அமெரிக்க நிரல்- கடிதம்

அமெரிக்கா! அமெரிக்கா!

பெரும் மதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு,

கடந்த 13 ஆண்டுகளில் உங்களை நினைக்காமல் ஒரு நாள் கடந்தது இல்லை. வெண்முரசு படிக்காத ஒரு நாள் இல்லை. இரு குழந்தைகளும் பிறந்த ஈற்றறையில் , என் தந்தையின் இறுதி சடங்கிற்கு வரும்போது (ஜயரத்தன் தலை அவன் தந்தை மடியில் விழுந்த அத்தியாயம்) என ஒரு நாளும் தவற விட்டதில்லை. வெண்முரசு வெளியான ஏழு ஆண்டுகளில் , என் வாழ்வை அவற்றின் அத்தியாயம் கொண்டே நினைவு கொண்டு உள்ளேன். உள்ளே தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கும் குரல் உங்களுடையது. உங்களை 2015 , 2019 அமெரிக்கா பயணங்களில் சந்திக்க முடியாமல் போயிற்று. முதல் தடவை மகள் பிறக்கும் இறுதி வாரம். இரண்டாம் முறை என் தந்தை அப்போது தான் இறந்து இருந்தார்.

இந்த தடவை பயணம் பற்றி படித்ததில் இருந்து ஒரே பரபரப்பு. முறையான அறிவிப்பு தளத்தில் வருமா? வாசகர் சந்திப்பு இருக்கிறதா? நான் டல்லாஸ், டெக்சாசில் வசிக்கிறேன்.

அன்புடன்,

பிரதீப்.

***

அன்புள்ள பிரதீப்

என் நிகழ்ச்சிநிரலை அறிவித்துள்ளேன். இது முழுமையாகவே திட்டமிடப்பட்ட பயணம். என்னென்ன பொதுநிகழ்ச்சிகள் என இணையத்தில் அறிவிப்பேன். நீங்கள் தகவல்கள் தேவை என்றால் நண்பர் சௌந்தர் ராஜனை  [email protected] -க்கு, மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைமாமங்கலை – கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி -அறிவிப்பு