இருளில் இருந்து இருளுக்கு- கடலூர் சீனு

ச.துரை விக்கி

குமரகுருபரன் விக்கி

இங்கு எல்லாம் இருண்டுபோய்விட்டது, சில வார்த்தைகள் மற்றும் கடலோசையை தவிர…                                     ச. துரை.

உலகளவில் ஒபேராவோ ஓவியமோ இலக்கியமோ எக்கலை எனினும் அதன் பரிணாம வளர்ச்சியில் மிகப் பொதுவாக நான்கு நிலைகளைக் காண இயலும். அக்கலைக்கான கச்சா அலகுகள் கூடி நிகழும் முதல் நிலை. எது கலை என்பதன் வரையறைகள் உருவாகி வந்து அதன் தொடர்ச்சியாக நிகழும் செவ்வியல் எனும் இரண்டாம் நிலை. மரபில் துவங்கி அங்கிருந்து புதிய புதிய திசை வழிகளை கலை தேறும் மறுமலர்ச்சி எனும் மூன்றாம் நிலை. இதுவரை கொண்டு வந்து சேர்த்த அனைத்தையும் ( சப்மரனை விண்ணிற்கு ஏவுவதை போல)  கலைத்து அடுக்கிப் பார்க்கும் நான்காவது நிலை. இவை ஒவ்வொரு நிலைக்கும் கால தேச வர்த்தமானம் சார்ந்து தத்துவ, சமூக கலாச்சார பண்பாட்டு காரண பின்புலம் உண்டு.

தமிழ் இலக்கியத்திலும் இந்த நான்காம் நிலை உண்டு.  தமிழ் இலக்கியத்தின் இந்த நான்காம் நிலை தமிழ் நிலத்தின் கலாச்சார சிக்கல்களிலிருந்தோ, படைப்பாளியின் உள்ளார்ந்த தத்துவத் தவிப்பிலிருந்தோ ‘முளைத்த’ ஒன்றல்ல. மேல் நாட்டிலிருந்து ‘வந்து விழுந்த’ ஒன்றாகவே அது இங்கே தோற்றம் கொண்டது. இந்த அடிப்படைப் பிழையின் காரணமாக இலக்கியக் கலையின் உயிரான, உண்மை உணர்வுத் தீவிரம், சாராம்சம் அனைத்தையும் இழந்த மொழிச் சடலங்களின் பெருக்கமாகவே  நான்காம் நிலை தமிழ் இலக்கியப் பிரதிகள் அமைந்தன.

பின்நவீன பிரதிகள் பெருகி, 90 களில் எல்லாம் பழசு இதுதான் புதுசு எனும் முழக்கத்துடன் சாமியாடிக்கொண்டிருந்த சூழலில்தான் அச்சூழலை எதிர்த்து எழுந்து வந்தது 70 களில் எழுதப்பட்ட ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல். அன்றைய பின்நவீன பிரதிகள் பலவும் வாசிக்க எவரும் இன்றி பச்சை டப்பா வுக்குள் சென்று விழுந்துவிட, இன்றும் புத்தக சந்தைகளில் விற்பனையில் வாசிப்பில் உரையாடலில் முன்னணி வகிக்கிறார் ப. சிங்காரம். பின்நவீன அழகியல் கட்டமைப்பு கொண்ட நாவல் ஆனால் பின்நவீனம் தவறவிட்ட உண்மையும் உணர்வு தீவிரமும் கொண்ட நாவல். பின்நவீனம் பேசும் அ நேர்கோட்டு ஓட்டம் பித்துமொழித் தருணங்கள் அனைத்தும் கொண்ட நாவல். ஆனால் பின்நவீன பிரதிகள் ஒருபோதும் சென்று எய்தாத ஒழுங்கமைவு கொண்ட நாவல். பின்நவீனம் பேசிய கோட்பாட்டு பேத்தல்கள் கடந்து தமிழ் வாசிப்பு சூழலில் புடம் போட்டு வெளி வந்த பொன் என நின்ற நாவல்.

அன்றுபோலவே இன்றும் வெத்துடப்பா கவிதை தொகுப்புகள் எழுப்பும் புழுதிப் புயல் முன் புயலிலே ஒரு தோணி போல இப்போது உள்ளார்ந்த உண்மையும் உணர்வு தீவிரமும்,  புதிய புதிய படிமங்களும், வெளிப்பாட்டால் சிதைந்த வடிவமும், அனைத்தையும் கட்டி நிறுத்தும் ஒழுங்கமைவும் கொண்ட கவிதைகள் கொண்ட தொகுப்பாக எதிர் வெளியீடு வழியாக வெளியாகி இருக்கிறது கவி ச. துரை அவர்களின் இரண்டாம் தொகுப்பான சங்காயம் தொகுப்பு.

