மாமங்கலை – கடிதம்

அரசியின் விழா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எனக்கு சிறுவயதிலிருந்தே மதுரையின் வன்முறை பக்கங்களுடன் அதிக தொடர்பிருந்திருக்கிறது. பள்ளி காலகட்டங்களில் அந்த தொடர்பு உருவாகி நெடுநாட்கள் அதன் தாக்கம் என்னுள் இருந்தது. கல்லூரி காலகட்டத்தில் நான் சந்தித்த நண்பன் வித்யா சங்கர். அவன் மதுரையுடன் கொண்டிருந்த உறவு எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. உலகின் எங்கு சென்றாலும் மதுரையே எனக்கு பிடித்தமான ஊராக இருக்கும் என்று சொல்வான். இந்த திருவிழாவிற்கு ஜெர்மனியிலிருந்து ஓடி வந்துவிட்டான். எனது கல்லூரி நாட்களில் மதுரையின் வன்முறை மீது ஒவ்வாமை உருவாகி எனக்கு பிடிக்காத ஊராக ஆகியது. அப்போது தான் சங்கர் எனக்கு மதுரையின் கோவில்கள், கொண்டாட்டங்கள், திருவிழாக்களை அடையாளம் காட்டினான். அதன் பண்பாட்டு தளங்களை அறிமுகம் செய்து வைத்தான். அதன்பின் மதுரை எந்த ஊரை விடவும் எனக்கு நெருக்கமாக ஆகியது. மீனாட்சியும், அவளது இருப்பிடமும் தரும் உணர்வை வேறு எங்கும் நான் அடைந்ததில்லை.

புதன்கிழமை இரவு கூகிள் மேப்பை பார்த்து ராஜா லாட்ஜுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் வழியில் மீனாட்சி சப்பரத்தில் அமர்ந்து வீதி உலா வர அவள் முன்னால் செங்கோல் ஏந்தியும், முரசு அறைந்தும், கல்யாண சீர் வரிசையுடன் பெண்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடனேயே குமரித்துறைவி தான் ஞாபகத்திற்கு வந்தது. அப்போதே கல்யாண கொண்டாட்ட மனநிலை ஊற்றெடுத்துவிட்டது. திருவிழா மனநிலையுடன் சேர்ந்து உங்களுடன் இரு நாட்களை கழிக்க போகிறேன் என்ற உணர்வு பேரின்பமாக இருந்தது. உங்களுடைய உரையாடல் அதிகமும் நகைச்சுவை சார்ந்து இருந்தது அந்த கொண்டாட்ட மனநிலையை மேலும் கொண்டாட்டமாக்கியது.

எங்கும் கூட்டம், நெரிசல், வியர்வை, சத்தம் அத்னுடன் கூடிய அழகு, வண்ணம், ஆர்வம், பரவசம் என பெருந்திருவிழாவின் தோற்றம் கண்களையும், மனதையும் நிறைத்தது. திருவிழா என்பதே பெண்களுக்கும், குழந்தைகளுக்குமானதாக தோன்றியது. எங்கும் பெண்களே நிரம்பி இருந்தனர். குழந்தைகள் தங்கள் தந்தையரின் தோளில் அமர்ந்துகொண்டு அனைத்தையும் விழியுருட்டி பிரம்மித்து பார்த்து கொண்டிருந்தனர். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைளை கூட அழைத்து வந்திருந்தனர். ஒருவர் கூட அழவில்லை, ஒரே வேடிக்கை தான். ஒரு சிறு துளியையும், இலையையும் பிரம்மாண்டமாக பெருக்கும் அவர்களுக்கு, இந்த மாபெரும் பிரமாண்டம் எதனை அளிக்கும் என்று வியந்து கொண்டேன். மீனாட்சி, கோவிலுக்குள்ளிருந்து வெளிவரும் போது எழுப்பப்பட்ட சத்தம் இன்னும் இன்னும் பெருக வேண்டுமென உளம் ஏங்கியது. கோவிலை சுற்றியிருந்த சிறு தெய்வங்கள் எல்லாம் புதுபொழிவுடன் இருந்தனர். அவர்களும் கூட்டத்திற்குள் நின்று கொண்டு “எக்கோவ் தள்ளி நில்லுக்கா, தலை மறைக்குதுல்லா” என்று சொல்லி முண்டியடித்து அவளது ஊர்வலத்தை பார்த்து கொண்டிருப்பதாக தோன்றியது.

