பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள்

அன்புள்ள ஜெ

அருண்மொழி அவர்களின் எழுத்து எப்படியிருந்தது என்றால், இன்னும் ஒரு மாதம் கழித்து புதிதாக காதலிப்பவர்களை(இளம்) நீங்கள் ஜெமோ & அருண்மொழி வாசகரா என கேட்கும் அளவிற்குஉச்சம் தொட்டு நின்றுள்ளது.

அருண்மொழி அவர்களின் எழுத்து நடையில் உங்கள்  இருவரின் காதல் திருமண வைபோகம் ரசிக்கும்படியாக, மிகையில்லாமல், அழகாக இருந்தது. சமீபகால வாசகி என்பதால் உங்களுக்குள் இப்படியொரு பக்கமா என்று ஆச்சரியமாகவும் இருந்தது.

இதனைப்படிக்கும் இளம் பெண்களுக்கு, வளரும் எழுத்தாளருக்கு வாழ்க்கைப்படும் ஆசை மற்றும் நம்பிக்கை எழலாம். துணைக்கு காத்திருக்கும்  இளம் எழுத்தாளனுக்கு எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனைகள் கிட்டலாம்.

திரு. பவா நடத்திய ‘செல்லாதபணம்’ என்ற நாவலுக்காக சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் இமையத்தின் உண்டாட்டு நிகழ்வில் நீங்கள் கூறிய நிதர்சனமான வரிகள் நினைவுக்கு வந்தன. பெண் என்பவள் தன் அகங்காரத்தின் வழியே பலி கேட்கக்கூடிய தெய்வம், அவள் கையில் பூ வைத்திருப்பவனைவிட தனக்காக கையறுத்து ரத்தம் விடுபவனையே ஏற்பாள். இதில் அவள் அறியாத ஒன்று, ‘உனக்காக சாவேன்’ என்பவனின்  அடுத்த நிலை எனக்கு நீ இல்லையென்றால் அதற்காக ‘உன்னையும் கொல்வேன்’ என்பது.  மேலும் சமுதாயத்தின் முரண்களால் ஒன்றிட்ட காதல் திருமணத்தின் சறுக்கல்களையும், விளைவுகளையும் இக்கதையில் இமையம் நன்கு சாடியிருப்பார்.

சாமியாராகி விட வேண்டும் என்று சுற்றிய மனிதன் ஏதோ motivational(jkd) வகுப்புகளால் ஈர்க்கப்பட்டு,ஒரு அரசாங்க உத்யோகத்தை பெற்றவுடன் தன் மீது கூடுதலான நம்பிக்கையடைந்து, ஒரு பெண்ணை காதலித்து மணம் முடிக்க எவ்வாறல்லாம் உடையணிவானோ அப்படியே இருந்தீர்கள் உங்கள் புகைப்படங்களில். அதுவும் ஒருவித அழகே.

அரசாங்க பணியுடன் இருந்தவரை நிராகரிக்க அல்லது அரசாங்க பணியில் இருந்த பெற்றோர்களிடம் காதலை எடுத்துரைக்க அருண்மொழி அவர்களுக்கும் பெரிதான தயக்கம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.  ஆனால் அவ்வயதில் இவ்வளவு யோசித்திருக்கமுடியுமா என்பது காலத்தையும் வைத்து பார்க்கும்பொழுது ‘தலைகுப்புற விழுதல்’ என்ற சொல் பதட்டத்தைத்தான் தருகிறது.

ஆணின் நியாயமான தீர்மானங்களுக்கு பெண் என்றும் துணை நிற்கவே விரும்புகிறாள்.அதில் அருண்மொழி அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் அயராத உழைப்பையும் ஒன்றாய் இணைத்திட்டது கடவுளின் சித்தம்.

உங்கள் இருவரோடும் இணைந்து, நான் ஏனோ குறிப்பிட்டு பாராட்ட விரும்புவதுஎழுத்தாளர் எஸ் ராவின் மனைவியை, அவர்களதும் காதல் திருமணமே. எந்த வேலைக்கும் செல்ல மாட்டேன், எழுத்து ஒன்றே பணி என்பவரை துணிந்து திருமணம் செய்தவர் அவர்.

”ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் ஓர் பதற்றம் மிக்க எதிர்பார்ப்பின் சிக்கல் இருக்கவே செய்கிறது. முழுக்க விலக முடியாது”  – இதனை உங்களிடமிருந்து கேட்ட போது ஊருக்கே உள்ள பிரச்சனை என்று மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.

ஊடகமும்,தொழில்நுட்பமும், நுகர்வும் என்ற சிக்கல்களில்நகரங்களைத்தாண்டி, கிராமங்களும்வீழ்ந்து வருவது வருத்தத்துக்குரியதே, இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் இளவயது ஆண், பெண் கூட்டம் என்பதே வேதனைக்குள்ளாக்குகிறது. பொருளாதாரத்தில் பெண்ணின் முன்னேற்றம், ஆணின் குடும்ப பகிர்வு, சமுதாய நெருக்கடிகள் வைத்து பார்க்கும் பொழுது வருங்கால திருமணங்கள் கொஞ்சம் பயத்தைத்தான் உண்டுபண்ணுகின்றன.

நல்லவேளை 90களில் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள், 2000த்தை தாண்டியிருந்தால் இந்த ஒரு பெண்ணும் கிட்டியிருப்பது கஷ்டமாயிருக்கலாம். பல்லாண்டு இணையொத்த தம்பதியராய் நீடுழி வாழ இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

நன்றி

இந்து.

முந்தைய கட்டுரைகாந்தியை அறிதல்
அடுத்த கட்டுரைபொன்னின் மாயம் -கடிதங்கள்