பெண்கள்,காதல்,கற்பனைகள்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1 – அருண்மொழிநங்கை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2 – அருண்மொழிநங்கை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 3 – அருண்மொழிநங்கை

அருண்மொழி எழுதிய கட்டுரைகளை பார்த்தேன், படித்தேன் என சொல்லமுடியாது. அது ஒரு வகைக் கூச்சத்தை அளிக்கிறது. அதிலுள்ளவன் வேறு எவரோ என தோன்றுகிறது. அதிலுள்ள அருண்மொழி படங்கள் அழகாக இயற்கையாக உள்ளன. என் படங்களைப் பார்த்தால் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்துவிடத் தோன்றுகிறது.

முப்பது நண்பர்களுக்குமேல் மின்னஞ்சல் செய்து அருண்மொழி எங்கள் காதல் – திருமணம் பற்றி எழுதியவை நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதில் பலர் இளைஞர்கள். பலருக்கு தங்கள் மனைவி, திருமணம் பற்றி கற்பனாவாதக் கனவுகள் இருப்பது தெரியவருகிறது. அக்கனவுகளை இந்தக் கட்டுரைகள் கிளறுகின்றன.

வந்த கடிதங்களில் இருந்து ஒரு ஃபார்முலாவை உருவாக்கலாமென்றால் இப்படிச் சொல்லலாம். கடிதமெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகாத, கலையிலக்கிய ஆர்வமும், இலட்சியவாத நோக்கமும் கொண்ட, இளைஞர்கள். சிலர் திருமணமான அத்தகைய ஆண்கள். கடிதமெழுதிய பெண்கள் அனைவருமே திருமணமாகி, சில ஆண்டுகள் சென்றவர்கள். ஒருவர் கூட திருமணமாகாத பெண் இல்லை.

இதுதான் யதார்த்தம், ஆண்கள் இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நம் சூழலில் கலையிலக்கியங்களில் முதன்மையார்வம் கொண்டு அவற்றுக்காக உலகியல் வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட திருமணமாகாத இளம்பெண்கள் அரிதினும் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். லட்சத்தில் ஒருவர் என்றே சொல்லத்துணிவேன்.

நானே சென்ற நாற்பதாண்டுகளில் ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்திருக்கிறேன், அவளை திருமணம் செய்துகொண்டேன். வேறு யாராவது இருக்கிறார்களா என எனக்கு தெரியாது. இருக்கலாம், நான் பார்த்ததில்லை. யாரும் சொல்லி கேள்விப்பட்டதுமில்லை.

ஆனால் அதுவே இயல்பானது, உலகியல்ரீதியாக  நிலைபெற்று வரும் ஒரு சமூகத்திற்கு அதுவே நல்லது. பெண்களின் உள்ளுணர்வு வலுவான நிலையான குடும்பத்தையே கணக்கிடுகிறது, அத்தகைய குடும்பமே அடுத்த தலைமுறை நல்ல கல்வி கற்று வாழ்க்கையில் வெல்வதற்கு இன்றியமையாதது. அருண்மொழி எடுத்தது மிகப்பெரிய ‘ரிஸ்க்’ என்றுதான் இப்போது தோன்றுகிறது. கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்ட ஒருவனை அவனுடைய கலையின் பொருட்டு திருமணம் செய்துகொள்வதும், அதை நம்பி குடும்பத்தை அமைக்க முயல்வதும் ஒருவகையான மிகைசாகசங்கள். தலைகுப்புற விழுவதற்கே வாய்ப்பு மிகுதி.

