வெண்முரசு நிறைவு -கடிதம்

ஆசிரியருக்கு,

பயணம் செய்யாத எவரேனும் இந்த உலகில் உள்ளனரா ? ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் எங்கெங்கோ பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும். ஒட்டுமொத்தத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் வாழ்க்கையே ஒரு பயணம். அதனாலே நம் சொல் வழக்குகளில் வாழ்க்கை பயணம் என்றொரு சொல் உண்டு.

பயணம் நமக்கு ஏன் தேவைப்படுகிறது ? ஏனென்றிவது பயணத்தை அறிவதே. ஒரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு செல்வது பயணம். இடமென்பது ஒரு நிலை. நாம் இடமான நிலமென்பது நம் உடலின் உள்ளத்தின் நிலையே. இங்கிருந்து பெயர்ந்து செல்லுதல், இதனை மாற்றி கொள்ளுதலே. வளருதல் என்பது ஓர் மாறுதல். அதுவே உயிரின் இயல்பு. அதன்பொருட்டே பயணங்கள். உடலுக்கான பயணங்கள் உடலை போல வரையறைக்கு உட்பட்டவை. நிலைத்திருத்தலின் பொருட்டு தன் நிலையை வகுத்து கொள்பவை. உளமோ வடிவமின்மையால் பரந்து விரிந்து புடவியே தானென உணரும் தொலைவுக்கு பயணம் செய்வது.

நம் கதைகள் அத்தனையும் உள பயணமன்றி வேறென்ன ! விரிபவை வளர்பவை. வளர்பவை வாழ்பவை. அவையே பொருள்ளவை. கதைகளில் இருந்து உளமெழுபவனே வாழ்கிறான். ஏனெனில் இங்கே புவியென நம்மை சூழ்ந்து விரியும் இப்பெருக்கில் நாம் அறிந்து சமைப்பவையெல்லாம் கதையன்றி வேறில்லை ! அந்த கதைகளுக்குள் பெருங்கதையென காலமின்றி திகழ்வது மாபாரத கதை. அது காவியமாகி விரிந்தெழுந்து நம்மை அணைத்து கொண்டதே வெண்முரசெனும் பெருங்கதை. இது அக்கதையுலகில் தன்னையும் இணைத்து கொண்ட ஒரு குழந்தையின் கதை.

குழந்தையின் கதையுலகை போல் வசீகரமாவது வேறொன்று இல்லை. இந்த புவியே விரித்து வைத்த பெரும் கதைப்பரப்பாக அதன் கண்களுக்கு தென்படுகிறது. அறியாத ஒவ்வொன்றும் வந்து முன் நிற்கையில் மாயம் போல் உள்ளது. பறவை பறப்பதும் மானுடன் நடப்பதும் பாம்பு ஊர்வதும் வினோதமானவை. அந்த உலகின் பரிசுத்தம் நிஜமும் கற்பனையும் காணமலாகும் புள்ளியில் உள்ளது. அவர்களுக்கு வேறுபாடுகள் இல்லை. அங்கிருந்து மானுடன் வளர்ந்து சமைக்கும் அத்தனை கதைகளும் அறிதலால் விழுந்து விட்ட பெரும்பள்ளத்தை நிரப்பி அவனை சின்னஞ்சிறு குழந்தையாக்க முனைபவை. எந்த கதை தன் முடிவிலா மாயத்தை ஈட்டிக்கொண்டு அவனது வாழ்க்கையை தனக்குள் எடுத்து கொள்கிறதோ அதுவே பெருங்கதையென்றும் உயர் கதையென்றும் வாழ்கிறது. அதன் மகத்துவத்தை உணர்த்துவதே மாபாரத கதை. மூவாயிரம் ஆண்டுகள் இம்மண்ணை ஆள்வது. இன்னும் இதை யுகங்களுக்கு ஆளப்போவது. அது விதையில் இருந்து பிளந்தெழுந்த ஆலாக நம் முன் விரிவதே வெண்முரசு. அந்த காவிய கதையுலகில் தன்னை இழந்தவனின் கதை இது.

ஒரு மாலை நேரத்து இளைப்பாறலில் திண்ணையில் கீரை ஆய்ந்து கொண்டிருந்த அம்மாவை சுட்டி தெருவில் கலா அத்தை தூக்கி செல்லும் அச்சிறு குழந்தையின் பெயரென்ன என்று வினவினேன். பிரகதி என்றாள் அம்மா. ஆம் இந்த பெயரில் நான் யாரையோ அறிந்திருக்கிறேன் என உள்ளம் சொன்னது. பல நாள் பழகியவரும் கூட. ஒருவாரம் கழித்து களிற்றியானை நிரையின் யுயுத்ஸுவை பார்க்கையில் நினைவு வந்தது. திருதாராஷ்டிரரின் இசையை தன்னில் வாங்கி கொண்டவளான வைசிய குலத்து அரசி பிரகதியே அப்பெயர் கொண்டு நான்றிந்த ஓரே பெண் என்று. அது ஒரு திறப்பின் கணம் இந்த கதைகள், கதை என்பதற்கு அப்பால் வாழ்வென்றே என்னில் நிரம்பியுள்ளன.

அதற்கு சில வாரங்கள் கழித்து அருண்மொழி அம்மாவின் பனி உருகுவதில்லை விழாவில் பேச்சு இடைவெளியில் அஜிதன் அண்ணா தான் எழுதி கொண்டிருந்த புதிய நாவலின் பெயர் மைத்ரி என்றார். மைத்ரி மைத்ரி எங்கோ கேட்டிருக்கிறோம். அவ்வார முடிவில் சொல்வளர்க்காட்டின் பத்தாம் காடு மைத்ரேயானியம் என்பது நினைவில் உதித்தது. அங்கும் மீண்டும் கதையோடு ஒன்றான அறிதல் சிந்தையை அறைந்தது. இங்கெல்லாம் நேருக்கும் நிழலுக்கும் கோடுகள் மறைந்து என்னுள் இரண்டும் ஒன்றான நிலையை கண்டடைந்தேன்.

வெண்முரசை வாசிக்க தொடங்குகையில் எனக்கேன ஒரு வழியை உருவாக்கி கொண்டேன். இன்று சிந்தித்து பார்க்கையில் அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதும் அல்ல என்று உணர்கிறேன். அது என்னை வந்தடைந்த வெண்முரசு என் கையில் தானே உருவாக்கி கொண்ட வாசிப்பு முறை என்றே தோன்றுகிறது. வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல் சீறும் கனலாக உணர்ச்சிகளில் நம்மை இழுத்து தன்னுள் சுருட்டி கொள்வது. நாளின் பெரும் பொழுதை தனிமையில் கழிக்கும் வாழ்க்கை  கொண்டவன் என்ற முறையில் பெரும்பாலும் விருப்ப பகற்கனவுகளில் பரப்பவனாகவே என் குழந்தை பருவம் முதற்கொண்டு இருந்திருக்கிறேன். ஒரு செவ்வியல் ஆக்கம் தருமளவு கற்பனை உலகத்தின் வீச்சை பிறிதெங்கும் நாம் அடைய முடிவதில்லை. அது வாழ்க்கையை தன் ஆற்றலால் ஒருங்கிணைத்து முடிவிலா ஆழமும் விசையும் கொண்டதாக்குகிறது. தனிமையில் கனுவுகளில் மிதந்தலையும் சிறுவனுக்கு அப்படியொரு உலகம கிடைத்தால் விடுவதற்கு இல்லை.

காணாது கிடைத்த பொன்னுலகத்தை இலக்கிய வாசகன் கொள்ளும் பிரக்ஞை பூர்வமான விரிவாக்க கற்பனைக்கு பின் கனவுகளில் இறக்க விரும்பவில்லை. இது கொடும் பசியில் இருந்தவனுக்கு உணவு கிடைக்கையில் ருசித்து சாப்பிடு என்பதை போன்றது. அவனுக்கு ருசி முக்கியமல்ல, உணவு தான் முக்கியமானது. அவனது பசி மட்டுமே அதை சுவையாக்குகிறது. அது வாரியடைத்து உண்டு, மெல்ல தணிந்து வருகையில் உணவின் இயல்பான சுவையை உணர்வது போன்றது.

