியோதனனும் மூன்றடி நிலம் கேட்டமைக்குத் தன் தலையை காட்டிய மாவலியும் கண்முன் வந்து செல்லும் கணம் அது. அந்தக் காட்டைத் திருத்த நெருப்பைப் பற்ற வைக்கும் காட்சி – அதிலிருந்து பறவைகள் பதைபதைப்பதும், சில பறவைகள் அதிலேயே பதைத்து வீழ்வதும் காண்டவப்ரஸ்த எரிப்பை நினைவுறுத்தியது. காலம்காலமாக காடு கனன்றெரிந்து, கானுயிர்கள் ஆகுதியாகியாகே சமூகங்கள் நகரங்கள் உருவாகின்றன. காடு எரிந்து கனலும் அத்தியாயத்தின் அடுத்த அத்தியாயத்திலேயே கண்டன்காணி பொன்னுப் பெருவட்டரைக் காண வருவது பேரியற்கையின் கருணைக்கரம் தொடுவதை உணர்ந்து சிலிர்ப்பை அளித்தது. மனிதனுக்குத்தான் காலக்கணக்கில் ஒரு தலைமுறையின் வயோதிகம். இம்மண் கண்டிருக்கும் எண்ணற்ற மாற்றங்களில் காடு தன்னை எரித்தவனுக்கும் வளம் தந்து அவனது அந்திம நேரத்திலும் கனிவுடன் வந்து தொட்டு ஆசிர்வதித்துச் செல்வது மனதை நெகிழ வைக்கும் அத்தியாயம்.

சில பகுதிகளே வந்தாலும் பல தை மாந்தர்கள் மனதில் அமர்ந்து விடுகிறார்கள்.

  1. மலத்தில் புரளும் வாழ்வு கொண்ட பேச்சியும் அவள் குழந்தைகளும் வரும் பகுதி நூறு சிம்மாசனங்களை நினைவு படுத்தியது. அன்னைப் பன்றியென அவளை மனம் உருவகிக்கிறது. குழந்தை பாச்சியைக் கொன்ற அன்று புதருக்குள் கேட்கும் மூச்சுச் சீறல் ஒலியை, மரணப் படுக்கையில் இருளுக்குள் பெருவட்டர் கேட்டிருப்பார்.
  2. பெருவட்டர் தன்னை உறுத்தும் வினைக்காக பாவமன்னிப்புக் கேட்கத் தவிப்பதை அறிந்து அவரது செயற்களமாக இருந்த மலையில் இருந்தே அவரே சொல்வது போல மலை மாடஞ்சாமி போல வரும் கண்டன்காணி. பெருவட்டர் கண்டன்காணியை அருகே வரச் சொல்லி அவரைத் தொட்டுக் கொள்ளும் கணம் பரலோக சாம்ராஜ்யத்துக்கு அவர் மனம் திரும்பியதாக எண்ணிக் கொண்டேன். கண்டன்காணியின் களங்கமின்மையயும் கனிவையும் காட்டும் முகம் அந்த தேவகுமாரனின் பரிசுத்தத்துடன் மனதில் தங்கி விட்டது.
  3. பெரிய பெருவட்டத்தி அத்தனை மாற்றங்களுக்கு இடையேயும் தன்னை தொலைக்காமல் இருப்பவள். அவள் மாடு கன்றுகளைப் பராமரிக்கும் போதுதான் இயல்பாக இருப்பாள் என ஒரு வரி வரும். எழுந்ததும் முதல் நினைவாக பசுக்களை அன்றாடம் காணும் பெருவட்டர் அதன்வழியாக அவள் மறைவுக்குப் பின்னரும் தன்னை அவளுடன் தக்க வைத்துக் கொள்கிறார்.

வாழ்வும் மரணமும்

இக்கதையில் மரணம் குறித்த, அதன் முன்னர் அகம் உணரும் பொருளின்மையை, பதற்றத்தை, வெறுமையை எவ்விதம் வென்று இவ்வாழ்வைப்  பொருளுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும் என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது.

பெருவட்டரின் மரணப்படுக்கையில் அவர் உடல்வலுவுடன் இருப்பவர்கள் மேல் கொள்ளும் ஆற்றாமை கலந்த கோபம், மரணம் குறித்து அவர் கண்டன்காணியிடம் பேசுவது, மரணத்துக்கு முன் தனது அகஎடையை இறக்கி வைத்து பாவமன்னிப்பு கேட்க  பதற்றத்துடன் அவர் தேடும் ஒரு உண்மையான ஆன்மா போன்றவை உயிரின் பதைப்பு தெரியும் பகுதிகள். மரணம் என்னும் மறுக்க முடியா விதி.

