பறவை -கடிதம்

பறவைக் கணக்கெடுப்பு- கடிதம்

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகளின் வானம்

அன்புடையீர்! வணக்கம்!

பறவை கணக்கெடுப்பு பற்றிய அந்தக் கட்டுரை நிச்சயம் சுவாரசியமானது!  நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்! அவர் பாசாங்கில்லாமல் தமிழ் வார்த்தைகளை கையாண்டவிதம் பாராட்டுக்குரியது! புறாக்களின் குனுகு கூட கேட்டது என்று எழுதும் போது அட ஒரு புதிய வார்த்தை புறாக்களின் கூவல் பற்றி அறிந்து கொண்டதாக மகிழ்ந்தேன்!

பறவைகள் வலசை செல்கின்றன என்று கூட சொல்லக்கூடாது என்பதும் அவை இந்த நாட்டுப் பறவை என்று வகைப்படுத்துதல்கூட கூடாது என்பதும் எல்லாமே அவைகளின் வாழ்விடங்கள் என்னும் சிந்தனையும் முற்றிலும் புதியது!

தங்கள் இணையதளம் இது போன்ற புதிய அனுபவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் பாலமாக இருப்பதில் மகிழ்ச்சி!

அன்புடன்

இரா இரவிச்சந்திரன்

சென்னை

***

அன்புள்ள ஜெ

பொதுவாக எழுத்தாளர்களின் இணையப்பக்கங்களுக்கு ஒரு குணம் உண்டு. அது அவர்களின் வரவேற்பறை. ஜெயமோகன் இணையதளம் ஒரு முழுமையான இணைய இதழ். ஒரே சமயம் உங்கள் வரவேற்பறையும் ஓர் இதழுமாக இருக்கிறது. இதில் உங்கள் வாசகர்களும் நண்பர்களும் எழுதும் வெவ்வேறு கட்டுரைகள் அளிக்கும் வாசிப்பனுபவமும் அறிவனுபவமும் அலாதியானவை. பறவைகளை கணக்கிடுவது பற்றிய கடிதமும் குறிப்பும் அழகாக எழுதப்பட்டவை. பறவை கணக்கிடுதலை பறவை நிபுணர்கள் எழுதினால் அதில் அழகுணர்வே இருக்காது. இக்கட்டுரையில் இருக்கும் நெகிழ்ச்சி அற்புதமானது

ராஜன் குமாரசாமி

***

முந்தைய கட்டுரைஇணையதளம் சந்தா
அடுத்த கட்டுரைமுக்தியின் வழி…