இரண்டாம் நாள் தேர் பார்க்க சென்று கொண்டிருந்த போது ஒரு இளைஞர் கூட்டம் எதிரே வந்த இன்னொரு கூட்டத்திடம் தேர் எப்போ வரும் என்று கேட்க அதற்கு “ஆங் பஞ்சர் பார்த்திட்டு இருக்குறாய்ங்க, முடிஞ்சோன வந்திடும்” என்று கூற கூட்டத்தில் ஒரே சிரிப்பு. சிறிது நேரத்தில் தேரும், திரளும் ஒற்றை பெருக்காக குழுங்கி குழுங்கி உருண்டு வந்தது. மாடியிலிருந்து பூவை அள்ளி வீசினார்கள், தண்ணீர் பாட்டில்களை எறிந்தார்கள், வடமிழுத்த இளைஞர்கள் சுற்றினின்று ஒருவனை தூக்கி ஆகாயத்தில் வீசி எறிந்து பிடித்தார்கள். தேரின் இருபுறமிருந்தும் இளைஞர்கள் போலீசின் கால்களுக்குள்ளும், கைகளுக்குள்ளும் புகுந்து வடம் பிடிக்க ஓடினர். போலீஸ் அவர்களை பிடித்து பின்னால் இழுத்து விட்டனர். அங்கு ஒரு வெறியாட்டு மனநிலை நிலவியது. பெரும் தீவிரம் இருந்தது ஆனால் வன்முறை இல்லை. இளைஞர்கள் போலீஸ் சொல்வதை கேட்டு கொண்டார்கள். பல சமயம் மாறி மாறி கலாய்து கொண்டனர். ஏதோ ஒரு வகையில் அங்கு வன்முறை சமன் செய்யப்படுகிறது.

உங்களை நிறைய பேர் கூட்டத்தில் அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அழகரை பார்க்க சென்ற இடத்தில் உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட அக்கா என்னை பார்த்து சாருடன் எத்தனை ஸ்டூடண்ட் வந்துள்ளீர்கள் என்று கேட்டார். நான் பதினைந்து பேர் என்றேன். அருகிலிருந்த நண்பர் அவுங்க ஈரோடு கிருஷ்ணன் சார பார்த்தா ‘ஸ்டுடண்ட்ஸ்னு’ நினைக்க மாட்டாங்க என்று சொல்லி சிரித்தார். நீங்கள் புறப்பட்டு சென்றபின், நான்கு நண்பர்கள் மட்டும் கன்னியாகுமரி கவிதை முகாமுக்கு செல்ல இரவு 11:30 மணி டிரைனில் பதிவு செய்துவிட்டு மீனாட்சி திருக்கல்யாணத்தின் இறுதி நிகழ்ச்சியான மீனாட்சியும்-சுந்தரேஸ்வரரும் ஒரே சப்பரத்தில் தேர் தடம் பார்க்க வருவதை பார்க்க சென்றோம். மொத்த திருவிழாவிலும் இருவரும் இனைந்து வருவது இந்த ஒரு முறை மட்டுமே. யாரும் கூச்சலோ, சத்தமோ போடவில்லை. அனைவரும் புதுமண தம்பதியரை பூரிப்புடன் விழி நனைய பார்த்து கொண்டிருந்தனர். அதன்பின் அனைவரும் மொனமாக கலைந்து சென்றோம். சிறு தெய்வங்கள் எல்லாம் கூட்டத்தில் திசை தடுமாறி தங்கள் இருப்பிடங்களை தேடிகொண்டிருப்பர்.

நாங்கள் ரயிலில் ஏறி படுத்து கொண்டோம், மாமங்கலையாக அவள் ஆட்சி செய்யும் நதிக்கரையில் விழி மூடி, கன்னியாக அவள் ஒற்றை காலில் தவம் செய்து கொண்டிருக்கும் கடற்கரையில் நாளை துகிலெழ வேண்டும்.

வேலாயுதம் பெரியசாமி

முந்தைய கட்டுரைஒலிவடிவில் என் நூல்கள்
அடுத்த கட்டுரைஅமெரிக்க நிரல்- கடிதம்