ஆழத்தைப் பற்றிய கொற்றவை நாவலின் வரிகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்…
“ஆழத்தின் புலன்வடிவச் சித்திரம் நீர். தண்மையின் அலை, சுவையின்மையின் நீலம். பெருவெளியின் அகமே ஆழம். நீர்வடிவில் ஆழம் உடலில் தாவரங்களில் மண்ணில் நிரம்பியிருந்தது. இருண்ட ஊற்றுக்களுக்குள் அது கண் மின்னப் புன்னகை புரிந்தது. உடலுக்குள் இருந்து எப்போதும் ஆழம் ஆழம் என ஏதோ ஒன்று தவிப்பதைக் கண்டார்கள் சான்றோர். தன் அகம் என்று அதைக் கண்டு அதற்கு தாகம் என்று சொல் கொண்டனர். நீரை உண்டு உண்டு அது தன்னை நிரப்பிக் கொண்டது. சில தருணங்களில் வெறுமை விரிந்த வானையே மொண்டு மொண்டு பருகித் தாகம் தீர்த்தது. ஒருபோதும் நிரம்பாமலிருந்தது. நிரம்பாமை என்பதே ஆழம்”
நிறைவின்மை ஆழத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கிறேன். எதைக் கண்டெல்லாம் என் அகம் கொந்தளிக்கிறதோ அவையெல்லாம் ஆழமாகத்தான் இருக்கிறது. கடலும், வானும் எப்போதும் எனக்கு பிரமிப்பையே அளிக்கிறது. இரவின் கடலும், வானும் மேலும் மேலும் என்னை தீவிரமாக்கிவிடுகிறது. எனக்கு அதனிடமும் அதற்கு என்னிடமும் எப்போதும் சொல்ல இருந்து கொண்டே இருப்பது போல உளமயக்கு என்னிடம் உண்டு. “அடியும் முடியும் அறிய முடியார்” என்று பாரதி பாடும் போது ஒரு சிலிர்ப்பு வருகிறது. கடவுள் என்று நாம் பெயர் வைத்திருப்பது கூட அந்த அறியமுடியாமை தான் என்று நினைக்கிறேன். அறியமுடியாமை பற்றிய போதம் இல்லாதவர்களே அதை மறுக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
விரிந்தவை மட்டுமல்ல சிறியவைகளின் ஆழமும் திகைக்க வைக்கிறது. நம்மால் காணமுடியாதவைகளின் ஆழம் அது. எங்கும் ஆழமே நிறைந்திருப்பதாய் எண்ணங்கள் அழுத்துகிறது. ஒளியின் ஆழம், இருளின் ஆழம், நீரின் ஆழம், கடலின் ஆழம், காட்டின் ஆழம், தீயின் ஆழம், கருங்காட்டின் ஆழம், புல்லின் ஆழம், மண்ணின் ஆழம், பெருவெளியின் ஆழம் என எங்கும் அறியமுடியாமை ஒன்று இருப்பதாய் நீட்டிக் கொண்டிருந்தேன். எங்கும் அடியும் முடியுமற்றவையே என்னைச் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.
பருவடிவற்ற அகத்தின் ஆழத்தையும், உணர்வுகளின் ஆழத்தையும் கூட நினைத்துக் கொண்டிருந்தேன். எத்தனை அன்பு, எத்தனை காதல், எத்தனை காமம், எத்தனை மகிழ்வு, எத்தனை புகழ், எத்தனை கருணை, எத்தனை செல்வம் கொடுக்கப்பட்டாலும் நிறைவடையாது மனம் பரிதவித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் மேலும் என நாம் நிறைவின்மையைக் கை கொள்வது அதன் ஆழத்தைக் காண்பதற்குத்தானா? மொண்டு மொண்டு பருகி நாம் அணைத்துக் கொள்ள முற்படுவது தீராத தாகத்தைத் தானா? ஒன்றின் நிறைவின்மையை கண்டவர்கள் அல்லது புரிந்து கொள்பவர்கள் மட்டுமே இதன் தேடலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது ஜெ.
