உள்ளூறுவது

சில தருணங்களில் இதெல்லாம் ஒன்றென யாக்கப்பட்ட ஒருகாப்பியமென திகழ்கின்றன என உணரும்படி அமைவதுண்டு. இது நடந்தது முப்பதாண்டுகளுக்கு முன்பு. நெல்லையிலுள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். சும்மா இன்னதென்று இலக்கில்லாமல் அலையும் காலம். இதைத்தான் என்றில்லாது வாசிக்கும் மனநிலை இருந்த வயது.

ஆலயத்தின் மண்டபத்தில் ஒருவர் மணைமீது வெள்ளைத்துணி விரித்து சப்பணம்போட்டு அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். நெற்றியிலும் தோளிலும் நெஞ்சிலுமெல்லாம் குழைத்துப் பூசிய நீறு. பொன்கட்டிய உருத்திராக்க மாலை. படிகமணிமாலைகள். இடக்கை கைவிரலில் ஒரு பெரிய நீலக்கல் மோதிரம். நல்ல கணீர்க்குரல். சிவந்த முட்டைக்கண்கள். கன்னங்கரிய நிறம். அறுபதையொட்டிய வயதிருக்கும். ஆனால் தலையில் நல்ல நெருக்கமான முடி, கொஞ்சம்நரை. இப்போதும் அவர் முகம் நினைவிருக்கக் காரணம் அவருடைய பெரிய மூக்கும் காதுகளில் அடர்ந்திருந்த கரிய முடியும்.

அவர்முன் ஏழெட்டுபேர் அமர்ந்திருந்தனர். அனைவருமே அவரைப்போல அறுபதை ஒட்டிய வயது கொண்டவர்கள். ஒவ்வொருவரும் அமர்ந்திருந்த விதத்திலேயே அவர்கள் அங்கே வாசிக்கப்படுவதில் எந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறார்கள், ஒவ்வொருவரின் இயல்பு என்ன என்று தெரியும்படி இருந்தது. அடுத்த கணமே எழுந்து பேசத்தொடங்கிவிடுவார் என்பதுபோல் ஒருவர். நன்றாகச் சுவரில் சாய்ந்து ஒருவர். சற்றே திரும்பி பிராகாரத்துக்குச் செல்பவர்களைப் பார்ப்பதுபோல இன்னொருவர். வேறெங்கோ பார்வை திருப்பி இன்னொருவர்.

படித்தவர் ஏதோ இரண்டு வரிகளை ஓங்கிச் சொன்னார். அதட்டுவதுபோல் இருந்ததனால் சிற்பத்தை பார்த்துக்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன்.

அவர் நான் திரும்பிப் பார்ப்பதை கண்டார். உரக்க மீண்டும் வாசித்தார்

காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன் கழல் செலுமே.

கேட்டதுமே நான் அவ்வரிக்குள் ஆழமாகச் சென்று மெய்ப்பு கொண்டுவிட்டேன். ஏனென்றால் நான் பார்த்துக்கொண்டிருந்த சிலை எனக்களித்த அனுபவத்துடன் அது அத்தனை வலுவாக இணைந்துகொண்டது.

காணும் கண்ணுக்கு காட்சிகளைக் காட்டுவது உள்ளம்தான். துயருற்றவனுக்கு உலகப்பொருட்கள் எல்லாம் துயரின் அடையாளங்கள். மகிழ்வுகொண்டவனுக்கு இயற்கை இன்பவெளியென சூழ்ந்திருக்கிறது. கண்ணுக்கு உலகை காட்டும் உள்ளம் போல அந்த உள்ளத்தை காட்டும் புலமாக அமைபவன் அரன். அயரா அன்புகொண்ட அரனின் பாதங்களை பணிவேன்.

“என்னண்ணு சொல்லியிருக்கு?” என்று வழுக்கைத்தலையர் கேட்டார்.

”படிக்கேன்” என்றபின் உருத்திராக்கம் அணிந்தவர் உரக்கப் படித்தார். “சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பரமேசுரனது சீபாதங்களை யணையுமா றுணர்த்துதனுதலிற்று. என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துத னுதலிற்று. இதன் பொருள். அங்ஙனம் ஏகனாகி யிறைபணி நிற்பார்க்கு அறிவிச்சை செயல்கள் விடயித்தற்குரியதோரியைபு ஆண்டுப் பெறப்படாமையின் விடயமாவதொன்றில்லை போலும் என்னும் வாதிகளை நோக்கி விடயித்த லில்வழி ஆண்டுப் புத்தர்கூறு மாலய விஞ்ஞானம் போலச் சூனியமாமெனப்பட்டுக் குணஞ் சூனியமாகவே குணியுஞ் சூனியமாய் முடியுமாகலான் அஃதேலாமையின் ஆண்டவை யியைபு பற்றி விடயிக்குமா றுணர்த்து முகத்தானே பயனிரண்டனுள் முடிவா யெஞ்சிநின்ற சிவப்பேறு கூடுதலாய நிட்டையினியல்புணர்த்துதல் இப்பதினொராஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.”

