ஜெ,
உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எந்த வாசகனும் படிக்காவிட்டாலும் நான் இப்படி தான் எழுதுவேன் என்றும் எழுத்து என்னுடைய வெளிப்பாடு மட்டுமே என்று நீங்கள் பர்வீன் பேட்டியில் சொன்னதை பார்த்தேன்.
இருந்தும் ஒரு பெரும் செயலை செய்தும் எந்த பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருக்க எப்படி முடிகிறது? தொடர்ந்து இயங்க அல்லது மகிழ்ச்சி கொடுக்க அங்கீகாரம் உதவாதா ?
வெண்முரசு போன்ற மாபெரும் ஆக்கத்திற்கு (அனைத்து பாகத்தையும் படித்தேன் என்ற முறையில்) இந்த சமகால சமூகம் சரியான அங்கீகாரம் அல்லது பாராட்டு தரவில்லை என்ற மனக்குறை இன்றும் எனக்கு உண்டு. இந்த அறிவு குருட்டு மக்களுக்காக எதற்கு எழுத வேண்டும் என்று ஒரு நாள் கூட தோன்றவில்லையா ஜெ ?
மோனியர் வில்லியம்ஸ் போல் நீங்கள் வாழ உறுதி கொண்டாலும், எதையும் காணா இந்த சமூகம் மேல் என்றும் உங்களுக்கு கோபம் வந்ததில்லையா ?
காலம் உங்களுக்கான மாபெரும்இடத்தை வழங்குவது உறுதி, இருந்தும் இந்த சமகால மௌனம் எங்களை போல் வாசகர்களை கோபம் கொள்ள செய்கிறது. நல்லதோர் வீணை செய்து நீங்கள் தந்தும் இந்த சமூகம் புழுதியில் போட்டு கொள்கிறதே என்று .
அன்பும் நன்றியுடன்
கோபிநாத்
சென்னை
***
அன்புள்ள கோபிநாத்,
செயல் எனக்கு என்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் ஒரு பயணம். தவம் என நான் சொல்லிக்கொள்வது வெறுமே அல்ல. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான். சற்றும் குறைந்தது அல்ல. நான் இதன் வழியாக என்னை கண்டடைகிறேன். என்னை ஆழமாக்கிக் கொள்கிறேன். மேலும் மேலும் தீவிரமாக, நுட்பமாக வாழ்கிறேன். அந்நிறைவே எழுதுவதன் மூலம் நான் அடையும் பயன். வேறு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. ஆகவே எந்த வகையிலும் எந்த ஏற்பும், எந்த பரிசும், எதுவும் பெரிதாகப் படவில்லை.
ஒருவேளை நான் ஏற்பின் வழியாக மயங்கி எழுதமுடியாதவன் ஆனால், ஏற்பின்மையால் உளம் வெறுத்து எழுதமுடியாதவன் ஆனால், என் வாழ்க்கை என்னவாக இருக்கும்? எவ்வளவு வெறுமையாக, எத்தனை அர்த்தமற்றதாக இருக்கும். எதன்பொருட்டும் என் எழுத்து மறைந்துவிடக்கூடாதென்பதை காட்டிலும் நான் கருதுவதொன்றும் இல்லை. ஆகவேதான் எழுதியதுமே எழுத்தில் இருந்து விலகிவிடுகிறேன். அடுத்ததுக்குச் சென்றுவிடுகிறேன். வெண்முரசு எழுதிவிட்டு எதிர்வினைகளை, விருதுகளை கருதிக்கொண்டிருந்தால் அடுத்தகட்டக் கதைகளுக்குச் சென்றிருக்க முடியாது. அவை அளித்த களியாட்டையும் நிறைவையும் அடைந்திருக்க முடியாது. அந்த நோய்க்காலத்தில் நானும் நோயுற்றுச் சுருண்டு அமர்ந்திருப்பேன்.
நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு.
இலக்கிய ஆக்கங்கள் அனைவருக்கும் உரியவை அல்ல. எந்த கிளாஸிக் ஆனாலும் வாசிக்கும் அனைவருக்கும் அது உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. அதை வாசிப்பதற்கான பயிற்சியும் அதை உள்வாங்குவதற்கான உளநிலையும், அடிப்படை அறிவுத்திறனும் தேவை. தமிழ்ச்சூழலில் பெரிய, ஆழமான நூல்களை வாசிக்கும் பயிற்சியும், உளநிலையும், அறிவும் கொண்டவர்கள் மிகச்சிறுபான்மையினரே. அதை அறிந்து, அவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன். எழுத வரும்போதே புரிந்துகொண்டதுதான் இது. பிறகென்ன?
இலக்கியவாசகர்களிலேயே கூட எல்லா படைப்புகளும் எல்லாருக்கும் சென்று சேர்வதில்லை. சிலருக்குச் சிலவகையான படைப்புகளை உள்வாங்க முடியாது. உதாரணமாக, இலக்கியம் என்பது அன்றாடவாழ்க்கையின் யதார்த்தச் சித்திரம் மட்டுமே என நம்பும் ஒருவரால் படிமங்கள் வழியாக பேசும் ஒரு படைப்பை உள்வாங்க முடியாது. தன் அரசியல்நிலைபாடே சரி, மற்ற எல்லாமே பிழை என ஆழமாக நம்பும் ஒருவரால் அவருடைய தரப்பைச் சேராதது என தோன்றும் படைப்பை ஏற்கவே முடியாது. அப்படி நூற்றுக்கணக்கான தடைகள்.
இவை அனைத்தையும் கடந்தே வாசகன் படைப்பை நோக்கி வருகிறான். அவர்கள் தமிழகத்தில் மிஞ்சிப்போனால் எத்தனைபேர் என அனைவருக்கும் தெரியும். ஆகவே எதையும் எதிர்பார்க்காமல் எழுதுவதே எழுத்தில் திளைக்க , எழுத்தினூடாக நிறைவடைய ஒரே வழி. சமூக ஏற்பை நான் எண்ணவேண்டும்? அதற்கு நான் எந்தவகையிலும் இணக்கமானவனாக இதுவரை இருந்ததில்லை. அது கேட்கும் எதையும் செய்ததில்லை. அது கூடி வசைபாடும் சொற்களையே கூறியிருக்கிறேன்.
எழுத்து என் வாழ்க்கையை இதுவரை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கியிருக்கிறது. சலிப்பே அற்ற நாட்களை அளித்திருக்கிறது. என் வாழ்க்கையை ஒருகணமேனும் நான் பொருளற்றதாக, இலக்கற்றதாக உணர்ந்ததில்லை. அதற்கப்பால் என்ன வேண்டும்?
இது எத்தனை முக்கியமென உணரவேண்டுமென்றால் உங்களுக்கு அறுபது வயது ஆகவேண்டும்
ஜெ