(அதை அன்றே சங்க இலக்கியத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும்’ என. அருகே உறுதியான பாறை இருந்தும் மாணைக்கொடி ஒன்று தூங்கும் யானைமேல் படர்ந்து ஏறியது என. சில மாணைக்கொடிகளுக்கு அறிவு குறைவு)

வண்ணதாசனின் கதை ஒன்றில் ‘எழுத்தாளன் போன்ற’ ஒருவனை நம்பி, ஓர் உள எழுச்சியில் அவனை காதலித்து மணந்து, வாழ்நாள் முழுக்க அவனுடைய ஊதாரித்தனத்தையும் குரூரத்தையும் சந்தித்து அலைக்கழியும் புட்டா என்னும் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமி அக்கதையை சுட்டி ‘இப்போதுகூட பெண்கள் இப்படி ஏமாறுகிறார்களா’ என்று எழுதியிருந்தார். அது அந்தப்பெண்ணின் ஒரு தகுதி, அது சூறையாடப்படுகிறது. அது ஒரு நிதர்சனம்.

ஓர் எழுத்தாளன் காதலித்து திருமணம் செய்யும் பொழுதில் அவன் எழுத்தாளனாக மலர்ந்திருப்பதில்லை, அவன் ஒரு சாத்தியக்கூறு மட்டுமே. நான் மிக இளமையில் எழுத வந்தவன். ஆனால் நான் அருண்மொழியை காதலிக்கும்போது ரப்பர் என்னும் ஒரு நாவல் மட்டுமே வெளிவந்திருந்தது. சிலகதைகள் அச்சாகியிருந்தன. எழுத்தாளன் என்னும் தகுதி அவ்வளவுதான். ஒருவனை முழுமையாக மதிப்பிட அது போதுமா?

ஆகவே இளம்பெண்களின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களும் ஆளுமை உருவாக்கம் நிகழா நிலையில் இருப்பவர்கள். அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் சூழலில் இருந்து அவர்களுக்குக் கிடைப்பவை. ‘நாலுபேர் சொல்லி’ உருவாக்கிக்கொண்டவை. அந்த ‘நாலுபேர்’ எண்ணி ஏங்குமளவுக்கு ஒன்றை அடையவே அவர்கள் கனவு காண்பார்கள். அவை முழுக்க முழுக்க பொருளியல்தகுதியை மட்டுமே சார்ந்தவை. தோற்ற அழகு கூட அவர்களுக்கு முக்கியம் அல்ல.

(அவ்வாறன்றி, இவ்விதியை மீறி பொருளியலை பொருட்படுத்தாமல் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்கள் உண்டு. ஆனால் அது மிகப்பெரும்பாலும் அந்த ஆண் முழுமூச்சாக முயன்று, அந்தப்பெண்ணைச் சூழ்ந்துகொண்டு வெல்வதன் வழியாகவே நிகழ்கிறது. அந்த முற்றுகையை பெரும்பாலான பெண்களால் வெல்ல முடிவதில்லை. அத்துடன் அவ்வாறு ஒருவன் தனக்காக முழுவெறியுடன் முயல்வது பெண்ணின் அகங்காரத்தை குளிரச்செய்கிறது)

நம் சூழலில் எதையாவது, அதாவது மில்ஸ் ஆன்ட் பூன்  அல்லது ரமணி சந்திரனாவது, வாசிக்கும் இளம்பெண்களே பற்பல ஆயிரத்தில் ஒருவர். மொத்த தமிழகத்திலும் பத்தாயிரம்  பேர் தேறலாம். அவர்களில் இருந்து இலக்கியம் அல்லது கலைகளில் ஆர்வம் கொண்ட ஒருவரை கண்டடைவதென்பது எளிதல்ல. அவர்களுக்கும் கலைகள் அல்லது இலக்கியத்தில் முதன்மையார்வம் இருப்பதும் அதன்பொருட்டு வாழ்க்கையை அமைக்கத் துணிவதும் அதனினும் அரிது. அனேகமாக சாத்தியமே இல்லை என்பதையே இப்படிச் சொல்கிறேன்.

ஆகவே அத்தகைய இலட்சியக் கனவுகளுடன் ‘லாந்திக்கொண்டிருப்பது’ ஒரு இளமைக்கால விருப்பக்கனவு என்னும் வகையில் கொஞ்சநாளைக்கு நல்லது. அதன் பின் இளைஞர்கள் மண்ணுக்கு வந்து இயற்கையின் நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே உகந்தது.