சங்காயம் எனில் தீவன உணவாக மாற மீன் சந்தை முடிந்ததும் கூட்டிப் பெருக்கி அள்ளினால் கிடைக்கும் மிச்சம் மீதி. நண்டு குஞ்சு முதல் இறால் ஓடு, மீன்களின் செதில்கள் வரை என்னென்னவோ அடங்கியது. இத்தொகுப்புக்கு சரியான தலைப்பு. ஏறுமுகமோ இறங்குமுகமோ இன்றி எல்லா அலகிலும் கவிஞரின் சென்ற மத்தி தொகுப்பின் தொடர்ச்சியாகவே நகரும் தொகுதி இந்த சங்காயம். இந்த தொகுப்பை தனியே வாசிக்கத் தேர்பவர்கள் இந்த தொகுப்பு உருவாக்கும் கற்பனை உலகில் நுழைந்து உலாவ சரியான வாசல் என்று 88 ஆம் பக்கத்தின் கவிதையை சொல்வேன்.

அதுவொரு மோசமான திடல்
அதன் மேல் சிலுவையொன்று
கால்கடுக்க நின்று கொண்டிருக்கும்

அன்று அவனுக்கு மதியத்தின் மேல் கருணை வந்தது. காலங்காலமாக மதியம் வெயிலின் மேல் நின்று தவிக்கிறது எனக் கலங்கினான் பிறகு

மதியத்தோடு பேசத் தொடங்கினான்
சிலுவைக்கு அடியில் அமர்ந்தபடி திடலின்
மணலை அள்ளி அதன் வெப்பத்தை விழுங்கினான்

தொண்டையெல்லாம் கரகரத்தது
நெஞ்சு வயிறு தோள் தொடையென மணலைப் பூசிக் கத்தினான்
திடலில் வீசிய காற்று அவனிடமிருந்து
முடிந்தளவு மணல்களைக் கடத்திக் காப்பாற்றியது

பிறகு
அந்நாளின் மாலை
கல்பாலம் செல்லவில்லை

அம்மா அடிக்கடி வந்து
மகனே வீடு கொதிக்கிறது என்பாள்

வீட்டிலே படுத்திருந்தான்.
அவன் கண்டுகொள்ளவில்லை

மாறாக தனது பூத உடலை சிலுப்புவதும்
இடம் மாற்றுவதுமாகவே இருந்தான்
மேல் கூரை குனிந்து அவனைப் பார்த்து மீண்டும் மேல் நோக்கிச் சென்றது
தன்னால் எதுவும் முடியாதென்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்

ஒரு நீர்குடுவை நிறைய முத்துக்கள் நிரம்பி வழிவதாக
முழித்தபடியே கனவு கண்டான்
மேற்கில் எங்கோ சட்டை உறிக்கிற பாம்பின் நெளிவு சப்தம்
அவனுக்கு தெளிவாக கேட்டது.

அப்போது மகனே! மகனே! என குரல் அலறியது
வெளியே எழுந்து போய் பார்த்தான்.

அம்மா அங்கும் இங்குமாக
நெருப்புக் குவியலை
மேனியில் அணிந்தபடி
மகனே வீடு கொதிக்கிறது
வீடு கொதிக்கிறது
எனக் கத்திக்கொண்டே ஓடினாள்

அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை எப்படி அடக்குவதென்று புரியவில்லை

இறுதியில் அவளே முற்றத்தில் சரிந்து படுத்தாள்.
அவன் உள்ளே ஓடிப்போய் ஒரு தலையணை எடுத்து வந்து
அவள் தலைக்கு வைத்தபடி
அருகிலே உறங்கினான்.

இந்தத் தொகுதியின் உணர்வுநிலைகளை முன் வைக்கும் நோக்கு நிலை இந்த கவிதையில் வரும் மகனில் மையம் கொள்கிறது. இப்படிப்பட்ட மகனின் அடுத்த நிலை என்ன? சித்தம் பேதலித்தல் தானே.

பேதலித்தல் என்று எதனை சொல்கிறோம்? புறவையமான பௌதீக உலகத்திலிருந்து துவங்கி அகவயமான ஆத்மீக உலகத்துக்கு ஒரு நேர்கோடு இழுத்தால் அந்த கோட்டின் மையத்தில் இருப்பது நமது உடல்.  இயற்கை விதிகளில் இயங்கும் புற உலகம். கலாச்சார பண்பாட்டு ஆத்மீக வீதிகளில் இயங்கும் அக உலகம். இந்த இரண்டையும் கட்டி நேர்க்கோட்டில் வைப்பது ஐம்புலன்கள் எனும் கர்ம இந்திரியங்கள் வழியே  கிரகித்து, அதை ‘மறு உருவாக்கம்’ செய்து அகத்தளத்தை கட்டமைக்கும் ஞான இந்திரியங்கள் எனும் ‘அமைப்பு’. இந்த அமைப்பு தகர்ந்து போகும் நிலையே பேதலிப்பு என்கிறோம்.