அப்படித்தான் வெண்முரசை வாசித்தேன். அந்த பெருங்கனவில் மூழ்கி காணமலாகும் சுகத்திற்காக. கனவில் இருந்து விழிக்கையில் அதன் இறுதி பகுதிகள் சில நினைவில் எஞ்சி நிற்கும். அங்கிருந்து சில சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் வந்தடைவோம். அதுபோன்றதே வெண்முரசில் இருந்து இதுவரை என்னை வந்தடைந்த சிந்தனைகள். ஆனால் கனவுகளுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை சிந்தனையாகமல் நிகழ்ந்தோடினாலும் நாமறிய தாக்கத்தை நம்மில் செலுத்தி விடுபவை. அவற்றை அறிவது எதற்காக எனில் மேன்மேலும் அதன் அறியமுடியாமையின் உலகத்திற்குள் செல்வதற்காக. மொழியில் அமைந்த காவியமெனும் கனவுகளின் மைய முக்கியத்துவமே, இழந்து விடாமையே. மீண்டும் மீண்டும் நாம் சென்று திளைக்கும் பெருவெளி அது. உள்ளத்தின் இவை தோன்றியவுடன் வெறுமே வாசிப்பினூடாக தன்னியல்பில் எழுபவை எழட்டும். நான் இக்கனவை காண்பதில் திளைக்க விழைகிறேன் என்று சொல்லி பெருங்கடலில் குதித்து விட்டேன்.

ஆசிரியரே, அன்று வாழ்த்தளித்து குறைந்தது ஒராண்டிற்காவது பெரும் நிறைவான வாழ்க்கையை தரும், இருந்த இடத்தில் இருந்தே இது ஓர் பெரும் பயணம் என்றீர்கள். எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆயின. இப்பயணக்காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இது என் வாழ்க்கையின் அத்தனை அடிப்படைகளையும் வடிவமைக்க போகும் ஒன்று. இக்காலத்தில் வெண்முரசின் வழி அறிந்த அறிதல்களை இச்சிறு கடிதத்தில் கூறிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என் அறிதல்கள் பெரியவை என்பதனால் அல்ல. அவை எவற்றையும் உறுதியான நினைவாக ஆக்கி கொள்ளாமையால். எழுத்து என்பது நீரை உறைய வைக்கும் பனிக்கட்டியை ஒத்தது என்ற சாரம் அமைந்த வரியொன்று வெண்முரசில் உண்டு. சில அறிதல்களை அடைந்தேன், ஆனால் அவற்றை எழுத்தாக்கி கொள்ளவில்லை. நீரின் இயல்பே வழிந்தோடுதல். என் நினைவில் எங்கேனும் சென்று அமைந்திருக்கலாம். வலிய தேடும் நேரங்களில் அந்த கிணறு சுரப்பது இல்லை. தேடிச்சலித்த கணத்தில் நீரள்ளி வீசி விளையாட்டு காட்டுவது.

ஒவ்வொரு அறிதலும் முந்தைய அறிதல் ஒன்றை ரத்து செய்தோ, சற்றே மாற்றியமைத்தோ தன் இடத்தை நிறுவி கொள்கிறது. அது ஒன்றின் இறப்பின் கணம், மற்றொன்றின் பிறப்பின் கணம். அவ்விறப்பு நேரில் நடக்கையில் கிடைக்கும் அறிதல்களை இதுகாறும் மானுடம் சேர்த்து வைத்துள்ளது. அங்கே ஒவ்வொன்றும் முடிவாகின்றன. புதியன முளைத்தெழுகின்றன. போரை போல மனிதன் வேறெங்கும் இறப்பை அதன் முழுவீச்சில் காண்பது இல்லை. அது கொடுக்கும் அறிதல் ஏராளம். ஆகவே போர் ஒரு வேள்வி. வெண்முரசில் போரே அதன் உச்சம். பதினெழு நாவல்களின் வழி திரட்டி கொண்டுவந்த வாழ்க்கை பெருநதி காலமாகி நிற்கும் இளைய யாதவர் என்னும் பெருங்கடலை எதிர்கொள்வதன் முனை அது. அந்த கடலில் ஒவ்வொன்றும் முட்டி மோதி ஒன்றுமில்லாததாக அல்லது ஒன்றான ஒன்றாக ஆகிவிடுகின்றன.

முதற்கனலின் நாயகர் பீஷ்மர். அவரே களத்தில் முதல் பலியாகிறார். நெறிகளை ஐயமில்லாமல் கடைப்பிடித்தது சரிவின் சாட்சியாக நிற்கிறார். அம்பையின் கனல் அவளுடையது மட்டுமன்று. அது கங்கையின் சுனந்தையின் கனலுமாகும். அந்த தீக்கு நாக்கு கொடுத்தவர் பீஷ்மர். மகன்களை இழந்து பிச்சியாகி கானகத்தே கண்ணீரில் அலையும் கங்கையை காங்கேயன் தான் நம்பியவை போர்க்களத்தில் சரிகையில் கண்டுகொள்கிறார். நாகனின் கலத்தில் யாயதியாக தன்னை கண்டுகொண்டவர் வானம்பாடியின் குரலில் புரூ தன்னை உணர்கையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது. தந்தை மகனாகும் தருணத்தில் புவி நிறை கொள்கிறது. வாழ்நாள் முழுக்க காமத்துறப்பு நோன்பு கொண்டவர். விட்டு செல்வது என்பது எச்சமில்லாது ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில் இருந்து அகற்றி கொள்வது தான். அஸ்தினபுரியின் காவலனாக நிறுத்தி கொண்ட பின் துறவியாக  தன்னை எண்ணிய மாயையில் உழன்று தவித்தவர். அவ்வேடத்தை கலைத்து கொலை வேங்கையாக உருமாறி தன்னை அறிகிறார்.

பீஷ்மரை சொல்கையில் வியாசரை நினைவுகூற வேண்டும். வியாசர் வருகையில் சத்யவதியை காண வேண்டும். சத்யவதி சந்தானுவால் நினைக்கப்படுபவள். சந்தனுவோ தேவாபியாலும் பால்ஹிகராலும் துரத்தப்படுபவன். அவர்களோ பிரதீபராலும் சுனந்தையாலும் கைவிடப்பட்டவர்கள். மீண்டும் சத்யவதி அம்பையாலும் அம்பிகையாலும் அம்பாலிகையாலும் நினைக்கப்படுவாள். மூவருமே மூன்று முனைகளில் அவளை அறிந்தவர்கள். அங்கிருந்து மூவகை அனல் கொண்டவர்கள். இருவர் நஞ்சு கொள்கிறார்கள். அம்பை தீ புகுந்து தங்கைகளை வளர்க்க வழி செய்து போகிறார்கள். அவளது மகன் சிகண்டி பீஷ்மரால் ஏற்கப்படுகிறான். மானுட உறவுகளின் விளங்க முடியாமை நம் மனதை அறைந்து கொண்டே இருக்கிறது. ததும்பும் காதலுடன் வந்தவளை போழ்ந்து அனுப்பும் அவரே தீயுடன் வரும் குழந்தையை வெறியோடு அணைத்து கொள்கிறார். இந்த தீயை தானும் கொண்டதனால் தான் அவராலும் இறுதி வரை போரை தவிர்க்க முடியவில்லை போலும். அதற்காக ஏங்கி கொண்டிருக்கிறார். இவ்வண்ணம் தான் ஒன்றுடன் ஒன்றிணைந்து நம்மை காவியம் கவ்வி கொள்கிறது.

அம்பிகையும் அம்பாலிகையும் அம்பையின் தங்கைகளாக தோற்கடிக்கப்பட்டவர்களாக சத்யவதியை வெல்லும் விழைவை கொண்டவர்கள். ஒருவகையில் அது சத்யவதி அல்ல, அவளது ஆளுமையின் பகுதியான நெறிகளை கடந்து சென்று ஆளும் விழைவை என்று பார்க்கலாம்.

