அமெரிக்கா! அமெரிக்கா!

மீண்டும் ஓர் அமெரிக்கப் பயணம். இது நான் செல்லும் நான்காவது அமெரிக்கப் பயணம். அருண்மொழியுடன் செல்லும் இரண்டாவது பயணம். இன்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக நாளை விடியற்காலையில் அமெரிக்காவுக்கு விமானமேறுகிறோம்.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான நிலவிரிவு என்னை என்றும் பெரும் பரவசம் கொள்ளச் செய்கிறது. அமெரிக்காவிலேயே வாழும் நண்பர்கள் பலரை விடவும் நான் அமெரிக்காவை விரிவாகப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அமெரிக்காவில் இன்னமும் பார்க்கவேண்டியவையே எஞ்சுகின்றன.

அமெரிக்காவில் எது என்னை கவர்கிறது என எண்ணிப்பார்த்தேன். ஒன்று, கிரேட்டர் லேக், கிராண்ட் கான்யன் போன்ற இயற்கை அற்புதங்கள். இரண்டு அதன் அடிப்படையான கட்டமைப்பிலுள்ள இலட்சியவாதம். எமர்சனின் நினைவகமோ, எடிசனின் ஆய்வகமோ, ஜெபர்சனின் வீடோ அமெரிக்கா உலகுக்கு அளித்த இலட்சியவாதத்தின் குறியீடுகளாகவே எனக்கு கிடைக்கின்றன. அதன் மாபெரும் அடையாளமாக நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை எனக்கு ஒரு தெய்வதரிசனமே.

அமெரிக்கா பற்றிய எதிர்மறை விமர்சனங்களைக் கேட்டே நான் வளர்ந்திருக்கிறேன். ஆனால் நான் மிகக்குறுகிய காலம், இடதுசாரிகளின் உளப்பாதிப்பில் இருந்தபோது மட்டுமே, அமெரிக்கா மேல் ஐயம் கொண்டிருந்தேன். ஆனாலும் அமெரிக்காவை வெறுத்ததில்லை. ஏனென்றால் நான் அமெரிக்காவை அறிந்துகொண்டிருந்தது அமெரிக்க எழுத்தாளர்கள் வழியாக. நான் அறிந்த அமெரிக்கா ஐசக் பாஷவிஸ் சிங்கரும், வில்லியம் சரோயனும், ஃபாக்னரும் காட்டியது.

இன்றும் அமெரிக்கா பற்றிய வசைகள் நம் சூழலில் நிறைந்து வழிகின்றன.ஆனால் அவ்வசைகளைச் சொல்பவர்கள் காட்டும் நாடுகள் கொடிய அடிப்படைவாதத்தையோ, அடக்குமுறை நிறைந்த சர்வாதிகாரத்தையோ தங்கள் முகமெனக் கொண்டவை. எந்த வகையிலும் எந்த மானுடரும் விரும்புபவை அல்ல. அதைச் சொல்பவர்களே தங்கள் குழந்தைகளை அங்கே வாழ அனுப்ப மாட்டார்கள். அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோதான் அவர்கள் செல்வார்கள், தங்கள் குழந்தைகளை அங்கே வாழவைப்பார்கள்.

அமெரிக்காவின் பொருளியலாதிக்கம் பற்றி, ஊழல் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இங்கே ஆதரிக்கும் ஆட்சிகளில் அந்த சதவீதத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாத பொருளாதாரச் சுரண்டலும் ஆதிக்கமும் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் பகுதியாக அமைந்து சில்லறை நன்மைகளை தேடிக்கொள்ளவும் அவர்களால் இயலும். முதலீட்டுவாத அரசியலின் இயல்பு அது என்ற நடைமுறைத் தெளிவும் அவர்களுக்கு உண்டு.

அமெரிக்கா பிழையற்றது என நான் சொல்லவில்லை. ஆனால் ஐரோப்பிய- அமெரிக்க ஜனநாயகமே உலகம் சென்றடைந்த ஆட்சியமைப்புகளில் உச்சம். அதிலிருந்து மேலே செல்வதெப்படி என்பது மானுடத்தின் சவாலாக இருக்கலாம். முழுக்கமுழுக்க அறிவுசார்ந்தே ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவது, அறிவையே வணிகமென்றும் அதிகாரமென்றும் கொள்வது உலகம் முழுமைக்கும் முன்னுதாரணமான அமெரிக்க மாதிரி. அமெரிக்கா அதன் பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படும் தேசம். அது என்றும் உளஎழுச்சி அடையச்செய்யும் முன்னுதாரணமேதான்.

அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் இலட்சியவாதிகளை ஈர்க்கும் நிலமாக இருந்துள்ளது. விவேகானந்தர் முதல் காந்தி, அம்பேத்கர் வரை. அலையலையாக இந்தியத் துறவிகளும், யோகப்பயிற்சியாளர்களும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பொதுநல நிறுவனங்கள் அமெரிக்காவின் குடிமக்களின் கொடையால் உருவானவை. இன்னும் நூறாண்டுக்காலம் அது அவ்வண்ணமே இருக்குமென நினைக்கிறேன்.