பேதலித்தலின் முதல் விதி, உங்கள் அகத்தின் பிம்பத்தையும் புறத்தின் பிம்பத்தையும் பேதம் செய்யும் கோடு அழிந்து அந்த போதம் இல்லாமல் போவது. அடுத்த விதி காலம் இடம் பொருட்கள் அதன் தன்மைகள் திரிபடைவது. நிகழ்வுகளின் காரண காரிய தொடர்பு அறுபடுவது. உதாரணமாக சித்த சுவாதீனம் கொண்ட மனிதன் பேரிரைச்சல் கொண்டு பொழியும் அருவியை ‘அவ்வாறே’ பார்ப்பான். சித்தம் கலங்கியவனுக்கு அவனது கண் காணும் அருவியை, காது கேட்க்கும் பேரோலத்தை இணைத்துக் கட்டி மறு அர்த்தம் அளிக்கும் ஞான இந்திரியம் சிதறி விட்டதால் அவை அவனுக்கு சித்த சுவாதீனம் கொண்ட மனிதன் அடைய இயலாத மீ யதார்த்த அர்தத்தையே அளிக்கும். இந்தகு நிலையின் அழகியல் கொண்டவை என ச.துரையின் கவிதைகளை சொல்லலாம்.

மேற்சொன்ன கவிதையை முதல் கவிதையாக்கி இந்த தொகுதிக்குள் நுழைந்தால், இந்த தொகுதியின் கவிதைகள் தனது கலைந்த வடிவம் வழியே புதிய புதிய படிமங்கள் கொண்டு பேசும் அப்பா மகன் இடையிலான கசந்த உறவு, பிரிவு, மரணம் என அனைத்தின் பித்து நிலையிலான வெளிப்பாடுகளையும் அதன் உணர்வு தீவிரத்தையும் அதன் கற்பனை சாத்தியங்களையும் இந்த சிதைவுகள் பின்னால் உள்ள துயறார்ந்த ஒழுங்கையும் வாசகரால் சென்று தொட முடியும்.

சிற்றலைப் பரப்பில் புதைந்து கிடப்பது தெரியாமல் திருக்கை மேல் பதிந்த பாதத்தின் நிலை அடுத்த நொடி எவ்வாறு இருக்கும். இத் தொகுப்பின் பல உணர்வு நிலைகள் இத்தகையது.

மணலில் பாதி புதைந்த கல்லிருக்கை மீதமர்ந்து கடல் பார்த்துக்கொண்டிருந்த

மனிதனை, மணலில் புதைத்து அவன் மேல் அமர்ந்து கல்லிருக்கை கடல் பார்க்கத் துவங்கினால் எப்படி இருக்கும்? அந்தக் கல்லிருக்கை கீழ் புதைந்து மூச்சுக்கு திணறும் அனுபவமே இந்த தொகுதி கொண்டிருக்கும் வாசிப்பின்பம்.

இந்த தொகுதியை முக்கியத்துவம் கொண்டதாக செய்யும் உண்மையையும் உணர்வுகளின் தீவிரத்தையும் கவி ச. துரை கைவிட்டு விடாது இனி வரும் தொகுப்புகளிலும் அவ்வாறே கைக்கொள்ளும் பட்சத்தில் இவ்வகை அழகியல் கொண்ட கவிதைகளின் முக்கிய ஆளுமையாக ச.துரை திகழ்வார். அவ்வாறே ஆகுக என்பதே இவ்வெளிய வாசகனின் வாழ்த்து.

தொகுப்பின் சில கவிதைகள்.

எல்லோருக்கும் முன் அவன்
நடக்கும்போது
பின்னே ஒரு கூட்டம் சரசரக்கிறது

எல்லோருக்கும் முன் அவன்
உறங்கச் செல்லும்போது
பின்னே ஒரு கூட்டம் விளக்குகளை எரிய வைக்கிறது

எல்லோருக்கும் முன் அவன்
கோப்பையை கவிழ்த்தும்போது
அவன் பின்னே ஒரு கூட்டம் நகைத்தது

எல்லோருக்கும் பின்
ஒரே ஒருநாள் மட்டும் விழித்தான்
அவனுக்கு மட்டும்
இரண்டாவது சூரியன் உதித்தது.

***

உலவு

சமயங்களில் இரவு நாய்குட்டியாகிவிடுகிறது.
பழுப்பு நிற கழுத்துப்பட்டை மிளிர வீதியில் இரவோடு உலாவுபவரை பார்த்தேன்
எங்கு கொண்டு போகிறீர்கள் இரவை
கட்டி போடுவதற்கு என்றார்
அது ஏதுமறியாத தனது சின்ன நாக்கால் நட்சத்திரங்களை நக்கிக்கொண்டிருந்தது.

***

கர்தோன்

இன்று முழுக்க ஏனோ காதோன் நினைவு
அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை எங்கு வைத்தேன் என நினைவில்லை.
கர்தோன் ஒரு நாய்
கடைசியாக அவனைப் பார்த்தபோது நான் சரியாகமாட்டேன் என கண்களால் சொன்னான்
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை. கர்தோன் என நானும் சொன்னேன்
பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி தொண்டையிலிருந்து
இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை துப்பி எனக்கு பரிசாகக் கொடுத்தான்.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -அறிவிப்பு
அடுத்த கட்டுரைவேகமான வாசிப்பு -கடிதம்