எழுத்தாளனும் குற்றவாளியும்
அன்புள்ள ஜெ
எழுத்தாளனும் குற்றவாளியும் ஓர் அற்புதமான கட்டுரை. வெளியே இருப்பவர்கள் என்பது இருவருக்கும் பொது. அதன் திரிபுகள் சிக்கல்கள் எல்லாமே பொது. வெளிப்பாடு என்பது வேறுவேறு. ஒருவருக்கு இலக்கியம். இன்னொருவருக்குக் குற்றம்.
ஆனால் எழுத்தாளனை சான்றோன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் சமூகம் வெவ்வேறு கோணங்களில் அவனைப் புரிந்துகொள்ள இந்தவகை கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். நான் இதை யோசிப்பதுண்டு. நம்மூர் ஜனங்களுக்கு பெரிய பண்டிதர்கள்மேல் அபாரமான மரியாதை. அவர்களுக்கு மாலை செல்வம் பதவி எல்லாம் உண்டு. எழுத்தாளன் மேல் இளக்காரம். அது எழுத்தாளன் வெளியே இருப்பதனால்தான். பண்டிதன் மையத்தில் இருக்கிறான்.
வாழ்நாளில் பெரும் பண்டிதர்களுக்குக் கிடைத்த மதிப்பில் அரைக்கால்வாசி கூட பெரும் கவிஞர்களுக்குக் கிடைத்ததில்லை. ஒட்டக்கூத்தன் அரசக்கவிஞர். கம்பன் நாடோடி, ஊதாரி, ஸ்த்ரீலோலன். இதுதான் கதை
லக்ஷ்மிநாராயணன்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
‘எழுத்தாளனும் குற்றவாளியும்’ கட்டுரை வெகு அழகாக ஒன்றைச் சொல்கிறது – இயல்புத்தன்மையால் இருவரும் அணுக்கம் என்றாலும், வெளிப்படுத்தலில் வேறாகிறார்கள் – அறிவுச் செயல்பாடு ஒருவரை ‘பிரம்மன்’ (படைப்போன்) என்றாக்கும் போது, இன்னொருவர் ‘தன்னை அழித்தலில்’ தானே கரைகிறார் எச்சம் இன்றியே.
கலையரசியின் கருணை (சரஸ்வதி கடாட்சம்) எழுதுகோல் ஏந்தியவரில் ஆக்கமாக மலரும் போது, இன்னொருவரில் இயைந்து நிற்கும் தேவதையும் ஒன்று உண்டல்லவா. ‘குற்றவாளியும்’ தன்னை மீறிய ஒன்றால் இயக்கப்படும் ஒருவனே என்னும்போது விலக்கமோ வெறுப்போ இன்றி மனிதரைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கோணத்தை, ஒரு திறப்பை இக்கட்டுரை அளிக்கிறது.
இன்னொன்றும் தோன்றுகிறது – ஒருவருக்குள் படைப்பியக்கத் தளிரையும் மற்றொருவரில் தன்னழிப்புத் துளியையும் பொதிந்து அனுப்பவது எது? குருவருள் / இயற்கை நியதியின் பெருங்கருணை சிப்பிக்குள் முத்தாக ஒருவரை மலரச் செய்வது எவ்விதம்? தேர்வு செய்யும் பெரும் கரம் ஒத்த கூறுகளிலேயே எதிரெதிர் தன்மைகளை எழச் செய்வது எங்ஙனம்? – பெரு விந்தை தானே!!
அன்புடன்
அமுதா