வணக்கம் ஜெ
நேரம் இருந்தால் தயவுசெய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கேள்வி.
என்னைச் சுற்றியுள்ள சமூக சூழலை என்னால் சரியாக புரிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இயலவில்லை. சுற்றி நடக்கும் சில சம்பவங்களுக்கு தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறேன்.
அவற்றை மாற்ற முற்படாமல் ஒதுங்கி செல்லவும் முடியவில்லை அதனுடன் ஒன்றி இருக்கவும் மாட்டேன் என்கிறது. ஒரு சான்றிதழோ அல்லது அரசு வழங்கும் உதவிதொகை பதிவு செய்யவோ அதை முறையாக பெறவோ அரசு அலுவலகத்திற்கு லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை இன்னும் மாறாமல் இருப்பது
பெண்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கற்பழிப்புகள். குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், சாலை விபத்துகள், அலச்சியப் போக்கு அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகள், ஆட்சியாளர்களின் மத மற்றும் சாதி ரீதியலான போக்கு, பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், போன்றவற்றிற்கு அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன்.
சில நேரங்களில் இலக்கியம் படிப்பதை அடியோடு நிறுத்திவிட்டு சமூக ஈடுபாடு ஏதும் இல்லாமல் சமுதாயத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாம் உண்டு நம் வாழ்க்கை உண்டு என்று இருந்து விடலாம் என்றிருக்கிறது. மற்றவர்கள் போல இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நான் react செய்ய வேண்டுமா அல்லது இந்தச் சமூக சூழல்கள் இப்படித்தான் இருக்கும் என்று அதற்கேற்ப ஒதுங்கி வாழ வேண்டுமா
என்னை சுற்றியுள்ள பிரச்னைகள் இந்த மாநிலத்தில் மற்றும் நாட்டில் தினசரி நிகழும் விரும்பத்தகாத ஒவ்வொன்றிற்கும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு அதற்கேற்ற செயலை செய்ய வேண்டுமா அல்லது நமக்கு நிகழாதவரை பிரச்சனையில்லை என வாழ முற்படுதல் உத்தமமா?
தயவுகூர்ந்து சிறு ஆலோசனை வழங்குங்கள்.
அ.பழனிசாமி
மேட்டூர்,சேலம்
***
அன்புள்ள நண்பருக்கு
உங்கள் கேள்விக்கு ஒற்றை வரியில் சுருக்கமான பதில் ஒன்று உண்டு. பொதுவாக ஆன்மிக ஞானிகள் அதைத்தான் சொல்வார்கள். ஒப்புநோக்க இலக்கியவாதிகள் மேலும் கருணை கொண்டவர்கள். ஆகவே கேட்பவனை தன்னைப்போல் எண்ணி இன்னும் சற்று இறங்கி அதற்கு பதில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய பதில் இதுதான். அநீதிகளைக்கண்டு கொதிக்கிறீர்கள், கலங்குகிறீர்கள். சரி அதற்காக என்ன செய்கிறீர்கள்? ஒன்றும் செய்யப்போவதில்லை என்று நீங்கள் சொன்னால் ”எனில் அந்த சிக்கலே செயலின்மை தான். செய்யுங்கள் தீர்ந்துவிடும்” என்பார்கள்.
அவ்வளவுதான் உங்கள் கேள்விக்கான உண்மையான பதில் ஆனால் நானும் உங்களைப்போலவே அநீதிகளை கண்டு கொதிப்பவன், துன்பங்களைக்கண்டு இரங்குபவன் .ஆகவேதான் நான் எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய உள்ளக் கொதிப்புகளை எழுத்தாக்குகிறேன். சில சமயம் நேரடியாகவே வெளிப்படுத்துகிறேன். ஆனால் இவற்றினூடாக நான் கசப்பு நிறைந்தவனாக, ஒவ்வாமை கொண்டவனாக ,எதிர்மறைப்பண்பு நிறைந்தவனாக ஆகாமல் இருக்கிறேன் எனில் அது இரண்டு காரணங்களால். ஒன்று நான் வெறுமே எதிர்வினை மட்டும் ஆற்றுவதில்லை. எனது எதிர்வினையே ஒரு எதிர்ப்புச் செயல்பாடுதான்.
என்ன செய்கிறேன் என்று கேட்டால் எழுதுகிறேன் என்றே சொல்லமுடியும். உதாரணமாக யானை டாக்டர் போல ஓர் ஆளுமை தமிழ்ச் சூழலில் அடையாளமின்றி மறைந்து சென்றுவிட்டதை எண்ணி அடைந்த உளக்கொதிப்பு யானை டாக்டர் என்றொரு கதையாக மாறுகிறது. இன்று தமிழ்சமூகம் என்றும் மறக்க முடியாத ஒரு ஆளுமையாக அவரை ஆக்க எனது ஒரு அக்கதையால் இயன்றிருக்கிறது. இன்று அவர் ஒரு தொன்மம். பள்ளிகளில் அவரைப்பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கே அவர் பெயர் தெரிந்துவிட்டது.
