இங்கிருத்தலின் கணக்கு

ஆழம் நிறைவது

நான்கு வேடங்கள்

அன்புள்ள ஜெ அண்ணா

வாழும் ஞானிகளிடம் இல்லாத உளத்தெளிவு வாழும் இலக்கியத்திற்கு உண்டென ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன்.முடிவற்ற ஒரு தேடலுக்கு நிறைவான ஒரு பதிலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு வாசிப்பில் என் வாழ்வு கண்டடைந்துவிடுகின்றது.

(யாரந்த ஞானி? என்கிற கேள்விக்கு அகத்தெளிவு வேண்டி நான் வாங்கி வாசிக்கும் ஆன்மீகப் புத்தகங்களே.அதையும் வாசிப்பின் மூலமேதான்இல்லாததுஎன்கிறேன்)

அங்கே எனக்கு ஒரு குழப்பமும் உண்டாவதில்லை.பிறகெந்தக் கேள்விக்கும் அவ்விடத்தில் அவசியமில்லாமல் போகிறது.ஓயாத ஒரு அழைப்பின் குரல் இளைப்பாறும்படியாக நானங்கே சென்றுசேர்ந்துவிடுகிறேன்.என்னிடமிருந்து ஆவேசமான ஒரு உதறல் நிகழ்ந்துவிடுகின்றது.முற்றும் காலியாகிவிட்ட என் நிலையை அத்தருணத்தில் இப்பிரபஞ்சத்திடம் உரக்கக் கத்திச் சொல்லி நிறைவடைகிறது மனம்.

உங்களுடைய சமீபத்திய பதிவில் ஒரு கேள்விக்கு நீங்கள் தந்த பதில் அதை ஊர்ஜிதப்படுத்தியது.கேள்வியைப் படித்தபோது நிதர்சனமான இத்தத்துவாதத்திற்குப் பதிலொன்றும் இல்லையென்றே தோன்றியது.ஆனால் அக்கேள்வியின் முடிச்சுக்களை சுலபமாக இன்னும் சொல்லப்போனால் மாயமாக நீங்கள் அவிழ்த்துப்போடுகிறதைக் கண்டு சிலிர்த்துப்போனேன்.இறுதியில் முற்றாகக் கரைந்தேபோனது அது.

சூழல் நம்மை நான்கு திசையிலும் இழுத்துச் சிதறடிக்கிறது. நாமே நம்மை எட்டுதிசைக்கும் வீசியடிக்கிறோம். அதிலிருந்து தப்ப சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்  

இலக்கியம் தவிர வேறொன்றும் இதைச் சொல்லாது.சொல்லவும் முடியாது.பிரார்த்தனை, வேண்டுதல்,தவம்,தியானம் எதனொன்றிற்கும் இதனைச் சொல்லும் சாத்தியமில்லை.பிறகு ஏன் எல்லாம் நிகழ்கின்றனவோ புரியவில்லை.

என் கேள்வி இதுதான் ….

என்னால் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை.அத்தியாவசியத் தேவையின் திண்டாட்டம் அலைக்கழிக்கிறது.எந்தப் பொருட்டுமின்றி தேமே என்று எதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிவிடுகிறேன்.எதாவது ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.வேலை நேரத்திலும் இதே போக்கு.வேலை பறிபோகிறது.இதுவொரு பக்கம்.

கடன் தொல்லை,வாடகைப் பாக்கி நிலுவை,மனைவியின் சின்னச்சின்ன ஆசையும் தேவையும்,குழந்தைகளின் பிறந்ததின கொண்டாட்டம் எல்லாம் அதனதன் நாள்களில் நிறைவுறாமல் என்னைக் கேலிசெய்தபடியே வெறுமையாய்க் கடந்துபோகின்றன.
மனமோபுத்தகங்ளோடு வீசியெறியுங்கள் என்னைஎன்று இரைஞ்சுகிறது.

