பிறந்தநாள் அன்று ஏராளமான வாழ்த்துக்கள். சில ஆயிரம் என சுருக்கமாகச் சொல்கிறேன். அத்தனைபேருக்கும் ஒருவரியேனும் பதில் போடவேண்டும் என முயன்று முடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி. மூத்தவர்களுக்கு வணக்கம், இளையோருக்கு ஆசிகள்.
அறுபது என்பது ஒரு பழைய கணக்கு. இப்போது பழந்தமிழறிஞர்களின் வாழ்க்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகப்பெரும்பாலானவர்கள் அறுபதை ஒட்டிய வயதுகளில் மறைந்திருக்கிறார்கள். படங்களில் அவர்கள் முதியவர்களாகவும் தென்படுகிறார்கள். ஐம்பது கடந்ததுமே அவர்கள் முதுமைக்கான மனநிலைக்கும் வந்தமைந்திருக்கிறார்கள். இன்றைய மருத்துவம், வாழ்க்கையின் வாய்ப்புகள் ஆயுளை நீட்டி அதற்கான உள அமைப்பையும் உருவாக்கிவிட்டிருக்கின்றன
ஆனாலும் ஐந்து வியாழவட்டக் காலம் என்னும் சோதிடக் கணிப்புக்கு முன்னோர் வேறேதாவது கணக்கு வைத்திருக்கலாம். அதை நான் கொண்டாடவேண்டியதில்லை, கொள்ளாமலிருக்கவும் வேண்டியதில்லை. அயலூர் நண்பர்களுக்கு வாழ்த்தை அனுப்பினேன். லக்ஷ்மி மணிவண்ணனை மட்டும் வீட்டுக்கு வரவழைத்து ஓர் ஆசி. ஆசி அளிக்க தகுதியை வயது அளித்திருக்குமென்றால் அதை ஏன் வீணடிக்கவேண்டும்?
பிறந்தநாள் மற்றுமொரு நாளே என முடிவுசெய்துவிட்டமையால் அன்று வழக்கம்போல வேலைசெய்தேன். திரைக்கதை விவாதம் இரண்டு மணிநேரம். ஒரு சந்திப்பு. எஞ்சிய பத்துமணிநேரம் முற்றிலும் உளம்குவிந்து வேலை. முழுநேரமும் செல்பேசியை ஓசையின்றி அமைத்து பெட்டிக்குள் போட்டிருந்தேன். 21 மாலை போட்ட செல்பேசியை 23 மாலைதான் எடுத்துப் பார்த்தேன்.
22 நள்ளிரவுக்குப்பின் தூங்கும்போது மிகப்பெரிய நிறைவை உணர்ந்தேன். இன்றும் என் யோகம் எதுவோ அதைச் செய்திருக்கிறேன். எதுவுமே என்னை அலைக்கழிக்கவில்லை. ஐந்து நிமிடம்கூட வீணாகவில்லை. பரவாயில்லை, என்னை நன்றாகவே நான் பயிற்றுவித்திருக்கிறேன். இவனுக்கு வேறேதும் தேவையில்லை, இச்செயலின் முழுமைகூடும் ஒன்றுதலே போதுமென்றிருக்கிறது.
ஏன் அந்த ஒதுக்கம் என நண்பர்கள் கேட்டனர். பலருக்கு விளக்கம் அளித்தேன். படைப்பாளியின் ஆணவம் என ஒன்று உண்டு. அதை உருவாக்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கியத்திலோ கலையிலோ செயல்படவே முடியாது. ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றோ ‘மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ’ என்றோ ‘எந்நாளும் அழியாத மாகவிதை’ என்றோ ‘நான் காவியத்தாயின் இளைய மகன்’ என்றோ ‘எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்’ என்றோ எண்ணி எழச்செய்வது அந்தவிசை. புறக்கணிப்புகளை, அறியாதோரின் எள்ளல்களை, சூழலின் சிறுமைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிப்பது.