இந்நேரத்தில் நான் வெண்முரசின் மாலினியையும், பார்த்தனையும் நினைத்துக் கொள்கிறேன் ஜெ.
மாலினி எடுக்கும் முடிவு ஒருவித நிறைவின்மையின் ஆழத்தை முற்றுணர்தல் தான். சென்று கொண்டே இருக்கும் பார்த்தன் அடைவதும் அதே நிறைவின்மையின் ஆழம் தானே.
அப்படியானால் முழுமை என்ற ஒன்று இல்லையா ஜெ. முழுமை என்பதே நிறவின்மையின் ஆழம் தானா? அதனால் தான் “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்றீர்களா.
மேலோட்டமான உறவு, நட்பு, காதல், வாழ்க்கை, காமம், பேச்சு என மேலோட்டமாகவே வாழ்ந்து மடியும் புற்றீசல் வாழ்க்கை வாழும் மனிதர்களின் பொருள் தான் என்ன? சில சமயம் இந்த மேலோட்டமான வாழ்க்கை வாழும் மனிதர்கள் கூட அடைவது நிறைவின்மை தானே என்று தோன்றுகிறது. கடலைப் பார்த்து பிரமித்து அதன் கரைகளில் நின்று ஆழம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்து பொருள் வாழ்க்கையில் வாழ்ந்து மடிபவர்களுக்கும், கடலுக்குள் இறங்கி ஆழம் காண முற்பட்டு அடையமுடியாது நிறைவின்மையை எய்துபவர்களுக்கும் வித்தியாசம் தான் என்ன? அனுபவங்கள் வேறு வேறு ஆனாலும் அதன் பொருள் தான் என்ன? வெறுமே அதில் கிடைக்கும் பயணத்தின் பாதை மட்டும் தானா?
இந்தப் பயணமெல்லாம்
“…மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் “
என்று சொல்லிச் செல்வதற்குத்தானா? ”யுகங்களுக்கு ஒருமுறை விண்ணோக்கி உதிரும் கனி” ஆழத்தை அளந்து நிறைவின்மையின் உச்சிப் புள்ளியை அடைவதன் பொருள் தான் என்ன?
மேலோட்டமாகவே எல்லாவற்றிலும் வாழ்ந்து கிடைக்கும் சலிப்பின் நிறைவின்மைக்கும், மாலினி போன்று ஒன்றில் கரைந்து நிறைவை அடைந்து அதில் நிறைவினமையை உணர்ந்து ஆன்று அடங்குவதற்கும், செயல் செயல் என மனம் அலைக்கழிந்து கொண்டே கேள்விகளோடும் நிறைவின்மை நிறைவின்மை என கடந்து முன் செல்லும் பார்த்தனின் நிறைவின்மைக்கும், ஒட்டுமொத்த இந்த ஆடலின் நிறைவின்மையை முற்றுணர்ந்து, அறியமுடியாமைகளையும் கடந்து ஆணைகளை மட்டுமே பிறப்பித்து இவ்வுலகத்தில் செயலை புன்னகையோடு நிகழ்த்திச் செல்லும் இளைய யாதவனின் நிறைவின்மைக்கும் வேறுபாடு தான் என்ன?எந்த நிறைவின்மையை ஒருவன் தன் வாழ் நாளில் கைக்கொள்ளப்போகிறான் என்பது எதைப் பொறுத்தது ஜெ. ”ஊழ்” மட்டும் தானா?
பல்வேறு கிளை பரப்பி பயணம் செய்து அடைய வேண்டியது நிறைவின்மை தான் எனும் பட்சத்தில் சலிப்பின் நிறைவின்மைக்கும், ஆழத்தைக் கண்டடைய முற்பட்டு கிடைக்கும் நிறைவின்மைக்கும் வித்தியாசம் என்ன ஜெ? பகிர்ந்து கொள்ள இயலுமா?