இன்னொரு புறம் மனைவிகளாக தங்கள் கணவனை தங்களுக்கு உகந்த வடிவில் வார்த்து கொள்கிறார்கள். அவர்களுடன் கூடியது உடலால் வியாசரெனினும் உள்ளத்தால் அவர்கள் அவரை தழுவி கொண்ட போது விசித்திரிய வீரனாகவே நினைக்கிறார்கள். விசித்திர வீரியனின் கனவை கொண்டவள் திருதராஷ்டிரனையும் அவனையே கனவாக கொண்டவள் பாண்டுவையும் பெற்றெடுக்கிறாள்.இந்த நீள்சரடு வெண்முரசில் குந்தியில் தொடர்ந்து சந்திரனின் கதையில் விரிவாகி உத்தரை வரை செல்கிறது. பெண் தான் நினைக்கும் ஆணின் வடிவை கருவில் சூடி கொள்கிறாள் என்பதன் நுண்மை ஆராயப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வடிவம் ஆண்  அவளில் ஏற்படுத்தும் தாக்கத்தை பொருத்து எவ்வண்ணம் மாறுபடுகிறது என்பதும். இது காவியத்தில் இருந்து நம் அன்றாடங்கள் வரை இறங்கி வந்து பேச்சுகளில் புழங்கும் தருணத்தை காண்கையில் காவியம் எப்படி காலமிலாத கருக்களை தீவிரமாக்கி ஆராய்கிறது என அறிந்தேன்.

சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் அரசு துறந்து கானேகுவது வாழ்க்கையின் அழியாத மர்மங்களில் ஒன்று. அவ்வண்ணம் பலநூறு அரசர்கள் கானேகுவதை வெண்முரசு முழுக்க கண்டு வருகிறோம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சூழ்நிலையில் அது என்ன என்ற வினா எழுந்து நிற்கிறது. மூன்றரன்னையரை பொருத்தவரை தங்கள் இடத்தை தங்களை விட சிறப்பாக ஆற்றும் பெண்கள் எழுந்துவிட்டதால் வரும் உளநிறைவும் வெறுமையுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனினும் அங்கே தூரத்து மலைமுடியாக தன் வசீகரத்தை இழந்துவிடாமல் நிற்கிறது.

இந்த பெண்களை நினைத்து கொள்கையில் விசித்திர வீரியனை நினைக்காது கடக்க முடிவதில்லை. என் உடலாலேயே விசித்திர வீரியன் மிக அணுக்கமாகி விடுகிறான். அவனது இருநிலை என்பது உலக சுகங்களை தன்னால் துய்க்க முடியாது என்ற அறிதலில் இருந்து வரும் பிரக்ஞை துறவு மனப்பான்மையும் கனவுகளில் நுரைத்தெழும் அடங்கா காமமும் தான். அம்பை வந்துவிட்டாளா என கேட்கும் தருணம் அவனது காமம் கூர்மையாக வெளிப்படும் இடம். அந்த கனவுகளை தன் இல்லாளுக்கு கொடுத்து விடுகிறான். கனவுகளுக்கு தன்னை உண்ண கொடுத்து விடுகிறான். எவரும் தன் கனவுகளில் இருந்து விடுபடுவதில்லை என்ற எண்ணத்தை இங்கிருந்து காவியம் முழுக்க காண்கிறோம். கனவுகளோ நாமறிந்த எந்த ஒத்திசைவும் இல்லாதவை. அவற்றை கண்டு திகைத்து மயங்கி ஆட்கொள்ளப்படுதலே மானுடர் இயற்றுவது.

விசித்திர வீரியனின் தொடர்ச்சியாக பாண்டுவே மிக பொருத்தமானவன். ஆனால் விசித்திர வீரியனில் இருந்து பாண்டு தனித்து தெரிவது அவனுடைய முழுமையான விழைவால். துளியும் அவனில் துறவு நிலைப்பதில்லை. இப்படியும் முற்றிலும் வகுத்தும் கூற முடியாது. விதுரனுக்கு அஸ்வதந்தத்தை கொடுக்கையிலும் சதசிருங்க மலைக்காடுகளில் துறவு செல்ல விரும்புவதிலும் அக்குணம் வெளிப்பாடு நிகழ்கிறது. எனினும் அவனது தந்தையை போலவே அவையும் எவையும் அவனது கனவுகள் அல்ல. இக்காரணத்தால் குந்தி அவனுக்கு மைந்தர்களை பெற்று தருகையில் முழுமையாக நிறைகிறான். பாண்டுவிற்கு குந்தியில் முதல் மைந்தன் யுதிஷ்டிரன் வரை தொடர்கையில் விசித்திர வீரியனில் தொடங்கும் ஒரு சரடு முழுமையடைகிறது. ஏனெனில் இறுதி வரை அறத்திற்கும் துறவுக்கும் ஊசலாடி கொண்டிருப்பவர் யுதிஷ்டிரன். இறுதியில் அறத்தில் ஊன்றி நின்று முழுமையை அடைகிறார்.

மறுபுறம் திருதராஷ்டிரனில் அவனது கனவு பேருருவம் கொள்கிறது. அது எல்லா கனவுகளையும் போல கட்டற்றது. கண்ணற்றது. அவரது நூறு மைந்தர்களிலும் ஆயிரம் பெயர் மைந்தர்களிலும் பரவி நிறைகிறது. அதன் முழுமை பேரரசனாக துரியோதனனில் திகழ்கிறது. இவையெல்லாம் இவர்களில் தொடங்கினாலும் அன்னையாரால் ஆடப்படுகிறது. அவர்கள் தொடங்கி வைத்து ஆடி முடித்தவை. களத்தில் மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்தப்படுகிறது,

அந்த அன்னையர் ஆட்டத்தின் முடிவு குந்திக்கும் காந்தாரிக்கும் நடுவே நிகழ்கிறது. குந்தியையும் காந்தாரியையும் குறிப்பிட மிகச்சரியான சொல் தங்களது இறுதி குகை பயணத்தில் அதன் சுவற்றோவியங்களில் இருந்து அர்ஜுனனில் எதிரொலிப்பது. காந்தாரி ஒருபுறம் வஞ்ச மகளென்றும் மறுபுறம் பேரன்னையாகவும் குந்தி ஒருபுறம் விழைவின் வடிவாகவும் மறுபுறம் முதன்னையாகவும் இருந்தாள் என்பது அது. அவர்கள் இப்படி முழுமையாக திகழும் இடம் இளமை பருவத்தில் மட்டுமே. மழைப்பாடலில் வஞ்சங் கொண்டே காந்தாரி சுயோதனன் எனும் நாமத்தை துரியோதனன் என திருப்புகிறாள். அவளது தங்கைகளில் முழுமையாக அவ்வஞ்சம் வெளிப்படுவதை காணலாம். தன் நிறை நிலையால் பேரன்னையாகிறாள்.