புறமெங்கிலும் மேற்சொன்ன களேபரங்கள் நடக்கும்போது பொறுப்பற்றவனாய் ஓடி ஒளிந்துகொண்டு எதையோ வாசித்து எதிலோ நிறைவடைந்து சைக்கோவைப்போல (சுற்றம் சொல்வது) புன்னகைத்தபடியே களேபரத்தை நோக்கித் திரும்பி வருகிறேன்.மானுட மீட்பு இலக்கியத்திற்கு உண்டென்றே நம்பிக் கனவு காண்கிறேன்?

தீர்வென்ன வேறிதற்கு?

அன்புடன்
சுஜய் ரகு

***

அன்புள்ள சுஜய்

நான் ‘ஞானத்தை’ சொல்லவில்லை. நானே வாழ்ந்து அறிந்த சிலவற்றைச் சொல்கிறேன். அவை பிறருக்குப் பயன்படலாம். ஏனென்றால் அவை பயன்படுமென்பதற்கு நானே வாழும் உதாரணம். என் செயல்களின் வெற்றி மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு என் வழிமுறைகளை பரிசீலித்துப் பார்க்கும் ஆர்வம் உருவாகுமென நினைக்கிறேன்.

நான் கூறும் செயல்யோகம் என்பது நம் அகம் நிறையும் ஒன்றை முழுமையாகச் செய்வது. அதுவே முதன்மையானது என உணர்வது. அதை விட்டுவிட்டு திசைதிருப்பும் சூழல்களை தாக்குப்பிடித்து தன்னைக் குவித்துக் கொள்வது.

ஆனால் அதன்பொருட்டு உலகியலை நிராகரிக்க முடியாது. நிராகரித்தால் அந்த செயல்யோகத்தைச் செய்யமுடியாதபடி உலகியல் வந்து கவ்விக்கொள்ளலாம். ஏனென்றால் மானுடர் இங்கே உண்டு உடுத்து வாழவேண்டும். உலகியலின் அவசியக் கடமைகளைச் செய்தாகவேண்டும்.

ஆகவே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். உலகியலையும் அகவாழ்க்கையையும் பிரித்துக் கொண்டாகவேண்டும். அவற்றுக்கிடையே ஒரு சமநிலையை பேணியாகவேண்டும். உலகியலில் ஆற்றவேண்டிய குறைந்தபட்ச செயல்களை சரியாக ஆற்றியே ஆகவேண்டும். இல்லை என்றால் அகச்செயல்பாடுகளும் குலைந்து போகும்.

உலகியலில் தொடந்த உயர் இலக்குகள் இல்லாமலிருக்கலாம். உலகியலில் பிறர் நமக்களிக்கும் கட்டாயங்களை நாம் தவிர்க்கலாம். பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நம்மை நாமே துரத்திக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால் உலகியலில் ஓர் அடிப்படையை உருவாக்கிக் கொண்டே ஆகவேண்டும். அது ஓர் விடுதலை. அந்த விடுதலையில் இருந்தே நாம் நம் அகவாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

நுண்னுணர்வுள்ளவன் அன்றாட வேலை செய்வது கடினம். சலிப்பூட்டுவது. அவன் உள்ளம் அவன் இடத்தையே நாடும். ஆனால் வேறுவழியில்லை. தசையில் ஒரு துண்டை வெட்டி வீசி துரத்தும் ஓநாய்களுக்கு அளித்து அவற்றிடமிருந்து உயிர்தப்பி ஓடுவது போன்றது அது.

நுண்ணுணர்வுள்ளவன் உலகியலில் ஈடுபட்டு பொருளீட்டவேண்டும். பணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம். சிலருக்கு அது ஆடம்பரம். சிலருக்கு அது சுகபோகம். சிலருக்கு அது ஆணவநிறைவு. நுண்ணுணர்வுள்ளவனுக்கு பணம் என்றால் விடுதலை, அவனுக்கான நேரம் என அர்த்தம்

ஜெ

முந்தைய கட்டுரைதிருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
அடுத்த கட்டுரைபூன் முகாம், கடிதம்