ஆனால் அது வேறொருவருடைய நிமிர்வு. எழுதுபவனின் உள்ளம் அது. எழுதாதபோதிருப்பவனுக்கு அந்த ஆணவம் பெருஞ்சுமை. அதைச் சுமந்தலைந்தால் வெறும் கட்-அவுட் ஆகிவிடுவோம். அதற்கப்பால் நாம் நம் பலவீனங்களுடன் குழப்பங்களுடன் அன்றாடச் செயல்பாடுகளுடன் இருப்பதே இயல்பானது. வீட்டில் பாத்திரம் கழுவி தரைதுடைப்பவன் விஷ்ணுபுரத்தின் ஆசிரியன் அல்ல. தெருவில் சென்று ஒரு சிங்கிள் டீ அடித்துவிட்டு வருபவன் வெண்முரசு எழுதியவன் அல்ல. பக்கத்துவீட்டுக்காரரிடம் பேசுபவன் அவன் அல்ல.
பலசமயம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இந்தச் சாமானியனால் கைநீட்டி முந்திப்பெறப்பட்டு விடுகின்றன. அவனை பின்னுக்கிழுக்காமல் இருந்தால் நாம் நம்மை வீங்கச் செய்துவிடுவோம். அது அளிக்கும் பாவனைகள் நம்மை இயல்பாக எழுதமுடியாதவனாக ஆக்கிவிடும். பெரும்பாலும் பாராட்டுரைகளை நான் செவிகொடுத்து கேட்பதில்லை. ஒருவகை ‘சம்மலுடன்’ மங்கலாகச் சிரித்து கடந்துவிடுவேன். ஒரு பாராட்டுரை அச்சில் வரும்போது அச்சிக்கல் இல்லை. அது அந்த எழுத்தாளனுக்கு அளிக்கப்படுவது.
மேலும் இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மறுபக்கமும் உண்டு. இவற்றை இலக்கியம் வாசிக்காத, என்னவென்றே தெரியாத, சாமானியன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சில்லறை அரசியலையும் வம்புகளையும் மட்டும் அறிந்தவன், ஆனால் தான் ஒன்றும் சாமானியனல்ல என நம்புகிறவன். அவனுக்குள் ஆணவம் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது அவன் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வான். ஆனால் அவனுள் இருந்து அந்தக் குரோதம் வெளிப்படும். அதற்கு வெளியே இருந்து ஏதாவது ஓர் எளிய சந்தர்ப்பம் அமையவேண்டும், அவ்வளவுதான்.
அப்போது அந்தக் குரோதம் என்மீதல்ல, இந்நாவல்களை எழுதிய அவன்மீது என நான் உணரவேண்டும். அதுவே அப்போது என்னை நிலைநிறுத்தும் புரிதலாக இருக்கவேண்டும். தமிழ்ச்சூழலில் எப்போதும் எல்லாவகை அறிவுச்செயல்பாடுகளுக்கும் எதிரான ஒரு வலுவான குரல் உண்டு. சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் உட்பட எல்லா முன்னோடிகளுக்கும் வாழ்வின் கடைசியில் அந்த வெறுப்பின் நஞ்சு ஒரு துளி ஊட்டப்பட்டது என்பது வரலாறு. ஊட்டியவர்கள் இன்றும் அப்படியேதான் இருக்கிறார்கள், செய்தது பிழையென அவர்கள் உணரமுடியாது. அவர்களின் அமரத்துவம் இவர்களுக்கு இல்லை என்று எங்கோ இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இத்தனை காழ்ப்பும் எழுவது அந்த சிறுமையுணர்விலிருந்து.
பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கடந்துவிட்டேன். சியமந்தகம் என்னும் தளத்தில் என்னைப் பற்றி என் நண்பர்கள் எழுதிய நல்ல கட்டுரைகள் வெளியாகின்றன. ஒவ்வொருவரும் என் அன்புக்குரியவர்கள். அவர்களின் சொற்களை நான் இப்போது வாசிக்கக்கூடாது. மெல்லமெல்ல வாசிக்கலாம். எப்போதாவது கொஞ்சம் உளச்சோர்வு வந்தால் வாசிக்கலாம். இப்போதைக்கு மண்டையை கொஞ்சம் எடையில்லாமலேயே வைத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
நான் எழுதும் இச்சொற்கள் ஒரு பாவனையான தன்னடக்கம் என்றெல்லாம் சிலருக்கு தோன்றும் என நான் அறிவேன். ஆனால் இதை வாசிப்பவர்களில் இளம் எழுத்தாளர்கள் இருந்தால் அவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் சந்திக்கப்போகும் சிக்கல் இது என சொல்ல விரும்புகிறேன். இந்த இருபாற் பிளவே அச்சிக்கலை எதிர்கொள்வதற்கான சரியான வழி.
சியமந்தகம் – இணையப்பக்கம்