குந்தி வளர்ந்து வரும் சித்திரம் விழைவு கொண்ட சிறுமி எழுந்து நிற்கும் சாகச கதைக்கு இணையானது. இளவரசி கனவிற்குகாக தன் உறவுகளை பலியிடுகிறாள். அரசுக்காக தலைமகனை கொடுக்கிறாள். வெல்வதற்காக ஈற்றில் தன் மக்கள் ஐவரையும் கொடுத்து விடுகிறாள். விழைவின் வடிவாக திகழும் அவளை புரிந்து கொள்ளுதல் வெற்றியை புரிந்து கொள்ளுதலும் ஆகிறது. மனிதருக்குள்ள முதல் விழைவு வாழ வேண்டும் வளர வேண்டும் என்பதே. அது அடிநாதத்தில் பசியாக வெளிப்படுகிறது. அப்பசியை வளர்க்கும் விழைவு தீயை வைஸ்வாநரன் என்றழைக்கிறோம். தீயின் முதலும் முடிவான இயல்பு தன்னில் உள்ளவற்றை உண்டு தன்னையும் உண்டு இன்மையாகி நிறைவடைவது. பாண்டவர்களை யாரென்றே அறியாது போல் மாறும் குந்தியெனும் முதன்னையை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இதுவே வெற்றிக்கான இலக்கணமும். உலகை வென்ற பின் உள்ளையும் வெல்லுதல் அல்லது உலகத்தை வென்ற பின் அதன் எதிர்பாரமையால் அது நம்மை வெல்லுதல். குந்திக்கு நடப்பது பின்னது. மழைப்பாடலில் குந்தியின் முதல் வெற்றி ஊழால் நிகழ்கிறது. இரண்டாவது வெறுமை பாண்டுவின் இறப்பில் நிகழ்கிறது. போர் களத்தில் ஊழாகி வந்த இளைய யாதவர் முதலாவதை ஈட்டி தருகிறார். இரண்டாவது முழுமை பெயரர் தீயில் மடிகையில் ஊழால் நிகழ்த்தப்படுகிறது.

குந்தியின் ஆறு மைந்தர்கள் ஆறு முழுமை நிலையின் வடிவுகள். செங்கதிர் வடிவான கர்ணன் அவளது முதிரா இளமையின் கனவுகளில் உதித்தவன். எவரும் தன் இளமையை வெல்வதில்லை. ஒவ்வொரு முறையும் அதன் எழுச்சி கண்டு அவனை நசுக்குகிறாள். சூரியனை போல தன் பெருந்தன்மையால் வென்றெழுந்து கொண்டே இருக்கிறான். கார்க்கடலில் அவளுக்கு வரந்தருகையிலும் அவன் அவ்வாறே உள்ளான். கர்ணனின் அடையாளம் என்பது நாகமும் கதிரும். நாகம் விழைவின் வடிவம். அவன் பிறப்பில் இருந்து தொடரும் அரச நாகம் குன்றா விழைவின் வடிவம். தனக்கு மீறியதை எவரும் வைத்து கொள்ள விரும்புவதில்லை. ஒவ்வொரு முறையும் அது உலகால் விரட்டப்படுகிறது. அதுவே கதிர் மைந்தனுக்கு நிகழ்கிறது. அன்னை முதற்கொண்டு எல்லோராலும் அவன் துரத்தப்படுகிறான்.

கர்ணனின் பிறப்பில் இருந்து அவனை தொடர்ந்து வருவது அரச நாகமும் பொற்கதிரும். அதாவது பெருவிழைவும் விழைவால் உண்டான வஞ்சமும் இவ்விரண்டை கடந்து சென்று அள்ளிக் கொடுக்கும் பெருநிலையும் இயல்புகளாய் கொண்டு அதன் துருவங்களுக்கு இடையில் தத்தளிப்பவன். தன் வஞ்சத்தையும் விழைவையும் வள்ளல் பெருந்தன்மையால் வென்றெடுக்கும் காவியமே அவன் வாழ்வு. நாகர் குலத்து தட்சனை அவன் ஏந்தி கொள்வது தன் பெருநிலையால் அன்றி வஞ்சத்தால் அல்ல. அதை உணர்கையில் அவன் களத்தில் முழுயடைகிறான். சொல்லப்போனால் வெண்முரசின் போர்க்களத்தில் முதல் முழுமையின் மரணத்தை தழுவி கொள்பவன் கதிர் மைந்தனே. விழைவு வஞ்சமாக திரிவதில் தொடங்கி அளியாக பெருகி உலகை நிறைக்கும் உன்னதம் வரைக்கும் அவை ஒன்று பிறிதொன்றாக மாறும் ரசவாதம் மாமனிதன் ஒருவனுள் நடப்பதே கர்ணனின் கதை.

கர்ணனை பற்றி பேசுகையில் பெண்களை பேசாது கடந்து செல்வதில்லை. அவனது முழுமைத்தன்மையாலேயே பெண்களை ஈர்ப்பவன். அம்முழுமையே தடையென அமைந்து காதல் இன்பம் கிடைக்க பெறாதவன். திரௌபதி அவனை விலக்குவது அவளை முழுமையாக நிறைப்பவன். எனினும் அவளால் நிறைக்க ஏதுமில்லாதவன். வெல்பவனாயினும் வென்றவற்றின் மீது உளம் கொள்ளதவன். அக விரிவால் துரியோதனன் போன்றவனுக்கு கொடுப்பதில் ஒரு குறையும் இல்லாதவன். எனவே அகம் நிறைந்தவளால் அகற்றப்படுகிறான். இதன் முழுவீச்சு பிற மைந்தர்க்காக போர் களத்தில் கர்ணன் முன் இரக்க வரும் காட்சியில் விரிவும் ஆழமுமாக அமையும் உச்சக்கட்ட நாடக தருணம். தாயும் மகனும் கொள்ளும் நுண்ணிய உணர்வுகள் வெளிப்பாடு கொள்வது.

வைஷாலி நிலை மலர் சூரியனின் முன் கொள்ளும் மலர்வும் தன்னிரக்கமும் என இருநிலைகளால் அலைக்கழிக்கப் படுகிறாள். அது மஞ்சத்தில் மலர்வாகவும் தனிமையில் தன்னிரக்கமாக அதன் விளைவாக புறத்தே கசப்பாக நிற்கிறது. அக்கசப்பில் இருந்து அவள் அவனோடு உடனேறுகையில் கொள்ளும் மலர்வில் நிறைவுறுகிறது. காயில் துவர்த்து புளித்து கனியில் இனிப்பாகிறது.

சுப்ரியை மணக்கையில் தன் வஞ்ச முகத்துடன் வெளிப்படுகிறான். அவளும் அவ்வஞ்சத்தோடே அவனை எதிர் கொள்கிறாள். ஆனால் பெண் பெருங்கனிவுடன் வந்து நிற்கும் தருணமொன்று ஆணின் வாழ்க்கையில் உண்டு. அதை இழந்தவன் பெண்ணை அல்ல, பெண்ணென்று இங்கு சூழ்தமைந்த புவியின் கனிவை இழந்தவனே. நெடுந்தூரம் சுற்றி சென்று மட்டுமே மீண்டும் அடையத்தக்கது. அத்தருணம் முதற்கனலில் இருந்து தொடர்கிறது. அங்கே பீஷ்மர் அம்பையை விலக்குவது போன்றே, வேள்வி அவையில் வெளித்தள்ளப்பட்டு மது களியில் திளைக்கையில் சுப்ரியை வந்து நிற்கிறாள். இவனும் பீஷ்மராகிறான். இருவரும் சுற்று வழியில் சென்று உயிரை விலை கொடுத்து இழந்ததை பெற்று கொள்கிறார்கள்.

கர்ணனை தாண்டி சுப்ரியை வெண்முரசின் முதன்மை பெண்களில் ஒருத்தி. அவளுக்கு கணவனை தாண்டி உறுதியான தனியாளுமை உண்டு. நாகர் மகளுடன் நகரில் இறங்கி விடுபவள் கலைகளில் தோயும் பெண் மனம் ஏங்கும் விடுதலையை உணர்த்துவது. நிகராக தோற்கும் ஆண் எவ்வாறு சிறுக சிறுக சிறுத்து அவள் மனதில் இடமில்லாதவனாக மாறுகிறான் என்பதை வேள்வியவையில் ஜயத்ரதனை அவள் எதிர்கொள்கையில் காண்கிறோம். இதன் உக்கிரம் ஆணால் உணரப்படுவது யுதிஷ்டிரனில் மட்டுமே. சொல்வளர்காடு முழுமையும் அத்தனை தத்துவ சிந்தனைகளுக்கும் அடியில் எரியும் தீயென கிருஷ்ணை மேல் ஏக்கம் கொள்கிறார். இதனூடாக தத்துவ சிந்தனைகள் அவை வாழ்க்கையில் மலராதவரை வெற்று குப்பைகளா என கேள்வி எழும்புகிறது. யுதிஷ்டிரன் அத்தீயில் இருந்து அதற்கப்பால் தன்னுள் எரியும் பாசமெனும் தீயை கண்டு நிறைவடைகிறார்.