ஒன்றைக் கவனிக்கிறேன், என் இளம் நண்பர்களில் பலர் கலையிலக்கிய ஆர்வமெல்லாம் இல்லாத, ஆனால் சூட்டிகையான பெண்களை மரபான முறைப்படி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லா திருமணங்களையும்போல ‘கணக்கு பார்த்து’ நடத்தப்பட்ட திருமணங்கள் அவை. அந்தப்பெண்களும் வேலை, சம்பளம், சமூகநிலை ஆகியவற்றை மட்டுமே பார்த்துத்தான் அவர்களை மணம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பின்னர் அவர்களுக்கு இடையே உருவாகும் நட்பு, நம்பிக்கை ஆகியவற்றால் அவர்களை கலையிலக்கிய உலகுக்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது.

அப்படி உறுதியாகச் சாத்தியம் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கும் சாத்தியங்களில் அதுவே பெரியது என்று சொல்ல வருகிறேன். பெண்களுக்கு ஆண்களுக்காக கொஞ்சம் வளையும் இயல்பு உண்டு. வலுவான ஆணின் ஆளுமையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் வற்புறுத்த முடியாது, வற்புறுத்தினால் உறவுதான் சிக்கலாகும்.

*

பல கடிதங்களிலுள்ள வரி, எப்படி இவ்வளவு ஆண்டுகளாகியும் அந்தக் காதல் நீடிக்கிறது என்பது. ஏனென்றால் எங்களை தெரிந்த ஆயிரம்பேருக்காவது தெரியும், அருண்மொழி பாவனையாகவோ மிகையாகவோ ஏதும் எழுதவில்லை என. அவளுடைய குணச்சித்திரத்திலேயே மிகை இல்லை. எல்லாமே யதார்த்தம்தான்.

அதற்கான காரணம் எனக்கு அடுத்த தலைமுறையினரில் பலரை பார்க்கையில்தான் தெரிகிறது. உதாரணமாக, என்னைப் பார்க்க ஓர் இளம்நண்பர்  வருவார். வந்ததுமே எங்கே எவருடன் இருக்கிறேன் என மனைவிக்கு தெரிவிப்பார். எண்ணி இருபதே நிமிடம், மனைவியிடமிருந்து போன் வரும். இவர் நேரம் கேட்டு மனைவியிடம் மன்றாடுவார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை போன் வந்துகொண்டே இருக்கும். மன்னிப்பு கேட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார். நான் ஒருவரிடம் பாதி வேடிக்கையாகச் சொன்னேன். ”என்னை என் மனைவி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை போனில் அழைத்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் விவாகரத்து நோட்டீஸ்தான் அனுப்புவேன்” என்று.

இளைஞர்களில் பலர் சொல்வதுண்டு; எங்கள் பயணங்களில் சேர்ந்துகொள்ள ஆசைதான், ஆனால் மனைவி விடமாட்டாள் என்று. இப்போதெல்லாம் பலர் மாமியாரும் மாமனாரும் விடமாட்டார்கள் என்று சொல்கிறார்கள். மீறினால் என்ன ஆகும் என்பேன். உணர்ச்சிகர மிரட்டல், அடம் பிடித்தல், குடும்பமே நிம்மதியில்லாமல் ஆகிவிடும் என்பார்கள். ஒரு புத்தகம் வாங்கவோ படிக்கவோ மனைவி அனுமதிக்க மாட்டார் என்பவர்கள் ஏராளம். இளைஞர்களில் பத்துக்கு எட்டுபேரின் நிலைமை இது.

உண்மையில் இது ‘நெருக்கமான’ உறவு அல்ல. ஆழமான பாதுகாப்பின்மையில் இருந்து, அல்லது தன்முனைப்பில் இருந்து உருவாகும் ‘பிடி’தான் இது. இதில் இருப்பது அன்பே அல்ல. மிக அசௌகரியமானது. ஒரு செடிமேல் கல்லைத்தூக்கி வைப்பதுபோன்றது. உறவுகளில் மிகமிக துன்பமான விஷயமே இந்தப் பிடிதான். அன்பு என்பது மறுபக்கத்தை வளர அனுமதிப்பதாகவே இருக்கும். அந்த வளர்ச்சியில் பங்கு பெறும். சுதந்திரத்தை அளிக்காதது எதுவானாலும் அன்பு அல்ல. வெறும் தன்னலமும் தன்முனைப்பும் அன்பென வேடம் பூண்டிருக்கிறது அங்கே.

