எழுத்தாளனின் தீமை

Angel and devil is a painting by Bozena Simeth

என் குறைபாடுகள்

எழுத்தாளனும் குற்றவாளியும்

அன்புள்ள ஜெ

நேற்றைய என் குறைபாடுகள் பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு வந்திருந்த எழுத்தாளனும் குற்றவாளியும் பதிவை வாசிக்கையில் ஒரு அதிர்ச்சி. ஆனால் பெரிய அதிர்ச்சியாகவும் இல்லை, என்னுடைய சிறிய வாசிப்பிற்குள்ளேயே சிலரை நினைவுகூர முடிகிறது.

நீங்கள் சொல்லியவற்றை ஒட்டி சிந்திக்கையில் மேலும் ஒன்று தோன்றுகிறது. இயற்கை இயங்குவதன் அடிப்படையிலேயே குற்றவாளிக்கான தேவை உள்ளது. குற்றவாளி நிகழ்த்துவது சமூகம் விரும்பாத ஒரு மீறலை. சமூகம் இந்த மீறலை தடுக்கவும் தனதாக்கி கொள்ளவும் முற்படுகையில் மீண்டும் சமூகத்தின் முயற்சிகளுக்கு அப்பால் சென்று ஒரு குற்றம் நிகழ்கிறது. இந்த சுழற்சியில் நம் சமூக அமைப்புகளின் படிநிலை வளர்ச்சியின் ஒரு பட்டையை அளந்துவிட முடியும்.(இதை படைப்புகளுக்கும் படைப்பாளிக்களுக்கும் பொருத்தலாம்) நீங்கள் சொன்ன சாகசத்தன்மை என்ற வார்த்தையில் இருந்து விரிவானது இச்சிந்தனை. தன்னை தானே வென்று முன் செல்லும் இயற்கையின் பேராடல் என சொல்லலாம்.

இந்த பதிவை வாசித்து முடித்தவுடன் எழுந்த கேள்வி ஒன்றை எழுப்புகிறேன். நேற்று என் குறைபாடுகள் பதிவில் உங்களுக்கும் பொதுவில் படைப்பாளிகளுக்கும் உள்ள மையமான தன்னல நோக்கு குறித்து விரிவாக விளக்கியும் முடிந்தவரை அதை என் படைப்புலகில் மட்டுமே வைத்துள்ளேன் என்று கூறியிருந்தீர்கள்.

இன்று எழுத்தாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள அணுக்கத்தை கூறி எடுத்துக்காட்டுகளையும் சுட்டியிருக்கிறார்கள். ஒரு வாசகனாக உங்களது படைப்புலகின் ஒருபகுதி குற்றங்களின் உலகால் நிரம்பியது என அறிவேன். அவற்றில் மிக வலுவான பிரக்ஞையுடன் குற்றச் செயல்களை ரசித்து மகிழ்பவர்கள் உண்டு. உதாரணமாக வெண்முரசின் கணிகர். (தீமையின் குற்றங்களின் முழுதுருவானவர். அதை தன் இயல்பாகவே கொண்டவர்). இப்படிப்பட்ட கதைகளை எழுதும் போது படைப்பாளியாக அவ்வுணர்வு நிலையால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். அந்நேரங்களில் உங்களுக்குள்ளிருந்து குற்றவாளி ஒருவன் எழுந்துள்ளனா ? ஆம் எனில் எவ்வண்ணம் அவ்வியல்பை கடந்து வென்றீர்கள் ?

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

ஒரு படைப்பிலுள்ள தீமைகள் எல்லாமே அந்த ஆசிரியனுடையதும் கூடத்தான். அவனுள் இருந்தே அனைத்தும் எழுகின்றன. அவன் இயற்றாதவை பல. எண்ணியவையே அனைத்தும். ஆகவேதான் வியாசர் காவிய ரிஷி, ஞானி அல்ல.

எழுத்தாளன் எழுதும்போது தன்னுள் நோக்கியே எழுதுகிறான். அவனுக்குள் இருக்கும் தன்னலம், வன்முறை, காமம், வஞ்சம் எல்லாமே அவனால் அருகிலென பார்க்கப்படுகின்றன. அதை அவன் எழுதுகிறான். அவை உண்மை என இருப்பது அவை அந்தரங்கமானவை என்பதனால். ஒரு மனிதனின் ஆழம் அனைத்து மனிதர்களின் ஆழமும்தான் என்பதனால்.

ஆகவேதான் அவன் அகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. அவனுடைய அகவெம்மையை அத்தனை எளிதாகச் சொல்லிவிடமுடியாது. என் நண்பர்கள் கேட்பார்கள், எப்படி நான் எல்லா எழுத்தாளர்கள் மீதும் ஒரேவகையான பெருங்கனிவுடன் இருக்கிறேன் என்று. என்னை வசைபாடியவர்களுக்குக் கூட அவர்களின் இடர்களில் உடன் நின்றிருக்கிறேன். என் நண்பர்களையும் இழுத்துச்செல்கிறேன்

ஏனென்றால் அவர்களை நான் என்னை வைத்து புரிந்துகொள்கிறேன். என்னுடைய அதே கொந்தளிப்பும் முரண்பாடும் அவர்களுக்கும் இருக்கிறது. எனக்கு என்னை ஆளும் சில கருவிகள் அமைந்துள்ளன. சில ஆசிரியர்களின் வாழ்த்தும் வழிகாட்டும் அமைந்தன. பெரும்பாலானவர்களுக்க்கு அவை அமைவதில்லை.