யுதிஷ்டிரனில் காண்பது ஆணின் ஒளிமிக்க பக்கத்தை என்றால் வேள்வி அவையில் சுப்ரியை சீண்டும் கர்ணனில் இருள் உலகை காண்கிறோம். தோற்கடிக்கப்பட்டவர்கள் தங்கள் தோல்விகளை மீண்டும் மீண்டும் ஆக்கி அகம் உருக விழைகிறார்கள் போலும். அந்த தோல்வி மகத்தான வெற்றியாக எந்த புள்ளியில் நிலை கொள்கிறது என்பது கர்ணனில் எழும் வினா.

இளைய யாதவரின் இறப்புடன் துவாபர யுகம் முடிந்து கலி பிறக்கிறது. கலியில் பாண்டவரும் அவர் துணைவியும் விண்ணேகுகிறார்கள். அந்த பயணத்தின் அறிவிப்பாளர் யுதிஷ்டிரரே. அதில் முழுமை காண்பவரும் அவரே.

குந்தியின் இரண்டாவது மகனும் பாண்டுவின் முதன்மை மைந்தனுமான யுதிஷ்டிரனின் பிறப்பு ஒரு திருப்புமுனை. அது விழைவு வெற்றிக்கு பதில் அறத்தை தேர்ந்ததன் சித்திரம். இது மிக துலக்கமாக குந்தி ஆற்றில் கர்ணனை பலிக்கொடுக்கையில் உறுதியாகிறது. அவள் ஏன் யுதிஷ்டிரனை தேர்ந்து கொண்டாள் ? இக்கேள்வி இடையறாது விவாதிக்கப்படும் ஒன்று. தன்னை கைவிடப்பட்டவளாக எங்கோ உணர்ந்ததன் விளைவால் அறத்தை தேர்ந்து கொண்டாள் என்று தோன்றுகிறது. கையறுநிலையில் கைக்கொடுப்பது வலிவோ விழைவோ அல்ல, சார்ந்துள்ள அறமே. அதுவே நம் மேல் புவியாளும் நியதி கருணை கொள்ள செய்வது. குந்திக்கும் பாண்டுவுக்கும் தனித்தனி திட்டங்கள் உண்டு. எனினும் அவர்களின் வழி ஊழால் நிகழ்த்தப்பட்ட பெருமாற்றம் அது.

யுதிஷ்டிரனின் தத்தளிப்பு விழைவும் நெறிக்கும் என ஒற்றை வரியில் வகுக்கலாம். இந்த இருமுனைகளுக்கு இடைப்பட்ட எண்ணாயிரம் நிற பேதங்களை அவரின் வழி அறிகிறோம். யுதிஷ்டிரன் மட்டுமே ஐவரில் பாண்டுவிற்காக பெரிதும் உளமுருகுபவர். பெரிதும் பாண்டுவின் குணங்களான அடைக்கலத்தையும் அடையும் விழைவை கொண்டவர். வெண்முரசின் மெய்ஞான பயணங்களை கூறும் மூன்று நூல்களில் முதன் நூலான சொல்வளர்காடு யுதிஷ்டிரனுடையது. பெரும் தத்துவங்களுக்கு அடியில் குமையும் மானுடனின் வேட்கைகளை அறிவது. அறிந்தறிந்து சென்று தன்னை கண்டடைகிறார்.

அத்தனை அறிதல்களும் குருதியை கொடுக்கையிலேயே முழுமை பெறுகின்றன. சில அறிதல்கள் அவற்றை தேர்ந்து நாமே என உணர்ந்த கணமே தங்கள் விளைவை கொடுக்க தொடங்குபவை. முதற்பாண்டவர் மூவரும் பயணம் செய்து அடைந்த அறிதல்களால் கைவிடப்படுதலை இந்த புள்ளியில் வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. மூவரும் சென்று அடைந்தவற்றை அவற்றின் பொருட்டு மட்டுமேயாக்கி அமைந்தவர்கள் அல்ல. அதற்கு பின்னால் அவர்களின் ஆணவமும் உலகியல் வேட்கையும் உள்ளன. இங்கிருந்து பெற்றவற்றை துறந்து சென்று அடைந்தவற்றை இவற்றிற்காக பணயம் வைக்கையில் அவர்களையே பலி கொள்கின்றன அவை.

யுதிஷ்டிரனை பற்றி பேசுகையில் அவரது சிறிய தந்தையான விதுரரை நினைவு கூர்கிறேன். விசித்திர வீரியனின் கூறுகளே இல்லாத ஒரே மகன் விதுரனே. அதற்கான காரணமும் நாமறிவோம். சேடிப்பெண் சிவை வியாசரை விரும்பி ஈன்று கொண்ட வடிவம். இளம் விதுரன் அஸ்தினபுரியின் கைவிடு படைகள் ஏவப்படும் நாளே அனைத்தும் சீர்நிலை பெறும் என உளயெழுச்சியுடன் சொல்லும் தருணம் மழைப்பாடலில் உண்டு. அப்போது ஒருநாள் வேங்கை மரத்தை வேரோடு சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்ட வேழம் ஒன்று இளவெயிலில் சுடர்ந்து நின்ற மலர்களை உண்ணுவதை பார்த்து எவ்வகையிலும் நிறைவடைய செய்யாத பொருளில்லாத செயலென்று எண்ணுவான்.

ஒருவகையில் அஸ்தினபுரியின் பேரமைச்சரான விதுரர் தன் அமைச்சு திறனால் வேழம் தான். இளமையில் நாம் அபாயங்களை விரும்புகிறோம். அப்போது மட்டுமே நம்மை யாரென்று உலகிற்கு காட்ட இயலும். அதுவும் அவற்றிலிருந்து பிறரை காப்பவனாக எண்ணி மகிழ்கிறோம். விதுரருக்கு கண் முன் அப்படி அபாயம் நிறைந்த சாகசத்தருணம் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளை காண்கையில் கிடைக்கிறது. அவை செல்லாது இருக்கவே அவரது அத்தனை முயற்சிகளும். அவையோ யானை புஷ்பம் உண்டதை போன்றது. பூவை உண்பதால் நிறைவு ஏற்பட போவதில்லை. மரம் வளர்வது நிற்க போவதும் இல்லை. பூவிற்கும் ஒரு பற்றாக்குறையும் வரப்போவதில்லை. இந்த எளிய அறிதலின் மகிழ்ச்சியில் நின்று கொண்டு வாழ்க்கையில் தத்தளிப்பவர். அந்த ஆணவம் விரிசலிடும் கணம் பிரயாகையில் இளைய யாதவனால் நிகழ்த்தப்படுகிறது. இமைக்கணத்தில் அவராலேயே முற்றாக உடைத்து காட்டப்படுகிறது. அங்கே சிவையின் வஞ்சம் விதுரரின் ஆழத்தில் உறைந்து அவரது செயல்களை எப்படியெல்லாம் தீர்மானித்தது என்றும் காண்கிறோம்.

குந்திக்காக ஏங்குவதும் அத அஸ்வதந்தமாக அவரோடே தங்கி விடுவதும். ஆழத்தில் சிவையின் வஞ்சமாக வெளிவருவதும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்க முடியாத வண்ணம் கலந்துவிட்டவை. தன் கட்டுமானங்கள் என நினைத்தவை உளுத்து கொட்டிய பிறகே உள்ளம் ஓட்டி நிறைவை சென்றடைகிறார். பார்க்கப்போனால் எல்லோருக்கும் அதுவே கிடைக்கிறது.

