அன்பு ஜெ சார்.
திருப்பூர் உரை கேட்க வருகிறேன். என் சொந்த ஊருக்கு நீங்கள் வருவது மிக மகிழ்ச்சியான செய்தி. நல்வரவாகட்டும்.
பின்தொடரும் நிழலின் குரலில் ‘மறக்கப்பட்ட குணவதியை’ ரணில் குணசிங்கெ சந்தித்துப் பேசும் பகுதி படித்துக் கொண்டிருக்கிறேன்.
சைபீரியாவில் முப்பது வருடங்கள் அன்னா அனுபவித்த, பார்த்த கொடுமைகளைப் படிக்கும் போது உள்ளம் பெரும்துயர் கொள்கிறது.
சமீப காலமாகவே இங்கு வலதுசாரிகள் பெறும் தொடர் தேர்தல் வெற்றிகளும், அதன் மூலம் குவியும் அதிகாரங்களும், அதிகாரம் தரும் மூர்க்கத்தனமான வெறிப்பேச்சுகளும் பெரும் அச்சத்தையும் உளச்சோர்வையும் அளிக்கின்றன.
நாட்டிற்கு நல்லது செய்யப் போகிறேன் என்று கிளம்பிய கொள்கைவெறித் தலைவர்களெல்லோருமே நேர்மாறாக மனிதகுல விரோதிகளாகவே நடந்திருக்கிறார்கள். ஜார் மன்னனோ, ஹிட்லர் முசோலினியோ, ஸ்டாலினோ, மாசேதுங்கோ, கோத்தபயாவோ, புதின் ஜெலன்ஸ்கியோ, கதை அதேதானே? இந்தப் பூசாரிகளின் பலிபீடத்தில் கொத்துக் கொத்தாய் மடியும் பலியாடுகளாய் அப்பாவி மக்கள்; முதியோர், பச்சிளம் பாலகர்கள் உட்பட.
உரசும் அதிகாரங்களுக்கிடையில் உட்புகுந்து சாந்தியும் சமாதானமும் ஏற்படப் பாடுபடும் தலைவர்கள் ஏன் இல்லை? ஆயுதக்குவிப்பை டீக்கடைபெஞ்ச் மனிதர்கள் கூட வியந்தோதுகிறார்கள். ஆயுதங்கள் அமைதி கொணருமாம். குழாயடிப் பெண்கள் கூடக் கேட்கிறார்கள், அவன் அடித்தால் நாம் வாங்கிக் கொண்டு சும்மா இருக்கணுமா? திருப்பி அடிக்க வேணாமா?
அடியும் திருப்பி அடித்தலும் தப்பி வெளிவர முடியாத ஒரு விஷச்சுழல் என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்.
மதக்கலவரம் தீயாய்ப்பற்றி எரிந்து கொண்டிருந்த நவகாளியில், கண்ணாடித் துண்டுகளும் மனிதக்கழிவுகளும் வீசப்பட்டிருத்தத சகதிகளில் வெறுங்காலோடு நடந்து சென்று சமாதானம் பேசிய அந்தக் கிழவரைக் கண்ணீர் மல்க நினைத்துப் பார்க்கிறேன். அவர் ஏன் துரோகியாகவும் அவரைச்சுட்டவன் தியாகியாகவும் இன்று பார்க்கப் படுகிறார்கள்? இந்தக் கோணல் பார்வையை நேர் செய்ய ஏதாவது வழி உண்டா? நடக்குமா?
எல்லா அதீதங்களையும் இயற்கை அல்லது இறைசக்தி தட்டிக் கொட்டி சமன் செய்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான் ஆறுதல் தருகிறது.புகாரின் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த போது அன்னா சொன்னாளே, ” நீதி ஒருபோதும் தோற்காது. ஏனெனில் நீதி என்பது நம் மீட்பர் கூறியசொல் ” என்று.
உங்கள் அனுபவம், ஆராய்ச்சி, அறிவுமுதிர்ச்சி மற்றும் நேர்மை மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையில் இந்த நிலை பற்றிய தங்கள் பார்வையை அறிய ஆவலாக இருக்கிறேன். அது பொதுவெளியோ அல்லது எனக்குத் தனிப்பட்ட பதில் மெயிலாகவோ வந்தாலும் சரி.
அன்புடன்
ரகுநாதன்.
***
அன்புள்ள ரகுநாதன்
பின்தொடரும் நிழலின் குரலின் மையச்செய்தியே அதுதான். மானுடரிடம் என்னதான் அதிகார வெறி, பிரிவினை நோக்கு இருந்தாலும் ஒட்டுமொத்தமாக மானுடத்தின் விழைவு என்பது தங்கிவாழ, மகிழ்வுடன் வாழ அது கொண்டிருக்கும் விருப்பமே. அதற்கு உதவும் கொள்கைகளும் அமைப்புகளுமே நீடிக்கும். மானுடத்தின் கூட்டான சக்தியில், அதன் உள்ளுறையும் ஆற்றலில் நம்பிக்கை கொள்ளவேண்டியதுதான். பஞ்சங்கள், போர்கள் கடந்து இங்கு வந்து சேர்ந்துள்ள மானுடம் இனியும் முன்னகரும்
ஜெ