இதை வாசகன் அல்லாத சாமானியனால் உணர முடியாது. சாமானியர்கள் தங்களுக்கென ’சரியான’ ஒரு பிம்பத்தை உருவாக்கி முன்வைப்பவர்கள். சொல்லி சொல்லி அதை நம்பிக்கொண்டிருப்பவர்கள். சாமானியர்கள் சொல்லும் சொற்களைக் கவனியுங்கள். ”நாம யார் வம்புக்கும் போறதில்லை” “நாம எல்லாருக்கும் நல்லதைத்தான் நினைப்போம்” “நான் நல்லவனுக்கு நல்லவன்” “நான் என்னிக்குமே நியாயத்தச் சொல்றவன்….’

இந்தமனநிலையின் கொஞ்சம் விரிவாக்கமே முகநூல் போன்றவற்றிலுள்ள பாவனைகள். அத்தனைபேரும் அரசியல்சரிநிலைகள் பேணுபவர்கள். அத்தனைபேரும் நியாயத்தின் தராசுமுட்கள். அத்தனைபேரும் பெருங்கருணையின் உருவங்கள். அத்தனைபேரும் எந்த பலவீனங்களுமற்ற தூயவடிவங்கள். அந்தப்பாவனையில் நின்றபடி எவர்மேலும் கல்லெறிவார்கள். கொந்தளிப்பார்கள்

இவர்கள் முன் எழுத்தாளன் தன் கொந்தளிப்புடன் நிற்கிறான். தன் சிறுமைகளை முன்வைக்கிறான். அவர்கள் அரசியல்சரிநிலைகளால் அவனை அடிக்கிறார்கள். ஒழுக்கநெறிகளால் அடிக்கிறார்கள். அரசியல்கோட்பாடுகளால் அடிக்கிறார்கள். ஆனால் வேறுவழியில்லை, எழுதவேண்டுமென்றால் அகத்தை நிர்வாணமாக்கியே ஆகவேண்டும்.

எனில் இத்தீமைகளை ஆசிரியன் அவனே கையாள்வது எப்படி? இரு கருதுகோள்களுண்டு. விக்ஷேபணம் என்பது முதல் கருத்து. வெளிவீசுதல் என்று சொல்லலாம். சரியாகச் சொன்னால் உள்ளிருப்பதை வெளியே விரித்துக்கொள்ளுதல். அரிஸ்டாட்டில் சொல்லும் catharsis என்பதற்கு கொஞ்சம் அணுக்கமான கருத்து இது. ஆனால் வேறுபாடு கொண்டது. அரிஸ்டாட்டில் சொல்வது ஒன்றை உணர்வுரீதியாக நிகழ்த்திக்கொண்டால் அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று. அதை விலகியிருந்து பார்த்து அதன் சாரம் நோக்கிச் செல்லமுடியும் என்று.

விக்ஷேபணம் என்பது அப்படியே நிகழ்த்திக் கொள்வது அல்ல. ஏனென்றால் அது மனிதரால் இயலாது. உள்ளிருப்பது வெளியே நிகழ்கையில் வெளியே உள்ள நியதிகளுக்கு ஆட்படுகிறது. மாறுபட்ட உருவம் கொள்கிறது. அப்படி அதன் மேல்தளம் மாறுபடும்போது மாறாமல் நின்றிருக்கும் சாரம் துலங்குகிறது. படைப்பில் வெளிப்படும் தீமை தீமையல்ல. குரூரம் குரூரம் அல்ல. அவை நடிப்புகள்தான். அவை குறியீட்டுச்செயல்பாடுகள்தான்.

ஆசிரியனின் உள்ளே இருப்பது படைப்பாக வெளியே விரிந்ததுமே அது அவனிடமிருந்து சற்று விலகிவிடுகிறது. அதற்கு ஓர் அன்னியத்தன்மை வந்துவிடுகிறது. அது ஒரு ஆய்படுபொருள் ஆகிவிடுகிறது.

உணர்வுகள் உள்ளிருக்கையில் இயல்பாக உள்ளன. வெளிப்பாடு கொள்ளும்போதே அவை வடிவம், மையம் என்னும் இரண்டு குணங்களை அடைகின்றன. அவை ‘கையாளப்படக்கூடியவை’ ஆக மாறிவிடுகின்றன

மதயானை காட்டிலிருந்து இழுத்துவரப்பட்டு வீட்டு யானையாக ஆக்கப்படுவதுபோன்றது படைப்பில் வெளிப்படும் தீமை. அது விக்ஷேபணம் செய்யப்பட்டதுமே ‘திருந்தி’விடுகிறது. பிரபஞ்சமெய்ப்பொருளின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. அது ஒரு செவ்வியல்நூலில் அது முன்வைக்கும் முழுமையின் ஒரு பிரிக்கமுடியா பகுதியாக ஆகிவிடுகிறது.

இரண்டாவது, தீமைக்கு நிகராக படைப்பு கண்டடையும் நன்மை. துளியளவிருந்தாலும்கூட அது பெருந்தீமையை நிகர்செய்துவிடும். முற்றிலும் தீமையையே சொல்லும் படைப்பு என ஏதுமில்லை. சீற்றம்கொண்ட, முழுமையாக நிராகரிக்கும் தன்மை கொண்ட படைப்புகள் உண்டு. அவற்றிலும்கூட நோக்கம் நன்மைநோக்கியதே.

இலக்கியப்படைப்பின் அந்த உள்ளார்ந்த நன்மை, ஒளியும் ஆசிரியனிடமிருந்து வெளியாவதே. எழுதும் கணங்களில் அவன் அடையும் உன்னதம் அதன் விளைவு. அது நஞ்சை நிகர்ப்படுத்திவிடுகிறது. அரைத்துளியேனும் அமுதத்தை எஞ்சவைக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைசிரித்திரன், வென்ற சிரிப்பு
அடுத்த கட்டுரைDilemma