பிரேமையுடன்
-ரம்யா
அன்புள்ள ரம்யா
ஆழம் என்பது என்ன என்பது ஒரு அடிப்படையான கேள்வி. அது ஒரு சொல். ஒரு படிமம் வெவ்வேறு வகைகளில் அதைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
தத்துவ விவாதங்களில் படிமங்களுக்கும் உருவகங்களுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அவை இல்லாமல் தத்துவ விவாதமே இயல்வதல்ல. ஆனால் அவற்றின் மிகப்பெரிய இடர் என்னவென்றால், அவை நம்மை நம் போக்கில் கற்பனை செய்யவைக்கின்றன. நாமே நமக்கான அர்த்தங்களை அளித்துக்கொள்ள வைக்கின்றன. விளைவாக தத்துவரீதியான அர்த்தங்களை நாம் மிக எளிதாக நமக்காக வளைக்க தொடங்கிவிடுகிறோம். ஒரே புள்ளி சார்ந்து விவாதிக்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் கொள்வது இலக்கியத்துக்கு நன்று. தத்துவத்தில் அது பிழை.
ஆகவே தத்துவத்தில் ஒரு படிமத்தை பயன்படுத்தும்போது அதை அந்த விவாதக்களத்தில் அறுதியாக வரையறை செய்துகொள்ளவேண்டும். அதன்பின் அவ்வரையறையை ஒட்டி நின்றே விவாதிக்கவேண்டும். நம்முடைய எல்லா விவாதங்களிலும் ஒரு சொல்லை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவதே உகந்தநிலை- அதற்காக கூடுமானவரை முயலவேண்டும்.
ஆழம் என்னும் சொல்லை நாம் அறியப்பட்ட மேல்தளத்துக்கு அடியில் இருக்கும் தளம் என்னும் பொருளில் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். அந்த அறியப்படாத தளம் அப்படி ஒன்று இருப்பதை நமக்கு உணர்த்துகிறது, ஆனால் அது எத்தகையது என நமக்குத் தெரிவதில்லை. அறியப்படாதவை எல்லாமே முடிவில்லாதவை. ஆகவே ஆழம் என்பது முடிவிலியாகத் தோன்றுகிறது. அறியப்படாதது அறிவதற்கான முடிவிலா வாய்ப்பு. ஆகவே தீராத ஈர்ப்புள்ளதாக உள்ளது.
ஆழம் என்பதை நான் இவ்வாறு வகுத்துக் கொள்கிறேன். நாம் அறிந்தவற்றுக்கு அடியில், நாம் முழுக்க அறிந்துவிட முடியாதபடி விரிந்து கிடக்கும் ஒன்று. நாம் அறிபவற்றைக் கொண்டு அதை ஊகித்து தொகுத்து ஓர் உருவகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதையே ஆழம் என்று சொல்கிறோம்
எப்போதும் நாம் ஆழம் எனச் சொல்வது நம்முடைய இந்த உருவகத்தைத்தானே ஒழிய, அங்கே உண்மையாகவே ’இருக்கும்’ ஒன்றை அல்ல. அங்கு என்ன இருக்கிறது, எவ்வண்ணம் இருக்கிறது என நமக்குத் தெரியாது. நாம் சொல்வது நம் அறிதலைத்தான்.
இருவகை ஆழங்களை நாம் உணர்கிறோம். ஒன்று, அகத்தே நாம் உணரும் ஆழம். இன்னொன்று வெளியே உணரும் இயற்கையின், பிரபஞ்சத்தின் ஆழம். நம் ஆழத்தால் இயற்கையின் ஆழத்தை உணர்கிறோம். இயற்கையில் நம் ஆழத்தை கண்டுகொள்கிறோம்.
நாம் நம்முள் உணரும் ஆழம் என்பது என்ன என்பதை நாமே புரிந்துகொண்டு, வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதன்பின்னரே ஆழம் என்னும் சொல்லை நாம் நம்மைப்பற்றிய விவாதங்களில் கையாள முடியும்.