இப்படிச் சொல்கிறேனே ‘மிகக்குறைவான உறவே மிகச்சிறந்த உறவு’. ஓர் ஆளுமை இன்னொரு ஆளுமையுடன் கொள்ளும் மிகநல்ல உறவு எப்படி நிகழும்? அவர்கள் இருவருக்கும் பொதுவான இனிய தளத்தில் மட்டும்அந்த உறவு நிகழும்போதே அந்த உறவு சுமுகமாக,நன்றாக இருக்கிறது. எல்லா உறவுக்கும் அதுவே நெறி.

என் நண்பர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் வியப்புடன் இதைச் சொல்வார்கள். நான் வீட்டை விட்டு கிளம்பினால் எங்கிருக்கிறேன் என அருண்மொழிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி. எத்தனை நாள் ஆனாலும், ஒரு மாதம்கூட ஆனாலும் அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் சிலருக்கு செல்போன் ரீ ரீ என அழைத்துக்கொண்டே இருக்கும்.

அக்கறையே இல்லாமலிருக்கிறோம் என்று தோன்றும், அப்படி அல்ல. அவரவர் உலகத்தில் இருக்கிறோம். அருண்மொழி வேலை, சங்கம் என பல களங்களில் பரபரப்பானவள். சமையலும் சாப்பாடும் முடிந்தால் எங்களுக்கான பொதுப்பொழுது என்பதே ஒருநாளில் ஒருமணி நேரம்தான். அதை குறைசொல்ல, சண்டைபோட செலவழிப்பதில்லை. பேசினால் அது எப்போதுமே மகிழ்ச்சியான உரையாடல்தான்.

அருண்மொழியின் மொழிநடையில் என் செல்வாக்கு இல்லை என்பதை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதுவே இயல்பானது. அவள் உலகமே வேறு. அவள் இன்னும் தஞ்சையில் இருந்து வெளிவரவே இல்லை. இப்போது அருண்மொழியின் நேரம் முழுக்க இலக்கியமும் இசைதான். முழுநேர வாசிப்பு, இசைகேட்பு, இசை ஆராய்ச்சி, எழுத்து. அந்த உலகில் நான் நுழைவதில்லை. என் உலகம் அதேபோல இலக்கியம், பயணம் என பரபரப்பானது. அவரவர் மகிழ்ச்சிகள், அவரவர் கொண்டாட்டங்கள், அவரவர் நட்புகள்.

இருவருக்கும் பொதுவான இனிய பொழுதை மட்டுமே பகிர்ந்துகொள்கிறோம். அவளுடைய படிப்பு எழுத்து பற்றிச் சொல்வாள். சிரிப்பும் வேடிக்கையுமாக அன்றி பேசிக்கொண்ட தருணங்கள் மிகமிகக் குறைவு. இருவருக்கும் மற்றவர் முக்கியமானவர்கள். என் பேச்சில் அருண்மொழி வந்துகொண்டேதான் இருப்பாள். ஆனால் அவள் உலகுக்குமேல் என் ‘ஆட்சி’ என ஏதுமில்லை. அவள் ஆளுமைக்குமேல் என் கட்டுப்பாடு என்றும் ஏதுமில்லை.