யுதிஷ்டிரர் விதுரரிடமிருந்து பெற்று கொள்வது அறிதலின் இன்பத்தை. ஆனால் அவரில் அது ஆகங்காரமாக திரளாமல் தடுப்பது எது ?  விதுரரை போல் நெறிகளை காக்கும் அமைச்சன் அல்ல, நெறி வேண்டி நிற்கும் மக்களின் கண்ணீரை துடைக்க நினைக்கும் அரசர் அவர். ஒவ்வொரு முறையும் ஒன்றை அறிகையில் அது எவ்வகையில் தனக்கும் தன் குடிகளுக்கும் பயன்படும் என ஆராய்ந்து கொண்டே இருக்கிறார். இத்தணியா துயரில் இருந்தே அவரது மீட்பு அமைகிறது.

யுதிஷ்டிரரை நினைக்கையில் அவரது மறுபாதியாகிய சகுனியை நினைவுகூராமல் செல்வதற்கில்லை. நீர்க்கோலத்தில் வரும் சகுனி வேடத்தில் இருந்து ஒன்றை சொல்லலாம். ஆளுமை திரிந்த யுதிஷ்டிரனே சகுனி என்று. இளமையில் நாம் பார்க்கும் சகுனி எத்தனை களங்கமற்றவன். தன் அக்காளின் பொருட்டு வாழ்க்கையை கொடுத்தவன். பிரயாகையில் தான் நம்பிய அறங்களால் கைவிடப்பட்டவன் பாலைவனத்து ஜரை அன்னையான ஓநாயை தேர்வு செய்து கொள்கிறான். தருமரும் சூதுக்களத்தில் தான் நம்பியவர்களால் கைவிடப்பட்டவர். முன்னவர் இருளின் பாதையில் செல்கையில் பின்னவர் ஒளிக்கு வருகிறார். கையறுநிலைகளில் ஒளியை நோக்கி வருவது தருமரின் தத்துவ கல்வி மூலமே என்று நினைக்கிறேன்.

சகுனி சொன்னவுடன் கணிகரை அழைத்து கொள்ள வேண்டும். வெண்முரசு முழுக்க இருவர் மர்மங்களால், அறியமுடியாமைகளால் நம்மை ஆட்கொள்பவர்கள். முதலாமவர் இளைய யாதவர். இரண்டாமவர் கணிகர். எங்கிருந்து வந்தார் என்பறியாது வந்தவர். இறுதியில் இளைய யாதவரில் கலப்பவர். ஆம் அவனே அவரும். தீமையை குற்றத்தை அதன்பொருட்டு மட்டுமே ஆற்றுபவர். ஆற்றுக ஆற்றி அமைந்தவனின் அடிகளில் கலந்தவர்.

யுதிஷ்டிரரை வெட்டி இருகூறாக்கி அவரது நீங்கா பற்றிற்கு உடலும் உள்ளமும் கொடுத்தால் பீமனும் ஆறாத அறிதலின் வேட்கைக்கு பொங்கும் காமம் பூத்த அர்ஜுனனும் நம் முன் நிற்பார்கள். இருவரும் வலமும் இடமும் என அமைந்த கைகள்.

பீமனின் பெருங்கைகளை மறக்கவோ துறக்கவோ எவரும் விழைவது இல்லை. நினைத்து கொள்கையில் அமுதால் நிறைந்தவன் நஞ்சை ஏற்று விழுந்து அமுதின் துளி கண்டு நிறைவடைந்தவன் என்றே எண்ணத் தலைப்படுகிறது. வெண்முரசின் வாசகர்கள் எவருக்கும் உணர்வெழுச்சி கொள்ள செய்பவன் பீமன். உணர்வுகளால் உறவுகளால் தன்னை நிறைத்து கொள்கிறான். உணவிடும் கைகள் அன்னையின் கரங்கள். அவனது பயணமும் வழிவழியான அன்னையரை சந்தித்து செல்வதாக மாமலரில் அமைகிறது. ஞானத்திற்கு பதில் உள்ளத்தமர்ந்தவளின் விருப்பத்து மலரை சூடி கொள்பவன். அவளது நறுமணத்தின் பொருட்டு தன்னை துளைக்கும் அழுகல் மணத்தில் அன்னையின் முன் படைத்து கொண்டவன்.

திரௌபதி ஏன் ஐவரில் பீமனில் நிறைவடைகிறாள் ? வெண்முரசில் கர்ணனுக்கு அடுத்தப்படியாக உணர்ச்சியில் கண்ணீர் விடும் பகுதிகள் பீமனுடையவை. அறிவல்ல, உணர்வே பெண்ணுக்கு நெருக்கமானது. தன்னை தாங்குபவனாகவும் தன்னால் தாங்கப்படுபவனாகவும் உணரும் ஆணாக திரௌபதிக்கு அவன் இருப்பதால் என சொல்லலாம்.

உணர்வுகளை அறுத்துவிட்டு அறிந்து கடத்தலை தன் பாதையாக கொண்ட அர்ஜுனன் மனிதனின் அடிப்படை உணர்ச்சியான காமத்தால் ஆட்டுவிக்கப்படுபவன். பிற எல்லாரையும் விட அவன் மட்டுமே எங்கும் அமையாது சென்று கொண்டே இருக்கிறான். காமம் என்பது நிறையாத பரவுதல். கூடலின் உச்சத்திற்கு பின் மீண்டும் புதிய ஒன்றை தேடி தவித்து கூடும் இணையரை போல் அர்ஜுனனும் ஒவ்வொரு அறிதலுக்கும் பின்பும் அமையாது சென்று கொண்டிருக்கிறான். அவனது விண்ணுலக பயணத்தில் தனித்தனி இருள்வழி பாதையில் அவன் வழி அமைந்து விடுவது இயல்பு.

விழைவின் வடிவான அர்ஜுனனின் முதல் உடைவு துரோணரின் சரிவில் தொடங்குகிறது. அவர் ஏற்கெனவே தனிமனிதனாக சரிந்து விட்டவர். ஆசிரியராக உயர்ந்து நின்றிருந்தார். அப்பீடமும் ஏகலவ்யனும் கர்ணனும்  வீழ்த்தப்படும் போது சரிகிறது. அது துருபதன் இழிவுறுகையில் அர்ஜுனனுக்கும் நிகழ்கிறது. அதே காலத்தில் கிருஷ்ணனை அவன் சந்தித்தல் ஊழின் ஆடலென்றே கொள்ள முடிகிறது. வஞ்சத்தின் வலியில் இருந்து முடிவிலா வசீகரம் கொண்ட இளைய யாதவனால் மீட்கப்படுகிறான்

அர்ஜுனனின் கனவு கர்ணன். கொள்ளுதலுக்கும் கொடுத்தலுக்குமான ஆடல். ஒன்று பிறிதொன்றாக மாற முயற்சித்து ஒன்றென்றாகும் தருணம். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்த பின்பு எஞ்சுவது. பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்” பீஷ்மருக்கு வியாசர் அவர்களது முதல் சந்திப்பில் கூறுவது. இன்று வெண்முரசு முழுவதையும் வாசித்து முடித்து இவ்வரியை நினைக்கையில் மலைக்க வைக்கிறது. அத்தனை பேரும் அப்போரில் இழக்கிறார்கள். அது வழியே தங்கள் ஞானத்தை ஈட்டி கொள்கிறார்கள். அந்த இழப்பை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சித்திரம் ஒன்று. அது அவர்களை இல்லை வாழ்க்கையின் ஒரு முகத்தை காட்டுகிறது.

அவ்விழப்பை கண்ணீரோடு எதிர் கொள்பவன் அர்ஜுனன். புன்னகையுடன் ஏற்பவன் கர்ணன். கனவுகளுக்கு தான் கலைவதன் துயரமில்லை. ஏனெனில் அது நிகழ்ந்தவுடன் முழுமை கொள்கிறது. யதார்த்தமே இழக்குந்தோறும் வருத்தம் கொள்கிறது. அர்ஜுனன் யதார்த்தத்தின் குழந்தை. இந்திரனின் மைந்தன். முழுமைக்கான தவிப்பே அவன். ஆனால் முழுமையல்ல. அவனது முழுமையும் அத்தவிப்பே. இந்த புள்ளியில் இருந்து வெண்முரசினுள் புகுந்து வாசிக்க பெருஞ்சாத்தியம் ஒன்றுண்டு.