பல ஆயிரமாண்டுகளாக மானுடர் அதை உணர்ந்து, ஆராய்ந்து, வகுத்துள்ளனர். அந்த அறிதல்களை முழுக்கவே விட்டுவிட்டு ‘புதியதாகச்’ சிந்திக்க முயல்வதும், அந்த தொடர்ச்சியான அறிதல்களை ‘பழைய சிந்தனைகள்’ என்றோ ‘மதச் சிந்தனைகள்’ என்றோ உதறிவிடுவதும் இன்று நிகழ்கிறது. குறிப்பாக மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், தத்துவச் சொற்பொழிவுகளிலும் ’புதியதாக’ எதையாவது சொல்லியாகவேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது.
அவ்வாறு சொல்லப்படும் எவையும் புதியவை அல்ல. அறிவில் முன்னறிவு (சுருதி) என ஒன்று உண்டு. a priori இல்லாமல் சிந்திக்கவே மானுட உள்ளத்தால் முடியாது. ஆகவே நான் முன்னர் சிந்தித்தவர்களின் தொடர்ச்சியாகவே மேலே பேசுகிறேன்.
நாம் நம்முள் நாமறியாதவற்றுக்காக கூர்ந்து பார்க்கும்போது காண்பது விழிப்புநிலையை. (ஜாக்ரத்). விழிப்புநிலை விழிப்புநிலையை கூர்ந்து பார்க்கிறது. அந்த ஆழத்தில் நாம் முதலில் காண்பது காமம், குரோதம், மோகம் என்னும் மூன்றையே. விழைவு, அதை அடையும்பொருட்டான வஞ்சம், மேலும் என எழும் அடங்காமை என மூன்று.பெரும்பாலான நவீனத்துவப் படைப்புகளில் ‘ஆழம்’ என வெளிப்படுவது இவையே. நம் சினிமாக்கள், கதைகள் எல்லாமே காமகுரோதமோகங்கள் நிறைந்த ஆழத்தை காட்டி நின்றுவிடுவனதான்.
அப்பாலும் இன்னொரு ஆழம் உள்ளது. அது கனவுநிலை ஆழம். அது மயங்குநிலை.விழிப்புநிலையில் நாம் நம்மை உணரும் ஒரு தன்னிலை உள்ளது. (subjectivity) அது சற்று மயங்கின நிலையே ஸ்வப்னம் எனப்படுகிறது.எப்போதுமே தூக்கி வைத்திருக்கும் நான் என்னும் தன்னிலையை அப்போது கொஞ்சம் இறக்கி வைத்துவிடுவதனால்தான் அந்நிலை நமக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லா தீவிர அனுபவங்களும் தானழிந்த நிலை கொண்டவை. எல்லா தானழிந்த நிலைகளும் தீவிரமானவை. நாம் அதனால்தான் கனவுகளை கொண்டாடுகிறோம்.
அந்த மயக்கநிலையில் நாம் நம்மை வேறொருவராக உணர்கிறோம். அது காமகுரோதமோகங்களுக்கும் அடியிலுள்ள ஆழ்நிலை. அதை உன்னதம் (sublime) என்னும் சொல்லால் நவீன இலக்கிய விமர்சனம் சொல்கிறது.அந்நிலையில் நாம் நம் அடையாளமென அமைந்துள்ள எல்லைகளை கலைத்துக்கொண்டு பிறருடன்,பிறவற்றுடன் கரைகிறோம்.
அதற்கும் அப்பாலுள்ளது முற்றிலும் தன்னிலையே அற்ற நிலை. ஒரு நீர்த்துளி கடலுடன் கலப்பதுபோல நாம் இங்குள்ள எல்லாவற்றிலும் கலந்துள்ள நிலை. துரிய நிலை.வேதாந்த மரபைப் பொறுத்தவரை அது ‘தியானம் செய்து’ சென்றடையவேண்டிய ஒரு நிலை அல்ல.அது எல்லாருக்கும் சற்றேனும் அனுபவப்பட்டிருக்கும். அது எவ்வண்ணம் அனுபவப்பட்டது என நிதானமாக கூர்ந்து கவனித்துக்கொள்வதே தியானம். அன்றாடத்திலும் அது கொஞ்சம் நிகழுமென்றால்தான் அது விடுதலை.