புலைப்பேடி வழக்கத்திலிருந்து தப்பி தன் மானத்தைக் காத்துக் கொள்ள குளத்தில் குதிக்கும் அறைக்கல் குடும்பத்து இளவரசி தங்கமீனாகிறாள். அவளைக் குலக்கதைகளில் இருந்து அறிந்திருக்கும் தங்கம், அந்த சிதிலமடைந்த குளத்தில் அத்தங்கமீனை உணரும் காட்சி அகக்குளத்தின் ஆழத்தில் உறங்கும்  தெய்வங்களும் யட்சிகளும் அவளுக்கான மீட்பாக எழுந்து வரும்  கணமாக வருகிறது. மரணம் எனும் தப்பியோடும் வாயில்.

அறைக்கல் குடும்பத்துக் குளம்கோரி, தன்னை முற்றிலுமாக உயிரோடு அழித்துக் கொண்டவன். ஆன்ம அழிவின் உச்சத்தில் இறந்து போன தங்கையின் உடலுக்கும் விலை பேசி சிரிப்பவன். அப்படிப்பட்ட ஒருவனுக்கும் கூட அவனது நிலை குறித்த ப்ரக்ஞையும் எங்கு எப்படித் திரிந்தாலும் சாவதற்கு இந்த நிலத்துக்கு வருவேன் என்னும் எண்ணமும் வருகிறது. தனித்துப் போன அன்னையை உறவுக்காரரிடம் ஒப்படைத்து விலகும் தருணம் அவனுக்குள் இருக்கும் ஆன்ம வறுமையை உற்று நோக்கும் மற்றொருவன் தலைகாட்டுகிறான். மரணம் என்னும் உற்று நோக்கும் பறவை.

பிரான்சிஸ் தன்னுடைய கட்டற்ற வாழ்வுக்கும் காமத்துக்கும் இயல்பான அறவுணர்வுக்கும்  இடையில் நிகழும் அலைக்கழிப்புகளினால் ஆன வாழ்விலும் தனைச் சூழ்ந்திருக்கும் அனைத்திலும் இருந்து விலகி இருப்பவன். அவன் மரணம் குறித்து சிந்திக்கும் போது தன்னுடைய தாத்தாவின் மறைவுக்குப்பின் இனி எங்கும் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலையை வந்தடைகிறான்.  சாவது குறித்து ‘சாகலாம் ஆனால் அதற்கும் ஒரு நோக்கம் தேவைப்படுகிறது’ என்ற எண்ணத்தை அவன் சென்றடைகிறான். “எல்லா வழிகளும் மூடப்பட்ட பின் மரணம் ஏற்க இயலுமாக இருக்கலாம். எனக்கு உள்ளூரத் தெரிகிறது, என் வழிகள் அடைந்து மூடிப் போகவில்லை. இன்னமும் எங்கோ எதுவோ மீதி உள்ளது. அங்கு போக வழி தெரியவில்லை. நான் காத்திருப்பவன். காத்திருப்பவன் பயணத்தை எப்படி முடித்துக்கொள்வான்? ஆம், வாழ்பவர்கள் எல்லாரும் காத்திருப்பவர்கள்தாம். காத்திருக்க ஏதுமற்ற கண

மரணம்.” என்ற விடையை அடைகிறான். மரணம் என்னும் முற்றுப்புள்ளி.

மீட்பு

தன் தாத்தா பெருவட்டர் குறித்து பிரான்சிஸ் எண்ணும்போது “அவர் இனி சருகுகள் மண்டிய பூமியோடு சம்பந்தப்பட்டவர் அல்ல. மேகம் ஜ்வலித்து நகரும் வானத்துடன் தொடர்புகொண்டு விட்டவர்.” என நினைக்கிறான். இக்கதையை எண்ணும்போதெல்லாம் ரப்பர் மரங்களை சூழ்ந்து கிடக்கும் சருகுகள் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் மரணத்தில் ஒருவர் உதிர்ந்து சருகாகிறார். அப்படி அல்லாது விண்ணோக்கி உதிர்வது எப்படி என்னும் ஒரு கேள்வியை இப்படைப்பு எழுப்பிக்கொள்கிறது.

”செய்யியதுக்கு ஒருபாடு காரியங்க இருக்கு இல்லியா? படிப்பும் அறிவும் இல்லேங்கிலும் கையும் காலும் இருக்குதே…” என்ற கணத்தில் பிரான்சிஸ் விண்ணோக்கி எழும் பறவையின் சாத்தியத்தைக் கண்டடைகிறான்.