அவர் வாசிக்க வாசிக்க நான் என்மேல் கற்கள் உருண்டு விழும் உணர்வை அடைந்தேன். மெய்யாகவே சொல்கிறாரா இல்லை ஏதேனும் விளையாட்டா என்று திகைத்தேன். ஆனால் மேலே வாசித்துக்கொண்டே சென்றார். “இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் உடனிகழ்ச்சியாயவாறுபோலப் பசுத்துவநீக்கமுஞ் சிவத்துவ விளக்கமும் இடையீடின்றி உடனிகழ்வன..

வழுக்கையர் “நிப்பாட்டுங்க” என்றார். “என்னெண்ணு சொல்லியிருக்கு?” என்றார். மற்றவர்கள் அவரைப் பார்த்தனர்.

“வெளக்க ஏத்தினா ஒளிவர்ரதும் இருட்டு போறதும் ஒண்ணா நடக்குது. அதேமாதிரி நாம பாக்கிற இந்த உலகமாயைங்கிற பசுத்துவம் இல்லாம ஆகிறதும் சிவத்துவமாகிய மெய்நிலை தெளிவாகிறதும் ஒரே சமயத்திலே நடக்குதுங்கிறார்”

“அதெப்டி?” என்றார் உருத்திராக்க மணியாளர். “சிவத்துவம்தான் பசுத்துவத்தைக் காட்டுதுன்னுல்லா பாட்டு சொல்லுது? கண்ணுக்கு காட்சிகளை காட்டுறது கதிரொளி. அதைமாதிரி சிவம் காட்டுறதுதான் இந்த உலகம்னு மாதவ சிவஞான முனிவர் இந்த பாட்டுக்கு விளக்கம் சொல்றார்.”

“அது எங்கவே இந்தப் பாட்டில வருது? பசுத்துவம் ஒழியாம சிவத்துவம் எப்டி அமையும்? இருளும் ஒளியும் ஓரிடத்து அமையுமா?”

“அந்தப் பசுத்துவத்த காட்டுறதே சிவத்துவம்தானே? சிவனில்லாம ஏதுமுண்டா இங்க?”

அங்கிருந்து ஆளுக்காள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அடிதடிக்கலவரம் எல்லாம் இல்லை. ஆனால் கொஞ்சம் தள்ளி நின்றால் அப்படித் தோன்றும். நான் புன்னகையுடன் நகர்ந்துவிட்டேன்

ஒருவர் உரக்க மனப்பாடமாக “இவ்வுண்மைகளை இங்கு வைத்துணரக்
காட்டுமாற்றால் (உலகருடன் கலந்து நின்று) தானும் காண என்றதும்
உன்னுக. உயிர்களுக்கு நெறி காட்டித் தான் தொண்டரை விளக்கங்
கண்டான் என்பதும் கருத்து-ங்குதாரு” என்றார்

“அது எங்க இந்தப்பாட்டில இருக்கு? கண்டது கடியது எல்லாம் சொல்லப்பிடாது”

“காணாதத காணுகதுக்கான்வே பாட்டு. சும்மாவா சிவஞானபோதம் சொல்லிவச்சிருக்கு? உம்ம வீட்டு பஞ்சாங்கமா வே?”

பின்னால் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

கோயிலில் வேறு ஆளே இல்லை. மிகப்பெரிய பிராகாரம் ஓய்ந்து கிடந்தது. காசிலிங்கம், அண்ணாமலை லிங்கம் என சிறு சிறு சன்னிதிகள். ஒவ்வொன்றிலும் சிறிய சுடர்மொட்டுகள்.

இன்னொரு பக்கம் சுற்றிக்கொண்டிருந்தேன். சுவரில் திருவாசகம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பாடல்களை விழிகளால் வருடிக்கொண்டே சென்றவன் ஒருபாட்டில் நின்றேன்.

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே..

எனக்குப் பதில்போல் அமைந்த வரி. மாற்றங்களால் ஆன இந்த உலகின் வெவ்வேறு அறிவாக விரியும் வெளியில் மையக் கொள்கையென, தேற்றமென, அமைபவனே. தேற்றத்தை கற்று அடைந்த தெளிவே. அத்தெளிவின் விளைவென என் சிந்தனையின் உள்ளிருந்து அமுதூற்றென எழுந்து எழுந்து வருபவனே…

கற்றலென்பது விரிந்து விரிந்து சென்று மையம்காண்பது. கண்டு தெளிவது. தெளிந்தபின் எழும் ஊற்றின் தணியாப்பெருஞ்சுவை. மெய்மை என்பது கற்றநூலின் பொருள் நெஞ்சிலிருந்து நினைவுக்கு எழுவதற்கு நிகரானது. நம்முள் இருந்து எழுந்துகொண்டே இருக்கும் தீரா இனிப்பு. கலக்கிக்கொண்டே இருப்பவர்கள் ஒருபோதும் அறியமுடியாதது.

முந்தைய கட்டுரைதமிழ்வாணன்
அடுத்த கட்டுரைகடல்- கடிதம்