ஆழம் நிறைவது
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
நன்றிகள் பலப்பல.
‘ஆழம் நிறைவது’ வெகு அழகு.
‘காண்டீபம்’ வாசிக்கும் போது, மாலினியின் கூற்று புரியாமல், மீண்டும் மீண்டும் வாசித்து, வெண்முரசு நிரையில் பின்னால் வரும் பிற நாவல்களில் தெளிவு கிடைக்கும் என்றெண்ணி குறித்தது வைத்த கேள்வி இது. ரம்யாவிற்கும் நன்றிகள்.
(2020 முதல் தளத்தில் வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். இப்போது பீஷ்மர், கர்ணன் என்று ஆரம்பித்து அர்ஜுனனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.)
தங்களது பகிர்வை கீழ்காணும் வகையில் தொகுத்துக் கொள்கிறேன்:
ஒரு சொல் – பயன்பாட்டால் வேறு வேறு பொருள்களைச் சுட்டுவதால் – படிமம் என்றாகிறது. தத்துவ விவாதங்களில் சொல்லின் பொருள் வரையறுக்கப்பட்டு பொதுப்புரிதலுடனே பயன்படுத்தப்பட வேண்டும். (சொல்லின்/படிமத்தின் வரையறை)
மானுட சிந்தனை என்பது தொடர்ச்சியானது – இதுவரை இம்மண்ணில் எழுந்த சிந்தனைகளில் இருந்தே புதியது முளைத்து வர இயலும். (சிந்தனையின் தொடர் நிகழ்வு & அறுபடாமல் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம்)
அறியாத்தளமே ‘ஆழம்’ என்றாகிறது. (உரையாடலுக்காக, பல தளங்களாகப் பகுத்துணரலாம்)
முதல் தளம்
விழிப்பு நிலை – காமம், குரோதம் & மோகம் என்று அலை கொள்வது. (தன்னிலையின் இருப்பு)
அடுத்த தளம்
கனவு நிலை – தன்னிலை சற்றே மறைதல் – தான் என்பதன் மீச்சிறு அழிவில். (மயங்கிய தன்னிலை) தான் என வகுக்கப்பட்டதன் வரையறைகள் கரைந்தழிதல். (சற்றேனும் பெரிய/விரிந்த ‘நான்’)
அதற்கும் அடுத்த தளம்
துரியம் – நான் என்பதன் எல்லைகள் மீப்பெரு வரையறையில் ஒன்றாதல் (பார்வையாளனாக வெளியில் இருந்து துரியானுபவத்தை மீட்டிப் பார்க்கையில் காணுவது; ஒன்றான நிலை என்ன என்று பின்னே அவதானிக்கையில் அறிவது.)
துரியம் ஒவ்வொருவருக்குமே சற்றேனும் நிகழும் ஒன்று – தானழிந்து கரையும் தருணங்களைக் கூர்ந்து கவனித்தலே ‘தியானம்’.
(தன்னறம் எதுவென்று ஒருவர் எவ்வண்ணம் கண்டுகொள்வது என்ற கேள்வி இருந்தது – தானழியும்/தன்னிலை கரைந்து போகும் கணங்களைக் கவனித்தால் ‘தன்னறம்’ எதுவெனத் தேறலாம் – சரிதானே?)
“அந்த ஆழத்தை நாம் அடையும்தோறும் வெளியே நாமறியும் இயற்கையும் ஒத்திசைவும் அழகும் கொள்கிறது. அதன் ஆழம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது நிறைவும் முழுமையும் கொண்டதாக நம்மைச் சூழ்கிறது. அகமும் புறமும் ஒன்றையொன்று சரியாக நிரப்பிக்கொள்ளும்போது, ஒன்றில் இன்னொன்று வெளிப்படும்போது நிறைவு அமைகிறது.”
அப்படியென்றால் எனக்கு “நானே” தான் தடை அல்லவா? ஊசலாட்டமாய் முன்னும் பின்னும் மேலும் கீழும் என அலை கொள்வதை எங்ஙனம் கடப்பது?
அதற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை. எதையும் செய்ய வேண்டும் என்பதுமில்லை. உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பவை என்னென்ன என்று தேடித்தேடி கூடுமானவரை அவற்றைச் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே போதும்… இன்னொருவரை கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க நமக்கே என நாம் செய்துகொள்பவை மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை அளிப்பவை.
தனி மனிதன் என்றில்லாது குடும்பம்/சமூகம் என்றியைந்து செயல்பட்டாக வேண்டிய நிலையில் இது சாத்தியமா? எனில் எவ்வாறு செயல்பட வேண்டும்?
’சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்.’
“…. அகம் ஒருங்கிணைந்து அமைதியை அடையும். அப்படி உங்களுக்கு என்ன என்பதை நீங்கள் கண்டடைய வேண்டும். எதுவானாலும் சரி. கூடை முடைவதனாலும் கட்டுரை எழுதுவதனாலும்.”