நிறைவற்றிருக்கிறது, அலைகொள்கிறது என நீங்கள் உணரும் ஆழம் எந்த நிலை என்பதே கேள்வி. பெரும்பாலும் அது முதல்நிலை.தன்னிலை ஓங்கிய களம். ‘நான் நிறைவற்றிருக்கிறேன்’ என்னும் சொற்றொடரில் ‘நான்’ என்பதே முக்கியமான சொல். நிறைவின்மை அதில்தான். காமகுரோதமோகங்கள் நிறைவின்மையை அளிக்கின்றன. விழைவும், அதன் விளைவான ஏக்கமும், வென்றால் அதன் ச்லிப்பும், தோற்றால் அதன் விளைவான சோர்வும், மீண்டும் விழைவும் என ஓயாத அலைக்கழிப்பு.
அந்த ஆழத்துக்கு அடியில் மயங்குநிலையின் ஆழம் அவ்வண்ணம் நிறைவற்றிருக்கிறதா என்ன? ஒரு நல்ல கனவில் நீங்கள் நிறைவற்றிருக்கிறீர்களா? அங்கே நீங்கள் நிறைந்து ததும்பவில்லையா? இயற்கையின் பெருந்தரிசனம் அமைந்தால் உங்களுக்குள் முழுநிறைவு ஒருகணமேனும் அமையவில்லையா?
அப்படியென்றால் ஆழம் என உணர்வதன் மேல்நிலைதான் நிறைவின்மை கொள்கிறது. ஆழத்தில் செல்லச்செல்ல நிறைவு இயல்வதாகிறது. அது யோகியருக்கும் பரமஹம்சர்களுக்கும் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் சாத்தியமான நிறைவுதான். அதை கொஞ்சமேனும் உணராத எவரும் இருக்க மாட்டார்கள். கலைகளில், இலக்கியத்தில், இயற்கையில், ஊழ்கத்தில்.வலியில் உடல் துடிக்கும் நோயாளி கூட கனவில் சட்டென்று விடுதலையை நிறைவை உணர்வது அதனால்தான்.
அந்த ஆழத்தை நாம் அடையும்தோறும் வெளியே நாமறியும் இயற்கையும் ஒத்திசைவும் அழகும் கொள்கிறது. அதன் ஆழம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது நிறைவும் முழுமையும் கொண்டதாக நம்மைச் சூழ்கிறது. அகமும் புறமும் ஒன்றையொன்று சரியாக நிரப்பிக்கொள்ளும்போது, ஒன்றில் இன்னொன்று வெளிப்படும்போது நிறைவு அமைகிறது.
அதற்கு எங்கும் செல்லவேண்டியதில்லை. எதையும் செய்யவேண்டும் என்பதுமில்லை. நம் நாக்கு நல்ல சுவையை தேடித்தேடி உண்கிறது. அதைபோல உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பவை என்னென்ன என்று தேடித்தேடி கூடுமானவரை அவற்றைச் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே போதும். காமகுரோதமோகங்களின் நிறைவு உண்மையான மகிழ்ச்சி அல்ல. அதற்கப்பாலுள்ள கனவுநிலையும், மெய்நிலையும் மகிழ்வடைவதே மெய்யான மகிழ்ச்சி. அதை உணர்ந்துகொண்டு, அம்மகிழ்ச்சியை அளிப்பவற்றை செய்தாலே போதும்.
அந்த உண்மையான மகிழ்ச்சி அளிப்பவற்றைச் செய்ய தடையாக இருப்பவை நம் ஆசைகள், நம் போட்டிகள், நம் வஞ்சங்கள். அவற்றை தவிர்த்தாலே போதும். சுருக்கமாகச் சொன்னால், இன்னொருவரை கருத்தில் கொள்ளமால் முழுக்கமுழுக்க நமக்கே என நாம் செய்துகொள்பவை மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை அளிப்பவை.