2019ல் சும்மா சட்டென்று கிளம்பி அமெரிக்கா சென்றேன். நண்பர்களுடன் சுற்றினேன், இலக்கியச் சந்திப்புகளே இல்லை.இம்முறை அமெரிக்காவில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்ட கிளை உள்ளது. அதன் ஏற்பாட்டின்பேரில் செல்கிறேன். என் நிகழ்ச்சிகள் முழுமையாகவே ஒருங்கிணைக்கப்பட்டவை.

இம்முறை செல்வதன் முதன்மை ஈர்ப்பு கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கை மீண்டும் பார்க்கப்போகிறேன் என்பது. அந்தச் செய்தி காதில் விழுந்ததுமே ‘ஓல்ட் டர்க்கி பஸ்சாட், ஃப்ளையின் ஹை’ என்னும் பாடல் செவிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இம்முறை பழைய ‘கௌபாய்’ நிலங்களில் ஒரு நல்ல பயணம் இருக்குமென நினைக்கிறேன்.

வடகரோலினாவில் பூன் என்னுமிடத்தில் ஓர் மூன்றுநாள் இலக்கிய முகாம் நிகழ்கிறது. இந்தியாவில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்துவதுபோன்ற அதே வகை சந்திப்பு. அதே நியதிகளுடன். முழுக்கமுழுக்க இலக்கியம் மட்டுமே.

இங்கே தமிழகத்தில் இந்திய தத்துவம் மற்றும் வேதாந்தக் கல்விக்காக மதச்சார்பும் சடங்குமுறையும் அற்ற ஒரு நவீன அமைப்பொன்றை உருவாக்கவேண்டும் என்னும் கனவில் இருக்கிறேன். அதன் பணிகள் நடைபெறுகின்றன. இனியொரு முறை அங்கே அடிப்படை இந்திய தத்துவம் மற்றும் வேதாந்தத்துக்கான கூடுகை ஒன்றை அமைக்கவேண்டும் என்னும் விருப்பம் உள்ளது

*

அமெரிக்கப் பயண நிரல் பற்றி நண்பர் சௌந்தர்ராஜன் எழுதிய மடல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களையும், அருண்மொழி  நங்கை அவர்களையும் அன்புடன் அமெரிக்காவில் வரவேற்க வாசகர்களும் நண்பர்களுமென காத்திருக்கிறோம்.   உங்கள் முழுப்பயணத்தில் நீங்கள் செல்லவிருக்கும் இடங்களையும், தங்கும் இடங்களையும் தகவலுக்காக குறிப்பிடுகிறோம்.

மே 02 – 05 –  நியூ யார்க் / நியூ ஜெர்ஸி

மே 06 – 08 – வாஷிங்டன் டி.சி.

மே 07  – வாஷிங்டன் டி.சி,  தமிழ் விக்கி – தொடக்கவிழா

மே 09 – 11 – ராலே, வட கரோலினா

மே 12 – 15 – பூன் , வட கரோலினா (இலக்கிய முகாம் – முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும். மேற்கொண்டு இடங்கள் காலி இல்லை).

மே 15 – 26 – வட கரோலினா மாநிலத்திலிருந்து தெற்கு கலிபோர்னியா மாநிலத்திற்கு  நிலவழிப்பயணம்

மே 16 – 17 – டாலஸ், டெக்ஸாஸ்

மே 17 – 18  – ஆஸ்டின், டெக்ஸாஸ்

மே 19 – 20 – அல்புகர்க்,  நியூ மெக்ஸிகோ

மே 21 – 24 –  யூடா, அரிஸோனா, நெவாடா மாநிலங்கள்

மே  25 – 26 – இர்வின், கலிபோர்னியா

மே  27 – 29 – வால்நட் க்ரீக் , கலிபோர்னியா

மே  28  – எழுத்தாளர் சந்திப்பு (Folsom Library – May 28, 2022 @ 1:00 PM  ,  தொடர்புக்கு – அண்ணாதுரை +1-916-396-4702)

மே 30 – 31   – நியூ யார்க் / நியூ ஜெர்ஸி

அந்தந்த நகரங்களில் ஒருங்கிணைக்கும் நண்பர்கள் தக்க ஏற்பாடுகளை செய்துவிட்டதால் வேறு மாற்றங்கள் செய்யும் சூழ் நிலையில் இல்லை.  குறிப்பிட்டுள்ள நகரங்களின் அருகில் வசிக்கும் நண்பர்கள்,  மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள்  [email protected] -க்கு, மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளலாம்.

 

அன்புடன்,

அமெரிக்க வாசக நண்பர்கள்

[email protected]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்
அடுத்த கட்டுரைஇருள்களி