பெண்களால் ஈர்க்கப்படுவதும் அவனது இவ்வியல்பாலேயே. தன்னை இழந்து ஞானத்தை அடைய நினைப்பது. எனினும் அத்தன்னுணர்வை கைவிட இயலாதவன். புடவி படைத்தவன் காமனுக்கு இட்ட நெறி அது.

அர்ஜுனன் துரோணரை நினைவு கொள்ள வைத்துவிட்டான். துரோணரின் உள்ளில் இருப்பது தந்தை மேல் அவர் கொண்ட வஞ்சமே. அது வழிவழியாக பரவி பலருக்குள் விரிவது இப்புடவி எவ்வண்ணம் நம் அறிதல்கள் அப்பால் தர்க்கமின்மை அல்லது நமது தர்க்கங்களுக்கு எட்டாத விரிவை கொண்டது என உணர்த்துவது.

தந்தையால் புறக்கணிக்கப்பட்டவர் அதை ஈடுசெய்ய இன்னொரு புறக்கணிக்கப்பட்ட துருபதனை உற்ற நண்பனாக ஏற்று தந்தைமையை ஏற்று கொள்கிறார். அது அவர் வாழ்க்கையின் இனிய தருணங்களில் ஒன்று. மறுபறம் துருபதன் அவரை அவை முற்றத்தில் இழிவுப்படுத்துவது இயலாதவர்களின் இருண்ட முகத்தை வெளிக்காட்டுவது. ஒருவர் வஞ்சத்தை இன்னொருவர் வளர்த்து இருவரும் எரிதல். இருவரும் தங்கள் மகன்களுக்கு வஞ்சத்தை கையளித்து செல்கிறார்கள். துருபதனில் குறிப்பிட வேண்டிய மற்றோர் அம்சம் அவ்வஞ்சத்தின் மறுமையாக கனிவை தன் உருவாக கிருஷ்ணையை சொல்ல வேண்டும். மேற்பரப்பில் குளிர்ந்து தண்மையாகி அடிப்பரப்பில் இறுகி வைரமாக நிற்பவள். துருபதன் மகளுக்கு கனிவையும் மகனுக்கு வஞ்சத்தையும் பிரித்து வைக்கிறார். துரோணர் அஸ்வத்தாமனுக்கு இரண்டையும் அளித்து நீங்கா எரிதழலுக்கு அனுப்பி வைக்கிறார்.

திருஷ்டத்யும்னன் தன் வஞ்சத்தை கிருதவர்மனுக்கு பற்ற வைத்து கொடுப்பதில் அவனது ஆழுள்ளம் செயல்படும் முறையை நாம் அறிய முடிகிறது. துரோணரை வெல்ல தன்னால் இயலுமா என்பதை தான் இப்படி அவனது வேறொரு இடத்தில் கணக்கு தீர்த்து கொண்டதோ என எண்ண தோன்றுகிறது. மறுபுறம் கிருதவர்மவன் வஞ்சத்தால் வாழ்வு முழுவதும் எரிகிறான். அதுவே அவனே சொல்வது பாமையின் மீதான ஏக்கம். அது இறுதியில் அவளை சந்திக்கையில் அணைகிறது. இங்கெல்லாம் காண்பது அத்தனை வஞ்சத்திற்கு பின்னும் எல்லோருள்ளும் கனிவு விதையாக இருக்கிறது. அது கீழ்நோக்கி முளைத்தால் வஞ்சமாகி விடுகிறது. அவை நாணயத்தின் இருபக்கங்கள் ஒன்று வெளிப்படுகையில் மற்றது மறைந்து நிற்கிறது. ஆக்கமும் அழிவும் என. இதே சம்பவங்களில் எவரோ நமக்கு இயற்றிய செயல்களை பிற எவரோக்கோ நாம் இயற்றுகிறோம், இந்த இயக்கத்தை அறிகையில் சித்தம் பிரமிக்க செய்கிறது. நம் எளிய மனங்களின் விதிகளுக்குள் அடைப்படுவதல்ல பிரபஞ்சம்.

வேடிக்கை என்னவென்றால் வெண்முரசு போன்ற ஒரு செவ்வியல் ஆக்கத்தில் இருந்து எதை அடைந்தாலும் அவ்வாக்கத்தில் முன்பே அது எழுத்தாக இடம் பெற்றிருக்கும். இங்கு முந்தைய பத்தியில் சொன்ன கருத்தறிதலும் ஓரிடத்தில் வெண்முரசில் இடம்பெறுவதே. அப்படியெனில் வாசகன் அடைவது அது நாவல் முழுக்க எப்படி விரவியுள்ளது என்பதை. அதற்கப்பால் இக்கருத்து பரப்புகளின் ஊடாக முயங்கி கருத்தெட்டாத நுண்மையொன்றை அடைவது. பார்க்கப்போனால் பிறவற்றில் இருந்து பேரிலக்கியங்கள் வேறுபடுவது இந்த புள்ளியில் தான். இரண்டாம் நிலை படைப்புகள் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் சென்றடைய வைக்கின்றன. ஆனால் பேரிலக்கியங்கள் அவற்றிற்கும் அப்பால் உள்ள முழுமையான உள்ளார்ந்த மாற்றத்தை நம்முள் நிகழ்த்துகின்றன.

வஞ்சத்தின் மறுபக்கமாக நிற்கும் கனிவிலிருந்து இப்போது வெண்முரசுக்குள் நுழைவோம். அதன் முதன்மை ஆளுமை திரௌபதி. அவளில் தான் வஞ்சம் எப்படி கனிவாகிறது. ஆணவம் இழந்து அன்னையாகும் படிநிலை சித்தரமும் விரிவாக அமைகிறது. இதே விஷயத்தை காந்தாரியிலும் நாம் காண்கிறோம் இருவரும் பேரன்னை என்ற நிலையையும் அதற்குரிய பெருந்துயரையும் சென்றடைகிறார்கள். ஆனால் அதன் வெவ்வேறு படிக பட்டைகளை துலக்கமாக அறிய முடிவது திரௌபதியின் வாயிலாக. அவள் குந்தியின் விழைவிற்கும் ஆணவத்திற்கும் காந்தாரியின் அளிக்கும் தன்னை வாரிசாக அமைத்து கொண்டவள். இரண்டிலும் சென்று முன்னதை இழந்து பின்னதை பெறுபவள். அதுவே அவளது ஞானமாகவும் திகழ்கிறது. கல்யாண சௌகந்திகத்தின் மணம் அவள் முழுமை. அழகு அழகாக மட்டுமே நின்று முழுமை கொள்வது.

திரௌபதியின் கனிவை முழுவதும் பெற்று கொள்பவன் பீமன். அதை உணர்ந்து கொள்ளும் பாண்டவன் நகுலன். நகுலனையும் சகதேவனையும் இணைத்தே புரிந்து கொள்ள முயல வேண்டும் என நினைக்கிறேன். ஒருவன் குதிரையை பின்தொடர்ந்தவன், இன்னொருவன் வீண்மீன்களை பின்தொடர்ந்தவன். இரண்டும் முற்றாக அறிவதற்கு அப்பாலுள்ளவை. இயற்கையும் ஊழும். இவை ஒன்றையொன்றை நிரப்பி எங்கே முழுமையடைகின்றன என்பது வினா.

இதுவரை பார்த்த பாண்டவர் ஐவருக்கும் மறுபக்கமாக நின்று துலாத்தட்டை சமன் நிலைக்கு கொண்டு வந்தவனும் தன் பேராண்மையால் வென்று நின்றவனுமான துரியோதனனை நினைக்காது முடிவதில்லை. கௌரவர் நூற்றுவரும் அவனே. அவன் ஒருவனை அறிதல் நூற்றவரையும் அறிதல். அவர்களில் துச்சாதனன், சுபாகு, குண்டாசி, விகர்ணன், துர்மதன் என ஒவ்வொரு தம்பியரும் அவனது ஒரு முகம். பிரித்து பிரித்து அறிந்து தொகுத்து திரட்டி கொள்ள வேண்டியது துரியோதனனின் ஆளுமை.