அச்செயல் இரண்டு வகையில் ஆற்றப்படவேண்டியது.ஒன்று அன்றாடத்தை நிறைக்கும் செயல்பாடு. நம் அன்றாடம் சிதறிக்கொண்டே இருக்கிறது. சூழல் நம்மை நான்கு திசையிலும் இழுத்துச் சிதறடிக்கிறது. நாமே நம்மை எட்டுதிசைக்கும் வீசியடிக்கிறோம். அதிலிருந்து தப்ப சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்.
டால்ஸ்டாய் ஒரு கட்டுரையில் பழங்காலப் பெண்கள் நூல்பின்னல் வேலை வழியாக அடைந்த ஆன்மிக நிலை பற்றிச் சொல்கிறார். அது அவர்களின் அன்றாடத்தை ஒருங்குகுவியச் செய்கிறது. கூர்ந்து, தன் அழகுணர்வையும் கைத்திறனையும் இணைத்து, அவர்கள் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மூளையை, உள்ளத்தை, உடலை ஒத்திசையச் செய்து ஆற்றும் எளிய செயல் ஓர் அன்றாடயோகம்.
எனக்கு அத்தகைய செயல் என்பது எழுதுவது. ஒரு தத்துவநூலை எடுத்து என் மொழியில் சுருக்கி எழுதுவேன். ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ்ச்சொற்களை எழுதி அடுக்கி வைப்பேன். கம்பராமாயணத்திற்கு என் மொழியில் நாலைந்து விளக்கங்கள் எழுதி வைப்பேன். நாலைந்து மணிநேரம்கூட அதைச் செய்ய என்னால் முடியும். என் அகம் ஒருங்கிணைந்து அமைதியை அடையும். அப்படி உங்களுக்கு என்ன என்பதை நீங்கள் கண்டடையவேண்டும். எதுவானாலும் சரி. கூடை முடைவதனாலும் கட்டுரை எழுதுவதனாலும்.
அடுத்த செயல் என்பது உங்கள் ஆழம்நோக்கிச் செல்லும் தீவிரச்செயல். அதை அந்தர்யோகம் எனலாம். அது எச்செயலாக இருப்பினும் ஊழ்கம் என அதைச் சொல்லலாம். ஆழம்நோக்கிச் செல்லும் எல்லாமே ஊழ்கம்தான். ஜாக்ரத்தை கடந்து, கனவுகளை அடைந்து, துரியநிலையை தீண்டுவதே இலக்கு. இசை ஊழ்கமாகலாம். கலை ஊழ்கமாகலாம். பயணத்தையும் சேவையையும் ஊழ்கமென கொண்டவர்கள் உண்டு. எனக்கு அது புனைவும் சிந்தனையும். மொழியே என் ஊழ்கத்தின் கருவி.
அதனூடாக நான் அந்த முழுமையை சென்று தொட்டு மீள்கிறேன். அப்போது நான் அடையும் அகநிறைவுதான் நான் முழுமையை தொட்டிருக்கிறேன் என்பதற்கான சான்று. அவ்வளவுதான் நான் செய்யக்கூடுவது, செய்யவேண்டியது. அது உங்களுக்கு என்ன என்று கண்டுபிடியுங்கள். புனைவு, கலை, செயல், ஊழ்கம் – எதுவானாலும். அதில் இன்னொருவருக்கு இடமில்லை. நீங்களே அறிந்து நீங்களே உங்களுக்குச் சான்றளித்துக்கொள்ளும் ஒரு தளம் அது.
