பொறுப்பேற்றல் – கடிதம்

சார் வணக்கம்,என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, பண்டசோழநல்லுர் கிராமம், புதுவை மாநிலம்

சார், ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு உங்களின் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை படித்தேன். ஒரு அரசியல் கட்சியில் உள்ள சிக்கல்கள், இயக்கத்தை நடத்தி செல்ல என்னென்ன சமரசம் செய்துகொள்ளப் படுகிறது, மனிதன் தான் ஒரு இயக்கத்தையே கட்டமைக்கிறான், ஆனால் இயக்கத்தை காப்பாற்ற அதற்கு உழைத்த மனிதர்களையே அந்த இயக்கம் எப்படி விழுங்கிவிடுகிறது, ஒரு இயக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எத்தகைய சமரசங்களை மேற்கொள்கிறது, கமியூனிசத்தில், உள்ள சிக்கல்கள், அதனுடைய வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது போன்றவற்றை என்னால் ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிந்தது. அந்நாவலில் இறுதியில் வரும் நாடகம் நான் சிரித்தேனா, படித்தேனா என்று தெரியவில்லை, அது ஒரு நல்ல நகைச்சுவை நாடகம்.

அந்நாவலில் என்னைப் பாதித்த ஒரு சொற்றொடர் இருக்கிறது சார் அதுதான் தற்போது என்னை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்ப உந்தியது “உலகத்தில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை” என்பது தான் அந்த சொற்றொடர். நான் மேற் சொன்ன அந்த வரி தான் நாவலை படித்துமுடித்த நான்கு மாதத்திற்கு பிறகும் ஒரு நிழலின் குரலாய் என்னைப் பின் தொடர்கிறது. முன்பெல்லாம் சமூகத்தில் ஒரு பிரச்சனை நடக்கும் போது நான் மனிதர்களின்மீது எரிச்சல் கொள்வேன், மன வேதனை படுவேன் அதையே சிந்தித்து சிந்தித்து துயர் அடைவேன். உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற அந்த ஒரு வரி என்னுடைய மனத்துயருக்கு தீர்வாக அமைந்தது. அந்த வரியைப் படித்தவுடன் என் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன்.

கடந்த நான்கு மாதங்களில் சமூகத்திலும் சரி, என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பிரச்சனை நேரும் போதெல்லாம் உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற இந்த ஒரு வரிதான் என் மூளைக்குள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரி என் மன அழுத்தத்தை குறைத்துவிட்டது. ரஷ்யா உக்ரைன் மீது முதல் நாள் போர் தொடுத்தபோது உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற அந்த வரிதான் என்னை அப்பிரச்சனையை கடந்துபோக வைத்தது. என்னால் ரஷ்ய போரை நிறுத்துவிட முடியுமா என்ன? இருந்தாலும் அந்த வரி என்னை உலக இயல்பை புரிந்துகொள்ள வைத்தது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்துகொள்ள வைத்தது.

பல விஷயங்களில் எனக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து எனக்கு விடுதலை கொடுத்தது உங்களின் அந்த ஒரு வரிதான்.  ஒரு எழுத்தாளனிடமிருந்து வரும் ஒரு வார்த்தைகூட ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதற்கு அதை உணர்ந்த நானே சாட்சி. இதை உங்களிடன் ஒரு வாசகனாக பகிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இம் மின்னஞ்சலின் நோக்கம் அதுவே நன்றி சார்….

புஷ்பநாதன்

***

அன்புள்ள புஷ்பநாதன்,

பின்தொடரும் நிழலின் குரல் அறம் – கருத்தியல் பற்றிய ஒரு முழுமையான விவாதத்தை உள்ளடக்கியது. அதன் எல்லா பக்கங்களையும் உள்வாங்கி தொகுத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு வாசகனுக்கு உண்டு.

பொதுவாக நாம் உலகநிகழ்வுகளில் ‘பொறுப்பேற்றுக்’ கொள்கிறோம். அங்குதான் நம் உளம் அலைக்கழிகிறது. உளைச்சல் கொள்கிறது. காரணம் நம்மை நாம் மிகையாகக் கற்பனைசெய்துகொள்வதே. அத்தகையவர்கள் கொந்தளித்துக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளை கண்டடைவார்கள். வசைபாடுவார்கள். அதை ஒரு செயல் என எண்ணிக்கொள்வார்கள். வேறெந்த செயலும் செய்ய மாட்டார்கள்.

இங்கே நிகழும் வாழ்க்கையின் ஒரு சிறு துளியே நாம் என உணர்ந்தால் அந்த ஆணவமும் அதன் விளைவான உளைச்சலும் இல்லாமலாகும். ஆனால் நம் நிலையில், நம் தகுதிக்கு ஏற்ப நம் பங்களிப்பை ஆற்றவேண்டும் என்னும் பொறுப்பும் உருவாகும். அது ஆழத்தில் ஒரு நிதானத்தை உருவாக்கும். மெய்யாகவே பணியாற்றுபவர்கள் அந்த நிதானம் கொண்டவர்களே

ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைPrrasantu
அடுத்த கட்டுரைஇரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்