இச்செயல்பாடு நான் முதலில் கொண்ட கசப்பை நீக்குகிறது. அந்தக்கொதிப்பிலிருந்து ஒரு மெல்லிய நிறைவு நோக்கி அது செல்ல வைக்கிறது. சில சமயம் இந்த எழுத்துக்கு கூடுதலாக நான் சில பணிகளையும் செய்கிறேன். அவையும் எதிர்வினையளிக்கும் கசப்பிலிருந்து என்னை மீட்கின்றன.
எதையாவது செய்யுங்கள் நீங்கள் மீண்டு விடுவீர்கள் என்பதே நான் எப்போதும் எவருக்கும் என் அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய பதிலாக இருக்கிறது. செய்வதனால் அச்சிக்கல்கள் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கு அது நமது கையில் இல்லை என்பதே எனது பதில். இந்த பூமி பல்லாயிரம் கோடி உயிர்களால் ஆனது. கோடி கோடி மனிதர்களால் ஆனது. அவர்களது முடிவில்லாத இச்சைகளும், அச்சங்களும், சீற்றங்களும் விரவி நிகழ்ந்துகொண்டிருப்பது. இந்தக்கடலில் நாம் அளிப்பதென்ன இயற்றுவதென்ன என்பதை ஒருபோதும் அளந்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் நம் வரையில் அது நமக்கு முக்கியமானது. நம்மால் இயன்றதைச் செய்துவிட்டோம், நான் வெறும் சாட்சியல்ல என்று நமக்குத் தோன்றும்போது நாம் விடுதலை அடைகிறோம்.
செயலெனும் விடுதலை என்று மூவாயிரம் ஆண்டுகளாக இங்கு சொல்லப்படுவதன் சாராம்சம் இதுதான். கர்மயோகம் என்பது இவ்வுலகை மாற்றுவதல்ல, தன்னை மாற்றுவது. இவ்வுலகை மேம்படுத்துவதல்ல தன்னை மேம்படுத்துவது. ஆனால் இவ்வுலகை மேம்படுத்த முயல்கையில் மாற்ற முயல்கையிலேயே ஒருவன் தன்னை மாற்றிக்கொள்கிறான். எச்செயலுக்கும் அதற்கான விலை உண்டு எனும்போது நாமறியா ஒரு தளத்தில் எல்லாமே முளைத்தெழுந்து பொலிந்து கனிந்து கொண்டிருக்கிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
சில தருணங்களில் இதனால் என்ன பயன் என்று தோன்றும். அப்போது இரண்டு சான்றுகளை நான் தொட்டெடுப்பதுண்டு. இப்பூமி முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது. இன்று நாம் அநீதிகளை, சுரண்டலை, துயரங்களை காண்கிறோம். இன்னமும் கூட பூமியில் போரும் பஞ்சமும் எஞ்சியிருக்கிறது ஆனால் நூறாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை என்பது இதைவிட பலமடங்கு அநீதியும், பலமடங்கு சுரண்டலும், பல மடங்கு அடிமைத்தனமும் கொண்டது. கற்பனைக் கெட்டாத பெரும்போர்களும் பஞ்சங்க்ளும் இங்கு நிகழ்ந்து நூற்றைம்பது ஆண்டுகள் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொரொனா நோய் வந்தபோது உலகமே பீதியில் ஆழ்ந்தது இந்தியாவில் ஒருலட்சம் பேர் வரை அதனால் இறந்திருக்கலாம் என்ற கணக்கு . அது பலரை உலகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை நோக்கி எழுப்பியது. வெறும் ஒரு தலைமுறைக்கு முன்பு ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற நோய்களில் இந்தியாவில் ஒருகோடி பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் எந்த குடும்பக் கதையையும் எடுத்துப்பாருங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் விஷக் காய்ச்சலால் இறந்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். நாவல்களில் தொடர் இறப்பு நிகழ்ந்து கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். உதாரணம் க.நா.சுவின் சர்மாவின் உயில் அதில் வரும் அக்கா எனும் பாட்டி இறப்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்தால் மட்டும் போதும் என்பதே தன் வாழ்க்கை குறிக்கோளாக வைத்திருக்கிறாள்.
இன்று மூன்றாம் பாலினத்தோர், மரபு சாரா பாலுறவு கொண்டவர் ஆகியோருக்கான ஜனநாயக உரிமை ஆட்சி அதிகாரம் ஆகியவற்றைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அத்தகைய ஒரு எண்ணமே மனிதகுலத்திற்கு வந்தது கிடையாது. அனைவருக்கும் அதிகாரம், அனைவருக்கும் தங்கள் இன்பத்தையும் நிறைவையும் தேடும் உரிமை என்று இன்று நாம் சில விழுமியங்களை முன்வைக்கிறோம். அவற்றின் அடிப்படையில் இவ்வுலகம் அவ்வாறு இல்லையே என்று எண்ணி மனம் புழுங்குகிறோம். நண்பரே இந்த விழுமியங்கள் எல்லாமே சென்ற நூறாண்டுகளுக்குள் உலகத்தில் நிலைபெற்றவைதான். அதற்கு முன்பு உலகின் எந்த மூலையிலும் எந்தப்பண்பாட்டிலும் அவை எல்லாம் இருந்ததில்லை.