அந்த முழுமையை தொட்டால் நாம் அறிவது ஒன்றுண்டு, அந்நிலையில் ‘இதெல்லாம் எதற்கு?’ ’இதற்கெல்லாம் என்ன பொருள்?’ ‘என் இருப்பின் சாராம்சம் என்ன?’ என்பதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பொருளே இல்லை. அந்தக்கேள்விகளுக்கு பதில் கிடைக்காது, அக்கேள்விகள் உருவான களம் பொருளற்றதாகி மறைந்துவிடும். நாம் இங்கு வந்தோம், நமக்குரிய ஒன்றை செய்தோம், இப்பெரும்பெருக்கில் ஒரு துளியைச் சேர்த்தோம், நம் பணி முடித்து மீள்வோம், அவ்வளவுதான் என உணர்வோம். அதுவே நிறைவு, அதுவே முழுமை.
ஒரு தேனீயின் வாழ்க்கை சராசரியாக ஒருமாத காலம். ஒருநாளில் சாதாரணமாக ஐந்து சொட்டு தேன். நூற்றைம்பது சொட்டு தேனை கூடுசேர்ப்பதே அதன் பணி. அதன் வாழ்க்கையின் ’மதிப்பு’ என்பது ஒரு தேக்கரண்டி தேன். இப்பிறவியில் அதற்கப்பால் அது செய்வதற்கொன்றும் இல்லை. அதன் விளைவென்ன என அறியும் வழியும் அதற்கு இல்லை. அதை செய்துவிட்டு அது செல்வதுபோல நாமும் என இயல்பாகவும் அறுதியாகவும் உணர்வதொன்றே நிறைவுநிலை. ரம்யா இங்கு வந்து, இங்கு ஆற்றக்கூடியதொன்றை கண்டு, அதை ஆற்றிவிட்டீர்கள் என்றால் அந்நிறைவு கைகூடிவிடும். அதுவே ஆழத்தின் நிறைவு.
ஒருபோதும் சென்றடையவில்லை என்னும் நிறைவின்மையை அடைக என்னும் சொல்லின் பொருள் இங்கே எதிலும் நிறைவடையாதிருக்கவேண்டும் என்பதே. விழைவின் நிறைவு, ஆணவநிறைவு நிறைவல்ல என்பதே. நிறைவு தானே அமையும் வரை நிறைவுகொள்ளாதிருக்கவேண்டும் என்பதே. ஊரில் சில புதுப்பணக்காரர்கள் செல்வத்தின் நிறைவில் ததும்பிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஒரு தன்னம்பிக்கைச் சிரிப்பு, தன்னை முன்னிறுத்தும் ஒரு தோரணை அவர்களிடமிருக்கும். ஆபாசமான ஒரு நிறைவு அது. எந்த உலகியல் விஷயத்தில் நிறைவடைந்தாலும் அந்த ஆபாசத்தன்மையே நம்மிடம் எஞ்சும்.
பார்த்தனின் நிறைவின்மை கீதையை அறிந்தது முதல் கீதையை உணர்ந்தது வரைக்குமான இடைவெளியில் மெல்லமெல்ல இல்லாமலாகிறது. தன் செயல் என்பதுஓர் எறும்பின் ஈயின் செயல் அளவுக்கே என்று உணருமிடத்தில் அவன் நிறைவு உள்ளது. அதை முன்னரே உணர்ந்த புன்னகை இளைய யாதவனிடம் உள்ளது.
நான் நூல்களில் இருந்து எழுதவில்லை.வெண்முரசையும் சரி இக்கட்டுரையையும் சரி என் அனுபவம், என் அறிதல், என் தெளிவு ஆகியவற்றிலிருந்தே எழுதுகிறேன். ’ஆகவே செயல்புரிக. செயலின் விளைவென்ன என்று கணிக்க நம்மால் உண்மையில் இயலாதென்று உணர்க. செயலே செயலுக்கு அப்பாற்பட்ட நிறைவொன்றை நோக்கிச் செல்லும் வழி’ என்றே சொல்வேன் . செயல் வழியாக மூழ்கிச் செல்லச்செல்ல நம்முள் எஞ்சாது, குறையாது நிறைவுகொண்டு நின்றிருக்கும் ஆழமொன்றை உணரமுடியும். அதுவே வெளியிலுமென்று அறியமுடியும்.
ஜெ