என் பிள்ளைகள்மீதும் இதுவே. அவர்கள் மேல் என் கட்டுப்பாடு அனேகமாக ஏதுமில்லை. அஜிதன் பார்வைக்கு நானேதான். என்னுடைய கோளாறுகள் எல்லாம் அவனுக்கும் உண்டு. ஆனால் உள்ளிருக்கும் ஆளுமை வேறு. சிந்தனைகள் முற்றிலும் வேறு. (ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் ஓர் பதற்றம் மிக்க எதிர்பார்ப்பின் சிக்கல் இருக்கவே செய்கிறது. முழுக்க விலக முடியாது)

மிகக் குறைவான உறவே மிக நல்ல உறவு. அந்த குறைவான உறவில் இனிய தருணங்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை மாற்றியமைக்க, ‘திருத்த’ முயலும்போதுதான் உரசல்களும் பிரச்சினைகளும் உருவாகின்றன. இன்னொருவர் தன் உடைமை, தன்னுடனேயே இருக்கவேண்டியவர் என எண்ணும்போதே பூசல்கள் உருவாகின்றன. கணவன்  மனைவி நடுவே மட்டுமல்ல, நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் நடுவேகூட இன்னொருவரை சற்று மாற்றியமைக்க முயன்றாலும்கூட அந்த உறவு கசப்பை மட்டுமே அளிப்பதாக ஆகிவிடும்.

அப்படியென்றால் ஒருவர் மேல் இன்னொருவரின் செல்வாக்கு உருவாகவே கூடாதா? உருவாகும், அந்த இனிய தருணங்கள் வழியாக இயல்பாக அது உருவாகும். அதுவே உயர்வானது. நான் முப்பதாண்டுகள் அருண்மொழிக்கு அவளுக்குப் பிடித்த இலக்கியச்சூழலை அளித்திருக்கிறேன். இலக்கியவாதிகளுடனான உறவு, உலகமெங்கும் பயணம் என்னும் வாய்ப்புகளை அளித்திருக்கிறேன். என் வாசிப்பின் மிகச்சிறந்த பகுதிகளை பகிர்ந்திருக்கிறேன். அது உருவாக்கும் செல்வாக்கே உண்மையானது. எந்த கல்வியும் இனிய கொண்டாட்டமாகவே அமைய முடியும்.

இன்று திரும்பிப் பார்த்தால் அருண்மொழி பொருளியல் ரீதியாக எதையும் இழக்கவில்லை. அன்று மருத்துவப் படிப்புக்கு நிகரானதாக கருதப்பட்ட வேளாண்மைப் பட்டதாரியான அவள் எண்ணியிருந்தால் என்னைவிட மிகமேலான வேலையும் சமூகநிலையும் கொண்ட ஒருவரை மணந்திருக்கலாம். ஆகவே அன்று அது ஒரு தியாகம்தான். அவள் தோழிகள் அனேகமாக அனைவருமே மேலான பதவிகளில் அமர்ந்துகொண்டனர், மேலான பதவிகளில் இருப்பவர்களை மணந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அனைவரைவிடவும் பொருளியல்ரீதியாகவும் சமூகநிலையிலும் நான் மிக மேலான இடத்தில் இருக்கிறேன். ஆனால் இது ஒரு வாய்ப்பு. இப்படி ஆகாமலும் இருந்திருக்கலாம்.

திருமணம் ஆன மூன்றாம் ஆண்டு, 1995ல் எனக்கு ஒரு தேசிய விருது வந்தது. மிகமுக்கியமான விருது. ஐம்பதாயிரம் ரூபாய் பணம். அது ஒரு ஒரு மத அமைப்பு அளிக்கும் விருது. அதை ஏற்கலாகாது என நான் எண்ணினேன், ஆனால் அந்த பணம் என்னை தொந்தரவுசெய்தது. அதை மறுப்பது அருண்மொழிக்குச் செய்யும் பிழையோ என எண்ணினேன். ஏனென்றால் அந்த ஆண்டு நான் அருண்மொழியின் நகைகளை முழுக்க விற்று நாற்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு நிலம் வாங்கியிருந்தேன். சொந்த வீடு இப்போது இருப்பது அங்குதான். அருண்மொழி கவரிங் நகை போட்டுக்கொண்டு தபால்நிலைய வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

இரண்டு நாள் குழம்பியபின் அவளிடம் அதைச் சொன்னேன். என் முகம் பார்த்தபின் ‘ஏன் அது புடிக்கலியா?’ என்றாள்.