“அடுத்த செயல் என்பது உங்கள் ஆழம்நோக்கிச் செல்லும் தீவிரச்செயல். அதை அந்தர்யோகம் எனலாம். அது எச்செயலாக இருப்பினும் ஊழ்கம் என அதைச் சொல்லலாம். ஆழம்நோக்கிச் செல்லும் எல்லாமே ஊழ்கம்தான். ஜாக்ரத்தை கடந்து, கனவுகளை அடைந்து, துரியநிலையை தீண்டுவதே இலக்கு. இசை ஊழ்கமாகலாம். கலை ஊழ்கமாகலாம். பயணத்தையும் சேவையையும் ஊழ்கமென கொண்டவர்கள் உண்டு. எனக்கு அது புனைவும் சிந்தனையும். மொழியே என் ஊழ்கத்தின் கருவி.”
(இதைவிடக் கூர்மையாக செறிவாக தெளிவாக சுருக்கமாக யாரே சொல்ல முடியும்! அனுபவம் சொல்லாகிறது!)
” …நாம் இங்கு வந்தோம், நமக்குரிய ஒன்றை செய்தோம், இப்பெரும்பெருக்கில் ஒரு துளியைச் சேர்த்தோம், நம் பணி முடித்து மீள்வோம், அவ்வளவுதான் என உணர்வோம். அதுவே நிறைவு, அதுவே முழுமை.”
(உண்மையில் உணர்ந்தவர் மட்டுமே சொல்லக்கூடிய அறுதிமொழி!)
நிறைவின்மை என்பது ஒரு தொடக்கமே அன்றி இறுதிப்புள்ளி அல்ல. நிறைவின்மையே அலை கொள்ளலைத் தாண்டும் தேடலைத் தரட்டும். களம் பல கடந்து துரியம் நோக்கி செலுத்தட்டும். அன்றாடச் செயல்பாட்டையும் தீவிரச் செயலையும் கையாள/கைக்கொள்ள ஊக்கமும் உறுதியும் கொடுக்கட்டும். செயல்படல் ஒன்றே செய்யத்தக்கது. செயலின் வழியே முழுமையும் நிறைவும் வந்தமையும். ஆகவே செயல் புரிக! இப்படித்தான் உங்களது சொற்களை நான் பொருள் கொள்கிறேன்/உணர்கிறேன்.
தங்களது அனுபவங்களையே சொல்லென்றாக்கித் தருவதனால், மானிடர்க்கு சாத்தியம் என்றுள்ள ஒன்றையும், அதனை அடையும் வழியையும் ஒருசேர உணர்த்துவதனால் – இச்சொற்கள் தரும் உறுதியும் உற்சாகமும் அளப்பரியன.
நன்றி எனும் சொல்லன்றி வேறில்லை எம்மிடத்தில்.
அன்புடன்
அமுதா
***
அன்புள்ள அமுதா,
ஒரு தத்துவக் கட்டுரை மேலும் மேலும் விளக்கங்களை கோருவது இயல்பு, ஆனால் அந்த வினாக்களுக்கு வாசகர் விடையை தானே தேடத் தொடங்கும்போதே அக்கட்டுரை உயிர்கொள்ளத் தொடங்குகிறது.
பிறர் பற்றிய கவலை இல்லாமல் ‘வாழ’ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது இயல்வதல்ல, நல்லதும் அல்ல. பிறர் நாம் அடையும் தனிப்பட்ட உவகையை, நிறைவை தீர்மானிக்கக் கூடாது என்று மட்டுமே சொல்கிறேன். நாம் செய்யும் அந்த செயல் பிறருக்கு காட்டுவதற்காக, பிறர்முன் நிரூபிப்பதற்காக நிகழக்கூடாது. அது முழுக்கமுழுக்க நாமே அறிந்து, நாமே மகிழ்ந்து, நாமே நிறைவடைவதாக இருக்கவேண்டும்.
ஒரு தத்துவக் கட்டுரையை வாசிக்கையில் வரும் இடர்களில் முக்கியமானது இது. மொழி அளிக்கும் ஏமாற்று. நாம் ஒரு கருத்தை எண்ணிக்கொண்டு வாசித்தால் அந்த வரியும் அக்கருத்தை நமக்கு அளித்துவிடும். அதற்கு நேர் மாறாகவே அங்கே எழுதப்பட்டிருக்கும்போதுகூட
ஆகவே எப்போதும் நம் அக ஓட்டத்தை முடிந்தவரை ரத்து செய்துவிட்டு தத்துவக் கட்டுரைகளை வாசிக்கவேண்டும். ஐயம் ஏற்படும் வரிகளை நிறுத்தி சொல் சொல்லாக மறுமுறையும் வாசிக்கவேண்டும்.
ஜெ