மீட்பு எனும் சொல்லோடு இணைந்து மனதில் எழும் உருவம் மனிதகுமாரனாய் வந்த இயேசுவுடையது. ரப்பர் இயேசுவை ஆன்மீகமாக, ஆத்மார்த்தமாக மிக அருகில் நின்று உணரும் படைப்பு. பெருவட்டர் வீட்டில் இருக்கும் அந்த ரெம்பராண்ட் ஓவியம் – கன்னிமேரியின் மடியில் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் மனிதகுமாரனின் முன்னால் முழந்தாளிட்டு பணியும் தீர்க்கதரிசியின் பரவச முகம் – அது ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தும் எண்ணங்கள். ராம் விழிகளின் வழி அந்த ஓவியம் முதலில் வருகிறது. அவனுக்கு அது ஏதோ கனவில் இருக்கும் ஒரு தனிமை உணர்வு தோன்றுகிறது. புறவுலகுக்குப் பாஸ்டராக இருப்பவருக்கு மேரியும் கிறிஸ்துவும் அன்றாடம் புழங்கும் மேஜை நாற்காலி போல் ஆகிவிட்டிருக்கிறார்கள். அதன் முன்னாலும் போலியும் பாசாங்குமாக வெளிப்படுகிறார். அவரது போலித்தன்மையை மரணத்துக்குக் காத்திருக்கும் பெருவட்டரின் ஆன்மா மிகச் சரியாக அடையாளம் கண்டுகொள்கிறது.

பிரான்சிஸுக்கு அந்த ஓவியம் ஒரு செய்தியாய் இருக்கிறது. பூர்ண நிர்வாணமாய் எளிமையின் உருவாய் அன்னை மடிமீது அமர்ந்த குழந்தையின் முன் அறிவின் கர்வமும், செல்வத்தின் செருக்கும் பணிவதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவனுக்கான திறப்புகளை படிப்படியாகக் கண்டடைந்து கொண்டே செல்கிறான்.

கண்டன்காணியின் பேரன் லாரன்ஸ் வனங்களையும் இயற்கையையும் அழிவிலிருந்து காப்பதைத் தன் தன்னறமாகக் கண்டடைபவன். வனத்தின் நீட்சியாக வாழும் கண்டன்காணியின் வாழ்விலிருந்து அவன் பெற்றுக்கொண்ட தரிசனம் அது. இயேசுவை ஆதிவாசிக்கே மிக அணுக்கமானவர் என அவன் எண்ணும் கணம் ஆமென்று வாசக மனம் அதை ஏற்கிறது.

“கோடிக்கணக்கான மரங்களை இம்சைப்படுத்திப் பெறும் நாகரிகம் அதன் ஆத்மாவையே பாவத்தால் மலினப்படுத்தி விட்டிருக்கிறது. அந்தப் பாவத்தில் தெரிந்தோ தெரியாமலோ பங்கேற்கும் ஒருவனால் எப்படித் தூய மனதுடன் கண்ணீர் விட முடியும்? எப்படிக் கிறிஸ்தவனாக இருக்க முடியும்? ”  என்ற கேள்வியில் தொடங்கி,

“கிறிஸ்து, ஆதிவாசிக்கு மட்டும் உரியவர். ஒரு ஆட்டுக்குட்டியை அந்தரங்க எழுச்சியுடன் மார்போடு தழுவிக்கொள்ள வேறு யாரால் முடியும்? வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை அறுவடை செய்வதில்லை என்பதன் சாரம் ஆதிவாசியைத் தவிர வேறு யாருக்குப் புரியும்?”

என்று முன்னகர்ந்து,

“கிறிஸ்து தேவாலயங்களில், கூட்டுப் பிரார்த்தனைகளில், கவிதை சொட்டும் ஜெபங்களில் இல்லை. கிறிஸ்து மலைகளில், காடுகளில், இயற்கையில் இருக்கிறார். இயற்கைதான் கிறிஸ்து. கிறிஸ்துவை நேசித்தல் இயற்கையை நேசித்தல்தான்.” என்ற தரிசனத்தை அடைகிறான்.

கதையில் அந்த வானோக்கி உயர்ந்த சர்ச்சின் முன் மேகத்தை அளைந்த சிலுவையை அவன் காணும் கணம் ஒரு அற்புதமான ஆன்மீக தருணம்.

“வானின் அபார விரிவில், தனிமையில், நின்றது சிலுவை. நிதானமாய் நகர்ந்த மேகங்கள் மீது வட்டமிடும் கரிய பறவை.” – ஆம் மகத்தானவை பெருவெளியில் யாவரும் காணும்படி கண் முன் நிற்கின்றன. விண்ணோக்கி சிறகு விரித்த பறவைகளும் எடையற்ற மேகங்களும் சூழ தவத்தில் ஆழ்ந்த சிகரங்கள் போல அவை தனித்தே நிற்கின்றன.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- வாழ்த்துகள்
அடுத்த கட்டுரைகலைக்களஞ்சியம்- கடிதங்கள்