இங்கே ஒன்றை சொல்ல வேண்டும், வெண்முரசு எனக்கு மீட்டளித்த மாபெரும் மனிதர்களுள் துரியோதனனும் ஒருவன். அவனது வீழ்ச்சிகளுடனும் கூட தன் பெருந்தன்மையால் உயர்ந்து நிற்கும் தன்மை உளம் நெகிழ செய்வது. அதன் பொருட்டே ஜராசந்தனும் பூரிஸ்வரசுவும் அவனடியில் அமர்ந்து கொண்டவர்கள். துரியோதனனின் ஓரே வீழ்ச்சி திரௌபதியின் இழிவுப்படுத்தல். அது பெண்ணை அவளது மொத்த அர்த்தத்தில் இழிவு செய்வது. எந்த ஆண் மகனும் கூனிக்குறுகி கூசி நிற்க வேண்டிய தருணம். பன்னிரு படைக்களத்தில் நிகழ்கையில் கனவுகளில் எல்லாம் அலைக்கழிக்கப்பட்டேன். இன்று மீள படித்தால் அதன் ஆழத்தை சென்றடைய முடியலாம். ஒரு உணர்வாக உள்ளத்தில் நிலை கொள்வது. சிந்திக்கையில் தோன்றுவது பேராண்மை என்பதில் எப்போதும் பெண்ணை கீழாக நினைக்கும் அம்மாசும் கலந்தே உள்ளது போலும். திருதராஷ்டிரரிலும் இது நுட்பமாக வெளிப்படுவது. சம்படையும் அணங்காக அமர்வதும் இக்காரணத்தால். வெய்யோனில் ஊடுபாவாக வரும் தீர்க்கசியாமரின் கதை திருதராஷ்டிரரை அறிய உதவும் ஆடி. அங்கிருந்தே இம்முடிச்சை அவிழ்க்க இயலும் என தோன்றுகிறது.

இரண்டாவது பீமன் மேலான துரியனின் வஞ்சம். ஸ்தூனகர்ணனின் வரத்திற்கு பின் முழு ஆண்மையுடன் நிற்கும் துரியோதனனுக்கு கதை வீச்சில் எவ்வகையிலும் பீமன் நிகரல்ல. எனினும் ஏன் வஞ்சம் ? வண்ணக்கடலில் அமைந்த கரடி சண்டை கடலை போலவே முடிவில்லாது விரிவு தந்தபடி உள்ளது. அச்சண்டைக்கு பின்னரே துரியோதனன் தன்னை முழுமையான ஆணாக மாற்றி கொள்கிறான். இது அவன் உள்ளுணர்ந்த பலவீனத்தை காட்டுகிறது. அதுவே கனிவு திரிந்து வஞ்சம் கொள்ள செய்கிறது.

இதுகாறும் எழுதிய இவர்கள் வெண்முரசின் முதன்மை கதாப்பாத்திரங்களில் மீச்சிறு பகுதியினர் மட்டுமே. எழுதும் ஓட்டத்தில் இவர்கள் எல்லாரும் வந்தார்கள். இவர்களை தாண்டி, அறத்திற்காக தன்னை கட்டி கொண்ட கிருபி, இருண்ட பாதைகளில் நடந்து சென்ற கிருபர், மகனில் தன்னை நிரப்பி பூசலும் பிணக்குமாக தத்தளித்து நின்ற சல்யர். மலைமுடித் தனிமையில் இருந்து இறங்கி தன்னை நிறைவு செய்து கொள்ளும் பால்ஹிகர், அன்னையின் வஞ்சத்திற்காக வாழ்ந்து அது வஞ்சமாக என குழம்பி தவித்து அம்மையப்பனை ஆடல் தரிசனத்தை பெற்று அதற்கும் அப்பால் புவி தாங்கும் வராகத்தை கண்ட சிகண்டி, மலை மைந்தன் பூரிஸ்வரஸ், பெற்றோரால் கைவிடப்பட்டு வஞ்ச தீர்த்தமைந்த ஜராசந்தன், தன் சிற்றெல்லையை சகிக்காது சீறி மடிந்த சிசுபாலன் என பலர் இருக்கிறார்கள்.

அதோடு நில்லாமல் ஆயிரக்காணக்கான துணை கதை மாந்தர்கள், அவர்களின் வாழ்க்கையில் இருந்து தெளியும் ஞானம். மையக்கதையை ஊடுவெட்டி செல்லும் கிளைக்கதைகள். பாரதம் என்ற நிலப்பரப்பும் அதன் பல்வேறு குடிகளும் அங்கு நிலவும் வாழ்க்கையும் வணிகமும் தொழில்நுட்பமும் இந்திரபிரஸ்தம் துவாரகை என்னும் வியக்க வைக்கும் நகரங்களும் இவற்றிற்கு நேர்மாறாக மலைகளில் தேவதாருவின் மேல் சல்யரின் நகரும் என வெண்முரசின் காட்சிகள் விரிந்து சென்றபடியே உள்ளன.

மைந்தர்களில் அன்பின் பொருட்டு மட்டுமே என கடோத்கஜன். பீமனாக இருந்து காட்டில் அவனோடு கழித்த இனிய பொழுதுகள். தந்தையையும் மாமனையும் மீறிவிட துடிக்கும் அபிமன்யு, பாண்டவரின் மாறு தோற்றங்களாகவே விளங்கும் உப பாண்டவர்கள், துரியோதனனின் மைந்தர்கள் என பல்லாயிரம் பேர் முன் வந்து நிற்கிறார்கள். இவர்களை பற்றி எல்லாம் எழுதும் சொற்கள் என்னிடம் இல்லை.

இந்நாவல் பெருக்கின் பாட்டுடை தலைவனாகிய இளைய யாதவரை சொல்லாது நிறைவுறுவதில்லை. அறியமுடியாமைகளால் மட்டுமே அறிய படுபவராக இருப்பவர். ஆழம் அளிக்கும் கவர்ச்சியில் நம்மை உள்ளிழுத்து கொள்பவர். அவரை எங்காவது சிறிதேனும் தொகுத்தேனா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் காதலும் பணிவும் வியப்பும் வெறுப்பும் பயமுமாகவே பார்த்திருக்கிறேன். இந்நாவல் பெருக்கில் எவருக்கேனும் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியிருக்கிறது அதன் முதல் இடம் இளைய யாதவர் மட்டுமே. வியாசர் இமைக்கணத்தில் இளைய யாதவரை குறித்து சொல்கையில் ஆசிரியனை எரித்து எழுந்தவர் என்பார். இளைய யாதவரை அறிவது தன் சுயத்தை எரித்து எழுவது. இக்கணத்தில் ஒன்றே ஒன்று தான். அதற்கு இன்னும் நீடு தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்பதே.

இவ்வாசிப்பனுபவத்தை எழுத ஆரம்பிக்கையில் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இறங்கினேன். எழுத தொடங்கிய நான்கு பக்கங்களுக்குள் என் எல்லையையும் வெண்முரசின் விரிவையும் மீண்டும் உணர்ந்தேன். சிறு குழந்தை கதை சொல்கையில் பெரியது என்பதிற்கு கைகளை விரித்து காட்டி தன் கைகள் சொல்ல நினைத்த பெரியதை உணர்த்த இயலவில்லை என உணர்ந்து உடல் கொள்ளும் துடிப்பு போன்றே உள்ளம் கொண்டுள்ளேன். அறிதல்களை விரிவாக்கி முழுதுற சொல்லி கடந்து போக இப்போது இயலவில்லை. பெரும் பயணம் ஒன்றின் தொடக்கம் என்று உணர்கிறேன்,

இடையறாது தொடர்ந்த வியாசர்களின் மரபில் அமைந்த ஆசிரியருக்கு மாணவனின் பாதம் பணிந்த வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்

சக்திவேல்

 

முந்தைய கட்டுரைஒரு கணத்தில்…
அடுத்த கட்டுரைஇலக்கணம், கடிதங்கள்