ஆமாம் என்று சொல்லி ஏன் என விளக்கினேன். “சரி, அது வேணாம். சொல்லிடு. பின்னாடி மனசுக்கு சங்கடம் வரவேணாம்” என்றாள்.

நான் தயங்கி “அம்பதாயிரம் ரூபாய்” என்றேன்.

“அதுக்கென்ன?” என்று சாதாரணமாகச் சொல்லி அவளுக்கே உரிய புயல்வேகத்தில் சமையல் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கணம் அதைப்பற்றி நினைக்கவில்லை. ஓராண்டு கழித்து அந்த தருணம் பற்றிச் சொன்னபோதும் அதை தெளிவாக நினைவுகூரவுமில்லை.

பல ஆண்டுகளுக்குப்பின் பத்மஸ்ரீ விருதுக்கான அழைப்பு வந்தபோது எனக்கு தயக்கமே இல்லை. அவள் என்ன சொல்வாள் என எனக்கு தெரியும். என் அண்ணா அவள் அப்பா இருவரும்தான் திட்டினார்கள்.

இப்போது அருண்மொழிக்கு முழுக்கமுழுக்க இலக்கியம்தான் வாழ்க்கையை நிறைத்திருக்கிறது. அது அப்படித்தான், அவள் அதை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தாள். அந்தமனநிலை ஆரம்பம் முதலே அவளிடம் இருந்துகொண்டிருந்தது. அவள் நினைவுக்குறிப்புகளைப் பார்த்தால் தெரியும், அவள் மிக மிக இளமையிலேயே நூல்களின் உலகில்தான் வாழ்ந்திருக்கிறாள். எல்லா நினைவுகளும் வாசிப்பு சார்ந்ததே. வேறெதுவும் அவளுக்கு முக்கியமாக இருந்ததும் இல்லை.

நான் சொல்லவருவது இதுதான், அருண்மொழியைப் போன்றவர்கள் மிக அரிதானவர்கள். அவர்கள் உருவாகி வந்த சூழலும் இன்றில்லை. எழுபதுகளில் ஆசிரியர்கள் ஏதோ ஓர் இலட்சியவாதத்தால் செலுத்தப்பட்டனர். எழுதியும் வாசித்தும் விவாதித்தும் வாழ்ந்தனர். தங்கள் குடும்பச் சூழலை அப்படி அமைத்துக்கொண்டனர். அதிலும் பழைய தஞ்சை என்பது எல்லா அரசியலியக்கங்களும், கலாச்சார இயக்கங்களும் நிகழ்ந்த மண். அதாவது அந்த மாடல்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அந்த டெக்னாலஜியே இப்போது கிடையாது.

அன்று சிறு கிராமங்களில் ஊடகத்தொடர்பு இல்லை. நவீனத் தொழில்நுட்பம் இல்லை. நுகர்வுக்கலாச்சாரம் இல்லை. அவர்கள் தங்களுக்கான உலகை உருவாக்கிக் கொள்ள, தங்கள் ஆளுமையை சமைக்க வழி இருந்தது. இன்று ஊடகமும் தொழில்நுட்பமும் நுகர்வும் சேர்ந்து ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது. வாங்கு வாங்கு என இந்த உலகமே சேர்ந்து ஒவ்வொருவரையும் நோக்கிக் கூச்சலிடுகிறது. இன்று பணம் சார்ந்த, சமூகநிலை சார்ந்த கனவுகள் அன்றி எதையும் தக்கவைத்துக்கொள்ள எவரையும் அது அனுமதிப்பதில்லை. அதைமீறி தங்களுக்கான கனவுகளுடன் எழுபவர்கள் என் தலைமுறையில் இருந்ததை விட பல மடங்கு குறைவு. இளைஞர்கள் அதற்கேற்ப கனவுகளை நெய்வதே நல்லது.

முந்தைய கட்டுரைநீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபறவைக் கணக்கெடுப்பு- கடிதம்