கலைச்சொற்களும் அனுபவமும்

ஆழம் நிறைவது

ஆழம் கடிதம்

அன்புள்ள ஜெ

ஜாக்ரத், ஸ்வப்னம் & துரியம் எனும் நிலைகளைப் பற்றி பலமுறை வாசித்தும் யோசித்தும் கூட அதன் உள்ளுறை பிடிபடாமல்  இருந்தது. நமக்குள் நிகழும் உணர்ச்சி நிலைகளையும் சில பொழுதுகளில் மட்டுமே எட்டிப் பார்த்து வந்து வந்து செல்லும் ஒருவித நிறைவையும் எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வி இருந்தது. உங்கள் அனுபவ வார்த்தைகள் தன்னைப் புரிந்து கொள்ள, உற்று நோக்க, ஒரு பார்வையைத் தருகின்றன.

நன்றி.

அன்புடன்
அமுதா

***

அன்புள்ள அமுதா,

இத்தகைய கலைச்சொற்கள் ஓர் உரையாடலில் வந்ததுமே வறட்டுத் தத்துவ வாதம் என்றும், தேய்வழக்கு என்றும் நிராகரிப்பு மனநிலையை அடைபவர்கள் உண்டு. அதற்குக் காரணம் இக்கலைச்சொற்கள் கவனமே இல்லாமல் சூழலில் பயன்படுத்தப்படுவதுதான். இன்னொரு பக்கம் சிந்தனை என்பது ‘புதியதாக’ இருந்தால்தான் மதிப்பு என்னும் முதிராமனநிலை. பழையசிந்தனைக்கு புதிய சொற்கள் கையாண்டால் அது புதிய சிந்தனை என்னும் மனமயக்கு. ஜே.கிருஷ்ணமூர்த்தி இவர்களுக்காகத்தான் கலைச்சொற்களே இல்லாமல் பேசினார்.

ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தத்துவவிவாதம் புரியவில்லை. சத்சங்கம், உபன்யாசம் போன்றவை தத்துவ வகுப்புகள் அல்ல. தத்துவ வகுப்புகளில் கல்வியும் விவாதமும் நிகழும் முறையே வேறு. அங்கே தத்துவம் எளிமைப்படுத்தப்படுவதில்லை. செறிவாக, தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் சத்சங்கம், உபன்யாசம் போன்றவை அனைவருக்குமானவை. தத்துவ வகுப்பு ஆர்வம், கவனம், பயிற்சி ஆகியவை கொண்ட மணவர்களுக்கானது.

தத்துவத்தில் கலைச்சொற்கள் மிக முக்கியமானவை. மிக அகவயமானவற்றையும் மிகப் பொதுவானவற்றையும் மிகநுட்பமானவற்றையும் அடையாளம் கண்டு, வகுத்து அவற்றுக்குரிய சொற்களையும் உருவாக்கியிருக்கும். அதன்பின் அச்சொற்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். அப்படி ஏராளமான கலைச்சொற்களை கையாண்டு பேசிக்கொண்டே செல்வார்கள். புதியதாகக் கேட்கும்போது அவர்கள் மிக வறண்ட, சம்பந்தமே அற்ற எவற்றையோ பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றும்.

தத்துவக்கல்வியில் ஒரு தனித்தன்மை உண்டு. அது நேரடியாக வாழ்க்கையை சம்பந்தப்படுத்திக் கொள்ளாது. சம்பந்தப்படுத்திக்கொண்டால் தத்துவத்தை அதனால் விவாதிக்க முடியாமலாகும். ஏனென்றால் அது பேசும் விஷயங்கள் மிகநுட்பமானவை அல்லது மிகமிக மானுடப்பொதுவானவை. அவற்றை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விரித்தால் விரிந்துகொண்டே செல்லும். அதன்பின் தத்துவம் பேச நேரமிருக்காது. தத்துவம் சாராம்சத்தில் நின்று மட்டுமே பேச விரும்பும். ஆகவே எப்போதுமே வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு, கருத்துக்கள் தர்க்கங்கள் ஆகியவற்றைச் சார்ந்து மட்டுமே பேசும்.

ஆனால் தத்துவ மாணவன் அந்த கருத்துக்களையும் தர்க்கங்களையும் வாழ்க்கை என விரித்துக்கொள்ள வேண்டும். எல்லா கலைச்சொற்களையும் அனுபவங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை அவன் தனியாக தனக்குள்தான் செய்யவேண்டும். தத்துவ வகுப்பில் செய்யக்கூடாது. அங்கே விவாதத்தில் அவை நுழையவே கூடாது. தானே தனக்கென விரித்துக்கொள்ளும் இந்தக் கல்விக்குத்தான் ஸ்வாய்த்யாயம் என்று பெயர்.

ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் என்னும் இந்நிலைகள் (சிலபோது ஜாக்ரத், ஸ்வப்ன-சுஷுப்தி, துரியம் என மூன்று நிலைகள்) எல்லா தியான மரபுகளிலும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தப்படுகின்றன. துரியாதீதம், துரியாதீதாதீதம் என்றெல்லாம் கூட போட்டுத்தாக்குகிறார்கள்.(துரியாதீதம் என்றால் நேரடியாகவே பிரம்ம நிலை. அதற்கு அப்பால் என்ன என்று தெரியவில்லை)

இக்கலைச் சொற்களை நம் அனுபவம் சார்ந்து அகவயப்படுத்திக் கொள்ளவேண்டும். பிரக்ஞை நிலை, கனவுநிலை, ஆழ்நிலை, முழுநிலை என மொழியாக்கம் செய்யலாம்.  Conscious, subconscious,  unconscious, collective conscious என மேலைநாட்டு உளவியல் கருத்துநிலைகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.ஆனால் இவை எல்லாமே நாம் நம்மை புரிந்துகொள்பவை. கலைச்சொற்கள் ஒரு நீண்ட தத்துவ விவாதத்தின் பயனாக விளைந்தவை. அவற்றை மாற்றீடு செய்துகொள்ளக்கூடாது.

விழிப்புநிலையில் நாம் நம்மை உணர்கிறோம். நம்மை வகுத்தும் தொகுத்தும் வைத்துள்ளோம். நம் விருப்பங்கள், பயங்கள், எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள், துக்கங்கள் ஆகியவை நிறைந்த தளம் அது. கனவுநிலை என்பது விழிப்புநிலை மயங்கிய எல்லா தருணங்களும்தான். தூக்கத்தில் வரும் கனவுகள், கலைகள் அளிக்கும் உளம் மயங்கியநிலை, இயற்கை அளிக்கும் பரவசத்தில் தன்னிலை மறந்து நாம் இருக்கும் நிலை. அதுதான் ஸ்வப்னம். அனைத்து கலைகளும் நிகழும் இடம்.

ஆனால் அதிலிருந்து உடனே திரும்ப ஜாக்ரத்துக்கு விழுந்துவிடுவோம். மீன் காற்றிலெழுந்து துள்ளி மீண்டும் நீர்ப்பரப்பில் விழுவதுபோல. அந்த கனவுநிலையில் ஆழ்ந்து செல்லும் நிலை சுஷுப்தி. அந்த ஆழ்நிலை கலைகளின் உச்சத்தில் நிகழும். யோகத்தில் நிகழும். அரிதாக சில உச்சகட்ட வாழ்வனுபவங்களிலும் அமையும்.

இந்த மூன்று அடுக்குகளை பார்த்தால் ஜாக்ரத் என்பது முழுமையான தன்னுணர்வு நிலை. ஸ்வப்னம் பாதி தன்னுணர்வு அழிந்த நிலை. சுஷுப்தி முற்றிலும் தானற்ற நிலை. துரியம் என்பது அதற்கு அடுத்த நிலை. நாம் நம் தன்னிலையை இழந்து இங்குள்ள எல்லா உயிர்களின் ஒட்டுமொத்த தன்னிலையின் ஒரு பகுதியாக இயல்பாகத் திகழும் நிலை.

இம்மூன்று நிலைகளும் எல்லா மனிதர்களுக்கும் சற்றேனும் அனுபவம் ஆகியிருக்குமென வேதாந்தம் சொல்லும். ஆகவே எந்த மனிதரும் கொள்கையளவில் இதை உடனே புரிந்துகொள்ள முடியும்

ஆகவே தத்துவக் கல்வியில் செய்யவேண்டியது இது. ஒருபக்கம் தத்துவத்தை வெறும் கொள்கைகளாக, கருத்துக்களாக, தர்க்கங்களாக அறிந்துகொண்டே செல்வது. இன்னொரு பக்கம் அகத்தே அதை விரித்து சொந்த அனுபவமாக, அகநிலையாக ஆக்கிக் கொண்டே இருப்பது.

ஒரு நூலில் அகேகானந்த பாரதி மேலை தத்துவத்திற்கும் கீழைத்தத்துவத்திற்குமான வேறுபாட்டை இப்படிச் சொல்கிறார். கீழைத் தத்துவம் என்பது வெறும் தத்துவமல்ல. அது தத்துவ – உளவியல் -ஆன்மிகப் பயிற்சி.

ஜெ

முந்தைய கட்டுரைச. பாலசுந்தரம், இக்காலகட்டத்தின் பவணந்தி
அடுத்த கட்டுரைதிங்கள் மாலை