இந்த மண்ணில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பிடிக்கப்பட்டு துறைமுகங்களில் விற்கப்பட்டார்கள். நிலத்தோடு சேர்த்து அடிமைகளாக அதில் வேலை செய்பவர்களையும் விற்றார்கள். குமரிமாவட்டத்தின் அடிமை ஆவணங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் எங்கிருந்து எங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்னும் பெரும் திகைப்பு ஏற்படுகிறது. நமது மூதாதையருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு இன்பமும் கனவும் உண்டென்றும் உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை. அவர்களின் மதமோ ஆன்மீகமோ அதைக்கற்பிக்கவில்லை.
எனில் இந்த நூறாண்டுகளில் உலகம் முழுக்க இவற்றைப்பேசி நிறுவிய தத்துவ மேதைகள் ,இலக்கியவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் சித்தாந்திகள் ஆகியவற்றின் பங்கு எத்தனை மகத்தானதென்பதை எண்ணிப்பாருங்கள். மனித சமத்துவம் பற்றிய பேசிய வால்டேர் ஒருகணத்திலாவது தான் வெறுமே கற்பாறை நோக்கிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறோமா, ஒன்றும் நிகழவில்லையா என்ற சலிப்பை அடைந்திருப்பாரா? உறுதியாக அடைந்திருப்பார். ஆனால் அவர் இந்த உலகை மாற்றிக்கொண்டிருந்தார். மனித குலம் தோன்றிய நாள் முதல் இல்லாதிருந்த விழுமியங்களை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸன் மனித குலம் முழுமைக்குமான ஒரு கனவை உருவாக்கிக்கொண்டிருந்தார். அன்று அதைக்கேட்கும் செவிகளே சிறிதாக இருந்திருக்கலாம். ஆகவே செயல் வீணாவதில்லை.
அடுத்ததாக நான் எப்போதும் என்னைப் பார்த்துக்கொள்கிறேன். நான், நான் நம்பிய துறையில் செயலாற்றத் தொடங்கி முப்பதாண்டுகளாகின்றன. அன்று நான் எண்ணிய எவையும் எண்ணியவாறு நிகழுமென்னும் மிகை நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. இயன்றதை தீவிரமாக செய்வோம் என்றே எண்ணினேன். ஆனால் இன்று திரும்பிப்பார்க்கையில் நான் எண்ணியிராத அளவுக்கு அதன் விளைவுகள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன். செயல் வீணாவதில்லை என்று எனக்கே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். செயல் ஒன்றே விடுதலைக்கான வழி.
செயலின்மையிலிருந்தே ஐயங்கள் வெற்றுக்கோபங்கள் உருவாகின்றன. செயலற்றவர்களே அனைத்திற்கும் தானன்றி பிறரே பொறுப்பு என்று சமைத்துக்கொள்கிறார்கள். செயலுக்கு எதிராக போலி அறச்சீற்றம் அல்லது அரசியல் சீற்றம் கொள்பவர்கள் வெட்டியாக இருப்பவர்கள். வெறுமே குறைகள் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சழக்கர்களாகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள். ஆகவே மேலும் கசப்பு கொண்டவர்கள் ஆகிறார்கள்.
எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாமல் அன்றாடத்தில் இயல்பாக பொருந்தி முற்றிலும் தன்னலமியாக வாழ்வதற்கு முற்றிலும் சிறந்த வழி ’இவை அனைத்திற்கும் அவர்கள் காரணம் அது காரணம்’ என்று கற்பித்துக்கொண்டு, அவர்கள் மேல் அதன்மேல் உச்சகட்ட வெறுப்பை உருவாக்கி பொதுவெளியில் ஓலமிட்டுக் கொண்டிருப்பது. அத்தகைய கொதிப்புகளால் எந்தப்பயனுமில்லை .அவை இருவகை. ஒன்று தன்னை நியாயப்படுத்திக்கொள்ளவும் தன்னலத்தில் ஊறி வாழவும் செய்துகொள்ளும் ஒரு பொதுவெளிப் பாவனை. அல்லது குற்ற உணர்வால், செயலின்மையின் வெறுமையால் தனக்குத்தானே நோயைத் தேடிக்கொள்ளுதல்.
இரண்டுக்குமான பதில் ஒன்றே செயலாற்றுக உங்கள் களம் எதுவென்று கண்டுபிடியுங்கள். அது எதுவாயினும் அச்செயல் உங்களை விடுவிப்பதைக் காண்பீர்கள்.
ஜெ